`பாகுபலி'யில் ஸ்ரீதேவி.. சிவகாமியாக நடிக்க முடியாமல் போனது ஏன்? - போனி கபூர் ஆதங்கம்|Baahubali
ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி மாபெரும் ஹிட்டான படம் `பாகுபலி'. உலக அளவில் கவனம் ஈர்த்த இப்படத்தின் இரண்டு பாகங்களும் வசூல் சாதனையை செய்தன. இப்போது வரை இப்படத்தின் மீது இருக்கும் வரவேற்பை மனதில் வைத்து பாகுபலியின் இரு பாகங்களையும் இணைத்து Baahubali the Epic படத்தை அக்டோபர் 31ம் தேதி வெளியிட உள்ளனர். இந்தப் படத்தில் மிக முக்கியமான பாத்திரம் ரம்யா கிருஷ்ணன் நடித்த ராஜமாதா சிவகாமி பாத்திரம். இந்த கதாப்பாத்திரத்தில் முன்பு நடிப்பதாக இருந்தது நடிகை ஸ்ரீதேவி எனவும், அதில் அவர் ஏன் நடிக்க முடியாமல் போனது என்பதையும் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார் அவரது கணவரும் தயாரிப்பாளருமான போனி கபூர்.
"ராஜமௌலியின் `பாகுபலி' படத்தில் ஸ்ரீதேவி நடிக்க முடியாமல் போனது. ஸ்ரீதேவியுடனான உரையாடலுக்குப் பின் ராஜமௌலிக்கு ஸ்ரீதேவி மேல் இருந்த மரியாதை பன்மடங்காக உயர்ந்தது. ஏனென்றால் ராஜமௌலிடம் அந்தக் கதாப்பாத்திரத்திற்கு பல்வேறு யோசனைகளை ஸ்ரீதேவி கூறியிருந்தார். ஆனால் அந்தப் படத்தில் அவரால் நடிக்க முடியாமல் போனதற்கு காரணம் படத்தின் தயாரிப்பாளர்கள்தான். ராஜமௌலி வந்தார், படம் பற்றி கூறினார், சம்பளம் பற்றி பேசும் போது அவர் வெளியேறிவிட்டார். ஆனால் தயாரிப்பாளர்கள் கூறிய சம்பளம், `இங்கிலிஷ் விங்கிலிஷ்` படத்திற்கு ஸ்ரீதேவி வாங்கிய சம்பளத்தை விட குறைவாக இருந்தது. அவர் ஒன்றும் வாய்ப்பில்லாத நடிகை இல்லையே, அவரை உங்கள் படத்தில் நடிக்க வைப்பதால் சில நன்மைகள் இருக்கும்என்று தானே அணுகினீர்கள். அதை நீங்கள் மதிக்கவில்லை என்றால் எதற்காக அவர் நடிக்க வேண்டும்.
ஆனால் இதை எல்லாம் தயாரிப்பாளர்கள் ராஜமௌலியிடம் கூறியிருக்க மாட்டார்கள். அவர்கள் என்ன கூறியிருப்பார்கள் என்றால், ஸ்ரீதேவி தங்குவதற்கு ஹோட்டலின் மொத்த தளத்தையும் கேட்டார் என இல்லாத ஒன்றை சொல்லி இருப்பார்கள். நாங்கள் கேட்டது எல்லாம் ஒன்றே ஒன்று தான். படப்பிடிப்பு நாட்களை தொடர்ச்சியாக நடக்கும்படி திட்டமிடுங்கள். எங்கள் குழந்தைகளின் விடுமுறை சமயத்தில் அவற்றை திட்டமிடுங்கள், எனவே அவர்களும் எங்களோடு இருக்க முடியும் என்றோம். `இங்கிலிஷ் விங்கிலிஷ்` படப்பிடிப்பின் போது நியூயார்கில் எங்கள் குழந்தைகளுடன் தங்கினோம். அவர்களுக்கான ஹோட்டல் பில்லை நான்தான் கொடுத்தேன். ஆனால் இந்த தயாரிப்பாளர்கள் ராஜமௌலிக்கு தவறான தகவல்களை தெரிவித்திருக்கிறார்கள்.
இதை நான் நேரடியாக அந்த தயாரிப்பாளர்களிடம் கூட சொல்வேன். ஒரு பேட்டியில் ராஜமௌலி கூட ஸ்ரீதேவி தங்குவதற்கு ஹோட்டலின் மொத்த தளத்தையும் கேட்டார் எனக் கூறியிருந்தார். ஸ்ரீதேவி தொழில்முறை கலைஞராக இல்லை என்றால் தெலுங்கில் எப்படி அத்தனை படங்கள் செய்திருக்க முடியும். அவரது அணுகுறை குறித்து இப்போதும் பலரும் புகழ்ந்து பேசுவார்கள். ஸ்ரீதேவியுடன் நிறைய படங்களில் பணியாற்றிய இயக்குநர் ராகவேந்தர ராவின் உறவினர்தான் அந்த தயாரிப்பாளர் ஷோபு. ராகவேந்தர ராவிடம் சென்று நாங்கள் மிகப்பெரிய தொகை தருவதாக சொல்லியும் ஸ்ரீதேவி நடிக்கவில்லை என சொல்லி இருக்கிறார். மறுபடியும் பொய். இந்தப் படத்தில் ஸ்ரீதேவி நடிக்கவில்லை என்பதில் எனக்கு வருத்தம் இல்லை. ஆனால் அது நடந்த விதம் வருத்தமளிக்கக் கூடியதாக இருக்கிறது." எனக்கூறியுள்ளார் போனி கபூர்.