TAMILAN Awards | இலக்கியத்தில் மு.மேத்தா, கலைத்துறையில் பி.வாசு சிறப்பிப்பு
புதிய தலைமுறையின் தமிழன் விருதுகள் 2025ல், இலக்கிய பிரிவில் மு.மேத்தாவுக்கு விருது வழங்கப்பட்டிருக்கிறது. புதுக்கவிதைக்கு ஏற்றம் தந்த கவிஞர்களுள் இவரும் ஒருவர். இதே பிரிவில் நம்பிக்கை நட்சத்திரமாக விருது பெற்றிருக்கிறார் எழுத்தாளர் ஆர்.மோகனா.கலைத் துறையில் 3 தசாப்தங்களாக வலம் வரும் இயக்குநர் பி.வாசுவிற்கு தமிழன் விருது வழங்கப்பட்டிருக்கிறது. தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, மலையாளம் என 65 திரைப்படங்களை இயக்கியவர் பி.வாசு. கலைத் துறையில் பன்முகத் தன்மையுடன் வளர்ந்து வரும் நடிகர் மணிகண்டனுக்கு நம்பிக்கை நட்சத்திரம் பிரிவில் தமிழன் விருது வழங்கப்பட்டிருக்கிறது.
சமூகப்பணிக்கான விருது, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்.பாலகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஒடிசா அரசின் தலைமை ஆலோசகராக பணியாற்றிய இவர், தமிழில் பல நூல்களை எழுதியிருக்கிறார். இதே பிரிவில், நம்பிக்கை நட்சத்திரமாக கே.ஆர்.ராஜா தேர்ந்தெடுக்கப்பட்டு, விருது வழங்கப்பட்டிருக்கிறது. சமூகப்பணியோடு மட்டுமல்லாமல், சிறந்த வழக்கறிஞராகவும், மனநல ஆலோசகராகவும் அறியப்படுபவர் கே.ஆர்.ராஜா.
பெரும்பாலானவர்களின் வீடுகளில் பயன்படுத்தப்படும் மசாலா பொருள் தயாரிக்கும் நிறுவன உரிமையாளருக்குத்தான் தொழில் பிரிவில் புதிய தலைமுறை தமிழன் விருது வழங்கப்பட்டிருக்கிறது. அவர்வேறு யாருமல்ல... ஆச்சி மசாலா நிறுவனத்தின் உரிமையாளர் பத்மசிங்ஐசக் தான். இதே பிரிவில், நம்பிக்கை நட்சத்திரம் விருது SPEED TEAM GROUP OF COMPANIES-ன் தலைவர் முத்துராஜா பெரியசாமிக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவில் இஸ்ரோவின் தலைவர் நாராயணனுக்கு தமிழன் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.
இதே பிரிவில், நம்பிக்கை நட்சத்திரமாக SYMBIONIC என்ற ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் இணை நிறுவனர் ரிஷி கிருஷ்ணாவிற்கு வழங்கப்பட்டுள்ளது. விளையாட்டு பிரிவில் இருமுறை உலககேரம் சாம்பியன் பட்டத்தை வென்ற அந்தோனி மரிய இருதயத்திற்கு தமிழன் விருது வழங்கப்பட்டிருக்கிறது. இவருக்கு அர்ஜுனா விருதை வழங்கி கவுரவித்திருக்கிறது மத்திய அரசு. நம்பிக்கை நட்சத்திரம் விருது இந்தியகிரிக்கெட் வீராங்கனை கமலினிக்கு வழங்கப்பட்டிருக்கிறது.