ஆதாரத்தை வெளியிட்ட ராகுல்.. மூன்று மாநிலங்களில் வாக்களித்த ஒரே நபர்.. தேசிய அரசியலில் நடப்பது என்ன?
தேர்தல் ஆணையம் மீது ராகுல் காந்தி குற்றம்சாட்டுகையில் வெளியிட்ட தரவுகளில், இடம்பெற்றிருந்த ஆதித்ய ஸ்ரீவத்ஸவா என்ற பெயருடைய நபரை நேர்காணல் செய்திருக்கின்றன சில டெல்லி ஊடகங்கள். உத்தர பிரதேசம், கர்நாடகா, மஹாராஷ்டிர தேர்தல்களில் வாக்களித்தது உண்மைதான் என்றும், அதேசமயம் சட்டப்படியாகவே, தான் நடந்துகொண்டதாகக் கூறியிருக்கிறார். இதுகுறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்!
தேர்தல் ஆணையத்தின் பட்டியலில் போலி வாக்காளர்கள் இடம் பெற்றிருப்பதாகக் குற்றம்சாட்டிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி, இதற்கான ஆதாரங்கள் என்று சொல்லி கர்நாடகா, உத்தர பிரதேசம் மற்றும் மஹாராஷ்டிரா மாநிலங்களின் வாக்காளர் பட்டியலின் சில பகுதிகளை வெளியிட்டார். சில தனிநபர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டினார். அதில் ஒரு பெயர்தான் ஆதித்ய ஸ்ரீவத்ஸவா. இவருடைய பெயர் மூன்று மாநில வாக்காளர் பட்டியலிலும் உள்ளதாக ராகுல் தெரிவித்திருந்தார்.
ராகுல் குற்றச்சாட்டுகளை முன்வைத்ததற்கு மறுநாள் ‘இண்டியா டிவி’க்கு பிரத்யேக நேர்காணல் அளித்த ஆதித்ய ஸ்ரீவத்ஸவா, தான் லக்னோவைச் சேர்ந்தவன் என்றும், பின்னர் மும்பைக்கும் அதன் பின் பெங்களூருவுக்கும் இடம்பெயரும் சூழல் ஏற்பட்டதாகவும், வாக்காளர் அடையாள அட்டையை வசிப்பிடங்களுக்கு ஏற்ப மாற்றி பதிவு செய்து கொண்டதாகவும் குறிப்பிட்டார். மேலும் பழைய பதிவுகள் நீக்கப்படாமல் இருந்திருக்கலாம் எனக்கூறிய அவர், தனது தனிப்பட்ட தகவல்களை பொதுவெளியில் வெளியிட்டதாக ராகுலுக்கு கண்டனம் தெரிவித்தார்.
வாக்காளர் பட்டியல் முறைகேடு குறித்த தரவுகளை வியாழன் அன்று வெளியிட்ட ராகுல் காந்தி, முன்னதாக மஹாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் முறைகேடுகளால் மாற்றப்பட்டன எனவும் குற்றம்சாட்டியிருந்தார். ஆனால், இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ராகுலின் குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்திருந்தது.
ராகுல் காந்தி தன்னுடைய குற்றச்சாட்டுகளில் உறுதியாக நிற்பதும், தேர்தல் ஆணையம் அவற்றை தொடர்ந்து மறுப்பதும் ஒரு பக்கம் இருக்க, தற்போது வெளியாகியுள்ள நேர்காணல் புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது.
சட்டப்படியே ஒருவர் நடந்துகொண்டாலும்கூட, இவ்வளவு குறுகிய காலத்தில் அடுத்தடுத்த மாநிலங்களுக்கு ஒருவர் தன்னுடைய பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்திட முடியுமா; ஒருவர் ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்துக்கு மாறும்போது, தன்னுடைய ஓட்டை மாற்றிக்கொள்ள எவ்வளவு கால இடைவெளி அனுமதிக்கப்படலாம்; இந்தியாவில் மாநிலங்கள் வெறும் நிர்வாக அலகுகளாக மட்டும் அல்லாமல், தனித்த அடையாளம் கொண்டவையாக உள்ள சூழலில், மாற்று மாநிலங்களிலிருந்து வருவோருக்கு ஓட்டுரிமை அளிப்பதற்கான கால இடைவெளியை நிர்ணயிப்பது தொடர்பாக நாடு புதிய விவாதங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளதா என்பன போன்ற விரிவான விவாதங்களைக் கோருகிறது இந்த விவகாரம்!