காவிரி விவகாரத்தில் தமிழக முதல்வரின் அணுகுமுறை எப்படி இருந்திருக்க வேண்டும்? ஒரு விரிவான பார்வை!
காவிரி நதி என்பது தமிழகத்தின் நிலவியல் அடையாளம் மட்டுமல்ல; அது தமிழக விவசாயிகளின் மற்றும் ஒட்டுமொத்த மக்களின் வாழ்வாதாரம். காவிரி நதி நீர் தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் மட்டும் 30 லட்சம் ஏக்கர் நிலங்களுக்குப் பாசன வசதியை அளிப்பதுடன், 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு முதன்மைக் குடிநீர் ஆதாரமாகவும் திகழ்கிறது.
தமிழகத்துக்கான உரிமை
கர்நாடகத்தில் தலைக்காவிரியில் காவிரி நதி பிறந்தாலும், அது பாயும் மாநிலத்தைவிடக் கீழ்மடை பாசன மாநிலமான தமிழகத்துக்கே காவிரி நீரைப் பயன்படுத்த அதிக உரிமை இருக்கிறது. 100 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் காவிரி நீர்ப் பங்கீட்டுச் சிக்கல், வெறும் அரசியல் சார்ந்த விவாதமாக இல்லாமல், லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வுரிமை சார்ந்த பிரச்சினையாக உள்ளது. காவிரி நதிநீர் ஆணையம், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பாயம் மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகியவை கடந்த காலங்களில் வழங்கிய தீர்ப்புகளும் உத்தரவுகளும் கீழ்மடை மாநிலமான தமிழகத்துக்கு நியாயமான நீரை வழங்கவே அறிவுறுத்தியுள்ளன.
கர்நாடகத்தின் அகங்காரம்
காவிரியில் இருந்து தமிழகத்துக்கு உரிய நீரை வழங்க வேண்டும் என்றாலே, நஞ்சை உண்டது போல்தான் கர்நாடக அரசு நடக்கிறது. காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் நடுவர் தீர்ப்பாயம் ஆகியவற்றின் உத்தரவுகளைக் கடந்த காலங்களில் கர்நாடக அரசு பொருட்டாக மதித்ததே இல்லை. தமிழகத்துக்குத் தண்ணீர் திறக்க வேண்டும் என ஆணையம் உத்தரவிட்ட காலங்களில் எல்லாம், கர்நாடக அரசு “உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டுக்குச் செல்கிறோம்” என்று கூறி, அந்த உத்தரவுகளை அமல்படுத்துவதில் காலதாமதம் செய்தது. இறுதியில் உச்ச நீதிமன்றத்தின் கண்டிப்பான உத்தரவுக்குப் பிறகே தண்ணீர் திறக்கப்பட்டது. அதேபோன்ற போக்கில்தான் கர்நாடக அரசு இந்த ஆண்டும் செயல்பட்டது. தமிழகத்தில் தற்போது கடும் வறட்சி நிலவும் சூழலில், காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவில்கூட, 15 நாட்களுக்கு வினாடிக்கு 3,500 கனஅடி நீரைத் திறக்க வேண்டும் என்றுதான் உத்தரவிட்டுள்ளது.
ஆனால், காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவைச் செயல்படுத்தாமல் “உச்ச நீதிமன்றம் செல்வோம்” என்று கூறி கர்நாடக அரசு தண்ணீர் திறக்கவில்லை. மாறாக, தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து கர்நாடக அணைகள் நிரம்பத் தொடங்கியவுடன், உபரி நீரைத் தமிழக வழக்கம்போல் திருப்பிவிட்டு, கணக்குக் காட்டும் போக்கையே இப்போதும் பின்பற்றுகிறது.
தமிழகம் வடிகால் மாநிலமா?
கர்நாடகத்தைப் பொறுத்தவரை தமிழகத்தை ஒரு வடிகால் மாநிலமாகத்தான் பார்க்கிறதே தவிர, தமிழகத்துக்கும் சம உரிமை இருக்கிறது என்ற கோணத்தில் அணுகவில்லை. காவிரி மேலாண்மை ஆணையம், நடுவர் மன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளை மதித்திருந்தால், உரிய காலங்களில் நியாயமான நீர் தமிழகத்துக்குத் திறக்கப்பட்டிருக்கும். ஆனால், எப்போதெல்லாம் கர்நாடக அணைகள் பருவமழையால் நிரம்பி வழிகிறதோ, அப்போதெல்லாம் உபரி நீரைத் தமிழகக் கேள்விகளுக்கு அப்பாற்பட்டுத் திறந்துவிடுகிறது. இது கர்நாடக அரசு இன்னமும் “காவிரி தனக்கானது” என்ற மேலாதிக்கப் போக்குடன் செயல்படும் மனநிலையையே காட்டுகிறது.
எதிர்க்கட்சிகளின் விமர்சனம்
இப்படிப்பட்ட சூழலில், தமிழக முதல்வர் ஜோசப் விஜய் காவிரி விவகாரத்தில் கடைப்பிடிக்கும் அணுகுமுறையை எதிர்க்கட்சியான திமுக கடுமையாக விமர்சித்து வருகிறது. “அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டவில்லை” என்றும், “தமிழக அரசு காவிரி விவகாரத்தில் தூங்குகிறது” என்றும் சாடியுள்ளது. மேலும், கர்நாடக அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. காவிரி நதிநீர் விவகாரத்தில் ஒரு மாநில முதல்வரின் அணுகுமுறை என்பது எப்படி இருந்திருக்க வேண்டும்? சட்டப் போராட்டம், கூட்டாட்சி ராஜதந்திரம், அறிவியல் சார்ந்த புள்ளிவிவரங்கள் ஆகிய அனைத்தையும் கடந்து சில ராஜதந்திர அணுகுமுறைகள் உள்ளன. அவை குறித்துப் பார்க்கலாம்.
ராகுல் காந்தியுடன் சந்திப்பால் தீர்வு கிடைத்திருக்குமா?
தமிழகத்தில் தேர்தலுக்குப் பின் திமுக கூட்டணியிலிருந்து விலகி, தவெகவுடன் கூட்டணி வைத்து, ஆட்சியிலும் காங்கிரஸ் கட்சி பங்கெடுத்துள்ளது. தமிழகத்தில் தவெக அரசுக்கு இருக்கும் அதே பொறுப்புணர்வு, தார்மீகக் கடமை மற்றும் உரிமைக்காகப் போராடும் குணம், ஆளும் அரசில் பங்கெடுத்துள்ள காங்கிரஸுக்கும் சமஅளவு இருக்கிறது. கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடக்கிறது. கர்நாடக காங்கிரஸ் அரசிடம் ராகுல் காந்தி மூலம் முதல்வர் விஜய் மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் பேசி, காவிரியில் தண்ணீர் திறக்கச் சுமுகமாகத் தீர்வு கண்டிருக்கலாம் என்ற கூற்று வைக்கப்பட்டாலும், அது எந்த அளவுக்குச் சாத்தியம் என்பது கேள்விக்குறியே? ஏனென்றால், இதேபோன்ற சூழல் இப்போது மட்டுமல்லாமல் கடந்த காலங்களில் நடந்தபோதும்கூட, காங்கிரஸ் கட்சி எந்தவிதமான உதவியையும் தமிழக மக்களுக்காகச் செய்ததில்லை என்பதுதான் நிதர்சனம்.
யார் காரணம்?
2004 முதல் 2014 வரை மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆண்டபோது, தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருந்த காலத்திலும் இதே காவிரிப் பிரச்னை இருந்தது. அப்போது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி அல்லது அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் தலையிட்டோ, பேசியோ தீர்வு காணவில்லை. காவிரி விவகாரம் இந்த அளவுக்குப் பூதாகரமாக மாறியிருப்பதற்கு காங்கிரஸ் கட்சியும் ஒரு முக்கியக் காரணம். 1972-ஆம் ஆண்டு தமிழகம்-கர்நாடகம் இடையேயான ஒப்பந்தம் முடிந்ததும் அதை நீட்டித்திருக்க வேண்டும்; காலாவதியாக அனுமதித்திருக்கக் கூடாது. மாறாக, அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி, அப்போதைய முதலமைச்சர் மு.கருணாநிதியுடன் நடத்திய பேச்சால் ஒப்பந்தம் நீட்டிக்கப்படவில்லை. காவிரி நடுவர் மன்றம் அமைக்கக் கோரி, அப்போது கோ.சி.மணி, முரசொலி மாறன், விவசாய சங்கத் தலைவர் ரெங்கநாதன், ஜி.கே.மூப்பனார் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவும் திரும்பப் பெறப்பட்டது. மாறாக "உண்மை கண்டறியும் குழுவை" இந்திரா காந்தி அமைத்து, தமிழகத்தின் கோரிக்கையைப் பிசுபிசுக்க வைத்தார்.
காங்கிரஸின் கணக்கு வேறு
காங்கிரஸ் ஒரு தேசியக் கட்சி. தமிழகத்தில் தேசியக் கட்சிகள் ஆளும் காலம் 1967-க்குப் பின் இல்லை. ஆதலால், காங்கிரஸ் கட்சிக்குத் தமிழகத்தைவிட கர்நாடகாவில் வலுவான அரசியல் களமும் ஆட்சியும் உள்ளது. காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் கோரிக்கையை முழுமையாக ஆதரித்தால், அது கர்நாடகாவில் ஆட்சியில் இருக்கும் தனக்கு அரசியல் ரீதியாகப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதால், காங்கிரஸ் தலைமை வரலாற்று ரீதியாகவே தமிழகத்துக்கு ஆதரவு தெரிவிக்காமல் மௌனம் காக்கிறது. இந்த காவிரி விவகாரம் மட்டுமல்லாமல், முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையிலும் காங்கிரஸ் தலைமை இதே நிலைப்பாட்டைத்தான் எடுத்துள்ளது. கர்நாடகாவில் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் (காங்கிரஸ், பாஜக அல்லது ஜேடிஎஸ்), மாநில விவசாயிகள் மற்றும் குடிநீர்த் தேவைகளுக்கு முன்னுரிமை அளிப்பதே அங்குள்ள தலைவர்களின் அரசியல் பிழைப்புக்கு அவசியம். காங்கிரஸ் மேலிடம் அறிவுறுத்தினாலும், கர்நாடக மாநில அரசு தனது உள்ளூர் அரசியல் அழுத்தங்களை மீறிச் செயல்படுவது கடினம். தமிழக முதல்வர் ஜோசப் விஜய், ராகுல் காந்தியிடம் பேசி கர்நாடக அரசைத் தண்ணீர் திறக்கக் கூறுவது தற்காலிக நிவாரணம் தரலாமே தவிர, நிரந்தரத் தீர்வைத் தராது. ஏனென்றால், இது வெறும் அரசியல் ஒப்பந்தம் அல்ல; இரு மாநில நதிநீர் உரிமை மற்றும் அரசியல் பிழைப்பு சார்ந்த சிக்கலாகும். காவிரி நதிநீர்ப் பங்கீடு என்பது உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளுக்கு உட்பட்டது. இதில் அரசியல் கட்சித் தலைவர்கள் எடுக்கும் முடிவுகள் சட்டப்பூர்வ உத்தரவுகளுக்கு மாற்றாக அமையாது.
பருவமழை பொய்த்து கர்நாடக அணைகளில் நீர் இருப்பு குறையும்போது, இரு மாநிலங்களும் நீரைப் பகிர்ந்துகொள்ளத் தெளிவான, அறிவியல்ரீதியான தீர்வு அமல்படுத்தப்படாதவரை, எந்தக் கட்சித் தலைவர்கள் சந்திப்பிலும் முழுமையான முடிவை எட்ட முடியாது. ராகுல் காந்தியுடன் தமிழக முதல்வர் விஜய் பேசினால், தமிழகம் சார்பில் அரசியல் அழுத்தத்தைக் கொடுக்கலாம்; அவ்வளவுதான். ஆனால், கடந்த காலங்களில் இருந்ததுபோல் காங்கிரஸ் மேலிடம் இரு மாநிலங்களுக்கும் இடையே சமநிலை என்ற போர்வையில் மௌனத்தையே பதிலாக அளிக்கும்.
கர்நாடக முதல்வரைச் சந்தித்திருந்தால் என்ன நடந்திருக்கும்?
காவிரி விவகாரம் தொடர்பாகத் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான குழுவினர், கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமாரைச் சந்தித்துப் பேச முடிவு செய்தனர். அதற்கான ஏற்பாடுகளைச் செய்துவந்த கர்நாடக அரசு, திடீரெனத் தமிழக முதல்வர் வர வேண்டாம் என்று கேட்டுக்கொண்டது. உண்மையில், கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமாரைத் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் நேரில் சந்தித்துப் பேசியிருந்தாலும், இந்தப் பிரச்னையில் பெரிதாக எந்தத் தீர்வும் எட்டப்பட்டிருக்காது. இரு மாநிலங்களுக்கு இடையிலான உறவில் இணக்கமான சூழலை உருவாக்க உதவுமே தவிர, காவிரி விவகாரத்தில் முழுமையான அல்லது உடனடித் தீர்வைத் தந்திருக்காது என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள். காவிரி நீர்ப் பங்கீடு என்பது இரு மாநில முதல்வர்கள் பேசித் தீர்க்கும் சாதாரண எல்லைப் பிரச்னை அல்ல. அது உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழு ஆகியவற்றின் அதிகாரப்பூர்வ வரம்பிற்கு உட்பட்டது.
அரசியல் பிழைப்புக்கு காவிரி தேவை!
பருவமழை பற்றாக்குறை நிலவிய கடந்த காலங்களிலும் சரி, இப்போதும் சரி, கர்நாடகாவில் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் விவசாயிகளின் எதிர்ப்பு மற்றும் உள்ளூர் அரசியல் அழுத்தங்களை மீறித் தமிழகத்திற்குத் தண்ணீர் திறக்க ஆட்சியாளர்கள் ஒப்புக்கொள்வது கடினம்; அதைத் தள்ளிப்போடவே முயற்சிப்பார்கள். உச்ச நீதிமன்றத்தின் கடுமையான வார்த்தைகளும் உத்தரவுகளும்தான் கடந்த காலங்களில் தமிழகத்துக்குத் தண்ணீரைப் பெற்றுத் தந்துள்ளன என்பது நினைவுகூரத்தக்கது. கூட்டாட்சித் தத்துவத்தில் இரு மாநிலத் தலைவர்கள் நேரில் சந்தித்துப் பேசுவது ராஜதந்திர உறவுகளின் முன்னெடுப்பாகப் பார்க்கப்படலாம். ஆனால், காவிரி மேலாண்மை ஆணையத்தை மீறித் தனிப்பட்ட முறையில் பேசுவது, தமிழகத்தின் சட்டப்பூர்வ உரிமைகளைக் குறைத்து மதிப்பிடும் என அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். கர்நாடக அரசு மேகதாது அணைக் கட்டுவதையே முதன்மை இலக்காக வைத்துப் பேச்சுக்கு அழைத்தபோது அதில் பங்கேற்பது, மேகதாது திட்டத்திற்கான பேச்சுவார்த்தைக்குத் தமிழகம் சம்மதிப்பதுபோல் ஆகிவிடும் என்பதால் சந்திப்பு தவிர்க்கப்பட்டது. அதே நிலைப்பாட்டைத்தான் கர்நாடகத்தில் உள்ள காங்கிரஸ் அரசும் இப்போது எடுக்கிறது.
எம்.ஜி.ஆர் பாணி எடுபடுமா?
தமிழகத்தில் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த காலத்தில், கர்நாடக முதல்வர்கள் ஹெக்டே, குண்டுராவ் ஆகியோருடன் நேரடியாக நடத்திய பேச்சுவார்த்தைகள் தமிழகத்துக்குத் தற்காலிக நிவாரணத்தை அளித்தன. ஆனால், அன்றைய சூழலுக்கும் இன்றைய சூழலுக்கும் இடையே பெரிய வேறுபாடுகள் உள்ளன. அன்று காவிரி நடுவர் மன்றமோ, மேலாண்மை ஆணையமோ இல்லை. இரு அரசுகளுக்கு இடையே நேரடிப் பேச்சு மட்டுமே ஒரே வழியாக இருந்தது. இப்போது, உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு மற்றும் சட்டப்பூர்வ ஆணையம் அமலில் இருக்கும்போது, அதைத் தாண்டி நடத்தப்படும் அரசியல் பேச்சுவார்த்தைகள் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் வலிமையைக் குறைத்துவிடுமோ என்ற கேள்வி எழுகிறது. மேகதாது அணைப் பிரச்னை முதன்மையாக உள்ளதால், இரு முதல்வர்களின் சந்திப்பு என்பது சம்பிரதாயத்துக்காக மட்டுமே இருக்கும். சட்டப் போராட்டத்தின் வழியே நீரைப் பெறுவதே தமிழகத்தின் நீண்டகால உரிமைகளைப் பாதுகாக்கும். ராஜதந்திர ரீதியான உறவுகளை வளர்க்க வேண்டுமானால், இந்தச் சந்திப்பு கதவுகளைத் திறந்து வைக்க உதவியிருக்கும்.
அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியிருக்க வேண்டுமா?
காவிரி விவகாரம், மேகதாது பிரச்னை ஆகியவற்றில் ஆளும் தவெக தலைமையிலான அரசு, அரசியல் கருத்து வேறுபாடுகளை மறந்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, கருத்துகளைக் கேட்டு, ஒருமித்த தீர்மானம் நிறைவேற்றி முடிவெடுத்திருக்க வேண்டும். இதைத்தான் எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன; ஏன் கூட்டவில்லை என்ற கேள்வியையும் எழுப்புகின்றன. தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிடக் கோரி காவிரி ஆணையம் உத்தரவிட்டதும், கர்நாடக அரசியலில் அனைத்துக் கட்சிகளும் வேறுபாட்டை மறந்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்றுத் தங்களின் ஒருமித்த நிலைப்பாட்டை வலியுறுத்தியுள்ளன.
ஆனால், தமிழகத்தில் அது நடக்கவில்லை என்பது எதை வெளிப்படுத்துகிறது? ஒற்றுமையின்மையையா, காவிரி விவகாரத்தில் ஒருமித்த கருத்து அரசியல் கட்சிகளிடையே இல்லையா என்ற கேள்வி எழுகிறது. ஒருவேளை அனைத்துக் கட்சிக் கூட்டத்தைத் தமிழக அரசு கூட்டியிருந்தால், தமிழக அரசின் நிலைப்பாட்டிற்கு 8 கோடி மக்களின் பிரதிநிதித்துவப் பலத்தையும், சட்டப் போராட்டத்திற்கு கூடுதல் ஜனநாயக அழுத்தத்தையும் காவிரி ஆணையத்துக்கு அளித்திருக்கும். இதில் எதிர்க்கட்சிகளை மட்டுமன்றி, தமிழக விவசாயிகள் சங்கத்தின் முக்கியப் பிரதிநிதிகளையும் அழைத்து கருத்துகளைக் கேட்டிருக்க வேண்டும். அதை விடுத்து, கர்நாடக முதல்வரைச் சந்திக்கத் தமிழக முதல்வர் விஜய் எடுத்த முயற்சியும், பின்னர் சூழல் காரணமாக அச்சந்திப்பு தள்ளிவைக்கப்பட்டதும் தமிழக அரசுக்கு அரசியல் ரீதியான சங்கடத்தை உருவாக்கியது. காவிரி மற்றும் மேகதாது விவகாரங்கள் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் உணர்வு சார்ந்தவை. இதில் தனிப்பட்ட ராஜதந்திர முயற்சிகளைவிட நிறுவன ரீதியான (காவிரி ஆணையம், உச்ச நீதிமன்றம்) அணுகுமுறை மற்றும் மாநில அளவிலான அனைத்துக்கட்சி ஒருமைப்பாடே பலன் தரும்; சட்டப்பூர்வமாக நீரைப் பெறுவதே தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்டும்.

