அதிமுகவில் தொடர் விலகல்.. மைத்ரேயன் விலகலுக்கு காரணம் என்ன? இபிஎஸ்க்கு நெருக்கடியா?
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையடுத்து கட்சிகள் கூட்டணி வகிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. அதேநேரத்தில், கட்சியில் அதிருப்தி அடைந்த மூத்த தலைவர்கள் சிலர், பிற கட்சிகளுக்குத் தாவி வருகின்றனர். அந்த வகையில், சமீபத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா திமுகவில் இணைந்தார். அவருக்கு கலை இலக்கிய அணி மாநிலச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, அதிமுக முன்னாள் எம்.பியான மைத்ரேயனும், திமுக தலைவரும் தமிழ்நாடு முதலைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இன்று இணைந்திருக்கிறார்.
புற்றுநோய் சிகிச்சை நிபுணரான மைத்ரேயன் 1990களில் ஆர் எஸ் எஸ் இயக்கத்தில் பணியாற்றியவர். பின் பாஜகவில் இணைந்த மைத்ரேயனுக்கு தமிழ்நாடு பாஜகவின் பொதுச் செயலாளராக 1995 முதல் 1997 வரை பணியாற்றினார். பின், தமிழ்நாடு பாஜக துணைத் தலைவராக 1997 முதல் 1999 வரை பணியாற்றினார். தமிழ்நாடு பாஜக தலைவராகவும் பணியாற்றியிருக்கிறார். பின் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த மைத்ரேயன் தொடர்ச்சியாக மூன்று முறை ராஜ்யசபா எம்பியாக பதவி வகித்தார். இதனையடுத்து முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு, ஓபிஎஸ் அணியில் இருந்த மைத்ரேயன், அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்னையாக உருவெடுத்தபோது இபிஎஸ் அணியில் இணைந்தார். அப்போது அவருக்கு முக்கியத்துவம் வழங்கப்படாத நிலையில், ஓபிஎஸ்ஸை சந்தித்ததால், கடந்த 2022-ல் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து பாஜகவிற்கு சென்ற அவர் கடந்த ஆண்டு மீண்டும் அதிமுகவிற்கு திரும்பினார். இந்நிலையில் தற்போது திமுகவில் இணைந்திருக்கிறார்.
திமுகவில் இணைந்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த மைத்ரேயன், “தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக மாற்ற முதல்வர் ஸ்டாலின் முயன்று வருகிறார். அதிமுக, பாஜக வலையில் சிக்கித் தவிக்கிறது. கூட்டணியை முடிவு செய்யும் அதிகாரம் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை. டெல்லிக்கு கட்டுப்பட்டு எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். அதிமுக - பாஜக கூட்டணியால் பலர் மனக்குழப்பத்தில் இருக்கிறார்கள்” எனத் தெரிவித்தார்.
மைத்ரேயனின் திமுக இணைப்பு குறித்து புதிய தலைமுறையிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம், “அதிமுகவிலிருந்து மைத்ரேயனின் விலகலுக்கு மகிழ்ச்சியின்மை மிக முக்கியக் காரணம். ஒருவர் ஒரு கட்சியில் இருந்து மற்ற கட்சிக்கு போகும்போது, பழைய கட்சியில் அவருக்கு அங்கீகாரம் இல்லாமல் இருப்பதே மிக முக்கியமான காரணமாக இருக்கும். புதிதாக சென்ற கட்சியில் அங்கீகாரம் கிடைக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பும் இருக்கும்.
தலைவர்கள் அதிமுகவிலிருந்து திமுகவிற்கும், திமுகவிலிருந்து அதிமுகவிற்கும் மாறுவதை நாம் தொடர்ந்து பார்த்திருக்கிறோம். ஆனால், மைத்ரேயன் ஆரம்பத்தில் பாஜகவில் இருந்தவர். அதன்பின் 2000 காலக்கட்டங்களில் அதிமுக; அங்கு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா காலக்கட்டத்தில் அதிமுக ராஜ்யசபா எம்பியாக இருந்தார். இதன்பிறகு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவில் அவருக்கு அதிருப்தி எழுந்த நிலையில், மீண்டும் பாஜகவிற்கு சென்றார். பின் மீண்டும் அதிமுகவிற்கு திரும்பி அமைப்புச் செயலாளர் ஆனார். ஆனால், அதிமுகவில் அவருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை. சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், பாஜகவின் முன்னோடிகளில் ஒருவர் திமுகவிற்கு திரும்பியிருக்கிறார். இடையே அதிமுகவின் வழியாக அவரது பயணம் இருந்திருக்கிறது.
புதிதாக வந்து சேர்ந்தவர்களுக்கு எப்போதும் பொறுப்புள்ள பதவிகள் வழங்கப்படமாட்டாது. அலங்காரப் பதவிகள்தான் கொடுக்க முடியும்.. அனைத்து கட்சிகளிலும் இதுதான் நடைமுறை. மிக முக்கியமாக மைத்ரேயனின் வருகை ஒருசில தினங்களுக்கு பேசுபொருளாக இருக்குமே ஒழிய அதிமுக வாக்கு வங்கிகளில் அதிர்வலைகளை எல்லாம் ஏற்படுத்தாது. மிக சுருக்கமாக, எஸ்வி சேகர் திமுகவிற்கு ஆதரவாக பேசுவதுபோல் மைத்ரேயனும் பேசுவார்.. இப்படித்தான் நாம் இதை எடுத்துக்கொள்ள முடியும்” எனத் தெரிவித்தார்.
மைத்ரேயன் திமுகவில் இணைந்தது குறித்து புதிய தலைமுறையிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் துரை கருணா, “அதிமுகவில் முக்கிய பொறுப்பு வகித்தவர்கள் திமுகவில் இணையும்போது நிச்சயமாக அதிமுகவிற்கு நெருக்கடியைத்தான் ஏற்படுத்தும். 2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு ஏற்பட்ட சரிவு மற்றும் தோல்வியை அடுத்து, மீண்டும் அனைவரும் இணைந்து ஒன்றுபட்ட வலிமையான அதிமுகவை உருவாக்கி அதன்மூலம் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டால் மட்டுமே திமுகவை வீழ்த்த முடியும் என அதிமுகவில் இருக்கும் பலரும் நினைக்கிறார்கள்.
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவிற்கு இனி எதிர்காலம் இல்லை; மீண்டும் ஆட்சிக்கு வரமுடியாது எனும் கருத்தாக்கம் கட்சியில் பயணிக்கும் மூத்தவர்கள் பலருக்கும் வந்துவிட்டதோ எனும் சந்தேகத்தைதான் இந்த விலகல்கள் ஏற்படுத்துகின்றன” எனத் தெரிவித்தார்.