தியாகிகளின் கல்லறைக்கு செல்லக்கூடாதா? தடுக்கப்பட்ட உமர் அப்துல்லா.. பின்னிருக்கும் கருப்பு வரலாறு..
ஸ்ரீநகரில் தியாகிகள் நினைவிடத்திற்கு செல்ல முயன்ற காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தியாகிகளின் நினைவிடத்திற்கு செல்லும் முதலமைச்சரை காவல்துறையினர் தடுத்து நிறுத்துவது ஏன்? அதன் பின்னிருக்கும் வரலாறு என்ன?
1931 ஆம் ஆண்டு ஜூலை 13ம் தேதி என்பது காஷ்மீர் வரலாற்றின் மறக்க முடியாத நாள். காஷ்மீரில் மக்கள் டோக்ரா ஆட்சியாளர்களுக்கு எதிராக அதிருப்தியில் இருந்த காலக்கட்டம். இத்தகைய சூழலில் அப்துல் காதீர் கான் மிகக் ஆவேசமான சொற்பொழிவொன்றை நிகழ்த்தி டோக்ரா அரசரான ஹரி சிங்கிற்கு எதிராகக் கிளர்ச்சி செய்ய மக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இதன்பின், ஆட்சியாளர்களால் அப்துல் காதீர் மீது தேசத்துரோக குற்றம் சுமத்தப்பட்டது. முதலில் ஸ்ரீநகரிலுள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணை நடந்த நிலையில், பின்னர் அது ஸ்ரீநகர் மத்திய சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டது.
22 பேர் கொலை
இத்தகைய சூழலில்தான், ஜூலை 13 அன்று ஸ்ரீநகரில் உள்ள சிறைச்சாலைக்கு வெளியே 4000 - 5000 காஷ்மீர் மக்கள் திரண்டிருந்தனர். திரண்டிருந்த மக்கள் எல்லோரும் அப்துல் காதீரின் ஆதரவாளர்கள். விசாரணையை நேரில் காண அவர்களும் வளாகத்திற்குள் நுழைய முயன்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து டோக்ரா அரசரின் படைகள் கூடியிருந்தோரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியது. இந்தத் தாக்குதலில் 22 பேர் உயிரிழந்தனர். மக்கள் திரண்டதற்கும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கும் இடையில் நிகழ்ந்த சம்பவங்கள் வெவ்வேறு தரப்பினரால் வெவ்வேறு மாதிரியாக விவரிக்கப்படுகிறது. ஆனால், இந்த கொலைகள் மக்கள் போராட்டத்தை பெருமளவில் தூண்டிவிட்டன. இந்தப் போராட்டங்கள் யாவும் அப்பகுதி மக்களுக்கு பல்வேறு விஷயங்களைப் பெற்றுக்கொடுத்தது.
அப்போதிருந்து ஜம்மு காஷ்மீரில் உயிரிழந்தவர்களைக் கௌரவிக்கும் வகையில் ஜூலை 13ஆம் தேதி தியாகிகள் தினமாகக் கடைபிடிக்கப்பட்டு வந்தது. ஆனால், 2019 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு ஜம்மு காஷ்மீர் இரண்டு யூனியன் பிரதேசங்களாக மறுசீரமைக்கப்பட்ட பிறகு தியாகிகள் கல்லறையில் அஞ்சலி செலுத்துவதற்கு நிர்வாகம் தடை செய்திருக்கிறது. அதுமட்டுமின்றி, ஜூலை 13 பொது விடுமுறை நாளாகக் கடைபிடிக்கப்பட்டும் வந்தது. ஆனால், 2020 ஆம் ஆண்டுக்குப் பிறகு அரசின் விடுமுறை நாள் பட்டியலிலிருந்தும் இந்த நாள் நீக்கப்பட்டது. இதற்குப் பதிலாக டோக்ரா அரசான ஹரிசிங்கின் பிறந்த நாள் தற்போது விடுமுறையாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
சுற்றுச் சுவரில் ஏறிச்சென்று அஞ்சலி
இத்தகைய சூழலில்தான் முதலமைச்சர் உமர் அப்துல்லா தலைமையிலான ஜம்மு ஜாஷ்மீர் அரசாங்கத்திலுள்ள அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் தியாகிகள் தினத்தை அனுசரிப்பதை தடுக்கும் வகையில் வீட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் இன்று உமர் அப்துல்லா தியாகிகளின் கல்லறைகளுக்கு சென்று அஞ்சலி செலுத்தியிருக்கிறார். காவல்துறையினர் மற்றும் துணை ராணுவப்படையினர் அவரைத் தடுக்க முயன்றபோதும் உமர் அப்துல்லா கல்லறையின் சுற்றுச் சுவரில் ஏறி உள்ளே சென்று தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினார்.
இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்திருக்கும் உமர் அப்துல்லா, “ஞாயிற்றுக்கிழமை, நான் கல்லறைக்குச் செல்ல விரும்புவதாக கட்டுப்பாட்டு அறைக்குத் தெரிவித்தேன், சில நிமிடங்களில், என் வீட்டைச் சுற்றி கன்செர்டினா கம்பி போடப்பட்டது. அது நள்ளிரவு வரை அங்கேயே இருந்தது. இன்று (திங்கட்கிழமை), நான் அவர்களிடம் சொல்லவில்லை. அவர்களிடம் எதுவும் சொல்லாமல், நான் வாகனத்தில் அமர்ந்தேன், அவர்களின் வெட்கமற்ற தன்மையைக் கண்டேன் - இன்றும் கூட அவர்கள் எங்களைத் தடுக்க முயன்றனர். அவர்கள் எங்களுடன் சண்டையிட முயன்றனர். இந்த போலீசார் சில நேரங்களில் சட்டத்தை மறந்து விடுகிறார்கள். அவர்கள் எங்களைத் தடுக்க முயன்றனர். ஆனால், நாங்கள் அவர்களின் முயற்சியைத் தோற்கடித்து விட்டு பிரார்த்தனை செய்தோம்.
இது ஒரு சுதந்திர நாடு என்று அவர்கள் கூறுகிறார்கள், ஆனால் சில சமயங்களில் நாங்கள் அவர்களின் அடிமைகள் என்று நினைக்கிறார்கள். நாங்கள் யாருக்கும் அடிமைகள் அல்ல. நாங்கள் யாருக்கும் அடிமைகளாக இருந்தால், அது மக்கள்தான். எவ்வளவு காலம் அவர்கள் எங்களைத் தடுப்பார்கள், அது 13 இல்லையென்றால், அது 14 தான். நாங்கள் எப்போது வர விரும்பினாலும், இந்த தியாகிகளை நினைவு கூர்வோம்” எனத் தெரிவித்திருக்கிறார்.