லட்சக்கணக்கான ஹெக்டேர்களில் பாதிக்கப்படும் விளைநிலங்கள்.. வடமாநிலங்களில் வெளுத்து வாங்கும் கனமழை..
வட மாநிலங்களில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாகப் பல மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, டெல்லி, ஜம்மு காஷ்மீர், இமாச்சல பிரதேசம், உத்தராகண்ட், ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. டெல்லியில் யமுனை நதி அபாய அளவைத் தாண்டியுள்ளதால், ஆற்றையொட்டி தாழ்வான பகுதிகளில் வசிக்கும் சுமார் பத்தாயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். பல நகரங்களில் சாலைகள் மற்றும் ரயில் போக்குவரத்துகள் முடங்கியுள்ளன. இமாச்சல பிரதேசம், ஜம்மு போன்ற மலைப் பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுச் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. பஞ்சாபில் 1.5 லட்சம் ஹெக்டேர் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இந்த வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மீட்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும்நிலையில், ஒடிசா அருகே வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுப்பெற்று, மீண்டும் மழை தீவிரமடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் கனமழை வெளுத்து வாங்குவதால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக, பல பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. நகரின் முக்கியப் பகுதிகளில் வெள்ள நீர்சூழ்ந்துள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லி, நொய்டா,குருகிராம், காசியாபாத் மற்றும் ஃபரிதாபாத் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. டெல்லியில் யமுனை நதி அபாய அளவைத் தாண்டியுள்ளதால்,ஆற்றையொட்டி தாழ்வான பகுதிகளில் வசிக்கும் சுமார் பத்தாயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
டெல்லியில் பெய்து வரும் கனமழை காரணமாக மதுரா சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சில இடங்களில் வாகனங்கள் நத்தை வேகத்தில் நகர்ந்து செல்ல வேண்டிய நிலை உருவானது. கட்டுமானப்பணிகள், பாதுகாப்புச் சோதனைகள் உள்ளிட்டவை இந்த நெரிசலுக்கு முக்கியக் காரணங்களாக உள்ளன. எனவே, மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு டெல்லி போக்குவரத்து காவல்துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தி வருகிறது.
பஞ்சாபில் கனமழையால் ஆயிரத்து 400-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. 30 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளத்தால் சூழப்பட்டு வெளியேற முடியாமல் படகுகள் மூலம் உணவு உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன. மாநிலத்தின் அனைத்து ஐபிஎஸ் அதிகாரிகளும் தங்கள் ஒரு நாள் ஊதியத்தை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளனர். முதலமைச்சர் பகவந்த் மான், வெள்ள சேதங்களைப் பார்வையிட்டுள்ள நிலையில், மத்திய அரசு வழங்க வேண்டிய 60 ஆயிரம் கோடி ரூபாயை உடனடியாக விடுவிக்கக்கோரியிருக்கிறார்.
இமாச்சலப் பிரதேசத்தில் கனமழை காரணமாக செப்டம்பர் 7ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இமாச்சலப்பிரதேசத்தில் கடந்த சில வாரங்களாக பெய்துவரும் கனமழையால் மாநிலம் முழுவதும் வெள்ளம், நிலச்சரிவு மற்றும் சாலைகள் அடைப்பு போன்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்தநிலையில், மாணவர்கள், ஊழியர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் செப்டம்பர் 7ஆம் தேதி வரை விடுமுறை அளிப்பதாக அம்மாநில கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
ஹரியானா மாநிலத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், தலைநகர் சண்டிகரில் உள்ள பல்கலைக்கழகத்தை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மழை மேலும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மழையால் சுக்னா ஏரியின் நீர்மட்டம் உயரவே, அதன் வெள்ளக் கதவுகள் திறக்கப்பட்டன. பாதுகாப்பு கருதி சண்டிகரில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
ராஜஸ்தானில் கனமழை பெய்து வரும் நிலையில், சாலைகளில் குளம் போல தண்ணீர் தேங்கியுள்ளது. 3நாட்களுக்கு மேலாக தண்ணீர் வடிய வழியின்றி சாலையிலேயே தேங்குவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சாலையோர வியாபாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப்பில் 23 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவையாக அறிவிக்கப்பட்டுள்ளன. தொடர் மழையால் பஞ்சாப்பில் உள்ள அணைகள் நிரம்பி வழிகின்றன.ஆறுகள் அபாய அளவைத் தாண்டிபாய்கின்றன. அதனால், பாதிக்கப்பட்ட பகுதிகளை பஞ்சாப் ஆளுநர் குலாப் சந்த்கட்டாரியா, முதல்வர் பகவந்த் மான் ஆகியோர் நேரில் சென்று தனித்தனியாக பார்வையிட்டனர்.ஃபெரோஸ்பூரில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை படகு மூலம் சென்று முதல்வர் ஆய்வு செய்தார். வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான தரன் பகுதியை ஆளுநர் ஆய்வுசெய்தார். மாநிலம் முழுவதும் தொடர்மழையால் மூன்றரை லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து இதுவரை 20ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் மீட்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 590 ஹெக்டேர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 23 தேசிய பேரிடர் மீட்புப்படையினர் தொடர்ந்து களத்தில் இருப்பதாகவும், விரைவில் நிலைமை இயல்புக்கு வரும் என்றும் பகவத் மான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஜம்மு மாவட்டத்தில் தொடர் கனமழையால்,பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஆறுகள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கரையோரப் பகுதிமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குடியிருப்புப்பகுதிகள், சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. செனாப் நதியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அக்னூரில் வெள்ளத்தில் 50க்கும் அதிகமானோர் சிக்கிக்கொண்டனர். குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததால், வெளியேற முடியாமல் மக்கள் தவித்தனர்.அவர்களை பேரிடர் மீட்புப் படையினர் பாதுகாப்பாக மீட்டனர். வெள்ளப்பெருக்கில் வீடு இடிந்து விபத்துக்குள்ளானதில், தாயும், மகளும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ரஜோரி மாவட்டத்தில் உள்ள காங்க்ரி கிராமத்தில் வீடு இடிந்து விபத்துக்குள்ளானதில், தாயும், மகளும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். தொடர்ந்து, இருவரின் உடல்களும் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.இதற்கிடையே, செனாப் நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், கார்கால் கிராமத்தில், 40க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டனர்.அவர்களை மீட்கும் பணிகளில் பேரிடர் மீட்புக் குழுவினர் களமிறங்கி உள்ளனர்.
பஞ்சாப் உள்ளிட்ட மழையால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு சிறப்பு நிவாரணத் தொகுப்பை உடனடியாக அறிவிக்க வேண்டும் எனப பிரதமர் மோடியை, ராகுல் காந்தி கேட்டுக்கொண்டுள்ளார். பஞ்சாப், ஜம்மு-காஷ்மீர், ஹிமாச்சல பிரதேசம், உத்தராகண்ட் மாநிலங்களில் மழை மற்றும் வெள்ளத்தினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சுட்டிக்காட்டியுள்ள அவர், இந்நேரத்தில் உதவ வேண்டியது மத்திய அரசின் கடமை எனக் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக பாதிக்கப்பட்ட விவசாயிகளை கவனத்தில் கொள்ளவேண்டும் எனவும் ராகுல் கேட்டுக் கொண்டுள்ளார்.