2007 உலகக்கோப்பையில் இந்தியாவிற்கு மிகப்பெரிய தோல்வியை கொடுத்தது மட்டுமில்லாமல், 2018 ஆசியக்கோப்பை இறுதிப்போட்டியிலும் கிட்டத்தட்ட இந்திய அணியை நிலைகுலைய வைத்தது வங்கதேச அணி.
2012 மற்றும் 2016 என இரண்டுமுறை ஆசியக்கோப்பை இறுதிப்போட்டி வரை வந்து தோல்வியடைந்த வங்கதேச அணி, 2018 இறுதிப்போட்டியில் எப்படியாவது கோப்பை வெல்லவேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தது.
2018 ஆசியக்கோப்பை இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய லிட்டன் தாஸ் 117 பந்தில் 121 ரன்கள் அடித்து அசத்தினார். ஆனால் அவரை தவிர மற்ற வீரர்கள் ஒருவர் கூட நிலைத்து நின்று ஆடாமல் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். முடிவில் 48.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த வங்கதேச அணி 222 ரன்கள் மட்டுமே சேர்த்தது.
223 ரன்கள் தானே எளிதாக எட்டிவிடலாம் என்ற எண்ணத்தில் இருந்த இந்திய அணிக்கு வங்கதேசம் ஆட்டம் காட்டியது. தொடக்க வீரராக 48 ரன்கள் அடித்த ரோகித் சர்மா நல்ல தொடக்கம் கொடுத்தாலும், மறுமுனையில் 15, 2 ரன்களில் வெளியேறிய ஷிகர் தவான், அம்பத்தி ராயுடு ஏமாற்றினர். நம்பிக்கை கொடுத்த தினேஷ் கார்த்திக், தோனி இருவரும் 37, 36 ரன்னில் வெளியேற, நிலைத்து நின்று ஆடிய கேதார் ஜாதவ் ரிட்டயர்டு ஹர்ட் மூலம் பாதியிலேயே வெளியேறினார்.
அவ்வளவு தான் ஆட்டம் முடிந்தது என்று நினைத்த தருணத்தில் சிக்சர், பவுண்டரி என பறக்கவிட்ட புவனேஷ்வர் குமார் 21 ரன்கள் அடித்து போட்டியையே தலைகீழாக மாற்றினார். ஆனால் சரியான நேரத்தில் புவனேஷ்வரையும் வெளியேற்றிய வங்கதேசம் 214-க்கு 7வது விக்கெட்டை கழற்றியது. எந்த பக்கம் வேண்டுமானாலும் ஆட்டம் செல்லலாம் என்று இருந்த இடத்தில், ரிட்டயர்டு ஹர்ட் மூலம் வெளியேறிய கேதார் மீண்டும் களமிறங்கி அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றார்.
இறுதி பந்துவரை சென்ற இந்த இறுதிப்போட்டியில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வங்கதேசத்தை வீழ்த்தி கோப்பை வென்றது.
2014 ஆசியக்கோப்பை தொடரின் 8வது லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி வங்கதேசத்தை எதிர்கொண்டு விளையாடியது.
முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 50 ஓவரில் 326 ரன்கள் என்ற வலுவான டோட்டலை குவித்தது. தொடக்க வீரராக களமிறங்கிய அனாமுல் ஹக் சதமடித்து அசத்த, அடுத்தடுத்து வந்த 3 வீரர்களும் அரைசதமடித்து அசத்தினர்.
327 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணியும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தது. தொடக்க வீரர் அகமது ஷெசாத் 103 ரன்களும், முகமது ஹஃபீஸ் 52 ரன்களும் அடித்து அசத்தினர். ஆனால் அதற்குபிறகு வந்த 3 வீரர்கள் ஓரிலக்கத்தில் வெளியேற பாகிஸ்தான் அணி ஆட்டம் கண்டது.
மிடில் ஆர்டரில் சிறப்பாக விளையாடிய ஒரே வீரரான பவத் அலாமும் 74 ரன்னில் நடையை கட்ட 225 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது பாகிஸ்தான். ரன்ரேட் 12-ஆக உயர கிட்டத்தட்ட வங்கதேசத்தின் பக்கமே வெற்றி இருந்தது.
ஆனால் 7வது வீரராக களத்திற்கு வந்த ஷாகித் அப்ரிடி தன்னுடைய அக்மார்க் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சந்தித்த முதல் 9 பந்திலேயே 5 சிக்சர்களை விரட்டிய அவர், 230 ஸ்டிரைக் ரேட்டில் 25 பந்தில் 59 ரன்கள் குவித்து மிரட்டினார். அவருடைய அதிரடி ஆட்டத்தின் உதவியால் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி த்ரில் வெற்றியை பதிவுசெய்தது.
2014 ஆசியக்கோப்பையின் லீக் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் விளையாடிய இந்திய அணி ரோகித் சர்மா, அம்பத்தி ராயுடு மற்றும் ரவீந்திர ஜடேஜா 3 பேரின் அரைசதத்தின் உதவியால் 248 ரன்கள் சேர்த்தது.
249 ரன்கள் அடித்தால் வெற்றி என களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு வில்லனாக மாறிய ரவிச்சந்திரன் அஸ்வின் முக்கியமான 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். வந்த வீரர்கள் எல்லாம் தொடக்கம் கொடுத்தாலும், விக்கெட்டை காப்பாற்றிக்கொள்ள தவறினர். தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் அணி 49.1 ஓவரில் 246 ரன்னுக்கு 9வது விக்கெட்டை பறிகொடுத்தது.
கடைசி 5 பந்துக்கு 10 ரன்கள் தேவை என்ற நிலையில், இறுதிஓவரை அப்போதைய நாளின் சிறந்த பவுலர் அஸ்வின் வீசினார். 49.2வது பந்தை பவுலர் ஜுனைத் கான் எதிர்கொள்ள அஸ்வின் 10வது விக்கெட்டையும் வீழ்த்திடுவார், இந்தியா வெற்றிபெற போகிறது என்ற எண்ணமே இருந்தது. ஆனால் சாமர்த்தியமாக 1 ரன்னை எடுத்த ஜுனைத் ஸ்டிரைக்கை ஷாகித் அப்ரிடியிடம் கொடுத்தார். ஸ்பின்னர்களை டாமினேட் செய்யும் அதிரடி வீரரான ஷாகித் அப்ரிடி, அஸ்வின் வீசிய அடுத்தடுத்த 2 பந்திலும் 2 சிக்சர்களை பறக்கவிட்டு பாகிஸ்தானுக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார்.
ஒரு நெய்ல் பைட்டர் போட்டியில் 1 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்தது பாகிஸ்தான்.
பரபரப்பான இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொண்டு விளையாடியது வங்கதேச அணி. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 236 ரன்களை மட்டுமே சேர்த்தது.
237 ரன்கள் என்ற எளிதான இலக்கை எட்டிவிடலாம் என களமிறங்கிய வங்கதேச அணி முதல் விக்கெட்டையே விட்டுக்கொடுக்காமல் 68 ரன்கள் சேர்த்தது. அற்புதமாக விளையாடிய தமீம் இக்பால் 60 ரன்கள் அடித்து வெளியேறினார்.
அடுத்துவந்த வீரர் 0 ரன்னில் வெளியேற அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்த வங்கதேசம் தடுமாறியது. ஒருபக்கம் 63 பந்துகளை சந்தித்து நாசர் ஹுசைன் நிலைத்து நிற்க, மறுமுனையில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய ஷாகிப் அல் ஹசன் 7 பவுண்டரிகள் 1 சிக்சர் என விளாசி 68 ரன்கள் விளாசினார்.
ஆனால் நாசர் ஹுசைனும், ஷாகிப் அல் ஹசனும் அடுத்தடுத்த ஓவரில் அவுட்டானது பாகிஸ்தான் அணியை ஆட்டத்திற்குள் மீண்டும் கொண்டு வந்து உயிர்பெற வைத்தது. அடுத்து வந்த வீரர்கள் போராடினாலும், பாகிஸ்தான் தங்களுடைய பந்துவீச்சில் வங்கதேசத்தை திணறடித்தது. ரன்களை விட்டுக்கொடுக்காமல் பாகிஸ்தான் பந்துவீச, கடைசி 6 பந்துக்கு 9 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலை உருவானது.
ஆனால் 2 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசம் தோல்வியை தழுவியது.
இந்தியா- பாகிஸ்தான் மோதல் என்றாலே ரசிகர்களுக்கு அதிகமாக 2007 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியும், 2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியும், 2022 டி20 உலகக்கோப்பை லீக் போட்டியும்தான் உடனடியாக நினைவுக்கு வரும் சிறந்த மோதலாக இருந்துவருகின்றன.
ஆனால் இவை அனைத்திற்கும் சவால் கொடுக்கும் ஒரு போட்டியாக, ’மேட்ச்னா இதான் டா மேட்ச்’ என சொல்லும் வகையில் 1986 ஆசியக்கோப்பை இறுதிப்போட்டியானது அமைந்திருந்தது.
18 ஏப்ரல் 1986-ம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்ற ஆசியக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் தொடக்க வீரர்களான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் 75 ரன்களும், சுனில் கவாஸ்கர் 92 ரன்களும் அடித்து சிறந்த தொடக்கத்தை கொடுத்தனர். 3வது வீரராக களமிறங்கிய வெங்சர்க்காரும் 50 ரன்கள் அடிக்க, 216/3 என்ற வலுவான நிலையில் இருந்தது இந்திய அணி. ஆனால் அதற்கு பிறகு வந்த கிர்தி அசாத், கபில்தேவ், சேட்டன் சர்மா, ரவி சாஸ்திரி என அனைவரும் ஓரிலக்க எண்ணில் ஒருவருக்கு பின் ஒருவராக வெளியேற 50 ஓவர்கள் முடிவில் 245 ரன்கள் மட்டுமே சேர்த்தது இந்திய அணி.
246 ரன்கள் அடித்தால் வெற்றி என களமிறங்கிய பாகிஸ்தான் அணி, 61 ரன்னுக்கே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால் ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நட்சத்திர வீரர் ஜாவேத் மியான்தத் சதமடித்து அசத்தினார். அவரை தவிர மற்ற அனைத்து வீரர்களையும் அவுட்டாகிய இந்திய அணி 241 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியது.
எப்படியும் இந்தியாதான் வெற்றிபெறும் என்ற நிலையே இருந்தது. எல்லாம் இந்தியாவின் பக்கம் இருக்க, 11வது வீரராக களமிறங்கிய பாகிஸ்தான் பந்துவீச்சாளர் 49.5வது பந்தில் சாமர்த்தியமாக 1 ரன்னை எடுத்து ஸ்டிரைக்கை மியான்தத்திடம் கொடுத்தார்.
ஆசியக்கோப்பை இறுதிப்போட்டியின் கடைசி பந்து, இந்தியா வெற்றிபெற 1 விக்கெட் தேவை, பாகிஸ்தான் வெற்றிபெற 4 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. என்ன நடக்கபோகிறது என்ற அழுத்தம் இரு அணிக்கும் அதிகரிக்க, ரசிகர்கள் படப்படப்போடு போட்டியை பார்த்துக்கொண்டிருந்தனர். ஆனால் சேட்டன் சர்மா வீசிய இறுதிப்பந்தில் ஒரு பிரமாண்டமான சிக்சரை பறக்கவிட்ட மியான்தத் பாகிஸ்தானை 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிக்கு அழைத்துச்சென்றார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் 116 ரன்கள் குவித்த மியான்தத் பாகிஸ்தானுக்கு கோப்பையை வென்றுகொடுத்தார். இரண்டு அணிக்கும் ஒரு ரோலர் கோஸ்டர் போட்டியாக இருந்த 1986 ஆசியக்கோப்பை இறுதிப்போட்டி இன்றளவும் மறக்க முடியாத போட்டியாக இருந்துவருகிறது.