அடேங்கப்பா.. ஊட்டி, கொடைக்கானல் தாண்டி தமிழ்நாட்டுல இத்தனை மலை சுற்றுலாத் தளங்கள் இருக்கா!
தமிழ்நாட்டில் மலை சுற்றுலா செல்ல பல அழகான இடங்கள் உள்ளன. அதில் நம் அனைவரின் நினைவுக்கும் முதலில் வருவது ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற இடங்கள்தான்.. இந்த இடங்கள் பிரபலமான சுற்றுலா தளங்களாகும்.. எப்போதும் இது போன்ற சென்ற இடங்களுக்கே செல்லாமல் புதுமையான இடங்களுக்கு செல்லணும்னு ஆசையா இருக்கா? அப்போ வாங்க இந்த பதிவில் அது போன்ற அறியப்படாத இடங்களை தமிழகத்தின் பல மலை பகுதிகளை பற்றி தெரிந்துக் கொள்ளலாம்..
வால்பாறை (Valparai)
மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள வால்பாறை, தேயிலை தோட்டங்கள் மற்றும் அடர்ந்த காடுகளுடன் ஒரு அழகான மலைவாழிடம் ஆகும். மேற்குத் தொடர்ச்சி மலையின் ஆனைமலை மலைத் தொடரில், கடல் மட்டத்திலிருந்து சுமார் 3500 அடி உயரத்தில் அமைந்துள்ள வால்பாறை, சுற்றுலாத் தலங்களில் முதன்மையானதாகத் திகழ்கிறது. காடுகளால் சூழப்பட்ட, வால்பாறையில் உள்ள தேயிலைத் தோட்டங்களும் காபி எஸ்டேட்களும் ஒன்று சேர்ந்து கண்கவர் காட்சியை தரும்..
இங்கு மேல் சோலையாறு அணை, நீராறு அணை, ஆழியாறு அணை, குரங்கு அருவி, பாலாஜி கோவில் (கரிமலை), வேளாங்கண்ணி தேவாலயம் (கரிமலை), பஞ்ச முக விநாயகர் கோயில் (சோலையாறுக்கு அருகில்) ஆகியவை பார்க்க விரும்பும் சில இடங்களாகும்.. மலையேறுபவர்களுக்கு, வால்பாறை ஒரு தனித்துவமான அனுபவத்தை கொடுக்கும்.
ஜவ்வாது மலைகள் (Javadhu Hills)
ஜவ்வாது மலைகள், கிழக்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள ஒரு மலைத்தொடர் ஆகும். இது வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் பரவியுள்ளது. இயற்கை எழில் சூழ்ந்த இந்த மலைத்தொடர், சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு பிரபலமான இடமாகும். கிழக்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான இந்த மலைத்தொடர், பசுமையான காடுகள், நீர்வீழ்ச்சிகள், மற்றும் மலையேற்ற பாதைகளுக்கு பெயர் பெற்றது. ஜவ்வாது மலைகளுக்கு திருவண்ணாமலை, போளூர், மற்றும் வேலூரில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
கொல்லிமலை (Kolli Hills)
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலை, அதன் இயற்கை அழகு மற்றும் கோயில்களுக்கு பெயர் பெற்றது. இந்த இடம் ஆண்டு முழுவதும் இதமான காலநிலையைக் கொண்டிருக்கும்.. இது தமிழ்நாட்டின் மிக முக்கியமான பருவ சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். பசுமையான நிலப்பரப்பை கொண்டிருக்கும்..
கடல் மட்டத்திலிருந்து 1000-1300 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள கொல்லிமலை மலையேற்றம் செய்பவர்களுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் மகிழ்ச்சியைத் தருகிறது. இது கட்டுக்கடங்காத வசீகரத்தைக் கொண்டுள்ளது ஆகாயகங்கை அருவி, இங்கு கட்டாயம் பார்க்க வேண்டிய இடமாகும். இது கொல்லிமலை அருவி என்றும் அழைக்கப்படுகிறது. இதன் மயக்கும் அற்புதத்தை அனுபவிக்க, நீங்கள் 1000 படிகள் ஏற வேண்டும், மலையேறுபவர்கள் இந்த நீர்வீழ்ச்சிக்கான பாதையை விரும்புவார்கள். இத மலையடிவாரத்தில் நீங்கள் புளியஞ்சோலை இருக்கும்.. அங்கு அருவியில் இருந்து வரும் தண்ணீரி பாய்ந்து ஓடும்.. அதனால் அங்கு நீங்கள் சிறிது நேரம் செலவிட விரும்புவீர்கள்.
கல்ராயன் மலைகள் (Kalvarayan Hills)
விழுப்புரம் மற்றும் சேலம் மாவட்டங்களில் அமைந்துள்ள கல்ராயன் மலைகள், சிறியதாகவும் அழகாகவும் இருக்கும். கல்வராயன் மலைகள், தமிழ்நாட்டில் உள்ள கிழக்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள ஒரு பெரிய மலைத்தொடர் ஆகும். இது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அமைந்துள்ளது மற்றும் இயற்கை எழில் சூழ்ந்த சுற்றுலாத் தலமாக உள்ளது. கல்வராயன் மலைகள் ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாகும். இங்கு இயற்கை எழில், நீர்வீழ்ச்சிகள் மற்றும் மலையேற்றம் போன்றவை உள்ளன..
சதுரகிரி (Sathuragiri)
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சதுரகிரி, புனிதமான மலை மற்றும் கோயில்களுக்கு பெயர் பெற்றது. சதுரகிரி என்பது மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள ஒரு மலை மற்றும் பிரபலமான ஒரு கோயில் ஆகும். இது சதுர வடிவத்தில் இருப்பதால் சதுரகிரி என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள சுந்தரமகாலிங்கம் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. மேலும், இங்கு ஏராளமான மருத்துவ மூலிகைகளும் உள்ளன. பக்தர்கள் மாதந்தோறும் அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்துவார்கள். இந்த மலையேற்றம் சற்று கடினமானது, குறிப்பாக மழைக்காலங்களில் பாதுகாப்புடன் செல்வது நல்லது..
ஏலகிரி (Yelagiri)
வேலூர் மாவட்டத்தில் உள்ள ஏலகிரி, இயற்கை எழில் நிறைந்த ஒரு சிறிய மலைவாழிடம் ஆகும். திருப்பத்தூரில் 30 கி.மீ தூரத்திலும், சென்னை விமான நிலையத்தில் இருந்து 224 கி.மீ தூரத்திலும், பெங்களூருவிலிருந்து 200 கி.மீ தூரத்திலும், ஏலகிரி மலை உள்ளது. ஏலகிரி கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1200 மீ உயரத்தில் நான்கு மலைகளால் அமைந்துள்ளது. ஏலகிரியின் மொத்த பரப்பளவு 30 சதுர கி.மீ ஆகும். இயற்கைப் பூங்கா, முருகன் ஆலயம், தொலைநோக்கி இல்லம், நிலாவூர் ஏரி மற்றும் பூங்கா, ஆஞ்சநேயர் ஆலயம், மங்கலம் தாமரைக்குளம், படகு வீடு போன்ற இடங்கள் ஏலகிரி மலையில் சுற்றுலா பயணிகளுக்கு சிறந்த இடமாகும்.
போடிநாயக்கனூர் (Bodinayakanur)
தேனி மாவட்டத்தில் உள்ள போடிநாயக்கனூர், மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. போடிநாயக்கனூர் மற்றும் அதை சுற்றியுள்ள சுற்றுலா தலங்கள் பல உள்ளன.. போடி மெட்டு, குரங்கனி, மற்றும் புதிய நீர்வீழ்ச்சிகள் இதி முக்கியமான இடமாக பார்க்கப்படுகிறது.. போடியிலிருந்து 26 கி.மீ தொலைவில் உள்ள இந்த கோடை வாசஸ்தலம் 4500 அடி உயரத்தில், தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள குரங்கனி, போடியில் இருந்து 16 கி.மீ தொலைவிலும், தேனியிலிருந்து 31 கி.மீ தொலைவிலும் உள்ளது. இங்கு ஏலக்காய் தோட்டங்கள் பிரபலமானவை. போடிநாயக்கனூரில் இருந்து மதுரை, கொச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக மூணாருக்கு செல்லும் வழியில் புலி அருவி உள்ளது.. அதனால் இங்கு சென்றால் இதையும் பார்த்து ரசிக்கலாம்..
இந்த மலைப்பிரதேசங்கள் தமிழ்நாட்டின் இயற்கை அழகை ரசிக்கவும், அமைதியான சூழலில் ஓய்வெடுக்கவும் ஏற்ற இடங்களாகும். அதனால் மலை பகுதிகளுக்கு சுற்றுலா செல்ல விருப்பம் உள்ளவர்கள்.. தமிழகத்தில் உள்ள இந்த இடங்களுக்கு சென்றுவரலாம்..
ஆனைமலை (Anamalai)
மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள ஆனைமலை, கோவை மாவட்டத்தில் அமைந்துள்ளது. புல் மலைகள், காடுகள், மலைகள், நீர்த்தேக்கங்கள், கவர்ச்சியான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களை கொண்ட ஆனைமலை, இயற்கை ஆர்வலர்கள், பயணிகள் மற்றும் மலையேற்றம் செய்பவர்களுக்கு சொர்க்கமாக இருக்கும்.. யானை மலை என்றும் அழைக்கப்படும் இந்த மலைத்தொடரில் புகழ்பெற்ற ஆனைமலை வனவிலங்கு சரணாலயம் உள்ளது. 600 சதுர மைல்களுக்கு மேல் பரந்து விரிந்துள்ள காடு, பலவகையான விலங்குகள் மற்றும் பறவைகளின் சில அரிய வகைகளும் இங்கு காணப்படுகின்றன. இந்த இடம் தேயிலை மற்றும் காபி தோட்டங்கள் மற்றும் தேக்கு மரக்காடுகளின் பரவலால் நிறைந்துள்ளது.
உங்களுக்கு யானைகளை பார்க்க விருப்பமிருந்தால், வரகளியாறு யானை முகாமுக்குச் செல்லுங்கள், அங்கே 21 யானைகளை பார்க்கலாம். இங்குள்ள ஒரு பிரபலமான தளம் சரணாலயத்திற்குள் அமைந்துள்ள டாப் சிலிப் ஆகும். மலை உச்சியில் இருந்து தேக்கு மரக் கட்டைகளை கீழே உருட்டும் தொடர்ச்சியான செயலில் இருந்து இந்த பெயர் வந்தது என்று சொல்லப்படுகிறது. இந்த இடம், மிகச்சிறந்த காட்சியை வழங்குகிறது மற்றும் பறவைகளை பார்ப்பதற்கும் ஏற்ற இடமாகவும் உள்ளது. மலைகள் வழியாக மலையேற்றம் என்பது வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத ஒரு அனுபவமாக இருக்கும்.
மலைப்பிரதேசங்களுக்கு செல்லும்போது மிகுந்த பாதுகாப்புடன் செல்வது அவசியம். நம்முடைய உடல்நிலை மலை ஏற்றத்துக்கு தகுந்தாற்போல் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அரசு தடை செய்த பகுதிகளுக்கு நிச்சயமாக செல்லவேக் கூடாது. அது தேவையற்ற அபாயங்களுக்கு வித்திடும். சுற்றுலா என்பதை மகிழ்ச்சியை அனுபவிக்க நாம் திட்டமிடுவது. அதனால் முன்னெச்சரிக்கையும், தேவையற்ற விபரீதங்களையும் மேற்கொள்ளாமல் என்ஜாய் பண்ணுவது சாலச்சிறந்தது...