IND vs PAK| 1986 ஆசிய கோப்பை இறுதிப்போட்டி.. 1 பந்துக்கு 4 ரன் தேவை! என்ன நடந்தது தெரியுமா?
இந்தியா-பாகிஸ்தான் ரைவல்ரி என்பது உலக கிரிக்கெட் ரசிகர்களே எப்போது நடக்கும் என காத்திருக்கும் ஒரு கிரிக்கெட் திருவிழாவாகும். அதனால்தான் பல உலக நாடுகள் கூட பாகிஸ்தான் - இந்தியா இடையேயான இருதரப்பு மோதலை தங்கள் நாட்டில் நடத்திக்கொள்கிறோம் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றன.
டெஸ்ட், ODI, டி20 என எந்த வடிவமானாலும் சரி இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மோதலானது, எப்போதும் பரபரப்பிற்கும், சவாலிற்கும் சற்றும் குறைவில்லாத போட்டிகளாகவே வரலாற்றில் தடம்பதித்துள்ளன.
தற்போது தான் டி20 போட்டிகளில் சூப்பர் ஓவர், ஃப்ரீ ஹிட், இம்பேக்ட் பிளேயர் விதிமுறை என பல புதிய அம்சங்கள் அறிமுகமாகி சுவாரசியத்தை கூட்டியுள்ளன. ஆனால் இப்படி எந்த சிறப்பு விதிமுறையும், புதிய அம்சங்களும் இல்லாமலே விறுவிறுப்பான போட்டிகளை இந்தியா-பாகிஸ்தான் அணிகள் விருந்தாக வழங்கியுள்ளன.
அதிலும் 1986 ஆசியக்கோப்பை இறுதிப்போட்டியானது இந்தியா-பாகிஸ்தான் மோதலில் ஒரு மறக்க முடியாத போட்டியாகவே வரலாற்றில் இடம்பிடித்துள்ளது. 40 ஆண்டுகளுக்கு முன்பு அப்படி என்ன நடந்தது பார்க்கலாம்..
1986 ஆசிய கோப்பையில் INDvsPAK மோதல்..
இந்தியா-பாகிஸ்தான் மோதல் என்றாலே ரசிகர்களுக்கு அதிகமாக 2007 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியும், 2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியும், 2022 டி20 உலகக்கோப்பை லீக் போட்டியும் தான் உடனடியாக நினைவுக்கு வரும் சிறந்த மோதலாக இருந்துவருகின்றன.
ஆனால் இவை அனைத்திற்கும் சவால் கொடுக்கும் ஒரு போட்டியாக, ’மேட்ச்னா இதான் டா மேட்ச்’ என சொல்லும் வகையில் 1986 ஆசியக்கோப்பை இறுதிப்போட்டியானது அமைந்திருந்தது.
18 ஏப்ரல் 1986-ம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்ற ஆசியக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் தொடக்க வீரர்களான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் 75 ரன்னும், சுனில் கவாஸ்கர் 92 ரன்னும் அடித்து சிறந்த தொடக்கத்தை கொடுத்தனார். 3வது வீரராக களமிறங்கிய வெங்சர்க்காரும் 50 ரன்கள் அடிக்க, 216/3 என்ற வலுவான நிலையில் இருந்தது இந்திய அணி. ஆனால் அதற்கு பிறகு வந்த கிர்தி அசாத், கபில்தேவ், சேட்டன் சர்மா, ரவி சாஸ்திரி என அனைவரும் ஓரிலக்க ரன்களில் ஒருவருக்கு பின் ஒருவராக வெளியேற 50 ஓவர்கள் முடிவில் 245 ரன்கள் மட்டுமே சேர்த்தது இந்திய அணி.
246 ரன்கள் அடித்தால் வெற்றி என களமிறங்கிய பாகிஸ்தான் அணி, 61 ரன்னுக்கே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால் ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நட்சத்திர வீரர் ஜாவேத் மியான்தத் சதமடித்து அசத்தினார். அவரை தவிர மற்ற அனைத்து வீரர்களையும் அவுட்டாகிய இந்திய அணி 241 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியது.
எப்படியும் இந்தியாதான் வெற்றிபெறும் என்ற நிலையே இருந்தது. எல்லாம் இந்தியாவின் பக்கம் இருக்க, 11வது வீரராக களமிறங்கிய பாகிஸ்தான் பந்துவீச்சாளர் 49.5வது பந்தில் சாமர்த்தியமாக 1 ரன்னை எடுத்து ஸ்டிரைக்கை மியான்தத்திடம் கொடுத்தார்.
ஆசியக்கோப்பை இறுதிப்போட்டியின் கடைசி பந்து, இந்தியா வெற்றிபெற 1 விக்கெட் தேவை, பாகிஸ்தான் வெற்றிபெற 4 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. என்ன நடக்கபோகிறது என்ற அழுத்தம் இரு அணிக்கும் அதிகரிக்க, ரசிகர்கள் படப்படப்போடு போட்டியை பார்த்துக்கொண்டிருந்தனர். ஆனால் சேட்டன் சர்மா வீசிய இறுதிப்பந்தில் ஒரு பிரமாண்டமான சிக்சரை பறக்கவிட்ட மியான்தத் பாகிஸ்தானை 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிக்கு அழைத்துச்சென்றார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் 116 ரன்கள் குவித்த மியான்தத் பாகிஸ்தானுக்கு கோப்பையை வென்றுகொடுத்தார். இரண்டு அணிக்கும் ஒரு ரோலர் கோஸ்டர் போட்டியாக இருந்த 1986 ஆசியக்கோப்பை இறுதிப்போட்டி இன்றளவும் மறக்க முடியாத போட்டியாக இருந்துவருகிறது.
1986 ஆசியக்கோப்பை தோல்விகுறித்து இன்று நினைத்தாலும் தூங்க முடியாது என்று ஒருமுறை கபில்தேவ் தன்னுடைய விரக்தியை வெளிப்படுத்தினார். இறுதிபந்தை ஸ்லோ யார்க்கர் பந்தாக வீசவேண்டும் என்றே நாங்கள் நினைத்தோம், ஆனால் சேட்டன் சர்மா வீசியது லோ ஃபுல் டாஸாக மாறியது என்று கூறிய அவர், அடுத்த 4 ஆண்டுகளுக்கு அந்த தோல்வி இந்திய அணியின் தன்னம்பிக்கையை நசுக்கியது என்று கபில்தேவ் விரக்தியுடன் கூறினார்.
அந்த நேரத்தில் 1983 உலகக் கோப்பை, 1984 ஆசியக் கோப்பை மற்றும் 1985 சாம்பியன் ஆஃப் சாம்பியன்ஸ் ஆகிய பட்டங்களை வென்ற பிறகு இந்திய அணி உச்சத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.