தமிழகத்தில் உளவு பார்த்த தீவிரவாதி.. தேசிய அளவில் 22 இடங்களில் NIA நடத்திய சோதனை.. பின்னணி என்ன?
லஷ்கர் - இ - தொய்பா தீவிரவாதி தொடர்பாக தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, பிகார், உத்திர பிரதேசம், ஜம்மு காஷ்மீர் ஆகிய 6 மாநிலங்களில் 22 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று காலையிலிருந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக தமிழ்நாட்டில் தூத்துக்குடியில் ஒரு இடம், பிகாரில் 8 இடங்கள், ஜம்மு காஷ்மீரில் 9 இடங்கள், உத்திரபிரதேசத்தில் இரண்டு இடங்கள், கர்நாடகாவில் ஒரு இடம், மகாராஷ்டிர மாநிலத்தில் ஒரு இடம் என மொத்தம் 22 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குறிப்பாக செங்கல்பட்டு மாவட்ட காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள லஷ்கர் இ தொய்பாவைச் சேர்ந்த அக்லத்தூர் முகமதுவிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 26 ம் தேதி அக்லத்தூர் முகமது என்ற நபர் தீவிரவாத தடுப்புப்பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு செங்கல்பட்டு மாவட்ட காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கைது செய்யப்பட்ட அக்லத்தூர் முகமது (21) லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி என்பது தெரியவந்தது. மேலும், பாகிஸ்தான் ஆதரவு காஷ்மீரில் தீவிரவாத பயிற்சி பெற்று பல்வேறு மாநிலங்களில் அரசியல் தலைவர்கள் குறித்து உளவு பார்த்து வந்ததும் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அக்லத்தூர் முகமதுவை செங்கல்பட்டு மாவட்ட போலீசார் சிறையில் அடைத்தனர். இந்நிலையில், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த அக்லதூர் முகமதுவை, சில தினங்களுக்கு முன் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அக்லதூர் முகமது, பிகார் மாநிலம் கதிஹார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. ITI படிப்பு முடித்த அக்லதூர் முகமது 16 வயதிலிருந்தே லஷ்கர் ஈ தொய்பா தீவிரவாதிகளுடன் தொடர்பில் வந்திருக்கிறார். வெடிகுண்டு செய்வதற்கும், ஆயுதங்களை கையாள்வதற்கு பயிற்சி எடுத்து வந்த அவர், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று கூலி வேலை செய்வது போல அங்குள்ள அரசியல் கட்சி தலைவர்கள் குறித்து உளவு பார்த்து பாகிஸ்தான் ஆதரவு காஷ்மீரில் உள்ள தீவிரவாதிகளுக்கு அனுப்பி வந்திருக்கிறார்.
குறிப்பாக காஷ்மீர், உத்திர பிரதேசம், பிகார், மகாராஷ்டிரா, கர்நாடகா பகுதிகளில் தங்கி கூலி வேலை செய்வது போல அரசியல் கட்சி தலைவர்கள் குறித்து உளவு பார்த்து வந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் தமிழகம் வந்து தூத்துக்குடியில் சில மாதங்கள் தங்கி பெயிண்டராக பணிபுரிந்து பின் செங்கல்பட்டு வந்ததும் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
NIA அதிகாரிகள் நடத்திய தொடர் விசாரணையில், அக்லத்தூர் முகமது தான் சம்பாதிக்கும் பணத்தில் பெரும்பகுதியை லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்புக்கு கொடுத்து வந்ததும், கிரிப்டோகரன்சி மூலமாக முதலீடு செய்து அதனையும் அவர்களுக்கு அனுப்பி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல பாகிஸ்தான் தீவிரவாத இயக்கத்திடமிருந்து பணம் பெற்றதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக உத்திரபிரதேச மாநிலத்தில் அக்லதூர் முகமது தங்கியிருந்த போது, அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் குறித்து சமூக வலைதள ரகசியக்குழு மூலம் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதியுடன் கருத்து பறிமாறிக்கொண்டதும் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்தே அக்லத்தூர் முகமதுவின் வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தற்போது ஆறு மாநிலங்களில் 22 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளின் சோதனை நடைபெற்று வருகிறது.
குறிப்பாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் லஸ்கர் இ தொய்பா தீவிரவாதம் குறித்தும் பல்வேறு தீவிரவாத இயக்கங்கள் குறித்தும் சோதனை நடத்தி சுமார் 10-கும் மேற்பட்ட நபர்களை கைது செய்துள்ளனர். மகாராஷ்டிரா, டெல்லி, ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தனித்தனியாக வழக்கு பதிவுகள் செய்யப்பட்டு 10-க்கும் மேற்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில்தான் தற்போது கைது செய்யப்பட்டுள்ள அக்லத்தூர் முகமது குறித்து NIA வழக்கு பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது. கைது செய்யப்பட்ட அக்லத்தூர் முகமது மற்றும் ஏற்கனவே ஏப்ரல் மாதத்தில் இருந்து கைது செய்யப்பட்ட 10க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளுக்கும் என்னென்ன தொடர்பு உள்ளது? என விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, அகலத்தூர் முகமது 6 மாநிலங்களில் தங்கியிருந்தபோது அவருடன் தொடர்பில் இருந்த நபர்கள் யார்? என்னென்ன சதிச்செயலில் ஈடுப்பட்டுள்ளார். ஏற்கனவே 6 மாநிலங்களில் நடந்த தீவிரவாத செயலுக்கும் அக்லத்தூர் முகமதுவுக்கும் தொடபுள்ளதா? எந்தெந்த அரசியல் தலைவர்கள் குறித்து உளவுத் தகவல்களை தீவரவாத இயக்கத்துக்கு அனுப்பியுள்ளார் என்பது முழுத்தகவல்களும் முழுமையான சோதனைக்கு பிறகே தெரியவரும் என NIA அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.