காரை ஓட்டியது மகன் இல்லையாம்.. குண்டை தூக்கிப்போட்ட தொழிலதிபர்! புனே விபத்தில் அதிர்ச்சி தகவல்கள்!

புனேவில் மதுபோதையில் கார் ஒட்டி இருவரது உயிரிழப்புக்கு காரணமான 17 வயது சிறுவனுக்கு ஜாமீன் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், இதனை தொடர்ந்து அதிர்ச்சி தரும் பல தகவல்கள் இவ்வழக்கில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
புனே கார் விபத்து
புனே கார் விபத்துமுகநூல்

புனேவில் மதுபோதையில் கார் ஒட்டி இருவரது உயிரிழப்புக்கு காரணமான 17 வயது சிறுவனுக்கு ஜாமீன் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், இதனை தொடர்ந்து அதிர்ச்சி தரும் பல தகவல்கள் இவ்வழக்கில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

என்ன நடந்தது?

மகாராஷ்டிரா மாநிலம், புனேவில், கல்யாண் நகர் பகுதியில் கடந்த 19 ஆம் தேதி (ஞாயிற்று கிழமை) அதிகாலை நேரத்தில் 12 ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒருவர், மதுபோதையில் அதிவேகமாக Porsche ரக காரை இயக்கி வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் கார் கட்டுப்பாட்டை இழந்தநிலையில், காரின் முன்னாள் சென்ற இருசக்கர வாகனத்தில் பயணித்த ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றும் அனிஸ் துனியா, அஸ்வினி கோஸ்டா என்ற தம்பதியின் மீது அது மோதியுள்ளது. இந்தவிபத்தில், இருசக்கர வாகனத்தில் பயணித்த அத்தம்பதி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனை கண்ட அப்பகுதி மக்கள் உடனே அந்தச் சிறுவனை பிடித்து சரமாரியாக தாக்கியுள்ளனர். ஆனால், தற்போது இவ்வழக்கில் வெளியாகும் அடுத்தடுத்த தகவல்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

சம்பவத்தின்படி விபத்து ஏற்படுத்திய சிறுவனை விசாரித்த நீதிபதிகள், 300 வார்த்தைகளில் சாலை விபத்தின் விளைவுகள் என்ற தலைப்பில் விழிப்புணர்வு கட்டுரை எழுத வேண்டும் என்றுகூறி, இதேபோன்ற இன்னும் ஒரு சில நிபந்தனைகளை அச்சிறுவனுக்கு விதித்தனர். இதனை தொடர்ந்து, 15 மணி நேரத்தில் அச்சிறுவனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

ஆனால் சிறுவனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதற்கு, சமுகவலைதளம் வழியாகவும் பல அதிகாரிகள் தரப்பிலிருந்தும் கடும் கண்டங்கள் எழுந்தது. இதனால், சிறுவனின் ஜாமீன் மே 22 ஆம் தேதி ரத்து செய்யப்பட்டு, வரும் ஜூன் 5 ஆம் தேதி வரை அவரை கண்காணிப்பு இல்லத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மேலும், சிறுவனின் தந்தை, சிறுவனுக்கு மது வழங்கிய பார் உரிமையாளர், இரண்டு ஊழியர்கள் மீது சிறார் நீதிச் சட்டம் பிரிவு 75 மற்றும் 77 ன் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில், சிறுவனின் தந்தை கைது செய்யப்பட்டும், சிறுவன் தற்போது சீர்த்திருத்த பள்ளியிலும் சிறையில் அடைக்கப்பட்டும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறுவனுக்கு ஆதரவாக காவல்துறை செயல்பட்டதா?

சிறுவனின் தந்தை, பிரபல ரியல் எஸ்டேட் தொழிலதிபர் விஷால் அகர்வால் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இதனால் சிறுவனுக்கு ஆதரவாக போலீசார் செயல்பட்டு வருவதாகவும், விபத்து நடந்து 8 மணி நேரம் கழித்துதான் சிறுவனுக்கு போதை பரிசோதனை செய்யப்பட்டதாகவும், தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்துவருகிறது.

சிறுவன் மது அருந்தியது எதற்காக?

முதலில் நடந்த விசாரணையின்போது, கொண்டாட்டத்தின்போது தனது நண்பர்களுடன் மது அருந்தியதாக சிறுவன் கூறியுள்ளான். ஆனால் “சிறுவன் மன அழுத்தம் காரணமாகதான் மது அருந்தினார்” என்று அவரது வழக்கறிஞர் தற்போது கூறியிருக்கிறார்.

கார் ஓட்டியது யார்?

இந்நிலையில், விபத்து நடந்தபோது தன் மகன் கார் ஓட்டவே இல்லை என்றும், காரை ஓட்டியது தன் டிரைவர்தான் என்றும் சிறுவனின் தந்தையான விஷால் அகர்வால் கூறியுள்ளார். இதை சிறுவனும் அவனோடு சம்பவத்தன்று காரில் வந்த இரண்டு நண்பர்களும் ஆமோதித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, சிறுவனின் தந்தையின் செல்போன் மீட்கப்பட்டு விபத்து குறித்த ஏதேனும் தகவல்கள் கிடைக்கின்றனவா என்று ஆராயப்பட்டு வருகிறது.

தாதாவுடன் தொடர்பா?

சிறுவனின் தாத்தா சுரேந்திர அகர்வாலிடமும் புனே குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து நடந்த நாளில் தாத்தா சுரேந்திர அகர்வால், அவரது மகன் விஷால் அகர்வால் மற்றும் பேரனிடம் (விபத்தை ஏற்படுத்திய சிறுவன்) ஆகிய மூவரும் மேற்கொண்ட உரையாடல்களைப் பற்றி அறியும் நோக்கிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதில், தாத்தா சுரேந்திர அகர்வாலுக்கு பிரபல தாதா, சோட்டா ராஜனுடன் தொடர்புள்ளதாக தற்போது தகவல் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் காரை ஓட்டியதாகச் சொல்லப்படும் அந்த டிரைவரிடம் போலீஸார் இன்று விசாரிக்க உள்ளனர். இதன்மூலம் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

புனே கார் விபத்து
ராமநாதபுரம்: வாகன சோதனையில் சிக்கிய 700 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் - போலீசார் விசாரணை

நாளுக்குநாள் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இவ்வழக்கில் வெளிவரும் தகவல்கள் உண்மைதன்மையில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் உயிரிழந்த இருவரின் குடும்பத்தினரும் நீதி கேட்டு போராடி வரும் நிலையில், அது உரிய வழியில் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com