ரேஸிங் வழியே இந்திய சினிமாவை பெருமைப்படுத்தும் நடிகர் அஜித்!| Ajith kumar | AK | AjithKumarRacing
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமார். இந்தாண்டு அவர் நடிப்பில் வெளியான `குட் பேட் அக்லி' மிகப்பெரிய ஹிட்டானது. சினிமாவைத் தாண்டி கார் ரேஸில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் அஜித். இப்போது சினிமாவில் இருந்து பிரேக் எடுத்து தனது கார் ரேஸ் தொடர்பான பணிகளில் தீவிரமாக இயங்கி வருகிறார்.
‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற தனது சொந்த பந்தய நிறுவனத்தை கடந்த ஆண்டு உருவாக்கினார் அஜித். இந்த நிறுவனம் துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளையும் பெற்றுள்ளது. தற்போது ஜெர்மனியில் நடக்கும் கார் ரேஸில் அஜித் பங்கேற்றுள்ளார். இதனை தொடர்ந்து 2025 FIA 24H endurance Series-ல் போர்ஷ் கார்களுடன் பங்கேற்ற அஜித்குமார் ரேஸிங் டீம், துபாயின் Michelin 24H DUBAI போட்டியில், முழு ஐரோப்பிய சீசனிலும் பங்கேற்பதை உறுதி செய்திருக்கிறது.
அஜித்குமார் ரேஸிங், இந்திய சினிமாவை பெருமைப்படுத்தும் முயற்சி ஒன்றை கையில் எடுத்துள்ளது. அந்த வகையில் மோட்டார் ஸ்போர்ட் மற்றும் பொழுதுபோக்கை இணைக்கும் வகையில், இரண்டு பார்வையாளர்களையும் ஒரே புள்ளியில் இணைக்கும் லோகோவை அறிமுகப்படுத்தி இருக்கின்றனர். அந்த லோகோவில், கிளாப் போர்டில் 1913ல் இருந்து என இந்திய சினிமாவின் துவக்கத்தை குறிக்கும் வகையில் எழுதப்பட்டிருக்கிறது. அதனை சுற்றி இந்திய சினிமா என்றும் உலகில் அதிகமான சினிமாக்களை 20 மொழிகளில் தயாரிக்கிறோம் எனவும் எழுதி இந்திய சினிமாவின் பாரம்பரியத்தை குறிப்பிட்டுள்ளனர்.
இந்த லோகோ, ரேஸ் கார் மற்றும் டிரைவர் சூட்களில் சேர்க்கப்படும் என அஜித்குமார் ரேஸிங் இன்ஸ்டாகிராம் பக்கம் மூலமும் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திராவின் சமூக வலைதள பக்கங்கள் மூலமும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.