2027 உலகக்கோப்பை.. ரோகித், கோலி எதிர்காலம் என்ன? BCCI போடும் கண்டிஷன்!
இந்திய கிரிக்கெட் அணியில் மிகப்பெரிய ஜாம்பவான்களாக ஜொலித்த ரோகித் சர்மாவும், விராட் கோலியும் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றனர். ஆனாலும் 2027 உலகக் கோப்பை வெல்ல வேண்டும் என்பதில் இந்த ஜோடி இலக்கு நிர்ணயித்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஆகையால் இவர்கள் இருவரும் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் மட்டும் தீவிரமாக விளையாடி வருகின்றனர். அதிலும் ரோகித் இன்னும் ஒருநாள் அணியின் கேப்டனாகவே இருக்கிறார். அதேநேரத்தில் விராட் எப்போதும்போல் செல்வாக்குமிக்கவராக இருக்கிறார். இந்த நிலையில், தற்போது அவர்களுடைய ஒருநாள் போட்டி குறித்து பேசப்பட்டு வருகிறது. தைனிக் ஜாக்ரனில் வெளியான ஒரு செய்தியின்படி, விராட் அல்லது ரோகித் இருவருக்கும் 2027 ஒருநாள் உலகக்கோப்பை இந்திய அணியில் இடம் கிடைப்பது உறுதி செய்யப்படவில்லை.
இருவரும் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடாததால், வரும் ஆண்டுகளில் போட்டி நேரமும் குறைவாகவே இருக்கும். எனவே, இந்த நிலைமை தேர்வுக் குழு மற்றும் பிசிசிஐயின் உயர்மட்ட மேலாளர்களின் மனதில் ஒரு பெரிய சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இருப்பினும், கோலி மற்றும் ரோகித் இருவரும் ஒருநாள் உலகக்கோப்பையில் இடம்பெற வேண்டுமென்றால், நடப்பாண்டு டிசம்பரில் தொடங்கும் உள்நாட்டு ஒருநாள் போட்டியான விஜய் ஹசாரே டிராபியில் விளையாட வேண்டும் என்றும் அறிக்கை கூறியுள்ளது. விஜய் ஹசாரே டிராபி பங்கேற்பு இல்லாமல், அவர்களுக்கு கதவுகள் திறக்க வாய்ப்பில்லை எனவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
இந்தியாவின் அடுத்த ஒருநாள் போட்டி அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற உள்ள நிலையில், இந்தத் தொடரில் இந்த ஜோடி சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவரக்கூடும் என்று அறிக்கை கூறுகிறது. ஏனெனில் இந்த கட்டத்தில் உள்நாட்டு கிரிக்கெட்டுக்கு திரும்புவது மிகவும் சாத்தியமில்லை. மேலும், சமீபத்தில் இங்கிலாந்தில் முடிவடைந்த தொடரில் இந்தியாவின் டெஸ்ட் கேப்டன் ஷுப்மன் கில் பெற்ற வெற்றி, அவர் ஒரு நீண்டகால கேப்டனாக தேர்வுக் குழுவின் நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளது. நீண்டகாலத்திற்கு, கில்லை இந்தியாவின் அனைத்து வடிவ கேப்டனாகத் தேர்வுசெய்யும் நோக்கில் கிரிக்கெட் வல்லுநர்கள் பார்க்கிறார்கள்.
பல இளம் வீரர்கள் அணியில் தங்கள் முத்திரையைப் பதித்து வருவதால், தேர்வாளர்கள் 2027ஆம் ஆண்டு நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பைக்கு புதிய திறமையாளர்களை அணிக்குக் கொண்டுவர முடிவு செய்யலாம் எனக் கூறப்படுகிறது. டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மாற்றம் வெற்றிகரமாக செய்யப்பட்டிருக்கும் நிலையில், ஒருநாள் போட்டிகளிலும் இதுவே நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இந்த முன்னேற்றங்கள், கோலி மற்றும் ரோகித்தை ஓர் ஆபத்தான சூழ்நிலையில் ஆழ்த்துகின்றன. இருப்பினும் இருவரும் தங்கள் எதிர்காலத் திட்டம் குறித்து அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கவில்லை.