எதிர்கால கனவிற்காக நிகழ்காலத்தையே அடமானம் வைக்கும் ‘வெற்றிக்கொடி கட்டு’ பழனி!

31-வது வாரமான இந்த வாரம் ‘மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள்’ தொடரில் வெற்றிக்கொடி கட்டு திரைப்படத்தில் சார்லி ஏற்று நடித்திருந்த பழனி கதாபாத்திரத்தை பார்க்கப்போகிறோம்.
வெற்றிக்கொடி கட்டு திரைப்படம் - நடிகர் சார்லி
வெற்றிக்கொடி கட்டு திரைப்படம் - நடிகர் சார்லிபுதிய தலைமுறை

(தொடரின் முந்தைய அத்தியாயங்களை, இங்கே க்ளிக் செய்து வாசிக்கலாம்...)

ஒரு நகைச்சுவை நடிகரை, குணச்சித்திர நடிகராக பயன்படுத்தினால் அவர் கூடுதலாக மிளிர்வார் என்பதற்கான உதாரணங்களை இந்தக் கட்டுரைத் தொடரில் முன்பே பார்த்திருக்கிறோம். அந்த வரிசையில் இன்னொரு உதாரணமாக ‘வெற்றிக்கொடி கட்டு’ திரைப்படத்தில் நடித்த சார்லியைச் சொல்லலாம்.

வெற்றிக்கொடி கட்டு திரைப்படம் - நடிகர் சார்லி - பார்த்திபன் - முரளி
வெற்றிக்கொடி கட்டு திரைப்படம் - நடிகர் சார்லி - பார்த்திபன் - முரளி

வெளிநாட்டுப் பணிக்கு ஆசைப்பட்டு பணத்தைக் கட்டி ஏமாந்த இளைஞர்களைப் பற்றிய திரைப்படம் இது. பிரதான பாத்திரங்களாக பார்த்திபனும் முரளியும் நடித்திருப்பார்கள். ஆனால் இந்த ஹீரோக்களை விடவும், வெளிநாட்டுக் கனவு சிதறுண்டதோடு, பணத்தையும் இழந்த கொடுமை காரணமாக துயரப்படும் பல்லாயிரக்கணக்கான அப்பாவிகளின் ஒரு பிரதிநிதியை சார்லிதான் சரியாக வெளிப்படுத்தியிருப்பார். அந்த அளவிற்கு அவரது நடிப்பு இயல்பாகவும் ஆத்மார்த்தமாகவும் அமைந்திருந்தது.

வெற்றிக்கொடி கட்டு திரைப்படம் - நடிகர் சார்லி
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 30 | அஞ்சாதே ‘தயா’ | வில்லன்தனத்தை காட்ட வசனம் எதற்கு?

ஒரு பரிதாப மனிதனின் துயரச் சித்திரம்

“நான் இப்படியே கூட்ரோட்டுக்கு போயி தூத்துக்குடி பஸ்ஸை பிடிச்சு .. நம்ம சிவநேசன்ல.. அவன் கிட்ட விசாரிச்சிட்டு அப்படியே சுத்திட்டே இருப்பேன். நீ கௌம்பு” என்று மஞ்சப்பையை முதுகில் மாட்டியபடி, பொட்டல் வெளியில் சார்லி தன்னந்தனியாக நடந்து செல்லும் காட்சி ஒன்று வரும். காமிரா பின்னால் இருந்து அவரைக் காட்டும், பார்வையாளர்களின் மனதைப் பிசையும் ஷாட் அது.

வெற்றிக்கொடி கட்டு திரைப்படம் - நடிகர் சார்லி
வெற்றிக்கொடி கட்டு திரைப்படம் - நடிகர் சார்லி
மேடை நாடகக் கலைஞராக இருந்த வேல்முருகன், நகைச்சுவை மேதையான சார்லி சாப்ளின் மீதுள்ள அபிமானம் காரணமாக, தன்னுடைய பெயரை ‘சார்லி’ என்று சூட்டிக் கொண்டார்.

1982-ல் கே.பாலசந்தர் இயக்கிய ‘பொய்க்கால் குதிரைகள்’ திரைப்படத்தின் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமான சார்லி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று ஏராளமான தென்னிந்தியத் திரைப்படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராக நடித்துள்ளார்.

வெற்றிக்கொடி கட்டு திரைப்படம் - நடிகர் சார்லி
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 29 | “அப்ப என் காதல் ஃபெயிலியரா?” - அவ்வை சண்முகி மணிவண்ணன்!

ஏறத்தாழ எண்ணூறு திரைப்படங்களுக்கும் மேல் நடித்த சார்லியின் பங்களிப்பில், சில பாத்திரங்களை நம்மால் மறக்கவே முடியாது. குறைவாக வசனம் பேசி வயிறு குலுங்க சிரிக்க வைத்த பிரெண்ட்ஸ் திரைப்படம் போல் நிறைய உதாரணங்கள் உண்டு. ஆனால் ஒரு துளி கூட நகைச்சுவை இல்லாமல் வெற்றிக்கொடு படத்தில் இயல்பான சோகத்தை வெளிப்படுத்தியிருப்பார் சார்லி.

வட்டார வழக்கு வசனத்தில் அசத்தியிருக்கும் சார்லி

பார்த்திபனும் முரளியும் ஏஜெண்ட்டின் அலுவலகத்தில் நுழையும் போது, நமக்கு அறிமுகமாவார் சார்லி. எண்ணைய் தடவி படிய வாரப்பட்ட தலைமுடி, நெற்றியில் விபூதி, மடித்து விடப்பட்ட முழுக்கைச் சட்டை, ஏதோ ஒரு கம்பெனியின் பெயர் பொறித்த துணிப்பையை மார்போடு அணைத்துக் கொண்டிருப்பார். ஓர் எளிய மனிதனின் சித்திரம் அந்தத் தோரணையில் வெகு இயல்பாக வெளிப்பட்டிருக்கும். அவரும் பணம் கட்ட வந்தவர்தான்.

வெற்றிக்கொடி கட்டு திரைப்படம் - நடிகர் சார்லி
வெற்றிக்கொடி கட்டு திரைப்படம் - நடிகர் சார்லி

“துபாய் போகணும்னா நிறையப் பணம் கட்ட வேண்டியிருக்கும். உங்களால முடியுமா?” என்று போலி ஏஜெண்ட்டாக நடித்திருக்கும் ஆனந்த்ராஜ் கேட்க, அசல் கிராமத்தான் மொழியில் பணிவாகப் பேசுவார் சார்லி. “பணத்தைப் பத்தி கவலைப்படாதீங்க முதலாளி. என்னை துபாய்க்கு அனுப்பி வெச்சா மட்டும் போதும். எங்க ஆத்தா, புள்ளைங்களை நான்தான் காப்பாத்தணும்” என்று சொல்லி விட்டு பேண்ட்டை தூக்கி உள்ளே குழாய் மாதிரி இருக்கும் நீளமான பையை வெளியே எடுப்பார்.

வெற்றிக்கொடி கட்டு திரைப்படம் - நடிகர் சார்லி
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 26 | நாயகன் பட ‘ஜனகராஜ்’!

“என்னங்க இது?” என்று ஏஜெண்ட் ஆச்சரியப்பட “எங்க ஆத்தா.. பட்டணத்துப் பக்கம் போற. எத்துவாளிப் பயலுவ நெறைய இருப்பானுவ. கொஞ்சம் அசந்தாலும் பிக்பாக்கெட் அடிச்சுப்பிடுவானுவ..ன்ட்டு இடுப்புல இதை கட்டி விட்டுச்சு” என்று அசட்டுத்தனமான சிரிப்புடன் சொல்வார். பிறகு பையிலிருக்கும் ரூபாய் நோட்டுக்களை அப்படியே ஒட்டுமொத்தமாக பொலபொலவென்று மேஜை மீது கவிழ்ப்பார்.

ஏஜெண்ட் சங்கடத்துடனும் சற்று எரிச்சலுடனும் பார்க்க, “தப்பா நெனச்சுக்கப்படாது நீங்க. ஊர்ல எல்லோரும் சிறுகச் சிறுக பாடு பட்டு சேர்த்த பணமய்யா.. ஆத்தாவோட சிறுவாட்டுக்காசு.. என் பொண்டாட்டியோட நகை, நட்டு எல்லாம் வித்த பணம்” என்று சார்லி அசட்டுத்தனமான சிரிப்புடன் சொல்லும் போது ரூபாய் நோட்டுக்களில் ஒன்று காற்றில் அசைந்து கீழே விழப் போகும்.

வெற்றிக்கொடி கட்டு திரைப்படம் - நடிகர் சார்லி
வெற்றிக்கொடி கட்டு திரைப்படம் - நடிகர் சார்லி

பதட்டத்துடன் அதை குவியலில் தள்ளி வைத்து விட்டு “எண்ணிப் பார்த்துக்கங்க முதலாளி. சரியா இருக்கும். என்னை துபாய்க்கு மட்டும் அனுப்பி வெச்சிட்டீங்கன்னா உங்களுக்கு கோவில் கட்டி கும்பிடுவேன்” என்று பணிவான சிரிப்போடு சொல்லி விட்டு கிளம்ப மனமில்லாமல் கிளம்புவார்.

பாமரத்தன்மையை சிறப்பான நடிப்பால் வெளிப்படுத்தியவர்

விமானத்திற்கான பயணச்சீட்டு வரும் வரையில் அனைவருக்கும் தங்குமிடம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். “துபாய்க்கு போறது உறுதியாகிப் போச்சு” என்று மகிழ்ச்சியான சிரிப்புடன் நள்ளிரவில் சார்லி குடும்பத்திற்கு கடிதம் எழுதும் காட்சியைப் பார்க்க பாவமாக இருக்கும். மறுநாள் காலையில் “அண்ணாச்சி.. நீங்க ஒரு ரூபாய் எனக்கு தரணும். மறந்துராதீங்க..” என்று டெலிபோன் பூத் ஆசாமியிடம் ஒற்றை ரூபாய்க்காக பலமுறை நினைவுப்படுத்துவார்.

ஆனால் அவர் இழக்கப் போவது ஒரு லட்சம் ரூபாய் என்பதை அப்போது அவர் அறிந்திருக்க மாட்டார். “இந்தக் காசை சம்பாதிக்கத்தானே குடும்பத்தை விட்டுட்டு இத்தனை கஷ்டப்படறோம்” என்று கைகட்டிக் கொண்டே பார்த்திபனிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பேசும் காட்சி நெகிழ்வானது.

வெற்றிக்கொடி கட்டு திரைப்படம் - நடிகர் சார்லி - பார்த்திபன்
வெற்றிக்கொடி கட்டு திரைப்படம் - நடிகர் சார்லி - பார்த்திபன்

ஏர்போர்ட்டிற்கு அழைத்துச் செல்ல எவரும் வராததால் அனைவரும் பதட்டமாகி விடுவார்கள். பார்த்திபனும் முரளியும் ஏஜெண்ட் அலுவலகத்திற்கு தொலைபேசி தகவலை அறிய முயற்சிக்கும் போது அவர்களின் முகத்தையே பதட்டமும் ஆவலுமுமாக சார்லி பார்த்துக் கொண்டிருக்கும் காட்சியில் ஒரு பாமரனின் அறியாமையை கச்சிதமாக வெளிப்படுத்துவார்.

வெற்றிக்கொடி கட்டு திரைப்படம் - நடிகர் சார்லி
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 21 | குருமார்களின் ரகசிய வன்மத்தின் விதை, ஆடுகளம் பேட்டைக்காரன்

தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறியும் இவர்கள், ஏஜெண்ட் அலுவலகத்தை சூறையாடி விடுவதால் காவல் நிலையத்தில் அடைக்கப்பட்டு விடுவார்கள்.

“அய்யா.. நாங்கள்லாம் பணத்தைப் பறிகொடுத்தவங்கய்யா. ஏமாத்துனவங்களை விட்டுட்டு எங்களைப் பிடிச்சு உள்ளே போட்டிருக்கியள. இதுதான் உங்க ஊர் சட்டமா?” என்று ஆவேசமாக குரல் எழுப்புவது சார்லிதான். அந்த அப்பாவித்தனமான முகத்திலிருந்து அப்படியொரு ஆவேசமும் கோபமும் துயரமும் கிளம்பி வரும்.

வெற்றிக்கொடி கட்டு திரைப்படம் - நடிகர் சார்லி
வெற்றிக்கொடி கட்டு திரைப்படம் - நடிகர் சார்லி

சிரிப்பும் அழுகையும் கலந்த அருமையான நடிப்பு

இதற்குப் பிறகு நீண்ட நேரத்திற்கு சார்லி சம்பந்தப்பட்ட காட்சி வராது. திடீரென ஒரு என்ட்ரி சீன் வரும். பல நாள் தாடி, கலைந்த தலை, நெற்றி முழுக்க விபூதி என்று பரதேசி கோலத்தில் பஸ்ஸில் வந்து இறங்குவார். ஏமாந்தவர்களுக்கு பணம் ஏதாவது திரும்பக் கிடைத்ததா என்று ஊர் ஊராக தகவல் தேடி அலைவார்.

அப்படி வந்து இறங்கிய ஊர்தான் கரிசல்பட்டி. முரளியின் வீடு இருக்கும் இடம். முரளியும் பார்த்திபனும் இடம் மாறி தாங்கள் 'துபாயில் வேலை செய்து கொண்டிருப்பதாக' டிராமா ஆடிக் கொண்டிருப்பார்கள். ஆனால் சார்லியின் வருகை அந்தக் குட்டை அம்பலப்படுத்தி விடுமோ என்கிற பதைப்புடன் காட்சி நகரும்.

வெற்றிக்கொடி கட்டு திரைப்படம் - நடிகர் சார்லி - பார்த்திபன்
வெற்றிக்கொடி கட்டு திரைப்படம் - நடிகர் சார்லி - பார்த்திபன்

“துபாய் போறதுக்கு பணம் கட்டி ஏமாந்த சேகரு வீடு இதுதானே?” என்று முரளியின் அம்மாவிடமே (மனோரமா) விசாரிப்பார் சார்லி. ‘தன்னுடைய மகன் துபாயில்தானே இருக்கிறான்’ என்று அவர் குழப்படைவார். அப்போது அங்கு வரும் பார்த்திபன் சூழலின் சிக்கலை சட்டென்று உணர்ந்து “சேகர் துபாயில இருக்கறதா சொல்லியிருக்கேன். கொஞ்சம் அட்ஜட்ஸ்ட் பண்ணிக்க” என்று மெதுவாக காதில் சொல்ல, சடக்கென்று மாறுகிற சார்லியின் நடிப்பு அருமையாக இருக்கும்.

வெற்றிக்கொடி கட்டு திரைப்படம் - நடிகர் சார்லி
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 19 |கொடுமைக்கார மனைவி ‘பொன்னாத்தா’வாக வடிவுக்கரசி!

“ஹாஹாஹா.. நான்தான் துபாய் நாட்டின் இளவரசன். இவன் என்னிடம் பணிபுரியும் சேவகன். ஏன் ஒட்டகமெல்லாம் மெலிந்திருக்கிறது… நீங்கள் கவனிப்பதில்லையா?” என்று புத்தி பேதலித்த ஆசாமி போல் நடித்து உடனடியாக நிலைமையைச் சமாளிக்கும் இடத்தில் சார்லியின் நடிப்பு அருமையாக இருக்கும். ஏறத்தாழ ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட காட்சி இது.

சிரித்துக் கொண்டே பார்த்திபனிடம் வந்து “ஏமாத்திட்டாங்கய்யா.. எங்க வீட்லயே என்னை யாரும் மதிக்க மாட்றாங்கய்யா” என்று சட்டென்று அவர் அழும் காட்சியில் மனம் கலங்காதவர்கள் எவரும் இருக்க முடியாது.

“பாவம்… பணத்தைக் கட்டி ஏமாந்ததுல பைத்தியம் பிடிச்சிருச்சு போல” என்று பார்த்திபன் பொய் சொல்லி சமாளிக்க “யாரு பைத்தியம்?” என்று சட்டென்று தலையை நிமிர்த்தி அப்பாவித்தனமாக கேட்பார் சார்லி. உண்மை வெளிப்படாமல் இருப்பதற்காக தன்னையே பைத்தியமாக அவர் ஆக்கிக் கொள்வது நெகிழ்வை ஏற்படுத்துகிற காட்சியாக இருக்கும்.

வெற்றிக்கொடி கட்டு திரைப்படம் - நடிகர் சார்லி - பார்த்திபன்
வெற்றிக்கொடி கட்டு திரைப்படம் - நடிகர் சார்லி - பார்த்திபன்

பிறகு ஊர் எல்லையை நோக்கி நடக்கும் போது, பணத்தை இழந்ததால் தான் பட்ட சிரமங்களையெல்லாம் பார்த்திபனிடம் துயரத்துடன் சொல்லிக் கொண்டே வருவார். பணம் போன தகவலைக் கேள்விப்பட்ட சார்லியின் தாயாருக்கு பக்கவாதம் வந்து விடும். “இப்படியொரு ஏமாஞ்சாமி கூட என்னால வாழ முடியாது” என்று மனைவி பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு கிளம்பி விடுவார். சார்லி அடைந்த ஒரு ஏமாற்றம் அவரது வாழ்க்கையையே தலைகீழாக புரட்டிப் போட்டு விடும். அந்தத் துயரமும் சோகமும் அவரது விவரிப்பில் அச்சு அசலாக பிரதிபலிக்கும்.

வெற்றிக்கொடி கட்டு திரைப்படம் - நடிகர் சார்லி
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 18 |முரட்டுத்தனமான அண்ணனுக்கு பாசமிகு தங்கையாக செவனம்மா!

“பணத்தை ஏமாத்துனவன் மட்டும் என் கிட்ட கிடைச்சான்னா.. அப்படியே ஒரே சொருகு” என்று கொலைவெறியுடன் சொல்லி பல்லைக் கடித்துக் கொண்டு கோபத்தால் முகம் சிவக்கும் போது, சன்னதம் வந்தது போல் வேறு ஆசாமியாக மாறி விடுவார் சார்லி. பார்த்திபனிடம் விடைபெற்று கிளம்பும் போது “ஒரு பத்து ரூபா இருக்குமா?” என்று பரிதாபமாக சார்லி கேட்பது கண்கலங்க வைக்கும் காட்சி. ரூ.200 கிடைத்தவுடன் “இவ்வளவு பணமா.. லாட்டரி டிக்கெட் வாங்கி வர்ற பரிசுல எல்லோருக்கும் பணத்தைக் கொடுப்பேன்” என்று மகிழ்ச்சியாக சொல்வார்.

வெற்றிக்கொடி கட்டு திரைப்படம் - நடிகர் சார்லி - பார்த்திபன்
வெற்றிக்கொடி கட்டு திரைப்படம் - நடிகர் சார்லி - பார்த்திபன்

சிறந்த நடிப்பால் ‘வெற்றிக் கொடி கட்டிய’ சார்லி

தங்களை ஏமாற்றிய ஏஜெண்ட், இன்னொரு ஊரின் ஹோட்டலில் முகாம் இட்டிருப்பதைக் கண்டு பிடித்து விடும் சார்லி, ஏமாந்தவர்கள் அனைவருக்கும் தந்தி கொடுப்பார். ஆனால் போலி ஏஜெண்ட்டின் ஆட்களுக்கு இது தெரிந்து போய் சார்லியைக் கொல்வதற்காக துரத்துவார்கள்.

நொிசல் மிகுந்த சாலையின் நடுவே ‘என்னை யாராவது காப்பாற்ற மாட்டீர்களா?’ என்பது போல கைகள் இரண்டையும் தூக்கிக் கொண்டு உயிர் பயத்துடன் சார்லி ஓடும் காட்சி பார்க்கவே பரிதாபத்தை ஏற்படுத்தும். அடியாட்களின் மூலம் கத்தியால் குத்துப்பட்டு கீழே விழுவார். அந்தச் சமயத்திலும் ஏமாற்றியவர்கள் பற்றிய தகவலை முரளி மற்றும் பார்த்திபனிடம் திக்கித் திணறி சொல்வார். உயிருக்குப் போராடும் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வார்கள்.

வெற்றிக்கொடி கட்டு திரைப்படம் - நடிகர் சார்லி - பார்த்திபன் - முரளி
வெற்றிக்கொடி கட்டு திரைப்படம் - நடிகர் சார்லி - பார்த்திபன் - முரளி

எதிர்காலக் கனவிற்காக தனது நிகழ்காலத்தையே ஒட்டுமொத்தமாக அடமானம் வைத்து போலியானவர்களிடம் அனைத்தையும் இழந்து, வாழ்க்கையைத் தொலைத்து புத்தி பேதலித்து சாலையில் திரியும் பல்வேறு அப்பாவி நபர்களின் துயரங்களை தனது அபாரமான நடிப்பால் வெளிப்படுத்தி ‘பழனி’ என்கிற பாத்திரத்தை மறக்க முடியாதபடிக்கு செய்து விட்டார் சார்லி.

வெற்றிக்கொடி கட்டு திரைப்படம் - நடிகர் சார்லி
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 15 | ‘ராஜ பார்வை’யின் ரகளை ‘தாத்தா’ எல்.வி.பிரசாத்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com