ரஷ்யா, சீனா, இந்தியாவிற்ற்கு எதிராக கடுமை காட்டும் அமெரிக்கா
ரஷ்யா, சீனா, இந்தியாவிற்ற்கு எதிராக கடுமை காட்டும் அமெரிக்காpt web

அதிகாரத்தை தக்கவைக்க ட்ரம்ப்பின் அரசியல்.. சொந்த நாட்டுக்கே பாதகமாக முடிகிறதா?

கச்சா எண்ணெய் ஏன் முக்கியம்.. உலக அரசியலில் கச்சா எண்ணெய்யின் பங்கு என்ன? அதனைச் சுற்றி தற்போது நடக்கும் அரசியல் என்ன? அமெரிக்கா எடுக்கும் முடிவுகளால் இந்தியா பாதிக்கப்படுமா? விரிவாக அலசுகிறது இக்கட்டுரை..
Published on

நீரின்றி அமையா இதே உலகுதான் கச்சா எண்ணெய் இன்றியும் அமையாது. கச்சா எண்ணெய் ஏன் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது? ஏனெனில், சர்வதேச வர்த்தகமே கச்சா எண்ணெயைக் கொண்டுதானே இயங்குகிறது. பொருளாதார வல்லமை கொண்டவையாக இருக்கும் நாடுகள் எல்லாம் பெரும்பாலும் எண்ணெய் வளம் மிக்க நாடுகளாகத்தானே இருக்கின்றன.

திருக்குறள் மூலம் இன்னும் தெளிவாக புரிந்துகொள்ளலாம். நல்ல அரசு மற்றும் நல்லாட்சிக்கு திருவள்ளுவர் சிலவற்றைக் குறிப்பிடுகிறார்.

இயற்றலும் ஈட்டலுங் காத்தலுங் காத்த

வகுத்தலும் வல்ல தரசு

(குறள் 385; அதிகாரம் : இறைமாட்சி)

இதன் பொருளாக, “முறையாக நிதி ஆதாரங்களை வகுத்து, அரசாங்கக் கருவூலத்திற்கான வருவாயைப் பெருக்கி, அதை பாதுகாத்துத் திட்டமிட்டுச் செலவிடுவதுதான் திறமையான நல்லாட்சிக்கு இலக்கணம்” என்கிறார் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி. ஆனால், கச்சா எண்ணெய் விவகாரத்தில் ஒரு நாட்டிக்கு ஏதேனும் சிக்கல் உருவானால் திறமையான நல்லாட்சிக்கு என்றுமே பிரச்னைதான்.

பூமியில் இருந்து எடுக்கப்படும் கச்சா எண்ணெய், சுத்திகரிக்கப்பட்டு பல்வேறு விதங்களில் பயன்படுத்தப்படுகிறது. பெட்ரோலியம், எரிவாயு, விமான எரிபொருள், மண்ணெண்ணெய், பாரஃபின், பெட்ரோ ரசாயனப்பொருட்கள், உயவுப்பொருட்கள் என பல்வேறு வடிவங்களை எடுக்கிறது கச்சா எண்ணெய்.

ரஷ்யா, சீனா, இந்தியாவிற்ற்கு எதிராக கடுமை காட்டும் அமெரிக்கா
2027 உலகக்கோப்பை.. ரோகித், கோலி எதிர்காலம் என்ன? BCCI போடும் கண்டிஷன்!

அமெரிக்கா நம்பர் 1

காலம்காலமாக எண்ணெய் உற்பத்தி நாடுகளுக்கும், எண்ணெய் வாங்கும் நுகர்வு நாடுகளுக்குமான உறவை நிர்ணயிக்கும் சக்தியாக கச்சா எண்ணெய் இருக்கிறது.

உலகில் கச்சா எண்ணெய் உற்பத்தியில் முன்னணியில் இருப்பது அமெரிக்கா. அடுத்து சவூதி அரேபியா. ரஷ்யா, கனடா, ஈரான், ஈராக் போன்ற நாடுகளும் கச்சா எண்ணெய் உற்பத்தியில் அடுத்தடுத்து இருக்கின்றன. எண்ணெய் உற்பத்தியில் 12 நாடுகள் கொண்ட கூட்டமைப்பு ஒன்றும் இருக்கிறது; இதற்கு ‘ஒபெக்’ என்று பெயர். அல்ஜீரியா, காங்கோ, ஈரான், ஈராக், குவைத், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட 12 நாடுகள் இந்த அமைப்பில் உள்ளன.

2023 நிலவரப்படி, அமெரிக்கா நாளொன்றுக்கு 21.91 மில்லியன் பேரல்கள் அளவுக்கு எண்ணெய் உற்பத்தி செய்கிறது. அமெரிக்காவிலேயே டெக்சாஸ் மாகாணம் அதிக அளவில் எண்ணெய் உற்பத்தி செய்கிறது. உற்பத்தியைப் போலவே, பெட்ரோலிய பொருட்களை அதிக அளவு பயன்படுத்தும் நாடாகவும் அமெரிக்கா இருக்கிறது. அந்நாடு நாளொன்றுக்கு 20.5 மில்லியன் பேரல்கள் அளவுக்கு பெட்ரோலியப் பொருட்களைப் பயன்படுத்துகிறது. இதனால், என்னதான் அமெரிக்கா அதிக அளவு எண்ணெய் உற்பத்தி செய்தாலும், உள்நாட்டுத் தேவைகளுக்காக பிற நாடுகளிடம் இருந்தும் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்கிறது.

அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் உள்ள சவூதி அரேபியா - இயற்கை எரிவாயு திரவங்கள் உட்பட - நாளொன்றுக்கு 11.13 மில்லியன் பேரல்கள் அளவுக்கு எண்ணெய் உற்பத்தி செய்கிறது. 3 ஆவது இடத்தில் உள்ள ரஷ்யா நாளென்றுக்கு 10.75 மில்லியன் பேரல்கள் அளவுக்கு எண்ணெய் உற்பத்தி செய்கிறது.

நாடுகளுக்கு இடையேயான உறவுகளில் கச்சா எண்ணெயின் பங்கு மிகவும் முக்கியமானது. காலம்காலமாக எண்ணெய் உற்பத்தி நாடுகளுக்கும், எண்ணெய் வாங்கும் நுகர்வு நாடுகளுக்குமான உறவை நிர்ணயிக்கும் சக்தியாக கச்சா எண்ணெய் இருக்கிறது. அதேபோல், நாடுகளுக்கு இடையிலான உறவுகளில் விரிசல் ஏற்படும்போதும் கச்சா எண்ணெய் வர்த்தகமே முதலில் பாதிக்கும். 1980களில் ஈரான் ஈராக் இடையேயான போர் ஆகட்டும், நைஜீரியாவின் உள்நாட்டு கிளர்ச்சியாகட்டும், தற்போது உக்ரைன் மீதான ரஷ்யாவின் போராகட்டும், ஒவ்வொரு போரும், சர்வதேச அளவில் எண்ணெய் வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதாகவே இருந்திருக்கின்றன.

ரஷ்யா, சீனா, இந்தியாவிற்ற்கு எதிராக கடுமை காட்டும் அமெரிக்கா
ICICI BANK|ஐசிஐசிஐ வங்கியில் குறைந்தபட்ச இருப்புத் தொகை அதிகரிப்பு.. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

அமெரிக்கா கையிலெடுத்த பதில்வரி

உக்ரைனுக்கு எதிரான ரஷ்யப்போரை காரணம் காட்டி பொருளாதார புயலையும் கிளப்பியிருக்கிறார் ட்ரம்ப். ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது 500 சதவிகித வரியை விதிக்கும் மசோதா கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டது. குடியரசுக்கட்சித் தலைவர் லிண்ட்சே கிரஹாம் இந்த மசோதாவை முன்வைத்தார். இது ஒரு தொடக்கப்புள்ளிதான். இதன் நீட்சியாகத்தான் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் இந்தியாவுக்கு கூடுதலாக 25% வரியை விதித்து அறிவிப்பை வெளியிட்டார் ட்ரம்ப்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலைக் கண்டித்து அந்நாட்டிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்ய கடந்த 2022 மார்ச் மாதத்தில் அமெரிக்கா தடை விதித்தது. இதையடுத்து ஐரோப்பிய நாடுகளிடமிருந்து எண்ணெய் இறக்குமதியை அதிகரித்தது. அமெரிக்கா போலவே கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளும் ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்ய தடை விதித்தன.

எரிகின்ற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல, அமெரிக்க அதிபராக 2 ஆவது முறையாக பதவிக்கு வந்ததில் இருந்து டொனால்ட் ட்ரம்ப் அரங்கேற்றும் அதிரடிகளும் சேர்ந்து கொண்டிருக்கின்றன. தான் அதிபரானால் ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்துவதாக அறிவித்த ட்ரம்ப், அதிபரானதும் போர்நிறுத்தத்திற்கு பேச்சுவார்த்தைகளையும் நடத்தினார். ஆனால் போர் நின்றபாடில்லை. அவர் அரங்கேற்றிய அதிரடிகளில் மற்றொன்று, ரிசெப்ரோக்கல் டாக்ஸ் எனப்படும் பதில்வரி. அமெரிக்க பொருட்களுக்கு மற்ற நாடுகள் எந்த அளவு வரி விதிக்கின்றனவோ அதே அளவு வரி அந்த நாடுகளின் பொருட்களுக்கும் விதிக்கப்படும் என்றார் ட்ரம்ப். இது அந்தந்த நாடுகளுடனான வரி பேரத்துக்கு வழிவகுத்தது. வர்த்தக பேச்சுவார்த்தைகளால் இறக்குமதி வரி விகிதங்களை மாற்றியது அமெரிக்கா.

ரஷ்யா, சீனா, இந்தியாவிற்ற்கு எதிராக கடுமை காட்டும் அமெரிக்கா
TAMILAN Awards | இலக்கியத்தில் மு.மேத்தா, கலைத்துறையில் பி.வாசு சிறப்பிப்பு

இந்தியாவைக் குறிவைக்கும் ட்ரம்ப்

ரஷ்யாவின் 70% எண்ணெயை இந்தியாவும், சீனாவும் வாங்குகின்றன. ஆனால் சீனாவை விட்டுவிட்டு இந்தியாவை மட்டும் ஏன் குறிவைக்கிறார் ட்ரம்ப்

இதில் என்ன சிக்கல் என்றால்... உக்ரைன் மீது போர் நடத்திவரும் ரஷ்யாவுக்கு எண்ணெய் வர்த்தகம்தான் மிகப்பெரிய வருவாய் ஆதாரமாக இருக்கிறது. ரஷ்யாவிடம் இருந்து நாளொன்றுக்கு சுமார் 20 லட்சம் பேரல்கள் அளவுக்கு கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்கிறது. இதனை சுத்திகரித்து டீசல் மற்றும் ஜெட் எரிபொருளாக ஐரோப்பிய வாடிக்கையாளர்களுக்கு இந்தியா விற்பனை செய்கிறது.

எனவே, அமெரிக்காவின் இந்த நடவடிக்கை அந்த நாட்டு குடிமக்களுக்குமே பிரச்னைதான். கடந்த ஆண்டில் மட்டும் 87 பில்லியன் டாலர் அளவுக்கு இந்தியப்பொருட்களை அமெரிக்கர்கள் வாங்கியுள்ள நிலையில், இனி அவர்கள் இந்திய இறக்குமதிப் பொருட்களுக்கு கூடுதல் விலை தர வேண்டியிருக்கும்.

ரஷ்யாவிடம் இருந்து இந்தியா மட்டும்தான் எண்ணெய் வாங்குகிறதா? எனில் இல்லை. சீனாவும் தான் வாங்குகிறது. ரஷ்யாவின் 70% எண்ணெயை இந்தியாவும், சீனாவும் வாங்குகின்றன. ஆனால் சீனாவை விட்டுவிட்டு இந்தியாவை மட்டும் ஏன் குறிவைக்கிறார் ட்ரம்ப் என்ற கேள்வி எழுந்துள்ளது.

அமெரிக்காவின் இந்த போக்குக்கு இந்திய வெளியுறவுத்துறை கண்டனம் தெரிவித்துள்ளது. 140 கோடி மக்களின் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது கட்டாயம் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை நியாயமான எதிர்வினை என சர்வதேச அரசியலை உற்று நோக்கும் பேராசிரியர் பெர்னார்ட் டி சாமி தெரிவித்திருக்கிறார்.

ரஷ்யா, சீனா, இந்தியாவிற்ற்கு எதிராக கடுமை காட்டும் அமெரிக்கா
’வாக்கு திருட்டு’ விமர்சனங்கள்.. ராகுல் குற்றச்சாட்டால் எழும் புதிய கேள்விகள்..!

கடுமை காட்டும் பிரதமர்

“ரஷ்யா உடனான இந்தியாவின் உறவு அத்தனை எளிதானதல்ல, சர்வதேச அளவில் ரஷ்யா, இந்தியாவின் முக்கிய பார்ட்னராகவும், அரசியல் ஆதரவாளராகவும் திகழ்கிறது” - அமெரிக்காவுக்கான முன்னாள் இந்திய தூதர்

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தப் போவதில்லை என சீனாவும் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. சீன மக்களின் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்வது அரசின் கடமை என அந்நாட்டு வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. ஆயினும் சீனாவிற்கு கடுமை காட்டாத அமெரிக்கா வரி அவகாசத்தை நீட்டித்துக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் இந்த போக்கால் ஜவுளி, இறால், விலைமதிப்பு மிக்க கற்கள், ஆபரணங்கள் உட்பட பல்வேறு பொருட்களின் ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ட்ரம்பின் அறிவிப்புக்கு பிரதமரும் கடுமை காட்டியுள்ளார்

முதல்முறை அமெரிக்க அதிபராக ட்ரம்ப் இருந்த சமயத்தில் 2018 ஆம் ஆண்டில் ஈரான் மற்றும வெனிசுலாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று இந்தியாவை வலியுறுத்தினார். அந்த சமயத்தில் அதனை இந்தியா ஏற்றது. ஆனால், இப்போது என்ன சிக்கல்? காரணம் இருக்கிறது. “ரஷ்யா உடனான இந்தியாவின் உறவு அத்தனை எளிதானதல்ல, சர்வதேச அளவில் ரஷ்யா, இந்தியாவின் முக்கிய பார்ட்னராகவும், அரசியல் ஆதரவாளராகவும் திகழ்கிறது” என்று தி இந்து நாளிதழுக்கு அளித்த பேட்டியில் அமெரிக்காவுக்கான முன்னாள் இந்திய துதரான அருண் சிங் கூறியுள்ளார். எனவே, இம்முறை அமெரிக்காவின் அழுத்தத்திற்கு இந்தியா அடிபணிந்து ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை தவிர்ப்பதற்கான சாத்தியங்கள் இல்லை என்கிறார்கள் சர்வதேச பார்வையாளர்கள். நீண்டநெடிய காலமாக இந்தியா- ரஷ்யா உறவு பலமான ஒன்று என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதன் மூலமாக உக்ரைன் மீதான தாக்குதலுக்கு மறைமுகமாக இந்தியா உதவி செய்வதாக அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது. ஆனால் யுரேனியம் உள்ளிட்டவற்றை ரஷ்யாவிடம் இருந்து அமெரிக்காவே வாங்கிக்கொண்டுதானே இருக்கிறது. எனில் இது எந்தவிதமான அரசியல் ?

ரஷ்யா, சீனா, இந்தியாவிற்ற்கு எதிராக கடுமை காட்டும் அமெரிக்கா
ஆதாரத்தை வெளியிட்ட ராகுல்.. மூன்று மாநிலங்களில் வாக்களித்த ஒரே நபர்.. தேசிய அரசியலில் நடப்பது என்ன?

வர்த்தக உறவுகளை விரிவாக்கும் இந்தியா

அமெரிக்காவின் நடவடிக்கைகள் இந்தியாவுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள சூழலில், பிரிட்டன் உள்ளிட்ட பிற நாடுகளுடனான வர்த்தக உறவுகள் விரிவடைகிறது. இச்சமயத்தில் பிரதமர் மோடி சீனாவின் Tianjin நகரில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்கிறார். 2018க்குப்பிறகு முதன்முறையாக சீனா செல்கிறார் பிரதமர் மோடி. சீனா, இந்தியா நாடுகளுக்கு இடையேயான உறவுகள் 2020 ஆம் ஆண்டில் எல்லைப்பிரச்னையால் சிக்கலில் இருந்த நிலையில் பிரதமரின் இந்த வருகையை சீனா வரவேற்றுள்ளது. அமெரிக்காவின் வரி விதிப்புக்குப் பிறகு நடைபெறும் இந்த பயணம் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

கடந்த அக்டோபரில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டின் ஒருபகுதியாக சீன அதிபர் ஸி ஜின்பிங்கை பிரதமர் மோடி சந்தித்திருந்தார். ட்ரம்பின் வரி நடவடிக்கைகள் பல நாடுகளை அதிருப்தி அடைய வைத்திருக்கும் நிலையில், அமெரிக்காவுக்கு எதிராக ஒன்றிணையும் நாடுகளுக்கு கூடுதலாக 10% வரி விதிக்கப்போவதாகக் கூட ட்ரம்ப் எச்சரித்திருந்தார். அமெரிக்க அதிபரின் வரி விதிப்புகளால் அதிருப்தி அடைந்துள்ள நாடுகள் ஒருபுறம் எனில், உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்காக அந்நாட்டின் மீது அமெரிக்கா எடுக்கும் நடவடிக்கைகள், ட்ரம்புக்குமே பாதிப்புதான். அடுத்த ஆண்டில் அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒருபகுதிக்கு நடக்க உள்ள தேர்தலில் எண்ணெய் விலை அதிகரிப்பது ட்ரம்புக்குமே சிக்கலாகத்தான் அமையும்.

ரஷ்யா, சீனா, இந்தியாவிற்ற்கு எதிராக கடுமை காட்டும் அமெரிக்கா
”அழக்கூட முடியல; ரொம்ப பலவீனமா இருங்காங்க” குழந்தைகள் வாரங்களில் அல்ல நாட்களிலே கூட இறக்கலாம் | Gaza

இந்தியாவும் சீனாவும் திட்டவட்டம்

ரஷ்யாவுக்கு எதிரான ட்ரம்பின் நடவடிக்கைகளால் உக்ரைன் மீதான தாக்குதலை அந்நாடு நிறுத்திக்கொள்ளுமா என்றால் அதற்கான வாய்ப்பில்லை என்கிறார் ரஷ்யாவுக்கான அமெரிக்க முன்னாள் உளவுத்துறை ஆய்வாளர் Eugene Rumer. இந்தியாவும், சீனாவும் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால், நிச்சயம் அது ரஷ்யாவின் பொருளாதாரத்துக்கு மிகப்பெரிய பாதிப்பாகத்தான் இருக்கும். ஆனால் அதுபோன்று நிகழ வாய்ப்பே இல்லை என்கிறார் யூஜின் ரூமெர். ரஷ்யாவிடம்இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தப்போவதில்லை என்று சீனாவும் தெரிவித்துவிட்டது.

ட்ரம்ப்பும் புதினுமே சந்திக்க உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அலாஸ்காவில் ஆகஸ்ட் 15 ஆம்தேதி ரஷ்ய அதிபர் புதினை சந்திக்க உள்ளதாக அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதனை ரஷ்ய அதிபர் மாளிகை இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்றாலும் இச்சந்திப்பில் உக்ரைன் போரை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தை முக்கிய இடம் பெறும் என்று ட்ரம்ப் கூறியுள்ளார். இந்த சந்திப்பு ரஷ்யா-உக்ரைன் போரில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தக்கூடும்என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வரிகளும், பொருளாதார தடைகளும் இருந்தாலும் புதினுக்கு உள்நாட்டில் எவ்வித அழுத்தங்களும் இல்லை. ஆனால், ட்ரம்ப் அரசின் வரிகள் அமெரிக்காவில் புதிய பிரச்னைகளைத்தான் ஏற்படுத்தும்
Brett Bruen
Brett Bruen

தங்கள் நாட்டின் மீதான தடைகளையும் பொருளாதார அபராதங்களையும் எதிர்கொள்ளும் வழியாகவே இந்த சந்திப்பை பார்க்கிறார் முன்னாள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் வெளியுறவுத்துறை ஆலோசகரான இருந்த Brett Bruen. தற்போது சர்வதேச அரசியல் ஆலோசகராக இருக்கும் இவர், ‘இந்த வரிகளும், பொருளாதார தடைகளும் இருந்தாலும் புதினுக்கு உள்நாட்டில் எவ்வித அழுத்தங்களும் இல்லை. ஆனால், ட்ரம்ப் அரசின் வரிகள் அமெரிக்காவில் புதிய பிரச்னைகளைத்தான் ஏற்படுத்தும்’ என்கிறார் ப்ரூவென். மறுமுனையில், “ரஷ்யா நடத்திவரும் போரை நிறுத்த பேச்சுவார்த்தை நடத்துவதாக ட்ரம்ப் கூறினாலும், தங்கள் நிலத்தை ஆக்கிரமிக்க நினைப்பவர்களுக்கு உக்ரைனியர்கள் தங்கள் மண்ணை பரிசாக தரமாட்டார்கள்” என்று கூறியுள்ளார் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி. இதனால் ரஷ்ய அதிபருடனான ட்ரம்ப்பின் சந்திப்பு எத்தகைய விளைவைத் தரப்போகிறது என்று தெரியவில்லை.

ரஷ்யா, சீனா, இந்தியாவிற்ற்கு எதிராக கடுமை காட்டும் அமெரிக்கா
’கிரீமிலேயர்’ வருமான உச்சவரம்பு.. திருத்தம் செய்ய நாடாளுமன்றக் குழு பரிந்துரை!

நிறுத்தப்படும் பேச்சுவார்த்தைகள்

இதற்கிடையே இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ரஷ்யாவில் இருக்கிறார். ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவது குறித்து இந்த பயணம் மேறகொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதனைத்தொடர்ந்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் ரஷ்யா செல்லவிருக்கிறார். இம்மாத இறுதியில் ரஷ்ய அதிபர் புதின் இந்தியா வரவிருக்கிறார்.

அமெரிக்காவுக்கு சவாலாக விளங்கும் ரஷ்யா மற்றும் சீனா நாடுகளின் தலைவர்களுடனான பிரதமர் மோடியின் ஆலோசனைகள் சர்வதேச அரங்கில் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

வரிவிகிதங்கள் குறித்த பேச்சுவார்த்தைகள் முடியும்வரை அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்களை வாங்கும் பேச்சுவார்த்தைகளை இந்தியா நிறுத்திவைத்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. வாஷிங்டனுக்கு திட்டமிடப்பட்டிருந்த மத்திய பாதுகாப்பு அமைச்சரின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Stryker combat vehicles மற்றும் Javelin anti-tank missiles ஆகியவற்றை வாங்குவதற்கு கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் பிரதமர் மோடி இருவரும் அறிவித்திருந்தனர். தற்போதோ, ட்ரம்பின் அறிவிப்பால் இந்த பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டுள்ளது.

ரஷ்யா, சீனா, இந்தியாவிற்ற்கு எதிராக கடுமை காட்டும் அமெரிக்கா
அமெரிக்கர்களின் ஆரோக்கியத்துக்கு அச்சுறுத்தல்.. ஆய்வறிக்கை செல்வது என்ன?

இந்தியா மற்றும் பிரேசில் நாடுகள்தான் தற்போதைக்கு அமெரிக்காவின் அதிக வரிவிதிப்புக்கு ஆளாகி உள்ளன. இந்நிலையில், பிரேசில் அதிபர் Luiz Inacio Lula da Silva உடனும் பிரதமர் மோடி தொலைபேசி மூலம் பேசினார். பிரிக்ஸ் அமைப்பை உருவாக்கிய நாடுகளான இந்தியாவும், பிரேசிலும் அமெரிக்காவின் கூடுதல் வரிகளால் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றன. பிரிக்ஸ் கூட்டமைப்பின்மீது ஏற்கனவே கடுமை காட்டிவரும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ரஷ்யாவிடம்இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளை ஒருபுறம் குறிவைத்தாலும், மற்றொரு புறம் ரஷ்ய அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தவும் ஆயுத்தமாகிறார். இந்த முறை அமெரிக்க அதிபரின் வர்த்தக பேரத்துக்கான மிரட்டலுக்கு இந்தியா பதிலடி தருவதில் உறுதி காட்டுகிறது.

எண்ணெய் என்ற மையப்புள்ளியைக் கொண்டு சுழலும் இந்த சர்ச்சைகள், சர்வதேச அரசியலையும், நாடுகளின் வர்த்தக உறவுகளையும் வெவ்வேறு புள்ளிகளில் இணைக்கவும் பிரிக்கவும் செய்யப்போகின்றன என்பதில் ஐயமில்லை.

ரஷ்யா, சீனா, இந்தியாவிற்ற்கு எதிராக கடுமை காட்டும் அமெரிக்கா
OPERATION SINDOOR|“பாகிஸ்தானின் 5 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தினோம்” இந்திய விமான படை தலைவர்..!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com