\
What reasons of Tamil Nadu Opposes Mekedatu Dam?
model imagex page

மேகேதாட்டு அணையை தமிழகம் ஏன் எதிர்க்கிறது? காரணம் என்ன?

மேகேதாட்டுவில் அணை கட்டும் திட்டம் ஒரு நீர்மின் திட்டமாக மட்டுமே பார்க்கப்பட்டது, குடிநீருக்காக அல்ல. மேகேதாட்டு அணையை முற்றிலுமாகச் செயல்படுத்த முயன்றது மத்திய அரசுதான்.
Published on

தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையே காவிரி நதிநீர்ப் பங்கீடு பிரச்னையும், காவிரியின் குறுக்கே கட்ட திட்டமிட்டுள்ள மேகேதாட்டு அணை விவகாரமும் இரு மாநிலங்களுக்கு இடையே தீராத பிரச்னையாக இருந்து வருகிறது. மேகேதாட்டு அணை என்பது பெங்களூரு அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு குடிநீர் வழங்க கட்டப்படுகிறது என கர்நாடக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், மேகேதாட்டு அணை கட்டப்பாட்டால், கீழ்ப்பாசன மாநிலமான தமிழகம் கடுமையாகப் பாதிக்கப்படும், 30 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் அழியும், 10 மாவட்டங்களில் விவசாயம் அற்றுப் போகும், 20 மாவட்டங்களின் குடிநீர் தேவை கேள்விக்குறியாகும், வருங்காலத்தில் காவிரி பாய்ந்த சுவடுதான் இருக்கும் என்று தமிழக அரசு எதிர்க்கிறது.

மேகேதாட்டு அணை வரலாறு என்ன?

மேகேதாட்டு அணை விவகாரம் கடந்த 1948ஆம் ஆண்டிலேயே எழுந்து, இரு மாநிலங்களுக்கும் இடையே அப்போதிருந்து பேசப்பட்டு வருகிறது. 1956ஆம் ஆண்டு மாநிலங்கள் மறுசீரமைப்புக்குப்பின், மேகேதாட்டு அணை விவகாரம் 1960களின் தொடக்கத்தில் தீவிரமாக இரு மாநில அரசுகளால் பேசப்பட்டது. கர்நாடகம் சார்பில் மேகேதாட்டு அணைபோல, தமிழகம் சார்பில் ஒனேக்கல் திட்டமும் முன்மொழியப்பட்டது. மேகேதாட்டுவில் அணை கட்டும் திட்டம் ஒரு நீர்மின் திட்டமாக மட்டுமே பார்க்கப்பட்டது, குடிநீருக்காக அல்ல. மேகேதாட்டு அணையை முற்றிலுமாகச் செயல்படுத்த முயன்றது மத்திய அரசுதான். தமிழகம், கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் தலா இரு மின் திட்டங்கள் வீதம் மொத்தம் 4 திட்டங்களைக் கொண்ட ஒரு தொகுப்பாகச் செயல்படுத்த தேசிய நீர்மின் கழகம் முடிவு செய்திருந்தது. மேகேதாட்டுவில் (400 மெகாவாட்) மின் நிலையம், கர்நாடகாவின் சிவசமுத்திரத்தில் 345 மெகாவாட், தமிழகத்தில் ராசிமணல் (360 மெகாவாட்) மற்றும் ஒகேனக்கல் (120 மெகாவாட்) ஆகிய இடங்களில் மின் நிலையங்கள் அமைக்க திட்டங்கள் இருந்தன.

காமராஜர்
காமராஜர்pt web

தமிழகத்தின் முதல்வராக இருந்த காமராஜர் ஆட்சியில் ஒகேனக்கல் அருகே, இரு அணைகள், இரு மின்நிலையங்களை ரூ.80 கோடியில், 900 மெகாவாட் திறனில் அமைக்க விரிவான ஆய்வுகள் நடத்தப்பட்டன. 1963ஆம் ஆண்டு பிப்ரவரியி்ல், தமிழக முதல்வராக இருந்த காமராஜர் மற்றும் கர்நாடக முதல்வர் எஸ்.நிஜலிங்கப்பா ஆகியோர், ஒகேனக்கல் நீர்மின் திட்டம் அமைய உள்ள இடத்தைப் பார்வையிட முடிவு செய்திருந்தனர். ஆனால், கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டது. காவிரி நதிநீரைப் பகிர்ந்துகொள்வது தொடர்பாக இரு மாநிலங்களுக்கும் இடையே கசப்பான மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, மேகேதாட்டு விவகாரம் ஏறக்குறைய மறக்கப்பட்டது. ஆனால், 1980களில் கர்நாடக அரசு அதே வேறுரூபம் எடுத்துவந்தது.

What reasons of Tamil Nadu Opposes Mekedatu Dam?
“காவிரி-மேகேதாட்டு பகுதியில் அணை கட்டும் கர்நாடகா”- உடனடியாக தடுக்க தினகரன் வலியுறுத்தல்

1980களில் விஸ்வரூபம்

1980ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கர்நாடக முதல்வராக இருந்த குண்டுராவ், நிருபர்களிடம் பேசுகையில், “மேகேதாட்டு அணையை கர்நாடக அரசே கட்டுவது குறித்து ஆய்வு செய்ய 9 பேர் கொண்ட குழு அமைக்கப்படும், அங்கு 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளது” என அறிவித்தார்.

உண்மையில், மேகேதாட்டு அணையை மத்திய அரசுதான் கட்டத் திட்டமிட்டு, கர்நாடக அரசிடம் பேச்சு நடத்தி வந்தது. நீர்மின் திட்டங்களை இரு மாநில அரசுகளும் சேர்ந்து செயல்படுத்த மத்திய அரசு ஏறக்குறைய 1990களில் 10 ஆண்டுகளாக முயற்சித்தது. ஆனால், கர்நாடக அரசு மேகேதாட்டு அணையை சொந்தமாகவே கட்டுவோம் எனத் தீர்மானமாக இருந்தது. காவிரி நதிநீர்ப் பங்கீடு தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தின் பரிந்துரையின் அடிப்படையில், இரு மாநிலங்களும் 1996ஆகஸ்ட் முதல் 1997 ஜனவரி வரை 5 சுற்றுப் பேச்சுகளை நடத்தியபோது மேகேதாட்டு அணைத் திட்டம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

கருணாநிதி
கருணாநிதி

மேகேதாட்டு திட்டத்தை மத்திய அரசு சொந்தமாக எடுத்து முடிக்க ஆர்வம் காட்டியது. இதற்கான திட்டச் செலவாக அப்போது, ரூ.2,000 கோடியாகவும், இதில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் ஏறக்குறைய 950 மெகாவாட்டை காவிரிப் படுகையின் 4 மாநிலங்களுக்கும் பகிர்ந்தளிக்கிறோம் என்றும் பேசியதாக ‘தி இந்து’ ஆங்கில நாளேடு அப்போது செய்தி வெளியிட்டது. ஆனால், கர்நாடக அரசு பிடிகொடுக்கவில்லை.

இறுதிக்கட்டப் பேச்சுக்குப்பின், அப்போதைய தமிழக முதல்வர் மு.கருணாநிதி செய்தியாளர்களிடம் பேசுகையில், “இரு மாநிலங்களுக்கு இடையே காவிரி நீர் பகிர்வு தொடர்பான ஒப்பந்தத்தை எட்டுவதற்கு மேகேதாட்டு திட்டமே தடையாக இருந்தது” என்று கூறினார். ஆனால், கர்நாடக முதல்வர் படேல், “பேச்சுவார்த்தைகள் தோல்வியடைய காவிரி நீரில் அதிக சதவீதப் பங்கைத் தமிழகம் கோரியது” எனத் தெரிவித்தார்.

What reasons of Tamil Nadu Opposes Mekedatu Dam?
மேகதாது அணை விவகாரம் | ’முதல்வராக விஜய் இருக்கும்வரை நடக்காது..’ செங்கோட்டையன் சொன்னது என்ன?

மத்திய அரசின் முயற்சி தோல்வி

இதற்கிடையே 1998ஆம் ஆண்டு 2000ஆம் ஆண்டு பாஜக ஆட்சியில், மத்திய மின்துறை அமைச்சராக பி.ஆர்.குமாரமங்கலம் இருந்தார். அப்போது அவர், 'நேஷனல் ஹைட்ரோ பவர் கார்ப்பரேஷன்' மூலம் மேகேதாட்டு மற்றும் ஒகேனக்கல் ஆகிய திட்டங்களை ஒரு பெரிய நீர்மின் திட்டமாகச் செயல்படுத்த இரு மாநில அரசுகளிடமும் பேச்சு நடத்தினார். இந்த மின்திட்டத்தால் 1,150 மெகாவாட் மின் தேவையை நிறைவுசெய்ய முடியும். இதற்கு ’காவிரி மின்திட்டம்’என்று பெயரிட்டு, கர்நாடகத்தின் சிவசமுத்திரம் (270 மெகாவாட்) மற்றும் மேகேதாட்டு (400 மெகாவாட்) ஆகிய இடங்களிலும், தமிழகத்தில் ராசிமணல் (360 மெகாவாட்) மற்றும் ஒகேனக்கல் (120 மெகாவாட்) ஆகிய இடங்களிலும் தலா ஒரு மின் நிலையத்தை அமைக்கத் திட்டமிட்டிருந்தார். ஆனால், கடைசிவரை இரு மாநிலங்களும் ஒத்துழைக்கவில்லை. அடுத்துவந்த காங்கிரஸ் ஆட்சிக்காலம் வரை இந்தப் பேச்சு தொடர்ந்தது. 2008ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், சென்னை தலைமைச் செயலகத்தில் அப்போதைய முதல்வர் மு.கருணாநிதியுடன், மத்திய மின்துறை இணையமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், இதுதொடர்பாக பேசினார். இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தினால் குறைந்தவிலையில் மின்சாரம் கிடைக்கும் என மத்திய அமைச்சர் ரமேஷ், தமிழக அரசிடம் ஆலோசனை தெரிவித்தார். ஆனால், தமிழக அரசுடனான பேச்சு தோல்வியில் முடிந்தது. கர்நாடக அரசும் இந்தத் திட்டத்துக்கு ஒத்துழைக்கவில்லை.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்Pt web

கடந்த 10 ஆண்டுகளில், 2018-ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் அளித்த இறுதித் தீர்ப்பைச் செயல்படுத்தும் விதத்தில், பெங்களூருவின் குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்யவே மேகேதாட்டு திட்டத்தைச் செயல்படுத்துகிறோம் என்று கர்நாடக அரசு தனது நோக்கத்தை வேறுவிதமாக அர்த்தம் கற்பிக்கிறது.

What reasons of Tamil Nadu Opposes Mekedatu Dam?
மேகதாது | பேச்சுவார்த்தை எனும் சதிவலையில் சிக்காதீர் - முதல்வர் விஜய்க்கு ஸ்டாலின் வேண்டுகோள்

கர்நாடக அரசின் திட்டம் என்ன?

ராம் நகர் மாவட்ட எல்லையில் அர்க்காவதி ஆறு காவிரியுடன் சேருமிடமாகிய ‘சங்கம’ என்ற இடத்திலிருந்து 3.5 கி.மீ தொலைவில் உள்ள மேகேதாட்டு என்ற இடத்தில் ரூ.9 ஆயிரம் கோடியில் கட்ட அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. 400 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்ய திட்டம் வைத்திருந்தாலும், பெங்களூரு நகருக்கு குடிநீர் ஆதாரமாக வைப்பதே பிரதானமாக இருப்பதாக கர்நாடக அரசு தெரிவிக்கிறது. இந்த மேகேதாட்டு அணையில் 67.16 டிஎம்சி நீரைத் தேக்கி வைக்கவும் கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. அது மட்டுமல்லாமல், உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பின்படி, தமிழகத்துக்கு மாதந்தோறும் தேவையான அளவு நீரை விடுவிப்பதை மேகேதாட்டு அணை கட்டினால் முறைப்படுத்த முடியும் என 2019ஆம் ஆண்டு, ஜூனில் கர்நாடக அரசு அணைக்கான சாத்தியக்கூறு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சுற்றுச்சூழல் பிரச்னைகள் என்ன?

மேகேதாட்டு அணை, காவிரி வனவிலங்கு சரணாலயம், அர்காவதி, காவிரி நதி மற்றும் தமிழக எல்லைக்குள்ளும் அமைகிறது. எனவே, இந்த அணை கட்டும் முன், மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சகத்திடமிருந்து அனுமதி பெறுவது அவசியம். மேகேதாட்டு அணை கட்டினால் மொத்தம் 12 ஆயிரம் ஏக்கர் நிலம் நீரில் மூழ்கும். சங்கமா, கொங்கேதொட்டி, மாதவலா, முத்தத்தி மற்றும் பொம்மசந்திரா ஆகிய கிராமங்கள் நீரில் மூழ்கும் பகுதிகளுக்குள் வருகின்றன. இதில் 7,862 ஏக்கர் நிலம் காவிரி வனம் மற்றும் வனவிலங்கு காப்பகத்திலும், 4,619 ஏக்கர் நிலம் காப்புக்காடுகளிலும் வருகிறது. யானைகளின் முக்கிய வாழிடமாக மேற்குத் தொடர்ச்சி மலை, காவிரி செல்லும்பாதை இருப்பதால், இங்கு அணை கட்டும்போது எதிர்காலத்தில் மனித-விலங்கு வாழிட மோதல் உருவாகும்.

மிகப்பெரிய அணில், ஹனி பேட்ஜர் ஆகிய அரிய விலங்குகள் வகை தற்போது மேற்குத் தொடர்ச்சி மலையில் காவிரி வனவிலங்கு சரணாலயத்தில் அதிகமாக வாழ்கிறது. அரிய மீன் வகைகள், விலங்குகள் அதிகமாக வாழ்கின்றன. மேலும், பல அரிய வகை தாவரங்களும், நுண்உயிரிகளும் இங்கு வாழ்கின்றன என்பதால் இங்கு நிலவும் சூழியல் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இங்கு அணை கட்டுவதற்காக இப்பகுதி சிதைக்கப்படும்போது, விலங்குகள் தங்கள் உணவு, வாழிடம் பாதிக்கப்பட்டு இடம்விட்டு இடம்பெயரும் நிலை ஏறப்டும்.

பெங்களூருவிலிருந்து சுத்திகரிக்கப்படாத கழிவுநீரும் தொழிற்சாலைக் கழிவுகளும் விருஷபாவதி மற்றும் அர்காவதி ஆறுகள் வழியாக அணைக்குள் வந்து சேரும். இதனால், இயற்கையாக உருவாகும் மூல நீரின் தரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படும் இயற்கையான ஆற்று நீரோட்டங்களை மாற்றுவதோடு, கீழ்நிலை பாசன மாநிலமான தமிழகத்தின் டெல்டா பகுதிகளுக்கான பருவகால நீர் இருப்பையும் குறைக்கிறது.

What reasons of Tamil Nadu Opposes Mekedatu Dam?
மேகதாது அணைக்கு எதிராக சட்டமன்றத்தில் இன்று தனித்தீர்மானம்.!

தமிழக அரசு ஏன் எதிர்க்கிறது?

தமிழக வேளாண்மையின் ஆணிவேராக இருப்பது காவிரி ஆறுதான். காவிரி நீர்ப் பகிர்வு பிரச்னை குறித்த வரலாற்றைப் பார்த்தால், தமிழகத்திற்குப் பல கசப்பான அனுபவங்களைத்தான் இதுவரை அளித்துள்ளது. கர்நாடகத்தின் மீது கடும் நம்பிக்கையற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது. காவிரி பாசனம் மாநில உணவுத் தேவையில் 60 சதவீதத்தை நிறைவு செய்த நிலையில், காவிரி நீர் மறுக்கப்பட்டபின், உணவுத் தேவையில் 34 சதவீதத்தையே நிறைவு செய்கிறது. 2007ஆம் ஆண்டில் தீர்ப்பாயம் வழங்கிய இறுதித் தீர்ப்பிக்குப்பின் தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட நீரின் அளவை கர்நாடக அரசு எந்தவிதமான பிரச்னையும் இன்றி வழங்கியது அரிதானதுதான். மழையின் அளவு அபரிமிதமாக இருக்கும் காலத்தில், அணைகள் நிரம்பியதால், அந்த நீர் உபரியாக தமிழகத்துக்கு வருகிறது. அதைவிடுத்து மற்ற காலங்களில் மாதந்தோறும் காவிரியில் நீர் திறந்துவிடுவதற்கு தமிழக அரசு போராடித்தான் பெற வேண்டிய நிலை இருக்கிறது. தென் மேற்குப் பருவமழைக் காலத்தில் தமிழகம் மழைமறைவு பகுதியில் இருப்பதால், மற்ற மாநிலங்களைவிடக் குறைவான மழையே தமிழகத்துக்கு கிடைக்கிறது. அதனால்தான், காவிரி நதிநீர்ப் பங்கீட்டுத் தீர்ப்பாயமும் உச்ச நீதிமன்றமும், தமிழகத்திற்கான ஆண்டு ஒதுக்கீடு அளவில் மூன்றில் இரண்டு பங்கை நான்கு மாதங்களிலேயே தமிழகம் பெறுவதை உறுதி செய்துள்ளன. ஆனாலும், கர்நாடக அரசு தமிழகத்துக்கு உரிய ஒதுக்கீடு நீரைத் தர மறுக்கிறது.

தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு அரசுx page

காவிரியின் கீழ்நிலை பாசன மாநிலமாக தமிழகம் இருப்பதால், கர்நாடக அரசு மேகேதாட்டுவில் அணை கட்டும்போது, தமிழகத்தின் வேளாண்மைக்கான பாசன வசதி முற்றிலும் முடங்கும். தமிழகத்தின் நெற்களஞ்சியம் என அறியப்படும் டெல்டா மாவட்டங்களில் வேளாண் சாகுபடிக்குத் தேவையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்படக்கூடும். குறைந்தபட்சம் 8 மாவட்ட விவசாயிகளுக்குக் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். பெங்களூருவின் குடிநீர் தேவைக்காகத்தான் 2018இல் உச்ச நீதிமன்றம் 14 டிஎம்சி கூடுதலாக கர்நாடகத்துக்கு ஒதுக்கியது. இப்போது மேகேதாட்டு அணையை 67 டிஎம்சி கொண்டதாக எழுப்புவது என்பது உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மீறுவதாகும் என்று தமிழக அரசு எதிர்க்கிறது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஒப்புதலும், தமிழகத்தின் ஒப்புதலும் இல்லாமல் மேகேதாட்டு அணை கட்ட முடியாது என்று தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் மேகேதாட்டு அணை கட்ட இதுவரை அனுமதி தரவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

What reasons of Tamil Nadu Opposes Mekedatu Dam?
மேகதாது அணை | "தமிழ்நாடு கட்சிகள் அரசியல் செய்வார்கள்" - கர்நாடக முதல்வர் பரபரப்பு புகார்!

மேகேதாட்டு அணை கட்டப்பட்டால், கிருஷ்ண ராஜசாகர் அணைக்குக் கீழ் உள்ள வடிநிலப் பகுதி, கபினி அணைக்குக் கீழ் உள்ள பகுதி, சிம்சா ஆர்க்காவதி சுவர்ணவதி வடிநில பகுதி ஆகியவற்றிலிருந்து தமிழகத்துக்கு வரக்கூடிய நீர் முற்றிலுமாக முடக்கப்படும். தமிழகத்தின் 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் குடிநீர் பெரிய சிக்கலுக்கு ஆளாகும், 10 மாவட்டங்களில் நீர்ப்பாசனமும் கேள்விக்குறியாகும், காவிரி நீரைத் தர கர்நாடகம் தொடர்ந்து மறுப்பதால், பாசனப் பரப்பும் குறைந்து வருகிறது. 1970ஆம் ஆண்டில் தமிழகம், புதுச்சேரியில் பாசனப் பரப்பு 28.21 இலட்சம் ஏக்கர், இது 24.2 1 இலட்சமாகக் குறைந்தது. 566 டிஎம்சி நீரை தமிழகம் பயன்படுத்திய நிலையில், அது 419 டிஎம்சியாகக் குறைக்கப்பட்டது. தமிழகத்தின் குறுவைச் சாகுபடி 4 லட்சம் ஏக்கராக இருந்தது. இது 1.8 லட்சம் ஏக்கராகக் குறைந்துபோனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கர்நாடகத்துக்குப் பின்னடைவு

மேகேதாட்டு அணை கட்டுவது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கையை சமீபத்தில் மத்திய நீர்வள ஆணையத்திடம் கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ளது. அதில் கூறப்பட்ட தகவல்கள் காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்புக்கும், 2018இல் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கும் முரணாக இருந்ததால், அதைத் திருத்தி வழங்குமாறு உத்தரவிட்டது. கடந்த 2018-ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட திட்ட அறிக்கையில், குடிநீர் தேவைக்காக அணை கட்டுவதாக கர்நாடகம் தெரிவித்தது. அதன்பிறகு தாக்கல் செய்யப்பட்ட விரிவான திட்ட அறிக்கையில் சிவன் சமுத்திரம் நீர்மின் திட்டத்தை மேகேதாட்டு அணை திட்டத்துடன் இணைக்கப் போவதாகத் தெரிவித்தது. இந்தக் கூடுதலான நீர்ப் பயன்பாடு உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது. அதேபோல, பெங்களூரு மாநகரின் தற்போதைய குடிநீர் தேவை 16.1 டிஎம்சி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தகவல்கள் பழைய புள்ளி விவரங்களில் இருந்து முரணாக இருந்ததால் திட்ட அறிக்கையை ஏற்காமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது கர்நாடகத்துக்குப் பின்னடைவை அளித்துள்ளது.

What reasons of Tamil Nadu Opposes Mekedatu Dam?
மேகதாது விவகாரம் | வேடிக்கை பார்க்கும் விஜய் அரசு.. விமர்சித்த இபிஎஸ்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com