ப.சிதம்பரம் எழுதும் | சீனா - இந்தியா சந்திப்பு.. தனிப்பட்ட நட்புறவுகள் நன்மை தராது!
சீன - இந்திய நாட்டுத் தலைவர்களின் சந்திப்பு, உறவு, பேச்சுவார்த்தை குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இக்கட்டுரையில் எழுதியுள்ளார்.
தனிப்பட்ட நட்புறவுகள் நன்மை தராது!
கூட்டாக நடனமாட ‘இருவர்’ தயாராகிவிட்டனர். இசையொலி மெலிதாகக் கேட்கிறது, பாடகரின் உருவம் மேடையில் தெளிவாகத் தெரியவில்லை; ஆனால் உருவத்தின் தோற்றக் கோட்டைப் பார்த்தால் அது இந்தியப் பிரதமர் ‘இல்லை’ என்பது தெரிகிறது.
மகாபலிபுரத்தில் சீன அதிபருடன் நெருக்கம் காட்டிய காலத்திலிருந்து வெகு தொலைவு வந்துவிட்டார் நரேந்திர மோடி; அழகான மர ஊஞ்சலில் சீன அதிபர் ஜி ஜின் பிங்குடன் சிறிது நேரம் அமர்ந்து இளைப்பாறினார்; பிறகு ‘சீன மக்கள் விடுதலை சேனையுடன்’ (பிஎல்ஏ) இந்திய ராணுவ வீரர்கள் 2020 ஜூன் 15-இல் கல்வான் என்ற இடத்தில் நேருக்கு நேர் ஆக்ரோஷமாகக் கை கலந்ததில் இந்தியத் தரப்பில் 20 உயிர்கள் பலியாயின. அதன் பிறகு டெல்லியில் ஜூன் 19-இல் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், “இந்திய எல்லைக்குள் எந்த அன்னியரும் ஊடுருவிவிடவில்லை - இந்திய எல்லைக்குள் எந்த அன்னியரும் இல்லை” என்று (சீனர்களுக்கு) நற்சான்றுப் பத்திரம் வழங்கினார் மோடி.
அமைச்சர்களின் முரண்பட்ட தகவல்கள்!
பிரதமர் மோடி பேசிய சில வாரங்களுக்கெல்லாம் நாட்டின் பாதுகாப்பு (தற்காப்பு) அமைச்சரும் வெளியுறவுத்துறை அமைச்சரும் அவர் கூறிய தகவலுக்கு முரணாக, எச்சரிக்கை விடுத்துப் பேசினர்: “எல்லைகளில் இப்போதைய நிலையை ஒருதலைப்பட்சமாக மாற்ற மேற்கொள்ளப்படும் எந்த முயற்சியும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது; எல்லையில் அமைதியும், முந்தைய நிலைக்குத் திரும்புவதும்தான் சீனத்துடன் உறவை இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதற்கான முன் நிபந்தனைகள்” என்றனர். இரு நாடுகளின் ராணுவத் தலைமை தளபதிகள் சந்திப்பில், மூன்று முக்கிய நடைமுறைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று இந்தியா விவரித்தது: இருதரப்புப் படைகளும் பின்வாங்குவது, இரு நாடுகளின் படைகளையும் கலைத்து வேறிடத்துக்கு அனுப்புவது, மீண்டும் புதிதாக படைகளை இப்பகுதிகளில் குவிக்காமல் இருப்பது என்பது அந்த நிபந்தனைகள். இந்தியாவுடன் பேசிய சீனத் தரப்பு தனது படைகளை பின்வாங்கியது. ஆனால் படைகளைக் கலைக்கவும் புதிதாக படைகளை அனுப்பாமல் இருக்கவும் உறுதிகூற மறுத்துவிட்டது. செயற்கைக் கோள் புகைப்படங்கள் உள்ளிட்ட அனைத்துச் சான்றுகளும் இந்த உடன்பாட்டுக்கு மாறாகத்தான் களம் இருக்கிறது என்று காட்டின. இந்தியாவுடனான நில எல்லைக்கு அருகில் அதிக எண்ணிக்கையில் சீன ராணுவ வீரர்கள் மேலும் குவிக்கப்பட்டனர், போருக்கு உதவும் ஆயுதங்களும் சாதனங்களும் எல்லைக்கு அனுப்பப்பட்டன. தகவல் தொடர்புக்கு ‘5- ஜி’ அலைக்கற்றை தகவல் தொடர்பு நிறுவப்பட்டது, விமானங்கள் தரையிறங்க ஓடுபாதைகள் அமைக்கப்பட்டன, ராணுவ வாகனங்களும் கவச வாகனங்களும் வருவதற்காக வலுவான சாலைகள் அமைக்கப்பட்டன, போர் வீரர்கள் குடியிருக்க பாசறைகளும் மக்கள் வசிக்க குடியிருப்புகளும் அதிக எண்ணிக்கையில் கட்டப்பட்டன. கல்வான் மோதலுக்கு முன்பிருந்த கள நிலையை சீனா தனக்கு மேலும் சாதகமாக மாற்றிவிட்டது.
இப்போது இரு நாடுகளுக்கும் இடையில் ‘உரசல் நடந்த இடம்’ கல்வான் மட்டுமல்ல, டேப்சாங், டேம்சோக் ஆகிய இடங்கள் தொடர்பான மோதல் பிரச்சினைகளுக்கும் முடிவு காணப்படவில்லை. ‘இந்த மூன்று இடங்களிலும் சீன ராணுவம் இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் எல்லைப் பகுதிகளில்தான் இருக்கிறது’ என்று ‘தி இந்து’ பத்திரிகை தெரிவிக்கிறது. இந்திய வெளியுறவு அமைச்சர் 2024 டிசம்பரில் அளித்த பேட்டியில் கூட, ‘2020 முதலே எங்களுக்கு இடையிலான உறவு இயல்புக்கு மாறுபட்டதாகத்தான் இருக்கிறது’ என்று கூறியிருக்கிறார்.
இந்தியாவுக்குப் பெருத்த அடி, சமீபத்தில் ஜூன் மாதம் நடந்த ‘நான்கு நாள்’ போரில்தான் விழுந்தது; சீனத்தில் தயாராகும் ‘ஜே-10’ ரக போர் விமானங்களையும் ‘பிஎல்-15’ ரக ஏவுகணைகளையும் இந்தியாவுக்கு எதிராகப் பாகிஸ்தான் பயன்படுத்த, சீனம் அனுமதித்தது. இந்தியாவுடனான மோதலுக்கு உத்தி வகுத்துக் கொடுத்ததும், இந்தியாவுக்கு எதிராகத் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தளபதிகளுக்கு வழிகாட்டியதும்கூட சீனம்தான்.
தாக்குதலும் எதிர்தாக்குதலும்
சீனத்துடனான அனைத்துத் தொடர்புகளிலிருந்தும் விடுவித்துக் கொள்ளப் போவதாக இந்திய அரசு பேசுகிறது, ஆனால் அதை நிறைவேற்றுவது எளிதான செயல் அல்ல. ஆண்டுகள் வளர வளர சீனத்துடனான வாணிபத்தில் இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை (ஏற்றுமதிகளைவிட இறக்குமதிகளே அதிகம்) அதிகரித்துக் கொண்டே வருகிறது, 2024-25- கில் இந்த பற்றாக்குறை மதிப்பு 10,000 கோடி அமெரிக்க டாலர்கள். மிக முக்கியமான பொருள்களுக்கு இந்தியா சீனத்தைத்தான் முழுக்க முழுக்க நம்பியிருக்கிறது. 174 பெரிய சீன நிறுவனங்கள் இந்தியாவில் பதிவு செய்துகொண்டு செயல்படுகின்றன. 3,560 இந்திய நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளாக - ஏராளமான சீனர்கள் பொறுப்பு வகிக்கின்றனர் (ஆதாரம்: மக்களவை கேள்வி பதில் 12-12-2022).
இந்தியா-பாகிஸ்தான் போருக்குப் பிறகு ‘டிக்-டாக்’ உள்பட இருநூறுக்கும் மேற்பட்ட சீன கைப்பேசி செயலிகளுக்கு (மொபைல்-ஆப்) இந்தியா தடை விதித்தது, சீனத்திலிருந்து வரும் முதலீடுகளுக்கு (‘இந்தியாவுடன் நில எல்லையுள்ள நாடு’) கட்டுப்பாடுகளை விதித்தது, காப்பு வரி அல்லாத பிற தடைகளும் அதிகரிக்கப்பட்டன. டெல்லி-மீரட் விரைவு போக்குவரத்துக் கட்டமைப்பிலும் சில நெடுஞ்சாலைத் திட்டங்களிலும் மின்னுற்பத்தி திட்டங்களிலும் - சீனம் பொது ஏலம் மூலம் பங்கேற்பது ரத்து செய்யப்பட்டது. சீனமும் தன்னுடைய பங்குக்கு, இந்தியாவுக்கு சில அரிய வகை கனிமங்களும் உரமும் ஏற்றுமதி செய்யப்படுவதை நிறுத்தியது. சூரிய ஒளி மின்னுற்பத்தி, மின்சார பேட்டரி வாகனங்கள் மற்றும் இதர உற்பத்திகளுக்குப் பயன்படும் துணை சாதனங்கள், உட் பொருள்கள் போன்றவற்றையும் அனுப்பாமல் தடுத்தது.
ஷாங்காய் கூட்டுறவு ஒத்துழைப்பு அமைப்பில் (எஸ்சிஓ) சீன அதிபர் ஜீ ஜின்பிங், அரசியல் ரீதியாக பெரும் முதலீட்டை செய்துள்ளார். 2019, 2022, 2024 ஆகிய ஆண்டுகளில் நடந்த எஸ்சிஓ மாநாடுகளில் மோடியும் ஜீ ஜின்பிங்கும் தனியாக சந்தித்துப் பேசியதில்லை. எனவே இந்த ஆண்டு தியான்ஜினில் இருவரும் சந்தித்துப் பேசியது வரலாறாகிவிட்டது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைப் பிரச்னையில் தீர்வு ஏற்பட்டுவிடும் என்பது நிச்சயமில்லை. ஆனால் இரு நாடுகளையுமே பாதித்த வர்த்தக உறவுகள், முதலீடுகள் தொடர்பாக பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு முன்னேற்றம் ஏற்படலாம். அப்படி நிகழ்ந்தால் அது இந்தியா, சீனா இரு நாடுகளுமே தங்களுடைய கொள்கையை நேர்மாறாக மாற்றிக் கொண்டதாகிவிடும்.
கைவிடப்பட்ட ‘காதலி’!
இரு நாடுகளுமே தங்களுடைய நிலையிலிருந்து மாறுபட்ட எதிரான முடிவுகளுக்கு வரக் காரணமான அம்சங்களையும் சூழல்களையும் கவனமாக ஆராய வேண்டும். மோடியுடன் தனிப்பட்ட முறையில் நெருக்கம் காட்டினாலும் தன்னுடைய சொந்த நிறுவனங்களின் லாபங்களையும் அரசியல் ரீதியிலான பயன்களையும் மட்டுமே சிந்திக்கும் ‘கொடுக்கல்-வாங்கல்’ அதிபராகத்தான் ட்ரம்ப் இருக்கிறார் என்ற கசப்பான பாடத்தை இந்தியா படித்திருக்கிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான தொழில் – வர்த்தக கூட்டுறவு நல்ல வளம் அடைந்த நிலையிலும் சொந்த காரணங்களுக்காக உச்சபட்ச காப்பு வரியை (பிரேசில் மீதும்தான்) விதித்திருக்கிறார் ட்ரம்ப்.
(அமெரிக்க) காதலனால் கைவிடப்பட்ட நிலையில் உள்ள இந்தியா, சீனத்தின் அரவணைப்பில் ஆறுதல் அடைய அந்நாட்டுடனான உறவை சீர்படுத்தப் பார்க்கிறது. அதேபோல சீனமும் உலகிலேயே மிகப் பெரிய வர்த்தக – முதலீட்டு சந்தையான இந்தியாவுடன் வர்த்தக – தொழில் உறவுகளை வலுப்படுத்த விரும்புகிறது. ஆசிய – பசிபிக் பிராந்தியத்தில் தனது செல்வாக்கை விரிவுபடுத்திக் கொள்ள விரும்பும் சீனம், தனக்குப் போட்டியாளராக விளங்கக் கூடிய இந்தியாவை மகிழ்விக்க சில செயல்களைச் செய்யக்கூடும். ஆனால் எந்தக் காலத்திலும் இந்தியாவுடனான எல்லையில், தான் சொந்தம் கொண்டாடும் பகுதிகளை விட்டுத் தராது; தன்னிடம் பெருமளவு ராணுவ சாதனங்களைக் கொள்முதல் செய்தும், அடித்தளக் கட்டமைப்பு திட்டங்களின் முக்கிய பங்குதாரராகவும் விசுவாசமாகச் செயல்பட்டும் வரும் ‘நீண்ட காலத் தோழன்’ பாகிஸ்தானை ஒரு போதும் விட்டுத்தராது. வர்த்தகம், பயங்கரவாதம் தொடர்பாக தியான்ஜின் உச்சி மாநாட்டில் மோடி எழுப்பிய கோரிக்கைகளுக்குப் பதில் அளிப்பதை சீனத் தலைவர் திறமையாகத் தவிர்த்துவிட்டதை நினைவுகூர்வோம்.
இப்போதைக்கு ரஷ்யா மட்டுமே பாதுகாப்பான இடத்தில் இருக்கிறது. கச்சா பெட்ரோலிய எண்ணெய்யையும் நிலவாயுவையும் ராணுவ சாதனங்களையும் இந்தியாவுக்கு அதிபர் புதினால் தொடர்ந்து விற்க முடியும், அத்துடன் சீனம், ஐரோப்பிய நாடுகளுடனான வர்த்தகத்தையும் வளர்க்க முடியும். வட கொரிய வீரர்களின் ஆதரவுடன் உக்ரைன் போரைத் தொடரவும் முடியும்.
உலக அரங்கில் ‘மோடியின் குரலைக் கேட்டு’ இப்போது எந்த நாடும் செயல்படுவதில்லை என்பது தெளிவாகிவிட்டது. இந்தியாவின் மிகப் பெரிய ஏற்றுமதி சந்தை நாட்டுக்கும் (அமெரிக்கா), இந்தியாவுக்கு அதிக அளவு பொருள்களை இறக்குமதி செய்து கொண்டிருக்கும் நாட்டுக்கும் (சீனம்) இடையில் சிக்கிக் கொண்டிருக்கிறார் மோடி. காப்பு வரி மிரட்டல்களுக்கும் - இறக்குமதி வர்த்தக சார்புக்கும் இடையில் மாட்டிக் கொண்டிருக்கிறார். ‘குவாட்’ கூட்டமைப்புக்கும் ‘எஸ்சிஓ’ கூட்டமைப்புக்கும் இடையிலும் அகப்பட்டுக் கொண்டிருக்கிறார். ட்ரம்பைப் போலத்தான் மோடியும் - எந்த ஒரு முடிவாக இருந்தாலும் ‘தன் உள் உணர்வு சொல்வதே சரி’ என்று பிடிவாதமாகச் செயல்படுகிறவர். இதனால்தான் உலக அரங்கில் தனிப்பட்ட முறையில் தலைவர்களிடம் நட்பு பாராட்டினார். இப்போது அந்த நட்பு எந்த விதத்திலும் நாட்டுக்கு உதவாது என்பதை’ உணர வேண்டும்; கட்டி அணைப்பது, தோளில் கை போடுவது, கைகளைப் பிடித்துக் கொண்டு நடப்பது போன்ற ‘ராஜதந்திர செயல்பாடுகளை இனி கைவிட வேண்டும், இந்திய வெளியுறவுத்துறையில் நீண்ட காலம் பணியாற்றி நிறைய அனுபவம் பெற்ற தூதர்கள் - ராஜதந்திரிகளின் ஆலோசனைகளைக் கேட்டு நிதானத்துடன் செயல்பட வேண்டும்.