அலாஸ்காவில் சந்திக்கும் ட்ரம்ப் - புடின் | இடத்தின் வரலாற்று முக்கியத்துவம்.. பனிப்போர் கால பின்னணி!
செய்தியாளர்: ஜி.எஸ்.பாலமுருகன்
அமெரிக்கா - சோவியத் இடையே 44 ஆண்டுகள் நீண்ட போரே பனிப்போர் (cold war) என்று அழைக்கப்படுகிறது. இரண்டாம் உலகப் போர் முடிந்த பிறகு, 1947 முதல் 1991 வரை, பனிப் போர் என அழைக்கப்பட்ட அரசியல் - ராணுவ பதற்றத்தில் உலகம் சிக்கியது. அமெரிக்கா மற்றும் சோவியத் ஒன்றியம் இரண்டுமே பெரும் சக்திகளாக எழுந்தபோதும், நேரடி ஆயுதப்போரில் ஈடுபடாமல், அரசியல் ஆதிக்கம், ராணுவ ஆயுதப்போட்டி, விண்வெளிப் பந்தயம் மற்றும் உலக நாடுகளை தங்கள் தரப்பில் இழுக்கும் முயற்சிகள் ஆகியவற்றில் மோதின. இந்த காலத்தில் அமெரிக்கா - ரஷ்யா உளவு விமானங்கள், ரேடார் நிலையங்கள், ராணுவ தளவாடங்கள் அனைத்தும் அலாஸ்காவில் அமைக்கப்பட்டன. சோவியத் ஏவுகணை தாக்குதல்களை கண்காணிக்க இது முதன்மை வீரக்கோட்டையாக இருந்தது.
பனிப் போர் காலத்தில் கொரியா போர், வியட்நாம் போர், கியூபா ஏவுகணை நெருக்கடி போன்ற பல சம்பவங்கள் உலகை அணு யுத்த அச்சுறுத்தலுக்குள் தள்ளின. 1991இல் சோவியத் ஒன்றியம் சிதைந்ததுடன், பனிப்போர் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்தது. எனினும், உலகத்தை இரண்டு வலுவான முகாம்களாக பிரித்தது எனலாம். அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டணி மற்றும் சோவியத் ஒன்றியம் தலைமையிலான வார்சா உடன்படிக்கை. இந்த போட்டி, அணு ஆயுத குவிப்பு, உளவு போர்கள், பிரசாரம் மற்றும் பொருளாதார தடைகள் வழியாக உலக நாடுகளின் அரசியல் திசையை மாற்றியது. பனிப் போர் முடிந்தாலும், அதன் நிழல்கள் இன்னும் பல சர்வதேச உறவுகளில் தெரிகின்றன. அப்படியான அலாஸ்காவில்தான் உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் ட்ரம்ப் - புடின் சந்திப்பு நடைபெறுவது கவனம் பெறுகிறது.