”புதுமைப் பெண்ணொளி வாழி” கார்ப்பரேட்டில் வாழ்கிறதா பாரதியின் கனவு?
‘மிளிர்மன எழில் மதி’ என்று ஒரு நாவல்.. எழுத்தாளர் நர்சிம் எழுதியது.. காதல் கதைதான். ஆனால், நாவலில் காட்டப்படும் மதி எனும் கதாநாயகியின் உருவகம் அத்தனை அழகானது.. முக்கியமாக கார்ப்பரேட்டில் கொடிகட்டிப் பறக்க வேண்டுமென்ற மதியின் உழைப்பும் அதற்கான அர்ப்பணிப்பும் அத்தனை வெற்றிகளையும் அவளுக்குக் கொண்டு வந்து சேர்க்கும்... இப்போது இது எதற்கு என்ற கேள்வி எழுந்தால்.. சரியான நேரத்திலும் சரியான இடத்திலும்தான் இதை செருகி இருக்கிறேன். மதி ஒரு கற்பனைக் கதாப்பாத்திரம்.. நிஜத்திலும் இந்திய நிறுவனமொன்றில் அதை சாத்தியமாக்கியிருக்கிறார் பெண் ஒருவர். குறிப்பு: அதைச் சாத்தியமாக்குவது என்பது அத்தனை சுலபமானது அல்ல.
ஹிந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனத்தின் 92 ஆண்டுகால வரலாற்றில் முதல் பெண் சிஇஓவாகப் பொறுப்பேற்று இருக்கிறார் பிரியா நாயர். 30 ஆண்டுகால கடின உழைப்பு அவரை இந்த பொறுப்புக்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறது... ஆனால், நாம் இப்போது பார்க்கப்போவது கார்ப்பரேட் உலகில் எத்தனை பெண்கள் பிரியா நாயரைப் போல் அதிகாரமிக்க பதவியில் இருக்கிறார்கள் என்பதை... அதுதொடர்பாக வெளியான ஆய்வுகளை?
ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவி லோங்கி இவ் வையம் தழைக்குமாம்
என்றான் பாரதி.. மேலும்,
ஞான நல்லறம் வீர சுதந்திரம்
பேணு நற்குடிப் பெண்ணின் குணங்களாம்;
பெண்மைத் தெய்வத்தின் பேச்சுகள் கேட்டீரோ!
என்று பாடினான்.. ஆனால், கார்ப்பரேட்டில் இருக்கும் பெண்கள் தொடர்பாக வெளிவரும் ஆய்வுகள் எல்லாம் அத்தனை நற்செய்திகளாக இல்லை என்பது வேதனை மிக்க ஒன்று. குறிப்பாக பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் பெண்களை தலைமைப் பொறுப்புகளில் அமர்த்துவதில் பெரும் தயக்கம் காட்டுகின்றன. இன்னும் அழுத்தமாக சொல்லவேண்டுமென்றால், நிர்வாகக் குழுக்களில் பெண்களைக் கொண்ட நிறுவனங்கள் கணிசமான லாபத்தை ஈட்டுகின்றன என்கிறது ஒரு ஆய்வு முடிவு. ஆனால், மூன்றில் இரண்டு பங்கு நிர்வாகப் பதவிகள் பெண்கள் இல்லாமல்தான் இருக்கின்றன.
பெண் நிர்வாகிகள் - அதிக லாபங்கள்
முதலில், ‘உயர்பதவிகளில் பெண்கள் இருக்கும் நிறுவனங்கள் அதிகம் லாபம் ஈட்டுகின்றன’ எனும் கூற்றுக்கு சான்றுகளைப் பார்க்கலாம்..
30 வெவ்வேறு துறைகளில் 840 பட்டியலிடப்பட்ட நிறுவனங்களை ஆய்வு செய்த The Marching Sheep Inclusion Index 2025 எனும் ஆய்வு, சில முக்கியமான தரவுகளை முன்வைத்திருக்கிறது. அதாவது, நிர்வாகப் பதவிகளில் அதிகமான பெண் நிர்வாகிகளைக் கொண்ட நிறுவனங்கள் 50%க்கும் அதிகமான லாபத்தை ஈட்டுகின்றன. ஆனால், 63.45% நிறுவனங்களில் முக்கிய நிர்வாகப் பதவிகளில் பெண்களே இல்லை. மேலும், இந்த நிறுவனங்களில் ஒட்டுமொத்த பணியாளர்களின் எண்ணிக்கையில், 22% மட்டுமே பெண்கள் இருக்கின்றனர். இது Periodic Urban Labour Force Survey (2023-24) எனும் ஆய்வு முடிவு தெரிவித்த 28% என்பதை விட மிகக்குறைவானது. இந்த PULFS அறிக்கை வேறு ஒரு விஷயத்தையும் முன்வைக்கிறது. அது கொஞ்சம் மகிழ்ச்சிக்குரிய ஒன்று. அதாவது, கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பு பெறும் பெண்களின் எண்ணிக்கை 2017-18ஐ ஒப்பிடுகையில், 23% அதிகரித்து 2023-24ல் 47.6% ஆக இருக்கிறது.
பணியிட கலாச்சார ஆலோசனை நிறுவனமான Avtar நடத்திய ஆய்வு வேறு ஒரு முடிவைத் தெரிவிக்கிறது. இந்தியாவில் C-suite பணிகளில் 19% மட்டுமே பெண்கள் இருக்கின்றனர். இது உலகளாவிய சராசரியான 30 சதவீதத்தை விட குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
பெண்கள் முன்னேற்றம்..கட்டுப்படுத்தும் பல காரணிகள்
Enhancing Women Leadership in India Inc எனும் ஆய்வு வேறு ஒரு செய்தியைத் தெரிவிக்கிறது. Fortune இதழில் வருவாயின் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்ட 1000 இந்திய நிறுவனங்களில், 3.2% பெண்கள் மட்டுமே நிர்வாகப் பதவிகளில் இருக்கின்றனர். இன்னும் ஆச்சரியமளிக்கக்கூடிய விஷயம் ஒன்றைச் சொல்லவா? பெண்களுக்கு சம வாய்ப்புகள் வழங்கப்பட்டிருந்தால், 2025ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) கூடுதலாக 770 பில்லியன் அமெரிக்க டாலர் சேர்த்திருக்கலாம் என்கிறது வேறு ஒரு ஆய்வு.. ஆனால், பாலின சமத்துவத்தில் 129 இடத்தில் இருக்கும் இந்தியாவில் நாம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்.
சி-சூட் பிரிவு என்று மட்டுமல்ல.. பொதுவாக வேலைக்குச் செல்லும் பெண்களின் முன்னேற்றத்தைக் கூட பல காரணிகள் தொடர்ந்து கட்டுப்படுத்துகின்றன. மிக முக்கியமாக வேலை மற்றும் வாழ்க்கை எனும் ஒருங்கிணைப்பில் இருக்கும் சவால்.. அலுவலகத்தில் உடன் வேலைபார்க்கும் ஒருவர் இதுதொடர்பாக ஒரு விஷயத்தைச் சொன்னார். “தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஒரு ஆண் எதிர்கொள்ளும் சவால்களை விட ஒரு பெண் எதிர்கொள்ளும் சவால் இருமடங்கானது. குழந்தை பொறுப்பு என்று பொத்தாம் பொதுவாக அந்த விஷயத்தை கடந்துவிட முடியாது. ஒரு ஆண் எல்லா இடத்திலும் ஒரே போலதான் இருப்பார். அவரிடம் இடத்திற்கு இடம் வேறுபட்ட ஒன்றை யாரும் எதிர்பார்க்க மாட்டார்கள். ஆனால், ஒரு பெண்ணிடம் சமூகம் ஒன்றை எதிர்பார்க்கும், குடும்பம் ஒன்றை எதிர்பார்க்கும், வேலை என்றால் அலுவலகம் ஒன்றை எதிர்பார்க்கும்.. இவையெல்லாம் அழுத்தம் மட்டுமல்ல.. கட்டாயங்கள்.. இதைத்தாண்டியும் ஏகப்பட்டவை இருக்கின்றன” என்றார்..
தகுதியை விட அனுமானங்களில் ஒதுக்கப்படும் வாய்ப்புகள்
Winpe நிறுவனர் நுபுர் கார்க் இதுதொடர்பாகப் பேசுகையில்., “இந்தியாவில் சி-சூட் பதவிகளில் 19 சதவீதம் மட்டுமே பெண்கள் வகிக்கிறார்கள் என்பது திறன் இல்லாமையின் பிரதிபலிப்பு அல்ல - இது பெண்களைத் தொடர்ந்து பின்தங்க வைக்கும் முறையான தடைகளின் பிரதிபலிப்பாகும். நீண்ட காலமாக, தகுதியை விட அனுமானங்களின் அடிப்படையில் வாய்ப்புகள் ஒதுக்கப்படுகின்றன” எனத் தெரிவிக்கிறார்.
சரி, நம் நாட்டில் மட்டும்தான் இப்படி இருக்கிறதோ என நாம் நினைத்தால் அதுவும் தவறு... தொழில்நுட்ப ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் முன்னணியில் இருக்கும் அமெரிக்காவில் நிலைமை அதைவிட மோசம். Women in the Workplace 2024 எனும் ஆய்வறிக்கை மிக நுட்பமான கருத்து ஒன்றைத் தெரிவிக்கிறது. அதாவது, “கடந்த 10 ஆண்டுகளில் கார்ப்பரேட் உலகின் ஒவ்வொரு மட்டத்திலும் பெண்கள் சில வெற்றிகளைப் பெற்றிருக்கின்றனர். ஆனால், அந்த முன்னேற்றமும் பலவீனமாகவே உள்ளது” எனத் தெரிவிக்கிறது. குறிப்பாக, நிறத்தின் அடிப்படையில் (women of color) பாகுபாடுகள் கடைபிடிக்கப்படுவதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. இந்த விஷயங்கள் எல்லாம், 2003 முதல் 2014 வரையிலான காலக்கட்டங்களில் இருந்ததை விட மோசமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
நிறப்பாகுபாடு
கடந்த 10 ஆண்டுகளில் - பெருநிறுவனங்களில் - நிர்வாக மட்டத்தில் பணியிலிருக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக C-suite பதவிகளை மட்டும் எடுத்துக்கொண்டால், அந்தப்பதவிகளில் இருக்கும் பெண்களின் எண்ணிக்கை கடந்த 2015 ஆம் ஆண்டு வெறும் 17% ஆக இருந்தது. தற்போதோ 29% ஆக இருக்கிறது என்கிறது அந்த ஆய்வு. ஆனால், நிறத்தின் அடிப்படையிலான பாகுபாடுகள் ஒவ்வொரு மட்டத்திலும் பிரதிபலிக்கின்றன. C-suite பதவிகளில் 29% பெண்கள் இருக்கின்றனர் என்றால் அதில், 7 மட்டுமே வெள்ளை நிறம் அல்லாத (women of color) பெண்கள்.. நிறுவனத்தில் ஒவ்வொரு மட்டத்திலும் இது எதிரொலிக்கிறது.
கார்ப்பரேட்டுகளில்தான் இப்படி இருக்கிறது. சரி.. தனியார் நிறுவனங்கள் என்று கடந்தாவது விடமுடியும். அரசுத் துறைகளிலும் இதுதான் நிலைமை என்றால் அதை என்னவென்று சொல்வது. UN Women கடந்த மாதம் ஒரு கட்டுரையை வெளியிட்டிருக்கிறது. அதில், “2025 ஜூன் 1 நிலவரப்படி, 27 நாடுகளில் 31 பெண்கள் அரசு அல்லது நாட்டின் தலைமைப் பொறுப்புகளில் இருக்கின்றனர். உலகம் முழுவதிலும் தலைமைத் துறைகளில் பாலின சமத்துவம் பூரணமாக நிலைபெற இதே வேகத்தில் சென்றால், அதற்குத் தேவைப்படும் காலம் 130 ஆண்டுகள்” எனத் தெரிவிக்கிறது. ஐக்கிய நாடுகள் பெண்கள் அமைப்பின் தரவுகளின்படி, 2025 ஜனவரி 1 நிலவரப்படி, உலகளவில் உள்ள நாடுகளில் கொள்கைகளை வகுக்கும் அமைச்சரவைகளில் பெண்கள் 22.9 சதவீதம் பங்காற்றுகின்றனர். 50% பெண் அமைச்சர்களைக் கொண்ட நாடுகளின் எண்ணிக்கை வெறும் 9 மட்டுமே.
பாலின இடைவெளி இந்தியா கடைசி..
உலகளவில் நிலவும் இந்த மிகப்பெரிய பிரச்னைக்கு மூலக்காரணம் பாலின இடைவெளி. The World Economic Forumன் Global Gender Gap Report 2025 வெளியாகியிருக்கிறது. அது மிக முக்கியமான விஷயம் ஒன்றைச் சொல்கிறது. தற்போது இருக்கும் வேகத்திலேயே நாம் சென்றால், உலகளவில் நிலவும் பாலின இடைவெளியைக் குறைக்க இன்னும் 123 ஆண்டுகள் ஆகுமென்று தெரிவிக்கிறது. பாலின இடைவெளியில் இந்தியா 149 நாடுகளில் 131 ஆவது இடத்தில் இருக்கிறது.
Nordic நாடுகள் என சில நாடுகள் இருக்கின்றன. அதாவது, வட ஐரோப்பாவில் அமைந்துள்ள ஒரு பிராந்தியம். இதில் டென்மார்க், பின்லாந்து, ஐஸ்லாந்து, நார்வே, சுவீடன் ஆகிய நாடுகள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய பிரதேசங்களான ஃபரோ தீவுகள், கிரீன்லாந்து மற்றும் ஆலாந்த் தீவுகள் இருக்கின்றன. இந்த நாடுகளில் எல்லாம், சமத்தும் என்பது ஒரு சிந்தனை அல்ல. அது அடிப்படையான விஷயம் என்கிறார் எழுத்தாளர் ஜான் ஜே கென்னடி. உதாரணத்திற்கு நார்வேயில் தனியார் நிறுவனங்களில் 40% வேலைகளை பெண்களுக்கு ஒதுக்க வேண்டும். இன்னும் ஏகப்பட்ட நல்ல விஷயங்கள் இந்த Nordic நாடுகளில் இருக்கின்றன. ஆனால், இந்த விஷயங்களில் எல்லாம் நாம் இன்னும் பா....ரதூரம் பின் தங்கியிருக்கிறோம்...
ஒரு பெண் C-suite பதவியிலும் தலைமைப் பதவிகளிலும் இருப்பது சாதனை என்றால், இன்னொரு பெண் அந்த பதவிக்கு செல்லும் பாதை சாதாரணமாக இருப்பதற்கான சூழலை உருவாக்க வேண்டிய கடமை யாருடையது? இந்த புள்ளிவிவரங்கள் வெறும் எண்கள் மட்டுமல்ல; ஒவ்வொரு பெண்ணின் வாய்ப்பும் கனவும் பறிபோவதைக் காட்டும் கண்ணாடி. அதுமட்டுமன்றி, வெற்றி என்பது தனி ஒருவரின் பயணம் மட்டும் அல்ல; அது ஒரு அமைப்பின் மனநிலை மற்றும் பிரதிபலிப்பு. இந்திய அமைப்பு அப்படித்தான் நினைக்கிறது என்றால், அது தீவிரமான அவசரப்பிரிவில் இருக்கிறது.. அதை சரிசெய்தே ஆக வேண்டும்..