காவிரி நீர்: கர்நாடகாவில் போராட்டம் தீவிரம்.. ஜனநாயகன் திரைப்படத்தின் காட்சி ரத்து!
கர்நாடகாவின் சாமராஜ்நகரில் காவிரி நீர் விவகாரம் காரணமாக கன்னட அமைப்புகள், விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், தமிழக முதல்வர் விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்பட காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. பசவேஸ்வரா திரையரங்கை முற்றுகையிட எச்சரிக்கை விடுக்கப்பட்டதால், அசம்பாவிதம் தவிர்க்க நிர்வாகம் திரையிடலை நிறுத்தி, பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
கர்நாடக மாநிலம் சாமராஜ்நகரில், காவிரி நதி நீர் விவகாரத்தை முன்னிட்டு போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழக முதல்வர் விஜய் நடித்த 'ஜனநாயகன்' திரைப்படத்தின் காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடகாவில் பல்வேறு மாவட்டங்களில் கன்னட அமைப்புகள், விவசாய சங்கங்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சாமராஜ்நகரில் பல்வேறு கன்னட அமைப்புகள் மற்றும் விவசாயிகள் சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
இந்த சூழலில், சாமராஜ்நகர் பசவேஸ்வரா திரையரங்கில் திரையிடப்பட்டு வந்த விஜய் நடித்த 'ஜனநாயகன்' திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, திரையரங்கை முற்றுகையிடப் போவதாக அமைப்புகள் எச்சரிக்கை விடுத்தன. இதையடுத்து, எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்கவும், பொதுமக்களின் எதிர்ப்பை கருத்தில் கொண்டும், திரையரங்கு நிர்வாகம் 'ஜனநாயகன்' திரைப்படத்தின் காட்சிகளை ரத்து செய்து திரையிடலை நிறுத்தியுள்ளது. காவிரி நீர் பிரச்சினையை ஒட்டி சாமராஜ்நகர் மாவட்டத்தில் பதற்றம் அதிகரித்து வருவதால், அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

