”அழக்கூட முடியல; ரொம்ப பலவீனமா இருங்காங்க” குழந்தைகள் வாரங்களில் அல்ல நாட்களிலே கூட இறக்கலாம் | Gaza
61ஆயிரத்தைக் கடந்த உயிரிழப்புகள்
“காசா பகுதியில் உயிர்களைக் காப்பாற்றுவதற்கான எந்தவொரு வாய்ப்பையும் அழிக்க வேண்டுமென்றே முயற்சி மேற்கொள்ளப்படுகிறது”. இது இணையவழி கருத்தரங்கு ஒன்றில் பாலஸ்தீன-அமெரிக்க மருத்துவர் தேர் அஹ்மத் தெரிவித்த வார்த்தைகள்.
காசா மீதான இஸ்ரேல் படைகளின் தாக்குதலில் சிக்கி உயிரிழந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 61 ஆயிரத்து 330 ஆக உயர்ந்துள்ளது. கிட்டத்தட்ட 1 லட்சத்து 45ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கடுமையாகக் காயமடைந்திருக்கின்றனர். காசா சுகாதார அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ புள்ளிவிபரம் உயிரிழந்தவர்களில் 18,500 பேர் குழந்தைகள் எனத் தெரிவித்திருக்கிறது.
கடந்த 24 மணி நேரத்தில் 72 பேர் உயிரிழந்த நிலையில், 314 பேர் காயமடைந்துள்ளனர். இதில், நிவாரணப் பொருட்கள் விநியோக மையங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 16 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, கடந்த 24 மணி நேரத்தில், காசா மருத்துவமனைகளில் ஊட்டச்சத்து குறைபாடு பிரச்னையால் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த உயிரிழப்புகளின் எண்ணிக்கைகள் எல்லாம் எப்படி கணக்கிடப்படுகின்றன என்ற கேள்விகள் எழலாம். இரண்டு விதமாக இப்பட்டியல்கள் தயாரிக்கப்படுகின்றன. ஒன்று, மருத்துவமனைகளில் இருந்து வரும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அடுத்தது மக்கள் தங்களது இறப்புகள் தொடர்பாகப் புகாரளிக்கும் ஆன்லைன் கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டது.
உண்மையான உயிரிழப்புகள் எவ்வளவு?
காசாவில் நடக்கும் தாக்குதல் தொடர்பாகவும் உயிரிழப்புகள் தொடர்பாகவும் ‘The Unparalleled Devastation of Gaza’ எனும் தலைப்பில் ஆய்வுக்கட்டுரை ஒன்று வெளியாகியிருக்கிறது. இதை சிகாகோ பல்கலைக்கழக பாதுகாப்பு மற்றும் அச்சுறுத்தல்கள் திட்டத்தின் இயக்குனர் ராபர்ட் ஏ. பேப் எழுதியிருக்கிறார். அதில், “போரின் உண்மையான உயிரிழப்புகளின் எண்ணிக்கை அந்த (61 ஆயிரம் உயிரிழப்புகள்) புள்ளிவிவரங்களை விட அதிகமாக இருக்கலாம். இடிபாடுகளுக்கு அடியில் இருக்கும் ஆயிரக்கணக்கான உடல்கள், பிணவறைகளுக்குச் செல்ல முடியாமல் இறந்தவர்கள், உள்கட்டமைப்பு அழிவு மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட நோய், பஞ்சம் மற்றும் மருத்துவ பராமரிப்பு இல்லாததால் ஏற்பட்ட உயிரிழப்புகளும் இதில் அடங்கும்” எனத் தெரிவித்திருக்கிறார். உண்மையான இறப்பு எண்ணிக்கை 186,000 ஐ விட அதிகமாக இருக்கலாம் என்றும் பேப் தெரிவித்திருக்கிறார்.
குறைவாகக் கணக்கிடப்படும் மரணங்கள்
கடந்த பிப்ரவரியில் வெளியான The Lancet எனும் மருத்துவ இதழை மேற்கோள் காட்டியிருக்கும் பேப், இதழில் தெரிவித்திருந்த மிக முக்கியமான விஷயத்தை குறிப்பிடுகிறார். அதில், காசாவில் நேரடியாக நிகழ்ந்த போர் மரணங்களைப் பற்றிய எண்ணிக்கை குறைந்தபட்சம் 41 சதவீதம் முதல் அதிகபட்சம் 107 சதவீதம் வரை குறைவாகக் கணக்கிடப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகள் காசாவின் சுகாதார சேவைகள், உணவு மற்றும் குடிநீர் வழங்கல், சுகாதாரம் ஆகியவற்றுக்கு ஏற்படுத்திய பாதிப்பினால் ஏற்பட்ட மரணங்களை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த ஆண்டு ஜனவரியில் மட்டும் காசாவில் இடிபாடுகளுக்கு அடியில் கிட்டத்தட்ட 10 ஆயிரம் உடல்கள் புதையுண்டிருப்பதாக கணக்கிடப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
குழந்தைகளால் அழக்கூட முடியவில்லை..
சமீபத்தில், அமெரிக்க நடிகையும் செயற்பாட்டாளருமான சிந்தியா நிக்சன் தலைமையில் இணைய வழி கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் மருத்துவர் ரானா சோபோ என்பவர் கலந்து கொண்டார். ரானா சோபா என்பவர் அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு, பாலஸ்தீனப் பகுதியில் செயல்படும் மனிதாபிமான அமைப்பான மெட்குளோபல் (MedGlobal) நிறுவனத்தில் காசா பிராந்திய ஊட்டச்சத்து அதிகாரியாக பணியாற்றுபவர். அவரோ பல அதிர்ச்சிகர விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.
அவர் கூறுகையில், “சில குழந்தைகள் பலவீனமாக இருப்பதால் அவர்களால் நடக்கவோ, சிரிக்கவோ, விளையாடவோ, உட்காரவோ.. ஏன்.. அழவோ கூட முடியாது. தொற்று, வயிற்றுப்போக்கு, தோல் நோய்கள், கடுமையான நீரிழப்பு அல்லது பிற சிக்கல்களுடன் அவர்கள் இருக்கிறார்கள். அவர்களை சிகிச்சை பெறச் செய்ய எங்களிடம் எந்த இடமும் இல்லை. சில சுகாதார நிலையங்கள் மட்டுமே இருக்கிறது. அவையும் ஏற்கனவே நிரம்பி வழிகின்றன, சேதமடைந்துள்ளன அல்லது தேவையான உபகரணங்களின்றி உள்ளன” என்றுத் தெரிவித்திருக்கிறார். மிக முக்கியமாக, அவர்கள் வாரங்களில் அல்ல, சில நாட்களிலேயே உயிரிழக்கக்கூடும் எனத் தெரிவித்திருக்கிறார்.
கைது செய்யப்படும் மருத்துவர்கள்
பாதிக்கப்பட்ட அல்லது காயமடைந்த உயிர்களைக் காப்பாற்றுவதே பெரும்பாடு என்றால், சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களை சிறையில் தள்ளும் வேலையும் மறுபக்கம் நடந்து வருகிறது. மொத்தம் 300க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் துணை மருத்துவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக காசாவில் சேவை செய்யும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 25 மருத்துவர்கள், 50க்கும் மேற்பட்ட செவிலியர்கள் மற்றும் 30 துணை மருத்துவர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் இன்னும் காவலில் உள்ளனர் என்றும் தெரிவிக்கின்றனர்.
கடந்த நவம்பரில், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நெதன்யாகு மற்றும் அவரது முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் காலன்ட் ஆகியோருக்கு காசாவில் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக கைது வாரண்டுகளை பிறப்பித்தது. இஸ்ரேல் தனது போர்க்குற்றத்திற்காக சர்வதேச நீதிமன்றத்தில் இனப்படுகொலை வழக்கையும் எதிர்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, இத்தாலி, நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள், காசா நகரை ஆக்கிரமிக்க இஸ்ரேல் வகுத்துள்ள திட்டத்தை நிராகரித்திருக்கின்றன. ஜெர்மனி இஸ்ரேலுக்கான ஆயுத ஏற்றுமதியை நிறுத்தி வைத்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.
ஐரோப்பிய நாடுகள் பெரும்பாலும் காசா மீதான இஸ்ரேலின் போரை எதிர்த்தே வருகின்றன. இதற்கு அறிஞர்கள் சில விஷயங்களைக் குறிப்பிடுகின்றனர். இரு உலகப்போர்களிலும் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகள் ஐரோப்ப நாடுகள். எனவே, போர்களுக்கு எதிரான கருத்தாக்கம் அம்மக்களுக்கு இயல்பாகவே இருக்கின்றது என்கிறார்கள்.