SIR | ”1% வாக்காளர்கள் நீக்கப்பட்டாலும்..” எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பும் ADR வெளியிட்ட தரவுகளும்!
பிகாரில் நடைபெற்றுவரும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தத்தை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பதற்கு கடந்த 2020ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் - பல தொகுதிகளில் - வெற்றி தோல்விக்கான வாக்குகளின் வித்தியாசம் மிகக்குறைவாக இருந்ததே காரணம் என்று கூறப்படுகிறது. இது குறித்த செய்தியைப் பார்க்கலாம்...
243 தொகுதிகளைக் கொண்ட பிகார் சட்டப் பேரவைக்கு வருகின்ற நவம்பர் மாதம் தேர்தல் நடக்கவிருக்கிறது. இத்தகைய சூழலில், சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் இந்தியா முழுதும் பேசுபொருளாகியிருக்கும் நிலையில், இண்டியா கூட்டணியைச் சார்ந்த எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்புகளையும், திருத்தம் குறித்த சந்தேகங்களையும் எழுப்பி வருகின்றன. மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தேர்தல் ஆணையத்திடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்து வருகிறார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் “வாக்காளர் அதிகார யாத்திரை” என்ற பெயரில் சிறப்பு தீவிர திருத்தத்தில் உள்ள குளறுபடிகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த பிகாரில் 16 நாட்கள் சுற்றுப்பயணத்தையும் ராகுல்காந்தி மேற்கொண்டார்.
இந்நிலையில், பிகாரில் நடைபெற்றுவரும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தத்தை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பதற்கு கடந்த 2020ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் - பல தொகுதிகளில் - வெற்றி தோல்விக்கான வாக்குகளின் வித்தியாசம் மிகக்குறைவாக இருந்ததே காரணம் என்று கூறப்படுகிறது.
ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ADR) வெளியிட்டுள்ள தரவுகள்
2020 ஆம் ஆண்டு நடைபெற்ற பிகார் சட்டமன்றத் தேர்தலில், 35 தொகுதிகளில் வெற்றி-தோல்வி வித்தியாசம் 3,000 வாக்குகளுக்குக் குறைவாகவும், 52 தொகுதிகளில் 5,000 வாக்குகளுக்குக் குறைவாகவும் இருந்ததாக ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ADR) வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன. சில தொகுதிகளில் மூன்று அல்லது இரண்டு இலக்க வாக்கு வித்தியாசத்திலும் முடிவு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த அறிக்கை பேசுபொருளாகியிருக்கிறது.
2020 பீகார் சட்டமன்றத் தேர்தலில் என்ன நடந்தது ?
உதாரணமாக ஹில்சா தொகுதியில் ராஷ்ட்ரிய ஜனதா தள வேட்பாளர் சக்தி சிங் யாதவ், வெறும் 12 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இதேபோல், சக்கியா தொகுதியில் ராஷ்ட்ரிய ஜனதா தள வேட்பாளர் சாவித்திரி தேவி 581 வாக்குகள் வித்தியாசத்திலும், பஸ்வாரா தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் 484 வாக்குகள் வித்தியாசத்திலும் தோல்வியுற்றார். காங்கிரஸ் வேட்பாளர்கள் சிலரும் 3000க்கு குறைவான வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளனர். டிக்காரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சுனில் குமார் 2,630 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
2020 பிஹார் சட்டமன்றத் தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தனர். மதிஹானி தொகுதியில் ஐக்கிய லோக் ஜனசக்தி கட்சி (LJP) வேட்பாளர் ராஜ்குமார் சிங்கிடம், ஐக்கிய ஜனதா தளம் (JD(U)) வேட்பாளர் நரேந்திர குமார் சிங் என்ற போகோ சிங் வெறும் 333 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். பாகல்பூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் ரோஹித் பாண்டே, காங்கிரஸ் வேட்பாளர் அஜித் சர்மாவிடம் 1,113 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்திருந்தார். இவ்வாறு 2020 பீகார் சட்டமன்றத் தேர்தலில், வெற்றி வித்தியாசம் 35 இடங்களில் ஓட்டு வித்தியாசம் 3,000 க்கும் குறைவாகவும் 52 இடங்களில் 5,000 க்கும் இருந்துள்ளது.
தேஜஸ்வி யாதவ் கருத்து
இந்த நிலையில்தான், ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ், "பிகாரின் ஒட்டுமொத்த வாக்காளர் பட்டியலிலிருந்து ஒரு விழுக்காடு வாக்காளர்கள் நீக்கப்பட்டால்கூட, அது சுமார் 35 தொகுதிகளின் தேர்தல் முடிவுகளை கடுமையாக பாதிக்கும்" என்று தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே பிஹாரில் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுவரும் வாக்காளர் பட்டியல் திருத்தத்தை எதிர்க்கட்சிகள் தீவிரமாக எதிர்த்துவருவதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.