மதுவிலக்கால் பாதிக்கப்பட்டதா பிகார்? வருவாய் அல்ல பிரச்னை.. நுட்பமான காரணிகள்..
மது ஒழிப்பு கோரிக்கைகள் இந்தியா முழுவதும் எப்போதும் விவாதத்தில் இருக்கக்கூடிய ஒரு விவகாரம். சட்டம் ஒழுங்கு பிரச்னைகள், குடும்ப வன்முறைகள், பெண்கள் மீது நடக்கும் அடக்குமுறைகள் இவைகள் அனைத்திற்கும் மது மட்டும்தான் காரணம் என பல்வேறு அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், மது ஒழிப்பு அமலில் இருக்கும் மாநிலமான பிகாரில், மதுவிலக்கு அவசியம் தேவைதானா என்ற கேள்விகளை அரசியல் கட்சிகள் எழுப்புகின்றன.
2016 ஆம் ஆண்டு மதுவிலக்கு அம்மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டபோது அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள் முதல் பொதுமக்கள் வரையில் அனைத்து தரப்பினரும் பாராட்டினார்கள். ஆனால், எதற்காக கொண்டு வரப்பட்டதோ அந்த நோக்கத்தை அடைய அந்த சட்டம் தவறிவிட்டது. இது எதிர்பாராத விளைவுகளுக்கு வழிவகுத்தது. இன்னும் ஓரிரு வாரங்களுக்குள் தேர்தலை சந்திக்கும் மாநிலத்தில் மதுவிலக்கு தொடர்பாக நடக்கும் விவாதம் என்ன? தேர்தலில் எதிரொலிக்குமா மதுவிலக்கு விவகாரம்? என்ன நடக்கிறது இந்த பிரதேசத்தில்? விரிவாகப் பார்க்கலாம்.
பிகாரில் மதுவிலக்கு
ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவரும் பிகார் முதலமைச்சராக இருப்பவருமான நிதிஷ் குமார் 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மாநிலம் முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்தினார். அதுவும், சட்டமன்றத்தில் ஒவ்வொரு எம்.எல்.ஏவும் இன்று முதல் மது அருந்த மாட்டோம் என உறுதிமொழி ஏற்றபின் அதுதொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மதுவிலக்கு அமலுக்கு வந்தது. பார் லைசன்ஸ்கள் முதற்கொண்டு ரத்து செய்யப்பட்டதால், பெண்கள் மத்தியில் முதலமைச்சர் நிதிஷ்குமாருக்கு பெருமளவிலான வரவேற்பு கிடைத்தது.
மதுவிலக்கு மாநிலத்துக்கு அவசியம் தேவைதானா?
மாநிலத்தில் பூரண மதுவிலக்கைக் கொண்டுவந்தபோது நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் கூட்டணியில் இருந்தது. 2017 ஆம் ஆண்டு பாஜக-வுடன் கூட்டணி அமைத்தது. தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு மீண்டும் ஆர்ஜேடிக்கு நிதிஷ் சென்றார்.. அதனை அடுத்து மீண்டும் பாஜகவுக்கு சென்றார். மதுவிலக்கு அமல்படுத்தப்பட்ட பின், நிதிஷ் மூன்று முறை கூட்டணியை மாற்றியிருந்தாலும், மதுவிலக்கு சட்டம் தொடர்ந்து செயல்படுகிறது. அந்த சட்டத்திற்கு எந்தவித இடையூறும் ஏற்படவில்லை. ஆனால், பொதுவெளியில் கள்ளச் சந்தைகளில் விற்கப்படும் சாராயங்களால் நிகழ்ந்த மரணங்கள் பூரண மதுவிலக்கு அவசியமா என்ற உரையாடலை மீண்டும் மீண்டும் ஏற்படுத்தின.
விடுமுறை தினங்கள், பண்டிகைக் காலங்களில் விற்கப்படும் மதுவால் உயிரிழப்புகள் ஏற்படுவது தொடர்கதையாகி வருகின்றன. 2016 ஆம் ஆண்டு பிகாரில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், கடந்த ஏப்ரல் வரையிலான 9 ஆண்டுகளுக்குள் 190 பேர் கள்ளச்சாராயங்களால் உயிரிழந்திருக்கிறார்கள். இவை தரவுகளின்படி அம்மாநில அதிகாரிகள் சொன்னது. மாநிலத்தில் கள்ளச்சாராயங்கள் அதிகரித்த நிலையில் அம்மாநில சட்டசபையில் இதுதொடர்பான விவாதம் ஒன்று நடந்தது. அப்போது பேசிய முதலமைச்சர் நிதிஷ்குமார், “கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு இழப்பீடு அளிக்காது. குடித்தால் உயிரிழப்பீர்கள் என நாங்கள் தொடர்ந்து எச்சரித்து வருகிறோம். அப்படியிருந்தும், குடித்து உயிரிழப்பவர்களுக்கு எப்படி இழப்பீடு தர முடியும்? கள்ளச்சாராயம் குடித்தால் மரணமடைவீர்கள், கள்ளச்சாராய விவகாரத்தில் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.
அதிகரிக்கும் போதைப்பொருள் பயன்பாடு
மதுவிலக்கு காரணமாக ஒவ்வொரு வருடமும் மாநிலத்தில் பறிமுதல் செய்யப்படும் போதைப் பொருட்களின் அளவு அதிகரித்துக்கொண்டே இருந்தது. உதாரணத்திற்கு, 2015ல் அதாவது மதுவிலக்கு அமலுக்கு வருவதற்கு முன் 14 கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது என்றால், 2016 ஆம் ஆண்டு அது 10,800 கிலோவாக அதிகரித்தது. 2021 ஆம் ஆண்டு பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள் 27,365 கிலோ. கிட்டத்தட்ட போதைப்பொருள் பறிமுதல் மட்டும் 2700% அதிகரித்திருக்கிறது.
கள்ளச்சாராய பறிமுதல் என்பது இவற்றை எல்லாம் தாண்டியது. 2023ல் மட்டும் கள்ளச்சந்தைகளில் விற்கப்பட்ட சாராயங்கள் 39.63 லட்சம் லிட்டர் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. அதாவது சராசரியாக நாள் ஒன்றுக்கு 10,858 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. 2024 ஆம் ஆண்டை ஒப்பிடும்போது, இந்த ஆண்டின் முதல் ஆறு மாதத்திற்குள் பறிமுதல் செய்யப்பட்ட கள்ளச்சாராயங்களின் அளவு சுமார் 12% அதிகம்.
இவை எல்லாம், காவல் துறையினருக்கும் அரசு சார்ந்த நிர்வாகத்திற்கும், நீதிமன்றங்களுக்கும் கூடுதல் சுமைகளை ஏற்படுத்தி இருப்பதான ஒரு பார்வை இருக்கிறது. பாட்னா உயர்நீதிமன்ற நீதிபதிகள் இதுதொடர்பாக ஒருமுறை கருத்து தெரிவித்திருந்தனர். உயர்நீதிமன்ற நீதிபதிகள் மதுபான வழக்குகளில் ஜாமின் தொடர்பான விசாரணைகளில் மட்டுமே பெரும்பாலான நேரத்தை செலவிட வேண்டியதாக இருக்கிறது எனத் தெரிவித்திருக்கின்றனர். மிக முக்கியமாக இளம் வயதினர் போதைப்பொருள்களை விற்பனை செய்பவர்களாக இருப்பது கவலைக்குறிய விஷயம் என்றும் பாட்னா உயர்நீதிமன்றம் கவலை தெரிவித்தது.
அதிகம் பாதிக்கப்படும் ஏழைகள்
மதுவிலக்கு சட்டத்தை மீறியதற்காக சிறையில் இருப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்திருக்கிறது. கடந்த ஜூலையில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மதுவிலக்கு கூடுதல் இயக்குநர் ஏடிஜி அமித்குமார் ஜெயின், ஏப்ரல்,1 2016 அன்று மதுவிலக்கு சட்டம் அமலுக்கு வந்தபின், அச்சட்டத்தை மீறியதற்காக 6,40,379 நபர்கள் குற்றவாளிகள் என நீதிமன்றங்களால் உறுதி செய்யப்பட்டு இருக்கின்றனர் எனத் தெரிவித்தார். இதில் மற்ற மாநிலங்களில் இருந்து வந்து மதுவிற்பனை செய்தவர்களும், மது அருந்தியவர்களும் அடக்கம். இதில் மரண தண்டனை கொடுக்கப்பட்ட வழக்குகளும் இருக்கிறது.
அண்டை மாநிலங்களில் இருந்துதான் கள்ளச்சாராயங்கள் கொண்டு வரப்படுவதாக புகார்கள் இருக்கிறது. அப்பகுதிகளில் இருக்கும் மக்களுக்கு இதுதொடர்பான தகவல்கள் தெரியவந்தாலும் கூட காவல்துறையினரின் உதவியுடன் கள்ளச்சாராய விற்பனை அதிகளவில் நடக்கிறது என்ற குற்றச்சாட்டுகளையும் முன்வைக்கின்றனர். அதோடு இந்த கள்ளச்சாராய விற்பனைகளில் அதிகம் பாதிக்கப்படுவது ஏழை மக்களாக மட்டுமே இருக்கின்றனர் என்பது அரசியல் பார்வையாளர்களின் கருத்து. மது விற்பனை செய்பவர்களை விட்டுவிடுகிறார்கள். ஆனால், அதை வாங்கிக் குடிப்பவர்களை கைது செய்து சிறையில் அடைத்துவிடுகிறார்கள் என்ற நியாயமான குற்றச்சாட்டை வலியுறுத்துகின்றனர். மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும், சுகாதாரத்தை மேம்படுத்தவும் கொண்டுவரப்பட்ட ஒரு சட்டம் கடத்தலையும், குற்ற சம்பவங்களையும் அதிகரித்திருக்கிறது என்பது துரதிர்ஷ்டவசமானது எனத் தெரிவிக்கின்றனர்.
மதுவிலக்கு - நல்ல விஷயங்களே இல்லையா?
மதுவிலக்கு காரணமாக பிகாரில் நல்லவிஷயங்களே நடக்கவில்லையா என்றால், முழுவதுமாக இல்லை என்று புறந்தள்ளிவிடமுடியாது. அதேவேளை, அதிகளவிலான பலனை பிகார் மாநிலம் அடைந்திருக்கிறது என்றும் கூறிவிட முடியாது. மதுவிலக்கு அமல்படுத்தப்பட்ட பிறகு மது அருந்தும் ஆண்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது என்று National family & health survey முடிவுகள் தெரிவிக்கின்றன. 15 முதல் 49 வயது வரையிலான மது அருந்துபவர்கள் தொடர்பான அந்த தரவுகள் 1998-1999 முதல் 2005-2006 வரையிலான காலக்கட்டங்களில் ஆண்களின் மது அருந்தும் எண்ணிக்கை அதிகரித்திருந்தது என்று தெரிவிக்கிறது. அதேவேளை 2015-2016 காலக்கட்டங்களில் கொஞ்சம் குறைந்திருந்தாலும், 2019-2021 காலக்கட்டங்களில் இன்னும் குறைந்திருந்தது என தெரிவிக்கின்றனர். கொரோனா காலக்கட்டம் இடையில் இருந்தது என்பதையும் மறந்துவிட முடியாது. ஆனால், சமீபத்திய ஆண்டுகளில் கள், நாட்டு சாராயம், வெளிநாட்டு மதுபானங்கள் அருந்துவது அதிகரித்திருக்கிறது என்றும் தெரிவிக்கின்றனர். குறிப்பாக பிகாரில் கள் அருந்துவது, தேசிய சராசரியுடன் ஒப்பிடுகையில் அம்மாநிலத்தின் சராசரி அதிகளவில் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.
பூரண மரதுவிலக்கு காரணமாக வன்முறைகள் குறைந்திருக்கிறதா என்றால் அது மிகப்பெரிய கேள்விக்குறி. கணவர்களிடம் உடல்ரீதியாகவும் பாலியல் ரீதியாகபவும் துன்புறுத்தல்களை எதிர்கொண்ட மணமான பெண்கள் குறித்து சமீபத்தில் National family & health survey வெளியிட்ட தரவுகள் குறிப்பிடுகின்றன. இது இந்தியாவின் பிற பகுதிகளை ஒப்பிடுகையில் பிகாரில் அளவுக்கு அதிகமாக இருப்பதைக் குறிப்பிடுகிறது. 2015–16 மற்றும் 2019–21 (மதுவிலக்கு சட்டம் அமலுக்கு முன் மற்றும் பின்) காலங்களில் பிகாரிலும், நாட்டின் மற்ற பகுதிகளிலும் இந்த விகிதம் சிறிதளவு குறைந்திருந்தாலும், பிகாரில் நிலைமை இன்னும் கவலைக்குரியது. மதுவிலக்கு சட்டம் அமலுக்கு வந்த பிறகும் மது அருந்தாத கணவர்களிடமிருந்தே அதிகமான பெண்கள் வன்முறைக்கு உள்ளாகியுள்ளனர் என்பது மிகவும் கவலைக்குறிய விஷயமாகப் பார்க்கப்படுகிறது.
மதுவிலக்கு சட்டத்தை ரத்து செய்வேன் - PK
மதுவிலக்கு சட்டம் உருவாக்கிய பிரச்னைகளில் இதுவும் மிக முக்கியமான ஒன்று. குடும்ப வன்முறைக்கு பாலின சமத்துவமின்மை, வறுமை, பெண்கள் மீது குடும்பத்தில் நிகழ்த்தப்படும் அடக்குமுறைகளுக்கு சமூகத்தில் நீடிக்கும் காரணிகள் என பல்வேறு விஷயங்கள் இருக்கின்றன. ஆனால், மதுவிலக்கு கொண்டு வரப்பட்டதும், பெண்கள் மீதான குடும்ப வன்முறைகள் பெருமளவில் குறைந்திருப்பதாக அம்மாநில அரசு சொல்லும் விதம் குடும்ப வன்முறைகளுக்கு மது மட்டும்தான் காரணம் என்பதுபோன்ற தோற்றத்தை கொடுத்து மற்ற விஷயங்களுக்கான உரையாடலை மட்டுப்படுத்திவிட்டது என்பதையும் சிலர் காரணமாகச் சொல்கின்றனர்.
அடுத்தது பொருளாதாரம் சார்ந்த விஷயங்கள். மதுவிலக்கு அமலுக்கு வந்தபின் வருவாய் குறைந்துவிட்டது என்று அனைத்து தரப்பினரும் கூறுகின்றனர். ஆனால், அந்த வருவாய் சட்ட விரோதமாக மதுவிற்பனை செய்பவர்களுக்கே செல்கிறது என்றும் குற்றம்சாட்டுகின்றனர். சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்பவர்கள் அதிக தொகையில் மதுவை விற்பனை செய்யும் நிலையில், அதனால் அதிகளவில் பாதிக்கப்படுவது ஏழைக்குடும்பங்களே என்கின்றனர் வல்லுநர்கள்.
இதுதொடர்பாகப் பேசியிருக்கும் ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர், பிகாரில் உண்மையான மதுவிலக்கு இல்லை எனத் தெரிவிக்கிறார். கடைகள் மட்டும்தான் மூடப்பட்டுள்ளது. ஆனால், ஹோம் டெலிவரி செய்யப்படுகிறது. இதன் காரணமாக மாநிலம் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கான வருவாயை இழக்கிறது எனத் தெரிவிக்கிறார். ஆட்சிக்கு வந்தால் ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே மதுவிலக்கு சட்டத்தை ரத்து செய்வேன் என்றும் தெரிவித்திருக்கிறார். அதோடு, மதுவிலக்கு அமலுக்கு வந்தபிறகு நிதிஷ்குமாரின் கட்சி தொடர்ச்சியாக அவர்களது வாக்கு சதவீதத்தை இழந்துவருவதும், பெண்கள் மத்தியில் நிதிஷ்க்கு ஆதரவு குறைந்து வருவதைக் காட்டுதவதாகவும் பிரஷாந்த் குறிப்பிடுகிறார்.
ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ், மதுவிலக்கு தொடர்பான சட்டத்தை ஆட்சிக்கு வந்தால் மறு பரிசீலனை செய்வோம் எனத் தெரிவிக்கிறார். சமூக சீர்திருத்தமாக கருதப்பட்ட இந்த சட்டம் தற்போது அரசுக்கு கூடுதல் சுமையாகப் பார்க்கப்படுகிறது. பெண்களுக்கான வளர்ச்சியாக பல்வேறு திட்டங்களை நிதிஷ் கொண்டு வந்து வெற்றி பெற்றிருந்தாலும், மதுவிலக்கு சட்டம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்திருப்பதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். மதுவிலக்கு கொள்கை விவகாரத்தில் ஜன்சுராஜ் கட்சி தவிர வேறு எந்த அரசியல் கட்சிகளும் தங்களது நிலைப்பாடுகளை வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை.
மதுவிலக்கு என்பது நல்ல அம்சம் தான். ஆனால், தன்னியல்பாக மக்களை அதிலிருந்து அந்நியப்படுத்த வேண்டும். அது தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும், மதுவிற்கு அடிமையானவர்களுக்கு சிறப்பு சிகிச்சைகளை கொடுக்க வேண்டும். அதற்கான கட்டமைப்புகளை மதுவிலக்கு சட்டம் அமலுக்கு கொண்டு வருவதற்கு முன்பே செய்திருக்க வேண்டும். போதைப்பொருட்களை ஒழிப்பதற்கான திட்டங்களை செயல்படுத்த அதிகளவு முதலீடு செய்திருக்க வேண்டும். இதுதான் அம்மாநில மக்களின் கருத்து. இதைத்தாண்டி தனிப்பட்ட அரசியல் ஆதாயங்களுக்காக கொண்டு வரப்பட்ட மதுவிலக்கு என்பது இன்னும் மோசமான விளைவுகளுக்கு வழிவகுக்கும் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
பொருளாதாரக் கொள்கைகளில் ஒரு விஷயங்களைக் குறிப்பிடுவார்கள். ஒரு பொருளை சந்தையில் இருந்து தடை செய்வது என்பது அப்பொருளுக்கான கள்ளச்சந்தையை உருவாக்கும் எனத் தெரிவிப்பார்கள். அது பிகார் மதுவிலக்கு சட்டத்தில் உறுதியாகியிருக்கிறது.