ஒடிசாவின் பாகுபலி.., நவீன் பட்நாயக்கின் நம்பிக்கை ஒளி.. யார் இந்த வி.கே.பாண்டியன்?

தற்போது, இந்தியாவின் வேறொரு மாநிலத்தில், அந்த மாநிலத்தை தமிழர் ஒருவர் ஆளலாமா என்கிற குரலொன்று ஒலித்திருக்கிறது.
விகே பாண்டியன், நவீன் பட்நாயக்
விகே பாண்டியன், நவீன் பட்நாயக்pt web

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பொதுக்கூட்ட மேடைகளில், “தமிழ்நாட்டை மற்றவர்கள் ஆளலாமா, தமிழ்நாட்டை தமிழன்தான் ஆளவேண்டும்” என உணர்ச்சி பொங்கப் பேசுவதை நாம் பலமுறைப் பார்த்திருக்கிறோம்.., மற்ற மாநிலங்களில், தமிழன் ஒரு கவுன்சிலர் பதவிக்காவது வரமுடியுமா எனவும் ஆக்ரோஷமாக கேள்வி எழுப்புவார். மற்ற மாநிலங்களில் தமிழர்கள் எம்.எல்.ஏ முதல் பல பதவிகளில் இருந்து வருகிறார்கள் என்பது வேறு கதை. ஆனால், தற்போது, இந்தியாவின் வேறொரு மாநிலத்தில், அந்த மாநிலத்தை தமிழர் ஒருவர் ஆளலாமா என்கிற குரலொன்று ஒலித்திருக்கிறது.., நாடாளுமன்றத் தேர்தலும் சட்டமன்றத் தேர்தலும் ஒன்றாக நடைபெறும் ஒடிசா மண்ணில்தான் இப்படி ஒரு கேள்வி மக்களை நோக்கி கேட்கப்பட்டிருக்கிறது.., அப்படிக் கேட்டிருப்பவர் இந்தியாவின் உள்துறை அமைச்சர் அமித்ஷா.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சுpt web

இவர் மட்டுமல்ல, பிரதமர் மோடி சில நாள்களுக்கு முன்பாக ஒடிசாவில் பிரசாரத்தில் பேசும்போது, ஒடிசாவில் பிரசித்தி பெற்ற பூரி ஜெகந்நாதர் ஆலயத்தில் காணமல்போன பொக்கிஷ அறையின் சாவி குறித்துப் பேசினார். ஆறு ஆண்டுகளுக்கு முன்பாக அது தமிழ்நாட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டுவிட்டது எனவும் கூறினார்.

இப்படி பிரதமர், உள்துறை அமைச்சர் மட்டுமல்ல, பாஜகவைச் சேர்ந்த முன்னாள் கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன்கூட, “தமிழ்நாட்டில் காவல்துறை உயர் அதிகாரிகள் முதல்வர் ஸ்டாலினிடம் ரிப்போர்ட் செய்யாமல், வேறு யாரிடமாவது ரிப்போர்ட் செய்தால் நீங்கள் பொறுத்துக்கொள்வீர்களா?” எனக் காட்டமாக பத்திரிகையாளர்களை நோக்கிக் கேள்வியெழுப்புகிறார்... இப்படி பாஜகவின் முன்னணித் தலைவர்கள் பலர் ஆக்ரோஷமாகக் கொந்தளித்துப் பேச ஒருவர்தான் காரணம்... அவர்தான், பிஜு தனதா தளத்தின் உறுப்பினரும் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான வி.கே.பாண்டியன்.

விகே பாண்டியன், நவீன் பட்நாயக்
காரை ஓட்டியது மகன் இல்லையாம்.. குண்டை தூக்கிப்போட்ட தொழிலதிபர்! புனே விபத்தில் அதிர்ச்சி தகவல்கள்!

யார் இந்த வி.கே.பாண்டியன் ?

மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள கூத்தப்பன்பட்டியில் 1974-ம் ஆண்டில் பிறந்தவர் வி.கார்த்திகேய பாண்டியன். இவர் வெள்ளாளப்பட்டியில் பள்ளிப்படிப்பை முடித்ததோடு, மதுரை வேளாண் கல்லூரியில் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்தார். பின்னர் டெல்லியில் உள்ள, இந்திய வேளான் ஆராய்ச்சி நிறுவனத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். விளையாட்டிலும் தீவிர ஆர்வம் கொண்ட வி.கே.பாண்டியன் 2000-ம் ஆண்டில் குடிமைப் பணித் தேர்வில் வெற்றி பெற்ற கையோடு, பஞ்சாப் கேடர் அதிகாரியாக தனது பணியைத் தொடங்கினார். தொடர்ச்சியாக, 2002-ல் ஒடிசாவில் இயற்கைப் பேரிடர் ஏற்பட்டபோது, கலஹண்டி மாவட்டத்தில் உள்ள தரம்கரின் சப் கலெக்டராக நியமிக்கப்பட்டார். அங்கே, விவசாயிகளின் நீண்டநாள் பிரச்னைகளைச் சரிசெய்து அந்த மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக மாறினார்.

தொடந்து, 2005-ல் மயூர் மாவட்ட ஆட்சியராக பதவியேற்றார். இந்தியாவின் இளம் மாவட்ட ஆட்சியர்களில் ஒருவராக இருந்தபோதும், அவரின் செயல்பாடுகள் இளைஞனின் வேகத்தோடும், முதியவர்களின் கூர்மையோடும் இருந்ததை அந்த மாவட்ட மக்கள் கொண்டாடினார்கள். தொடர்ச்சியாக, 2007-ல் இருந்து கஞ்சம் மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்றார். அது ஒடிசாவின் முதல்வரான நவீன் பட்நாயக்கின் தொகுதி வரும் மாவட்டம். அதுவரை, தன் செயல்பாடுகளால் மக்களின் மனதில் இடம் பிடித்த கார்த்திகேய பாண்டியன், அப்போதுதான் நவீன் பட்நாயக்கின் மனதிலும் நச்சென்று முத்திரை பதித்தார்.

விகே பாண்டியன், நவீன் பட்நாயக்
"தமிழர் பிரதமர்" To "தமிழர் ஒடிசாவை ஆளலாமா?"- அந்தர்பல்டி அடித்த பாஜக தலைவர்கள்; திசைமாறிய பரப்புரை!

தொடர்ந்து 2007-ம் ஆண்டில் முதல்வர் நவீன் பட்நாயக்கின் தனிச்செயலாளராக பதவி உயர்வு பெற்றார் கார்த்திகேய பாண்டியன். அதற்குப் பிறகு நடந்தது எல்லாமே Rest is history என்று சொல்வார்களே அந்தமாதிரியான செயல்பாடுகள்தான். 2023-ம் ஆண்டு தன்னுடைய பதவியை ராஜினாமா செய்யும் வரைக்கும் அந்தப் பதவியில் தொடர்ந்தார். தொடர்ந்து பிஜூ தனதா தளத்தில் தன்னை இணைத்துக்கொண்டு, தற்போதைய தேர்தலில் அந்தக் கட்சியின் நட்சத்திரப் பரப்புரையாளராக மாறியிருக்கிறார் பாண்டியன். அதோடு, ஒடிசா அரசு நிர்வாகத்தின் இதயமாகக் கருதப்படும் 5T அமைப்பின் தலைவராகவும் இருந்து வருகிறார்... ஒடிசா மக்களின் இதயத்திலும் பிஜூ ஜனதா தளம் கட்சியிலும் இன்று சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கும் வி.கே.பாண்டியன் அப்படி அந்த மாநிலத்தில் என்னதான் செய்தார்?

வி.கே.பாண்டியனின் நிர்வாகச் செயல்பாடுகள் :

தரம்கரின் சப் கலெக்டராக பொறுப்பேற்ற நாள் முதலாகவே சுழன்று சுழன்று மக்களுக்காகப் பணியாற்றத் தொடங்கினார். முக்கியமாக, நெல் கொள்முதலுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்ததில் வி.கே.பாண்டியன் பங்கு முக்கியமானது.. ரூர்கேலாவில் கூடுதல் மாவட்ட மாஜிஸ்திரேட்டாக இருந்தபோது, ரூர்கேலா மேம்பாட்டு முகமைக்குத் தலைமை தாங்கினார் வி.கே.பாண்டியன். அதுவரைக்கும் நஷ்டத்தில் இயங்கி வந்த நிறுவனம், இவரின் நிர்வாகத் திறமையால் 15 கோடி உபரியாகக் கொண்டு வரப்பட்டது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக சொந்த வீட்டுக் கனவோடு காத்திருந்த மக்களுக்கு பணம் திருப்பித் தரப்பட்டது. அந்த மக்கள் அடைந்த நிம்மதிக்கு அளவே இல்லை.

அதேபோல மயூர்பஞ்ச் மாவட்டக் கலெக்டராக இருந்தபோது, மாற்றுத்திறனாளிகளுக்கு சான்றிதழ்களை வழங்குவதற்காக ஒற்றைச் சாளர முறையை அறிமுகப்படுத்தினார். இது வருடத்திற்கு 700 சான்றிதழ்களில் இருந்து ஆண்டுக்கு 20 ஆயிரம் சான்றிதழ்களாக விநியோகம் அதிகரிக்க வழிவகுத்தது. அதே மயூர்பஞ்சில், பொதுப்பணித்துறை காண்ட்ராக்டுகளுக்காக அவர் கொண்டு வந்த ஒற்றைச் சாரள முறை என்பதே மறுமலர்ச்சி என்றே சொல்லலாம். அதுவரையில் அந்தத் துறையில் நடந்த ஊழல் லஞ்சத்துக்கு அது முற்றுப்புள்ளி வைத்தது. அதுமட்டுமல்ல, அவரின் இந்த முயற்சி மாடலாக எடுத்துக் கொள்ளப்பட்டு தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டது.

விகே பாண்டியன், நவீன் பட்நாயக்
இதுக்கா இவ்ளோ பெரிய யுத்தம்! மணமேடையில் மணமகளுக்கு முத்தம் கொடுத்த மணமகன்.. அடிதடியாகி 6 பேர் காயம்!

கஞ்சம் மாவட்ட ஆட்சியராக இருந்தபோதும் அவர் செய்த பணிகள் ஏராளம்.. குறிப்பாக நூறுநாள் வேலைதிட்டத்தை அவர் செயல்படுத்திய விதம்.. தவிர, தொழிலாளர்களுக்கு அவர்களின் ஊதியம் நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்குகே செல்லும் முறையையும் நாட்டில் முதல்முறையாக அமல்படுத்தினார் வி.கே.பாண்டியன்.. தவிர 5T அமைப்பின் மூலமாகவும் ஏராளமான பணிகளைச் செய்திருக்கிறார் வி.கே.பாண்டியன்.. குறிப்பாக, ஒடிசாவின் அனைத்து உயர்நிலைப் பள்ளிகளும் ஸ்மார்ட் பள்ளிகளாக மாற்றப்பட்டுள்ளன. முதியோர்களுக்கு மாத ஓய்வூதியமாக ரூ. 1000, இளைஞர்களுக்கு ஆண்டு உதவித்தொகையாக ரூ. 10,000. பெண்களுக்கு வட்டியில்லாமல் 5 லட்சம் வரை கடன் என ஏராளமான திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்திய தேசிய ஹாக்கி அணிக்கு (ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும்) ஸ்பான்சர் செய்வதிலிருந்து தொடர்ச்சியாக இரண்டு முறை ஆண்கள் FIH ஹாக்கி உலகக் கோப்பையை நடத்தியது ஒடிசா அரசாங்கம்..,ஹாக்கியை தேசிய விளையாட்டாக அங்கீகரிக்க வேண்டும் என்கிற கோரிக்கையையும் முன்வைத்தது.. இது எல்லாவற்றிலும்கூட வி.கே.பாண்டியனின் பங்களிப்பு முதன்மையாக இருக்கிறது

விருதுகள் & பாரட்டுக்கள் :

கடந்த 20 ஆண்டுகளில் கல்வி, சுகாதாரம், விவசாயம், உள்கட்டமைப்பு விளையாட்டு என ஒடிசா அடைந்திருக்கும் வளர்ச்சிக்கு வி.கே.பாண்டியனின் பங்கு முக்கியமானது. உணவுப் பற்றாக்குறை மாநிலமாக இருந்த, ஒடிசா இப்போது இந்தியாவின் உணவுப் பாதுகாப்பில் மூன்றாவது பெரிய பங்களிப்பாளராக மாறி உள்ளது.

தவிர, மாணவர்கள், விவசாயிகள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் என அனைத்துத் தரப்புக்குமான திட்டங்களை வகுத்தத்திலும் வி.கே.பாண்டியனின் பணி முக்கியமானது. தன்னுடைய செயல்பாடுகளுக்காக ஏராளமான விருதுகளையும் வாங்கிக் குவித்திருக்கிறார் வி.கே.பாண்டியன்.., மாற்றுத்திறனாளிகளின் மறுவாழ்வுக்காக செய்த பணிகளுக்காக் இந்திய ஜனாதிபதியிடமிருந்து தேசிய விருது. கஞ்சம் மாவட்டத்தின் ஆட்சியராக அவர் ஆற்றிய பணிகளுக்காக ‘ஹெலன் கெல்லர் விருது’. எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக பணியாற்றியதற்காக சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வழங்கிய தேசிய விருது.., கஞ்சம் மாவட்டத்தை சிறந்த மாவட்டமாக மாற்றியதற்கு MNREGSக்கான தேசிய விருது (2 முறை) - ஹாக்கியை மேம்படுத்துவதில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பினால் ஜனாதிபதி விருது என அவரின் பணிகளைப் போலவே விருதுப் பட்டியலும் நீண்டுகொண்டே போகிறது.,

விகே பாண்டியன், நவீன் பட்நாயக்
’உடனே நாடு திரும்பு’ - பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் விவகாரம்| பேரனுக்கு எச்சரிக்கை விடுத்த தேவகவுடா!

வி.கே.பாண்டியன் யார், நிர்வாக ரீதியாக அவரின் செயல்பாடுகள் என்ன, அவர் பெற்ற விருதுகள் ஆகியவற்றைப் பற்றிப் பார்த்தோம்... எல்லாம் சரி இப்போது அவர் அரசியல்வாதியாகிவிட்டார், நிர்வாகம் வேறு அரசியல் களம் வேறு அவரால் சமாளிக்க முடியுமா என்கிற கேள்விக்கு சமீபத்திய அவரின் இரண்டு செயல்பாடுகளே பதிலாக இருக்கிறது

அரசியல்வாதியாக வி.கே.பாண்டியன்?

பூரி ஜெகந்நாதர் கோயிலின் பொக்கிஷ அறை சாவி, தமிழ்நாட்டில் இருக்கிறது என வி.கே.பாண்டியனை குறிவைத்துதான் பிரதமர் மோடி பேசினார். ஆனால், ``அனைத்து அதிகாரிகளும் பிரதமர் மோடியின் கீழ்தான் இருக்கிறார்கள். அவர் கண்டிப்பாக அதைக் கண்டுபிடித்துத்தரவேண்டும்’’ என எனக் கூலாகப் பதிலடி கொடுத்தார் வி.கே.பாண்டியன்.

அதேபோல, சமீபத்தில் பூரி தொகுதி பாஜக வேட்பாளர் சம்பித் பித்ரா, ஜெகந்நாதர் மோடியின் பக்தர் என தவறுதலாகக் கூறியதற்காக மூன்று நாள்கள் உண்ணாவிரதம் இருக்கப் போவதாகவும் சம்பித் பித்ரா கூறியிருந்தார். அதுகுறித்துப் பேசிய வி.கே.பாண்டியன், ``வெயிலும் தூசியும் அதிகம் இருப்பதால் சம்பித் பத்ரா தனது உடல்நிலையை நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும். சரியாக சாப்பிட்டு அவர் கவனமாக இருக்க வேண்டும். தேர்தலுக்கு மூன்று நாட்களே உள்ள நிலையில், அவர் மயக்கம் அடையக் கூடாது. அவர் ஒரு மருத்துவர், எனவே என்ன செய்ய வேண்டும் என்பதை அவர் தெரிந்து கொள்ள வேண்டும்’’ என்று அவர் விடுத்த கோரிக்கை அனைவராலும் ரசிக்கப்பட்டது. நிர்வாக ரீதியாக மட்டுமல்லாமல் சூடான அரசியல் களத்தையும் கூலாகச் சமாளிக்கிறார், ஒடிசா மக்களின் பாகுபலி என அழைக்கப்படும் வி.கே.பாண்டியன்.

விகே பாண்டியன், நவீன் பட்நாயக்
லக்னோ: நாட்டை உலுக்கும் சம்பவம்... நரபலி கொடுக்கப்பட்ட சகோதரர்கள்... இரு பெண்கள் கைது!

பிஜூ தனதாதளம் கட்சித் தலைவரும் ஒடிசாவின் முதல்வருமான நவீன் பட்நாயக்குக்கு 78 வயதாகிறது.., திருமணம் செய்துகொள்ளாத அவரின் அரசியல் வாரிசாகவே வி.கே.பாண்டியன் பார்க்கப்படுகிறார். பிந்தைய எழுபதுகளில் தமிழ்நாட்டில் எதிரெதிர் கட்சிகளாக இருந்த திமுகவையும் அதிமுகவையும் ஒன்றிணைக்க முயற்சித்தார், நவீட் பட்நாயக்கின் அப்பாவும், மூத்த ஜனதா தலைவருமான பிஜூ பட்நாயக்.., தற்போது, ஒரு தமிழரை தன்னுடைய அரசியல் வாரிசாகப் பார்க்கிறார் அவரின் மகன்.., காலம் இன்னும் என்னன்ன அதிசயங்களைப் பொதிந்து வைத்திருக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com