முடிவுக்கு வரும் இஸ்ரேல் - ஹமாஸ் போர்.. முதற்கட்ட நடவடிக்கைக்கு பிரதமர் மோடி வரவேற்பு!
"இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே அமைதித் திட்டத்தின் முதல் கட்ட ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டிருக்கின்றன" என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் தளப்பதிவில், “இஸ்ரேலும் ஹமாஸும் போர் நிறுத்த அமைதித் திட்டத்தின் முதல் கட்டத்தில் கையெழுத்திட்டுள்ளனர் என்பதை அறிவிப்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இதன் பொருள் அனைத்து பணயக் கைதிகளும் மிக விரைவில் விடுவிக்கப்படுவார்கள். இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வை நிகழ்த்த எங்களுடன் இணைந்து பணியாற்றிய கத்தார், எகிப்து மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்த ஒப்பந்தம் குறித்து ஹமாஸ் அமைப்பும் உறுதிப்படுத்தியுள்ளது. ஹமாஸ் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த ஒப்பந்தம் ஏற்பட மத்தியஸ்தகம் செய்த கத்தார், எகிப்து, துருக்கி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோருக்கு நன்றி” எனத் தெரிவித்திருக்கிறது.
தொடர்ந்து, இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு இந்த ஒப்பந்தத்தை சுட்டிக்காட்டி ”இன்று இஸ்ரேலின் சிறந்த நாள்” எனக் கூறியுள்ளார்.
இந்த நிலையில்தான், ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே ஏற்பட்ட முதல் கட்ட அமைதி நடவடிக்கைய வரவேற்று பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் அமைதி திட்டத்தில் முதல் கட்டம் நிறைவேற உள்ளதை வரவேற்பதாக தெரிவித்துள்ளார். இஸ்ரேல் பிணைக்கைதிகள் விடுவிக்கப்படுவதுடன் காஸாவில் மக்களின் அமைதியான வாழ்க்கைக்கு இது உதவும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார். இது இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் வலிமையான தலைமையின் பிரதிபலிப்பு என்றும் மோடி கூறியுள்ளார்.
இஸ்ரேல் மீதான ஹமாஸ் அமைப்பின் தாக்குதலால் 1200 பேர் கொல்லப்பட்ட தாக்குதலை எதிர்த்து, அக்டோபர் 7, 2023ஆம் ஆண்டு தொடங்கிய காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் இரண்டு ஆண்டுகளை கடந்து நடந்து வருகிறது. இந்தத் தாக்குதல்களில் 67,000 க்கும் மேற்ப்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில், எகிப்தில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான முதல் கட்ட அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது.