’கிரீமிலேயர்’ வருமான உச்சவரம்பு.. திருத்தம் செய்ய நாடாளுமன்றக் குழு பரிந்துரை!
ஓ.பி.சி. எனப்படும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் நலனை கருத்தில் கொண்டு, ‘கிரீமிலேயர்’ வருமான உச்சவரம்பில் திருத்தம் செய்ய நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்துள்ளது. சமூக, பொருளாதார மற்றும் கல்வி நிலையில் மேம்பட்டு இருக்கும், ஓ.பி.சி. வகுப்பினர், ‘கிரீமிலேயர்' என்று வகைப்படுத்தப்படுகின்றனர். அவர்கள், கல்வி, அரசு வேலைவாய்ப்புகளில் சில இடஒதுக்கீடுகளை பெற முடியாது. இவர்களுக்கான வருமான உச்சவரம்பை, 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை ஆய்வு செய்யும்.
ஆனால், 2017ஆம் ஆண்டுக்குப் பிறகு, இந்த ஆய்வு நடத்தப்படவில்லை. இந்நிலையில், பாஜக எம்.பி. கணேஷ் சிங் தலைமையிலான நாடாளுமன்றக் குழு, இதுகுறித்த ஆய்வை மேற்கொண்டு, நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. அதில், தற்போது வழங்கப்படும் கிரீமிலேயர் உச்சவரம்பு மிகவும் குறைவு என்றும், இதன் வாயிலாக குறிப்பிட்ட அளவிலான மக்கள் மட்டுமே பயனடைந்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது உள்ள பணவீக்கம், வருமான உயர்வு உள்ளிட்டவற்றை கருத்தில் வைத்து, கிரீமிலேயர் உச்சவரம்பை அதிகரிப்பது காலத்தின் தேவை என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.