டென்னிஸ் உலகை அதிரவைத்த சம்பவங்கள்.. மோனிகா செலஸ் - ஒவ்வொருக்குமான பாடம்!!
மோனிகா செலஸ்.. 90களில் இளைஞர்களை டென்னிஸ் பக்கம் திரும்ப வைத்த நட்சத்திர தேவதை. அக்காலகட்டங்களில் டென்னிஸ் உலகம் நட்சத்திர வீரர், வீராங்கனைகளால் நிறைந்திருந்தது. இப்போதும் பலர் இருக்கிறார்கள் என்றாலும்கூட, கிரிக்கெட்டைப் போன்ற வெறித்தனமான ரசிகர்கள் டென்னிஸ் போட்டிகளுக்கு இருந்த காலக்கட்டம் அது. அப்போது மைதானத்தில் சுழன்றடித்த சூறாவளிகளில் ஒருவர்தான் மோனிகா செலஸ். இப்போது அவருக்கு 51 வயதாகிறது. மீண்டும் இவர் மீடியா வெளிச்சத்திற்கு வந்திருக்கிறார்.
தனது வாழ்க்கையை, டென்னிஸ்க்கே உரிய மொழியில் சொல்வதானால், இவர் 3 ஆவது முறையாக ரீ செட் செய்திருக்கிறார். மோனிகாவின் வாழ்க்கையில் நடந்ததெல்லாம் அதிர்ச்சிகளும், ஆச்சரியங்களும்தான். மோனிகா சொன்ன 3 ரீ செட்களும் கரகோஷத்திற்குரியவை.
முதல் ரீ செட்
யூகோஸ்லோவியா நாட்டில் பிறந்த மோனிகா செலஸ், 5 வயது முதல் டென்னிஸ் விளையாட ஆரம்பித்தார். தந்தை எஸ்டரே அவருக்கு பயிற்சியாளராக இருந்தார். தொழில்முறை கார்ட்டூனிஸ்டான எஸ்டர், தனது மகளுக்காக படங்களை வரைந்து உற்சாகப்படுத்திக்கொண்டே இருந்தார். பின்னர், 1985ஆம் ஆண்டில் ஜெலீனா ஜென்சிக்கிடம் கோச்சிங் பெறத்தொடங்கிய மோனிகா, 11 வயதில் ஜூனியர் ஆரஞ்ச் பவுல் தொடரை வென்றார். மோனிகாவும், அவரது சகோதரரும் யுகோஸ்லோவியாவில் இருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தனர். இதுதான் மோனிகா செலசின் முதல் ரீ செட்.
13 வயது சிறுமியாக அமெரிக்கா வந்ததுதான் மோனிகா செலசின் முதல் ரீ செட். அப்போது அவருக்கு ஆங்கிலம் தெரியாது. குடும்பத்தை விட்டுவிட்டு அமெரிக்கா வந்த சிறுமிக்கு வாழ்க்கை எத்தனை கடுமையாக இருக்கும் என்று விவரிக்கவே முடியாது.
அமெரிக்காவில் பிரசித்தி பெற்ற Nick Bollettieri டென்னிஸ் அகாடமியில் சேர்ந்தார் மோனிகா. 1989 ல் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் பங்கேற்ற மோனிகா, அரையிறுதி வரை முன்னேறினார். அப்போதைய நம்பர் 1 வீராங்கனையான ஸ்டெபி கிராபிடம் அவர் தோல்வியைத் தழுவினார். 1990 ஆம் ஆண்டு பிரெஞ்சு ஓபன் பட்டம் வென்றார் மோனிகா. இப்பட்டத்தை மிக இளம் வயதில் வென்றவர் என்ற பெருமைக்குரியவர். 1991, 1992 ல் மோனிகா டென்னிஸ் களத்தை ஆட்சி செய்தார். நம்பர் ஒன் வீராங்கனையாக இருந்த ஸ்டெபி கிராபை பின்னுக்குத்தள்ளி நம்பர் ஒன் பட்டத்தை கைப்பற்றினார் மோனிகா. பிரெஞ்சு ஓபன் பட்டம் வென்றபோது மோனிகாவுக்கு வயது 16 மட்டுமே. 1992 ல் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், அமெரிக்க ஓபன் பட்டங்களை வென்றதோடு, முதன்முதலில் விம்பிள்டன் இறுதிப்போட்டியிலும் நுழைந்தார். ஆனால், ஸ்டெபி கிராபிடம் அவர் தோல்வியைத் தழுவினார்.
178 வாரங்களுக்கு உலகின் நம்பர் 1 பட்டத்தை தக்க வைத்த டென்னிஸ் வீராங்கனையான மோனிகா, WTA ஒற்றையர் போட்டிகளில் 53 பட்டங்களை வென்றுள்ளார். டீனேஜ் பருவத்திலேயே 8 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளை வென்றவர் மோனிகா செலஸ். மோனிகா டென்னிஸ் விளையாடும்போது ஒவ்வொரு முறை பந்தை எதிர்கொள்ளும்போதும், தடுத்தாடும்போதும் மிக சப்தமாக கத்துவார். மோனிகாவின் இந்த கத்தல் எதிராளியின் உறுதியை குலைத்துவிடும், தன்னம்பிக்கையை தளர்த்திவிடும். இவரது கத்தலை பொறுக்க முடியாமல், நதாலி, மார்டினா நவரத்திலோவா போன்ற வீராங்கனைகள் அம்பயரிடம் புகார் அளித்த சம்பவங்களும் நடந்துள்ளன.
2 ஆவது ரீ செட்
நம்பர் ஒன் பட்டத்தை தக்க வைத்துக்கொண்டிருந்த மோனிகா செலசுக்கு பெரும் ரசிகர் பட்டமே உருவானது. மிக இளம் வயதில் மோனிகாவின் வித்யாசமான ஆட்டமுறை, அவரின் கர்ஜனை, அடுத்தடுத்த பட்டங்கள், பெயர், புகழ், பணம் என அனைத்தும் அவருக்கு வசமானது. 1993 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம்தேதி உலகம் அதுவரை காணாத ஒரு சம்பவத்தை டென்னிஸ் களத்தில் கண்டது. ஹாம்பர்கில் நடந்த டென்னிஸ் போட்டியில், மோனிகா Magdalena Maleeva -க்கு எதிராக விளையாடிக் கொண்டிருந்தார். போட்டியின் இடையே அவர் ஓய்வுக்காக நாற்காலியில் அமர்ந்தபோது பின்னால் வந்த ஜெர்மானியர் ஒருவர், மோனிகாவின் முதுகில் கத்தியால் குத்தினார். மிகக் கொடூரமான படத்தை பார்ப்பது போல அந்த சம்பவம் இருந்ததாக மோனிகா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
ஸ்டெபி கிராபின் தீவிர ரசிகரான அந்த ஜெர்மானியர், அவரின் நம்பர் ஒன் பட்டத்தை பறித்த மோனிகாவின் வெற்றிகளை தாங்கிக் கொள்ளமுடியாமலும், ஸ்டெபிதான் நம்பர் ஒன்னாக இருக்க வேண்டும் என்பதாலும் இவ்வாறு செய்ததாக வாக்குமூலம் அளித்தார். மோனிகாவின் வெள்ளை சட்டை முழுவதும் சிவப்பானது. மோனிகா இனி விளையாடக்கூடாது என்ற எண்ணத்தில் கத்தியால் குத்தியதாக அந்த நபர் வாக்குமூலம் அளித்தார். அந்த தீய எண்ணம்தான் நிறைவேறியது. மோனிகா இந்த கொடூரமான சம்பவத்தில் இருந்து வெளியே வர நீண்ட காலம்ஆனது. கடுமையான மன அழுத்தத்துக்கும், உணவு உண்ண முடியாத அளவுக்கு மனநோய்க்கு ஆளானார் மோனிகா. இனி ஜெர்மன் மண்ணில் விளையாடவே போவதில்லை என்ற மோனிகா மீண்டும் டென்னிஸ் களத்திற்கு வர 2 ஆண்டுகள் பிடித்தது. மீண்டும் டென்னிஸ் விளையாட வந்தபோது ரசிகர்கள் அளித்த வரவேற்பு எப்போதும் தன்னால் மறக்கவே முடியாது என்றார்.
மோனிகா செலஸ் தாக்கப்பட்ட சம்பவம் டென்னிஸ் உலகின் போக்கையே மாற்றியது. டென்னிஸ் போட்டிகளில் பாதுகாப்புக்கு கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது. குறிப்பாக வீரர், வீராங்கனைகளின் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டது. இந்த சம்பவம் மட்டும் நடக்காமல் இருந்திருந்தால், மோனிகா செலஸ் பல சாம்பியன் பட்டங்களை வென்றிருப்பார் என்று மார்ட்டினா நவரத்திலோவா கூறினார். ஆம் அது நிஜம்தான். இந்த பாதிப்புக்குப் பிறகும் மோனிகா திரும்பி டென்னிஸ் களத்துக்கு வந்தார். 1996 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா ஓபன் பட்டத்தை வென்றார். 2003 ஆம் ஆண்டு தனது கடைசி போட்டியில் மோனிகா பங்கேற்றார். 8 முறை யுகோஸ்லோவியா சார்பாகவும், ஒருமுறை அமெரிக்கா சார்பாகவும் என 9 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற மோனிகா செலஸ் இப்போது மீண்டும் ஒரு நெருக்கடியை சந்தித்துவருகிறார்.
3 ஆவது ரீ செட்
ஒவ்வொரு முறை விழுந்தபோதும் எழுந்து நின்ற மோனிகா செலஸ், ஆகஸ்ட் 24 ஆம் தேதி தொடங்க உள்ள அமெரிக்க ஓபன் போட்டியையொட்டி தனது 3 ஆவது ரீ செட் குறித்து பேசியுள்ளார். கடந்த காலங்களையெல்லாம் ஒன்றுமில்லை என்று கூறுவது போல, மிக அரிதான நோய்க்கு ஆளாகியுள்ளதை இப்போது கூறியுள்ளார் மோனிகா செலஸ். myasthenia gravis எனப்படும் தசைச்சிதைவு நோயெதிர்ப்பு குறைவு நோயான இந்த நோயால் கடந்த 3 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டுள்ளதாக மோனிகா செலஸ் கூறியுள்ளார். ஒருமுறை டென்னிஸ் ராக்கெட்டை எடுத்து குடும்பத்தினருடன் விளையாடியபோது, பந்து இரண்டாக தெரிந்ததால் குழப்பம்அடைந்தார். அதன் பிறகு பரிசோதித்தபோதுதான் மையஸ்தனிஸ் கிராவிஸ் என்ற தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டதை அறிந்தார். இதனை ஏற்றுக் கொள்ளவும் முடியாமல், தினசரி வாழ்க்கையை நடத்தவும் முடியாமல் தவிப்புக்கு ஆளான மோனிகா செலஸ், தனது 3 ஆவது ரீசெட்டை தொடங்கியிருப்பதாக தெரிவித்துள்ளார். அமெரிக்க ஓபன்டென்னிஸ் போட்டிகள் தொடங்க உள்ளநிலையில், இந்த நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே 3 ஆண்டுகளுக்குப்பிறகு இந்த உண்மையை வெளிப்படுத்துவதாக கூறியுள்ளார்.
மையஸ்தனிஸ் கிராவிஸ்
மையஸ்தனிஸ் கிராவிஸ் என்ற இந்த நோய் மிகவும் தீவிரமான நரம்புசதைச்சிதைவு நோயாகும். இந்த நோய் பாதித்தவர்களின் தசைகள் பலவீனமடையும், 40 வயது பெண்கள் மற்றும் 60 வயது ஆண்கள் இடையே இந்த நோய் காணப்படுகிறது. குழந்தைப் பருவத்திலும் இந்நோய் தாக்கக்கூடும். இந்நோய் பாதித்தவர்கள் கைகளை எளிதாக பயன்படுத்தக்கூட முடியாது. குறிப்பாக தலைவாருவது கூட மிகக்கடினமான செயலாக இருக்கும். இப்போது இயல்பான வாழ்க்கையை எப்படி வாழ்வது என்பதை தாம் மீண்டும்கற்றுக்கொள்ளத் தொடங்கியிருப்பதாக கூறுகிறார் மோனிகா செலஸ். 13 வயதில் அமெரிக்காவுக்கு வந்ததும், 19 வயதில் கத்திக்குத்துப்பட்டதும், இப்போது அரியவகை தசைசிதைவு நோயால் பாதிக்கப்பட்டதையும் கூறிய மோனிகா செலஸ், கண்முன்னே பந்து மேலெழும்புகிறது, அதற்கேற்ப நாம் இயக்க வேண்டும். அதைத்தான் இப்போது நான் செய்கிறேன் என்று கூறியுள்ளார்.