”அயர்லாந்தில் ரஜினி படத்தை பார்க்க ரிஸ்க் எடுத்தேன்..” சஞ்சு சாம்சன் செய்த 'Fan Boy' சம்பவம்!
இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன், இந்திய அணிக்காக 42 டி20 போட்டிகளிலும், 16 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். டி20 போட்டிகளில் 3 சர்வதேச சதமடித்திருக்கும் சஞ்சு, 2026 டி20 உலகக்கோப்பையை வெல்வதற்காக காத்திருக்கிறார்.
கவுதம் கம்பீர் மற்றும் டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவின் நம்பிக்கையை தொடக்கவீரராக பெற்றிருக்கும் சஞ்சு, தன்னுடைய டி20 கிரிக்கெட் பயணத்தை புத்துணர்ச்சியுடன் தொடங்கியுள்ளார்.
சமீபத்தில் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக இருந்துவரும் சஞ்சு சாம்சன், சிஎஸ்கே அணிக்கு வரவிருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், ரவிச்சந்திரன் அஸ்வின் உடனான உரையாடலில் தன்னுடைய எண்ணத்தை வெளிப்படுத்தினார்.
இந்த சூழலில் தான் ஒரு மிகப்பெரிய ரசிகர் என்பதை வெளிப்படுத்திய சஞ்சு சாம்சன், ரஜினியின் ரசிகராக என்ன ரிஸ்க் எடுத்தீர்கள் என்ற கேள்விக்கு ஃபேன் பாய் சம்பவம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.
இன்று படம் ரிலீஸ்.. நாளை மேட்ச்!
இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினின் யூடியூப் சேனலில் ‘குட்டி ஸ்டோரி’ என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சஞ்சு சாம்சன், சிஎஸ்கே அணிக்கு செல்லவிருக்கிறார் என்ற வதந்தி குறித்தும், ராஜஸ்தான் அணியுடனான உறவு குறித்தும் பேசினார்.
அஸ்வின் உடனான உரையாடலில் பேசிய அவர், “ராஜஸ்தான் எனக்கு உலகம் போன்றது. நான் ஒரு இளம்வீரராக ஆர்ஆர் அணிக்குள் நுழைந்தபோதும் சரி, கேப்டனாக பொறுப்பேற்றபோதும் சரி, உன்னால் முடியும் சஞ்சு, நீ போய் விளையாடு என ஒரு யங்ஸ்டர் மீது நம்பிக்கை வைத்தது ராஜஸ்தான் ராயல்ஸ் மட்டும் தான்” என நெகிழ்ச்சியுடன் பேசினார். சிஎஸ்கே உடனான வர்த்தகம் குறித்து வெளிப்படையாக எந்த பதிலையும் பேசவில்லை.
இந்நிலையில் தான் ஒரு தீவிர ரசிகர் என்று கூறிய சஞ்சு சாம்சன், நான் எப்போதெல்லாம் சோர்வாக உணர்கிறேனோ, அப்போதெல்லாம் ரஜினியின் பாடல்களை தான் கேட்பேன். ரஜினியின் பேட்ட படத்தின் பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறினார்.
அப்போது ரஜினி ரசிகராக நீங்கள் எடுத்த மிகப்பெரிய ரிஸ்க் என்ன என்ற கேள்விக்கு பதிலளித்த சஞ்சு, ”ஒருமுறை அயர்லாந்துக்கு இந்திய அணி சுற்றுப்பயணம் செய்திருந்தது. டப்ளினில் நாளை மறுநாள் போட்டி நடக்கவிருந்தது, நான் போட்டிக்காக தயாராக வேண்டும். ஆனால் நாளை ரஜினி சாரின் படம் ரிலீஸாகவிருந்தது. நான் தனியாக வெளியே சென்று, தியேட்டரை தேடிக்கண்டுபிடித்து, டிக்கெட் எடுத்து, தனியாக ரஜினி படம் பார்த்துவிட்டு வந்தேன். இவ்வளவு ரிஸ்க் எடுத்துள்ளேன் அப்போ நானும் ரஜினியின் தீவிர ரசிகர் தான்” என்று கூறினார்.
கூலி திரைப்படத்தை வீட்டில் பார்ப்பாயா? அல்லது தியேட்டரிலா? என்ற கேள்வியை அஸ்வின் எழுப்ப, எப்போதும் ரஜினி படத்தை முதல்நாள் முதல் காட்சியை தான் பார்ப்பேன் என்று கூறினார்.