நிச்சயம் தவறவிடக்கூடாத படம் `பேட் கேர்ள்' | Varsha Bharath|Vetrimaaran| Bad Girl
பேட் கேர்ள் முன்வைக்கும் கேள்விகள் என்ன?(3.5 / 5)
வாழ்க்கை, காதல், குடும்பம் குறித்த ஒரு பெண்ணின் கேள்விகளே `பேட் கேர்ள்'
பள்ளி மாணவி ரம்யாவுக்கு (அஞ்சலி) அந்த வயதுக்கே உரிய ஏகப்பட்ட கேள்விகள், ஆண்கள் மீதான கவர்ச்சி, பெற்றோர் மீதான வெறுப்பு என மனதில் பல ஊசலாட்டங்கள். இதனிடையே ரம்யாவின் அம்மா சுந்தரி (ஷாந்தி ப்ரியா) எப்படி தன் மகளை கையாள்வது எனத் தெரியாமல் திணறுகிறார். அதிக கண்டிப்பாக இருக்கவும் பயம், அவள் போக்கில் விடவும் பயம் என்பது ஒருபுறம்; பள்ளியில், கல்லூரியில், பணிக்கு சென்ற பின்பு என வாழ்வின் ஒவ்வொரு காலகட்டங்களில் ரம்யாவுக்கு வரும் கேள்விகளும், புரிதல்களும் மறுபுறம். கடைசியாக வாழ்க்கை, காதல், குடும்பம் இவற்றை எல்லாம் பற்றி அம்மா சுந்தரி - மகள் ரம்யா இருவரும் என்ன தெரிந்து கொள்கிறார்கள் என்பதே `பேட் கேர்ள்'
அறிமுக இயக்குநர் வர்ஷா பரத் முதல் படத்திலேயே மிக அழுத்தமான ஒரு விஷயத்தை பொழுது போக்குடன் கலந்து சொல்லி கவர்ந்திருக்கிறார். பெண்களின் அக உலகத்தை காட்டுவதையும், அவர்களது ஆசைகளையும் வெளிப்படையாக சொல்வதை பெரும் குற்றம் போல பாவிக்கும் சமூகத்தின் முன் சில கேள்விகளை முன் வைத்திருக்கிறார். அதை எந்த பாசாங்கும் இல்லாமல் முடிந்தவரை நேர்மையாக கொடுத்திருப்பது பாராட்டுக்குரியது.
மீண்டும் மீண்டும் படத்தில் பாராட்டப்பட வேண்டுயது, இப்படம் எழுதப்பட்டிருக்கும் விதம்தான். அதோடு எழுதியபடியே திரையிலும் உணர்வைக் கடத்தி இருப்பது. பதின் பருவத்தில் பெண்களுக்குள் வரும் உடல் சார்ந்த கேள்விகள், கல்லூரி சமயத்தில் காதல் சார்ந்த தடுமாற்றங்கள், வேலைக்கு சென்ற பின் தனக்கு ஒரு பொருத்தமான துணை தேடும் படலம் என பெண் உலகத்திற்குள் நம்மை உலவவிட்டிருக்கிறார் வர்ஷா.
ரம்யாவாக நடித்துள்ள அஞ்சலியின் நடிப்பு வெகு சிறப்பு. தன்னுடைய தடுமாற்றங்கள், தவிப்புகளை வெளிக்காட்டுவது, பெற்றோர் மீது வெறுப்பு காட்டுவது, காதலை காப்பாற்றி கொள்ள போராடுவது, பூனையை காணாமல் கலங்குவது என ஒவ்வொரு காட்சியிலும் பல வித உணர்வுகளை கடத்துகிறார். அம்மா ரோலில் வரும் சாந்திப்ரியாவுக்கு இது தமிழ் சினிமாவில் வெல்கம் பேக். ஸ்ட்ரிக்ட் ஆசிரியையாக, தவிப்பான அம்மாவாக, வேலைக்கு செல்வதை பற்றி குறை சொல்லும் போது அதிர்ந்து போவது என மிக அழுத்தமான நடிப்பை கொடுத்திருக்கிறார். ரம்யாவின் தோழியாக வரும் சரண்யா, காதலர்களாக வரும் ஹ்ருது ஹாரோன், தீஜே ஆகியோர் சில காட்சிகளில் வந்தாலும் மனதில் நிற்கிறார்கள்.
வர்ஷா இப்படத்தை ஒரு உரையாடல் போல அணுகி, அவர் முன்வைக்கும் கேள்விகள் எல்லாம் பளிச் என இறங்குகின்றன. குறிப்பாக, திருமணமானால் என்னை கவனித்துக் கொள்ள ஆள் இருக்கும் என்றால், தனியாக வாழ்க்கையை நடத்தும் அம்மாவுக்கு திருமணம் என்ன உதவியை செய்தது? ஒழுக்கம் கட்டுப்பாடு என பெண்களின் மீது மட்டும் திட்டமிட்டு செலுத்தப்படும் அழுத்தம் எதற்காக? என்ற கேள்விகள் எப்போதும் இருப்பவை தான் என்றாலும், இம்முறை இன்னும் வித்தியாசமான விதத்தில் கேட்கப்படுகிறது.
ஒரு மியூசிகல் படம் போல அமித் த்ரிவேதி கொடுத்திருக்கும் இசை, ரம்யாவின் மூன்று கால கட்டங்களை வெவ்வேறு விதமாக காட்டி இருக்கும் ப்ரீத்தா ஜெயராமன், ஜெகதீஷ் ரவி, பிரின்ஸ் ஆண்டர்சன், படத்தை உயிரோட்டமாக மாற்றும் வினோத் தணிகாச்சலத்தின் சவுண்ட் டிசைன் என தொழில்நுட்ப ரீதியில் அத்தனையும் அசத்தல். இப்படம் எடிட் செய்யப்பட விதத்திற்காக ராதாவிற்கு தனி பாராட்டுக்கள். டீன் ஏஜராக இருக்கும் ரம்யாவின் கதையை சொல்லும் போது, அந்த வயதுக்கே உரிய பரபரப்பை பல கட்ஸ் மூலமாக காட்சிகளில் கடத்தி, வயது ஏற ஏற அதற்கு ஏற்ப அந்த கட்ஸ் கொஞ்சம் நிதானமாகும் விதம், அட்டகாசம்.
இதில் குறை எனப்பட்டது, படத்தின் பிரதானம் ரம்யா தன் ரொமான்டிக் ரிலேஷன்ஷிபில் பல தடுமாற்றங்களை சந்திக்கிறார் என்பதுதான். ஆனால் அந்த ரிலேஷன்ஷிப் எதுவும் முழுமையாக காட்டப்படவில்லை என்பதுதான். அவற்றை இன்னும் கொஞ்சம் படத்திற்குள் சேர்த்திருக்கலாம். மற்றபடி இது ஒரு அருமையான Coming Of Age படமாக வந்திருக்கிறது. இப்படத்தை தயாரிக்க முன்வந்த வெற்றிமாறன் - அனுராக் காஷ்யபுக்கு வாழ்த்துகள்.
"நம் அம்மாவோ, பாட்டியோ அதற்கு முன் இருந்தவரோ, யாராக இருந்தாலும் அவர்களுக்கு போடப்பட்ட சங்கிலியை கழற்ற தெரியவில்லை என்றால், அதனை அடுத்த தலைமுறை பெண்களுக்கு மாட்டிவிட்டு செல்கிறார்கள்" என்ற முரணை கண்டடையும் ரம்யா, ஒரு கட்டத்தில் "ஒவ்வொரு தலைமுறையிலும் பெண்கள், அதற்கு முன்பிருந்த தலைமுறை பெண்களை விட சற்று முன்னேறுவார்கள். நானும் அடுத்து வரும் தலைமுறைக்கு Better Space ஐ உருவாக்க வேண்டும்" என்பதை தன்னுடைய வாழ்க்கை அனுபவத்தில் இருந்து உணர்வதாக படத்தை முடித்திருந்தது, ஒரு முழுமையை கொடுக்கிறது. நிச்சயம் தவறவிடக்கூடாத படம் இந்த `பேட் கேர்ள்'.