சினிமாவில் எண்ட்ரி கொடுத்த இன்பநிதி; வெளியான அறிவிப்பு..!
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மகனான இன்பநிதி, சமீபகாலமாக இங்கொன்றும் அங்கொன்றுமாக கட்சி நிகழ்ச்சிகளில் தலைகாட்டி வந்தார். முன்னதாக, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் தனது தந்தை உதயநிதியோடு அவர் பங்கேற்ற நிகழ்வு பேசுபொருளானது.
ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனில் நிதி நிர்வாகம் தொடர்பான பட்டப் படிப்பை இன்பநிதி முடித்திருக்கிறார். சமீபத்தில், திமுக தலைமை அலுவலகமான அறிவாலய வளாகத்தில் உள்ள கலைஞர் டிவி வளாகத்தில், இன்பநிதிக்கென தனி அறை உருவாக்கப்பட்டது. கலைஞர் தொலைக்காட்சியில் நிதி நிர்வாகத்தில் அவருக்கு பொறுப்பு வழங்கப்பட்டதாக தகவல் வெளியானதைத்தொடர்ந்து, தினமும் அலுவலகத்திற்கு விசிட் அடித்து ஆலோசனை நடத்தி வந்தார்.
இந்த நிலையில், தற்பொழுது சினிமாவில் ஆர்வம் காட்டத்தொடங்கியுள்ளார் இன்பநிதி. சென்னையில் உள்ள ஒரு கூத்துப்பட்டறையில் இணைந்து நடிக்க கற்றுவருவதாகவும் தகவல் வெளியானது. கூத்துப்பட்டறையில் அவர் நடிப்பு பயிற்சி மேற்கொண்ட காட்சிகளும் இணையத்தில் வைரலானது. தொடர்ந்து, ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இன்பநிதி பொறுப்பேற்கவுள்ளதாக கூறப்பட்டுவந்த நிலையில், ரெட் ஜெயண்ட்டின் நிர்வாக பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. ரெட் ஜெயிண்ட்ஸ் பேனரில் தனுஷின் ‘இட்லி கடை’ படத்தை வெளியிடுவதன் மூலம் விநியோகஸ்தராக அவர் களமிறங்கியுள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இட்லி கடை படத்தின் இயக்குநரான தனுஷ், தனது எக்ஸ் பக்கத்தில் இதுதொடர்பான போஸ்டரை வெளியிட்டுள்ளார். இட்லி கடை படத்தை ரெட் ஜெயிண்ட்ஸ் மூவிஸ் நிறுவனம் வெளியிடுவதாக அறிவித்தவர், புதிய பயணத்திற்காக இன்பனுக்கு வாழ்த்துகள் என்று இன்பநிதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.