50 ஆண்டு திரை வாழ்க்கை| ”நமது சூப்பர் ஸ்டாரை பாசத்துடன் கொண்டாடுகிறேன்..” - கமல்ஹாசன் வாழ்த்து!
1975-ம் ஆண்டு இதே ஆகஸ்டு மாதம் 15-ம் தேதி வெளிவந்த அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் நடித்ததன் மூலம், தமிழ் திரைத்துறை சினிமாவில் காலடி எடுத்துவைத்தார் நடிகர் ரஜினிகாந்த். அப்படத்தில் இயக்குநர் பாலச்சந்தர் இயக்கத்தில் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இருவரும் சேர்ந்து நடித்திருந்தனர்.
அங்கிருந்து பல திரைப்படங்களில் சேர்ந்து நடித்த நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும், பின்னர் தனித்தனியாக படங்கள் நடித்து இந்திய சினிமாவின் இரண்டு தூண்களாக உயர்ந்துள்ளனர்.
2025-ம் ஆண்டு கூலி திரைப்படத்தின் மூலம் 50 ஆண்டுகால சினிமா வாழ்க்கையை நிறைவுசெய்திருக்கும் ரஜினிகாந்த், இந்திய சினிமாவின் பாக்ஸ் ஆஃபிஸ் மன்னனாக வலம்வருகிறார். தன்னுடைய ஃபேன் பேஸ் மூலம் இந்திய சினிமாவை அடுத்த இடத்திற்கு நகர்த்திய ரஜினிகாந்த், தமிழ் சினிமாவின் 1000 கோடி வசூல் என்ற சாதனையை நிகழ்த்தும் நம்பிக்கையாக பார்க்கப்படுகிறார்.
இந்த சூழலில் சினிமா வாழ்க்கையில் 50 ஆண்டுகளை நிறைவுசெய்திருக்கும் ரஜினிகாந்திற்கு சக நடிகரும், நண்பருமான கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நமது சூப்பர்ஸ்டாரை கொண்டாடுகிறேன்..
50 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினியின் நடிப்பு மற்றும் லோகேஷ் கன்கராஜ் இயக்கத்தில் நாளை ஆகஸ்டு 14-ம் தேதி கூலி திரைப்படம் வெளியாகவுள்ளது. இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் 35 ஆண்டுகளுக்கு பிறகு சத்யராஜ் சேர்ந்து நடித்துள்ளார். அவர்களுடன் கிங் நாகார்ஜுனா, உபேந்திரா போன்ற சூப்பர் ஸ்டார் நடிகர்களும் நடித்துள்ளனர்.
அனிருத் இசை மற்றும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு அதிகப்படியான எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. 50 ஆண்டு சினிமா வாழ்க்கையை நிறைவுசெய்திருக்கும் நடிகர் ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் தமிழ் சினிமாவின் முதல் ஆயிரம் கோடி வசூலை கொடுக்குமா என்ற எதிர்ப்பார்ப்பும் ரசிகர்களிடையே நிலவுகிறது.
இந்நிலையில் திரைத்துறையில் 50 ஆண்டுகள் நிறைவுசெய்ததற்கும், கூலி படத்திற்கும் சேர்த்து நடிகர் ரஜினிகாந்திற்கு கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவருடைய எக்ஸ் தள பதிவில், “சினிமாவில் அரை நூற்றாண்டு கால திறமையைக் குறிக்கும் வகையில், எனது அன்பு நண்பர் ரஜினிகாந்த் இன்று சினிமாவில் 50 ஆண்டுகளைக் கொண்டாடுகிறார். நமது சூப்பர் ஸ்டாரை பாசத்துடனும் பாராட்டுடனும் கொண்டாடுகிறேன், மேலும் இந்தப் பொன் விழாவிற்கு ஏற்றவாறு ’கூலி’ திரைப்படம் உலகளாவிய வெற்றியைப் பெற வாழ்த்துகிறேன்” என்று கூறியுள்ளார்.