“கேப்டனாக்க வேண்டாம்.. அணியிலாவது எடுங்கள்” - ஸ்ரேயாஸ் தந்தை வேதனை
இந்தியாவின் ஆசியக்கோப்பை அணியில் இடம்பெறாத ஸ்ரேயாஸ் ஐயர்
ஸ்ரேயாஸ் ஐயரை கேப்டனாக்க வேண்டாம், அணியில் எடுங்கள்
ஸ்ரேயாஸ் ஐயரின் தந்தை வேதனை
ஆசியக்கோப்பை அணியில் இடம்பெறாத ஸ்ரேயாஸ்..
2025 ஆசியக்கோப்பை தொடரானது டி20 வடிவத்தில் செப்டம்பர் 9 முதல் செப்டம்பர் 28 வரை நடைபெறவிருக்கிறது.
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், யுஏஇ, ஹாங்ஹாங், ஓமன் முதலிய 8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில், இந்தியா, பாகிஸ்தான், யுஏஇ, ஓமன் முதலிய அணிகள் ஏ பிரிவிலும், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் முதலிய அணிகள் பி பிரிவிலும் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில், ஆசியக்கோப்பைக்கான 15 பேர் கொண்ட சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் துரதிருஷ்டவசமாக ஸ்ரேயாஸ் ஐயரின் பெயர் இடம்பெறவில்லை, இந்திய டி20 அணியின் தேர்வில் ஐபிஎல் தொடர் பிரதான பங்குவகிக்கும் நிலையில், 2024-ல் ஐபிஎல் கோப்பையும், 2025-ல் ஐபிஎல் இறுதிப்போட்டிவரையும் சென்ற ஸ்ரேயாஸ் ஐயர் இடம்பெறாதது பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது.
ரவிச்சந்திரன் அஸ்வின், இர்ஃபான் பதான் போன்ற முன்னாள் வீரர்கள் ஸ்ரேயாஸ் ஐயர் நீக்கப்பட்டதை விமர்சித்திருக்கும் நிலையில், ஸ்ரேயாஸ் ஐயரின் தந்தை வேதனையுடன் பேசியுள்ளார்.
ஸ்ரேயாஸ் ஐயரின் தந்தை வேதனை..
இந்திய டி20 அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் இடம்பெறாதது குறித்து பேசியிருக்கும் அவரின் தந்தை, “இந்திய டி20 அணியில் ஸ்ரேயாஸ் இடம்பிடிக்க வேறு என்னதான் செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை. அவர் ஐபிஎல்லில், டெல்லி கேபிடல்ஸ் முதல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் வரை, அனைத்து அணியிலும் ஒரு கேப்டனாக பல வருடங்களாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
2024 ஆம் ஆண்டு ஐபிஎல் பட்டத்திற்கு கேகேஆரை வழிநடத்தினார், இந்த ஆண்டு இறுதிப் போட்டி வரை பஞ்சாப் கிங்ஸை வழிநடத்தினார். அவரை இந்திய கேப்டனாக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை, ஆனால் குறைந்தபட்சம் அவரை அணியிலாவது தேர்ந்தெடுங்கள்.
இந்திய அணியில் இருந்து ஸ்ரேயாஸ் வெளியேற்றப்பட்டாலும், அவர் தனது முகத்தில் எந்த விரக்தியையும் காட்டமாட்டார், யார் மீதும் பழி சொல்ல மாட்டார். இது என் அதிர்ஷ்டம், இதற்காக நம்மால் எதுவும் செய்யமுடியாது என்று கூறி எதையும் வெளிக்காட்டாமல் அமைதியாகவே இருக்கிறார். ஆனால் அவர் மனதளவில் ஏமாற்றமடைகிறார்” என்று வேதனை தெரிவித்துள்ளார்.