மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 15 | ‘ராஜ பார்வை’யின் ரகளை ‘தாத்தா’ எல்.வி.பிரசாத்

15 -வது வாரமான இந்த வாரம் ‘மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள்’ தொடரில் ராஜ பார்வை படத்தில் எல்.வி.பிரசாத் ஏற்று நடித்திருந்த நான்சி தாத்தா கதாப்பாத்திரத்தை பார்க்கப்போகிறோம்.
ராஜ பார்வை
ராஜ பார்வைமுகநூல்

உலக சினிமாவின் பரிச்சயம் கொண்டிருந்த கமல்ஹாசன், தமிழ் சினிமாவிலும் அத்தகைய மாற்றத்தைக் கொண்டு வர விரும்பினார். இந்த நோக்கில், பரீட்சார்த்த முறையில் தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் அவர் உருவாக்கிய முதல் திரைப்படம் ‘ராஜ பார்வை’. சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் இயக்கினார். வணிக ரீதியான வெற்றியை அடையாவிட்டாலும் மாற்று சினிமாவை விரும்பும் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற படமாக ராஜ பார்வை இருந்தது.

எல்.வி.பிரசாத்.
எல்.வி.பிரசாத்.ராஜபார்வை திரைப்படம்

இந்தப் படத்தில் பிரதான பாத்திரங்களைத் தாண்டி ரசிகர்களை அதிகம் கவர்ந்த பாத்திரம் ‘தாத்தா’. ஆம், ஹீரோயின் மாதவியின் தாத்தா கேரக்டரில் துறுதுறுவென நடித்து கவர்ந்தவர் எல்.வி.பிரசாத். கண்டிப்பான அப்பாவும் அம்மாவும் காதலுக்கு குறுக்கே நின்றாலும், அவர்களின் பாட்டியும் தாத்தாவும் காதலுக்கு உதவுவதை பல திரைப்படங்களில் பார்த்திருப்போம். அப்படியாக இந்தப் படத்தில் காதலர்களுக்கு உதவும் குறும்பான பாத்திரத்தில் ரசிக்கும்படியாக நடித்தவர் எல்.வி.பிரசாத்.

யார் இந்த எல்.வி.பிரசாத்?

இவர் சாதாரண துணை நடிகர் அல்ல. இந்தியச் சினிமாவின் முன்னோடிகளில் ஒருவர். சினிமாவின் உயரிய விருதான ‘தாதா சாகேப் பால்கே’ விருதை வென்றவர். தெலுங்கு சினிமாவின் முன்னோடியும் கூட. இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என்கிற பல்வேறு முகங்களைக் கொண்டவர். பிரசாத் லேப், பிரசாத் பிலிம் அண்ட் டெலிவிஷன் அகாடமி, பிரசாத் புரொடக்ஷன்ஸ் உள்ளிட்டு ஆலமரம் போல் சினிமாத் துறையில் விரிந்திருக்கும் பல நிறுவனங்களுக்கு விதையை இட்டவர் இவர்தான்.

முதல் பேசும் இந்தித் திரைப்படமான ஆலம் ஆரா, முதல் பேசும் தெலுங்கு சினிமாவான பக்த பிரகலாதா, முதல் பேசும் தமிழ் சினிமாவான காளிதாஸ் போன்ற படங்களில் துணை நடிகராக நடித்த பெருமை இவருக்குண்டு. துணை இயக்குநராக உயர்ந்து தெலுங்கு, தமிழ், இந்தி சினிமாவில் ஏராளமான படங்களை இயக்கியதோடு, கணிசமான படங்களையும் தயாரி்த்திருக்கிறார்.

எல்.வி.பிரசாத்.
எல்.வி.பிரசாத்.

ஆரம்பத்தில் நடிகராக பயணத்தைத் துவங்கினாலும் தயாரிப்பாளராக உயர்ந்த பிறகு நடிப்பதை குறைத்துக் கொண்டார் எல்.வி.பிரசாத். ராஜ்கமல் பிலிம்ஸ் துவங்கி முதல் படமாக ‘ராஜ பார்வை’ திரைப்படத்தை தயாரித்தது. (இது கமலின் நூறாவது படமும் கூட). ‘நாயகிக்கு தாத்தா வேடத்தில் நீங்கள் நடித்தால் நன்றாக இருக்கும் என்று கமல் விரும்புகிறார்’ என்று எல்.வி.பிரசாத்திடம் தூது சென்றவர் சாருஹாசன்.

ராஜ பார்வை
‘வசீகரம்.. டெரர்.. மர்மம்.. ட்ரேட்மார்க் சிரிப்பு..’ தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்த ஜிந்தா!

ஆனால் பிரசாத் நடிக்கத் தயங்கியிருக்கிறார். அவரது குடும்பத்திலும் இதை ஆட்சேபித்திருக்கிறார்கள். பிறகு, ‘ஒரு நாள் மட்டும் நடிக்கிறேன். அது எப்படி வந்திருக்கிறது என்பதைப் பார்த்த பின்புதான் நடிப்பதைத் தொடர்வேன்’ என்று நிபந்தனை விதித்தாராம், எல்.வி.பிரசாத்.

ரசிக்க வைக்கும் தாத்தாவின் குறும்புகள்

மாதவியும் தாத்தாவும் ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்குள் நுழைகிறார்கள். ‘சீக்கிரம் வாங்க தாத்தா’ என்று மாதவி அவசரப்படுத்த “நீதானே பிரசன்ட் வாங்கச் சொன்னே. இப்ப பிரசன்ட் ஒண்ணுதான் குறைச்ச.. அந்த குமரிக்கு” என்று தாத்தா கிண்டல் செய்வது தன் மனைவியைக் குறித்து. இருவரும் வாய் விட்டு சிரிக்கிறார்கள். கண்டிப்பான மனைவியை தாத்தாவால் நேரடியாக கிண்டலடிக்க முடியாது என்பது அப்போதே நமக்கு புரிந்து விடுகிறது. இவருடைய மனைவியாக நடித்திருப்பவர் நிர்மலாம்மா. தெலுங்கில் பிரபல நடிகை. எண்ணூறு படங்களுக்கும் மேலாக நடித்திருக்கிறார். பெரும்பாலும் பாட்டி வேடம்.

ராஜ பார்வை
ராஜ பார்வை

லிப்டின் கதவின் நடுவில் மாதவி மாட்டிக் கொள்ள உள்ளே இருக்கும் கமல்ஹாசன் சிரிக்கிறார். “யார்.. இவன் வேடிக்கையா பிஹேவ் பண்றானே ?’” என்று தாத்தா தரும் முகபாவம் அருமையாக இருக்கிறது. “எனக்காக ஆறாவது மாடி அழுத்துங்களேன்” என்று கமல் கேட்க, ‘அழுத்தியாச்சு’ என்று சற்று எரிச்சல் கலந்த குரலில் சொல்கிறார் தாத்தா.

ஹோட்டலில் காபரே நடனம். தாத்தா தலையை ஆட்டி ஆட்டி ரசிக்கும் விதம் சுவாரசியமாக இருக்கிறது. கமல் கண்பார்வையற்றவர் என்பது தெரியாமல் மாதவி கோபப்பட்டு, பிறகு மன்னிப்பு கேட்பதற்காக தவிக்கிறார். பத்திரிகையில் வந்திருக்கும் ஒரு விளம்பரத்தைப் பார்த்து விட்டு “நான்சி.. நான்சி. உனக்கு மன்னிப்பு கேட்க ஒரு சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு” என்று ஒரு சிறுவனின் உற்சாகத்துடன் சொல்கிறார் தாத்தா. இந்தக் குறும்பு படம் முழுவதும் அவரது உடல்மொழியில் தெரிகிறது.

பாட்டியைக் கிண்டலடிக்கும் தாத்தா

கமல் தன்னுடைய அறையில் இருட்டில் கூட சகஜமாக புழங்குவதைப் பார்த்து ஆச்சரியமடையும் மாதவி, தனது வீட்டில் அதே போல் பிராக்டிஸ் செய்து பார்த்து சுவரில் முட்டிக் கொள்கிறார். “என்னம்மா.. சுவத்துல பல்லி மாதிரி ஒட்டிக்கிட்டிருக்க” என்று கிண்டலடிக்கிறார் தாத்தா. “சும்மா கிண்டல் பண்ணாதீங்க தாத்தா. உங்களுக்கு கண்ணைக் கட்டி விட்டா பல்லியை விட கேவலமா இருப்பீங்க” என்று செல்லமாக கோபித்துக் கொள்கிறார் மாதவி.

ராஜ பார்வை
ராஜ பார்வை

“இதென்ன பிரம்ம சூத்திரமா?. சின்ன வயசுல நான் இந்த மாதிரி நிறையப் பண்ணியிருக்கேன்” என்று தாத்தா அலட்டலாகச் சொல்ல, “ஓகே.. கண்ணைக் கட்டிக்கிட்டு.. டெலிபோனை போய் எடுங்க” என்று மாதவி விளையாட்டை ஆரம்பிக்க, தாத்தா கண்ணைக் கட்டிக் கொண்டு போய் காஃபி கொண்டு வரும் பாட்டி மீது முட்டி கோப்பை கீழே விழுகிறது. “என்னதிது?” என்று பாட்டி அதட்ட “யம்மோவ். இது டெலிபோன் இல்ல. பெரிய சைஸ் ரேடியோ” என்று தாத்தா பம்மும் காட்சி சுவாரசியமானது.

ராஜ பார்வை
மழலை மாறாத பாசத்துடன் ஒரு குறும்புக்கார அராத்து! பாலக்காட்டு மாதவனின் அசத்தல் காம்போ ‘எடோ... கோபி’

சாப்பாட்டு மேஜை. தோசையில் முடி இருப்பதைப் பார்த்து ‘ரிட்டிகுலஸ்’ என்று வெடிக்கிறார் மாதவியின் தந்தை. இந்தச் சமயத்தில் தாத்தாவின் குறும்பு வெளிப்படுகிறது. “ப்பா.. கறுப்பு முடி.. நல்ல வேளை நான் இல்லை… தோசைக்கு தாடி முளைச்சிருக்கு. கேசவர்த்தினி ஆயில்ல சுட்டியோ?” என்று தன் மனைவியை குறும்புடன் பார்க்க, பாட்டி முறைக்க, சட்டென்று பம்முகிறார் தாத்தா.

தாத்தாவிற்கும் கோபம் வரும்

கமல் ஒரு வயலின் கலைஞர் என்பதால் ரெக்கார்டிங் பார்க்க ஆசைப்படுகிறார் மாதவி. ஆனால் வீட்டில் பர்மிஷன் கிடைக்காது. நேரமும் ஆகி விட்டது. “உங்க அப்பாவோட கார்ல ஏறி, எங்காவது பக்கத்துல நிறுத்தி, இங்கதான் என் பிரெண்டு வீடுன்னு சொல்லி இறங்கிக்க வேண்டியதுதானே?” என்று பேத்திக்கு ஐடியா தந்து குறும்பாக கண்ணைச் சிமிட்டுகிறார் தாத்தா.

கமலுடன் ரெக்கார்டிங் நாளைக் கழித்து விட்டு அவருடனே வீட்டிற்குத் திரும்புகிறார் மாதவி. “எங்க போயிட்ட. உங்க அப்பன் கத்திக்கிட்டு இருக்கான்” என்கிறார் தாத்தா கதவைத் திறந்த தாத்தா. “தாத்தா.. இவர்தான் ரகு. இன்னிக்கு இவரோட பர்த்டே” என்றவுடன் தாத்தாவின் முகம் மலர்கிறது. “ஹலோ..வாங்க.. நான்தான் தாத்தா” என்று பெருமிதத்துடன் அறிமுகம் செய்து கொள்கிறார். “காஃபி சாப்பிடறீங்களா.. நல்ல காஃபி சாப்பிடணும்னா இதான் நல்ல சந்தர்ப்பம். நான்சியோட பாட்டி சர்ச்சுக்கு போயிருக்கா” என்று தாத்தாவின் குரலில் கிண்டல் வழிகிறது.

ராஜ பார்வை
ராஜ பார்வை

தன் மகள் எங்கோ சுற்றி விட்டு வீட்டிற்கு தாமதமாக வந்திருப்பதை அறிந்து மாதவியின் தந்தை கோபமாக கத்துகிறார். விருந்தினர் வந்திருப்பதை கூட அவர் மதிக்கவில்லை. தாத்தா அதைச் சுட்டிக் காட்டியதும் “நீங்க உள்ளே போங்க” என்று மகன் துரத்துவதால் கோபத்துடன் உள்ளே செல்கிறார் தாத்தா. மாதவியின் தந்தையும் அண்ணனும் சேர்ந்து கமலை அவமானப்படுத்தும் விதமாக பேசி வெளியே அனுப்புகிறார்கள். பிறகு கமலுக்கு பார்வையில்லாததைப் பற்றி மலினமான மொழியில் கிண்டலடிக்கிறார்கள்.

ராஜ பார்வை
“நின்னு ஜெயிக்கறதுதான் பெருமை” - பாசிட்டிவ்வான பாதையை மாணவர்களுக்கு சொன்ன நல்லாசிரியர் ‘பிரேம்’!

தன்னுடைய ஸ்டிக்கை எடுக்க மறந்து விடும் கமல், அதை எடுப்பதற்காக திரும்பி வரும் போது தன் மீது கொட்டப்படும் வார்த்தைகளைக் கேட்டு அதிர்ச்சியடைந்து, அவமானவுணர்வுடன் வெளியில் செல்ல, இதைக் கவனித்துக் கொண்டிருக்கும் தாத்தாவிற்கு கோபம் வருகிறது. தன் மகனிடம் சென்று கட்டுப்படுத்தப்பட்ட கோபத்துடன் சொல்கிறார். “கொஞ்சம். மெதுவா பேசுங்கப்பா.. யாரா இருந்தாலும் விருந்தாளியா வந்திருக்கறவங்க கிட்ட மரியாதையா பேசுறதுதான் நாகரிகம். நீங்க உதிர்த்த பொன்மொழிகளை எல்லாம் கேட்டு அவரு சந்தோஷமா போயிருக்காரு” என்று பல்லைக் கடித்தபடி சொல்கிறார் தாத்தா. இப்போது அவருடைய முகபாவத்தில் கோபமும் எரிச்சலும் தெரிகிறது.

காதலுக்கு பாலமாக இருக்கும் தாத்தா

கமலுடன் பிறந்த நாளைக் கொண்டாட விரும்பிய மாதவி வீட்டாரால் தடுக்கப்பட்டாலும், பிறகு அவர்களுக்குத் தெரியாமல் கமலின் அறைக்குச் செல்கிறார். அவமதிப்பு காரணமாக கோபத்துடன் இருக்கும் கமலை சமாதானப்படுத்துகிறார். தன்னுடைய காதலையும் அப்போது தெரிவிக்கிறார். பிறகு தாமதமாக வீட்டிற்கு திரும்புகிறார். சுவர் ஏறிக் குதித்து தாத்தாவின் உதவியுடன் ஏணியில் ஏறி மாடிக்குச் செல்கிறார். “என்னம்மா. இவ்ள நேரம் பண்ணிட்ட.. சரி. பர்த்டேக்கு விஷ் பண்ணி்ட்டியா?” என்று தாத்தா கேட்க “தாத்தா.. அவரும் வந்திருக்காரு” என்று மாதவி சொல்ல, கீழே டார்ச் அடித்துப் பார்ப்பவர் “மிஸ்டர் ரகு.. நான்தான் தாத்தா.. ஹாப்பி பர்த்டே” என்று சந்தோஷத்துடன் சொல்கிறார். அவர்கள் கிளம்பும் போது ‘ரகு.. ஐ லவ் யூ’ என்று மாதவி உரத்த குரலில் கத்த, அதுவரை சிரித்த முகமாக இருந்த தாத்தாவின் முகம் சட்டென்று அதிர்ச்சிக்கு மாறுகிறது. “இது எப்பத்துல இருந்து?” என்று அவர் கேட்பது சுவாரசியமான காட்சி.

ராஜ பார்வை
ராஜ பார்வை

மாதவியின் வீட்டிற்கு போன் கால் வருகிறது. அதை எடுக்க வரும் மகனுக்கு முன்னால் பாய்ந்தோடி தாத்தா எடுக்கிறார். போன் செய்தவர் கமல் என்பதை உணர்ந்ததும் “நான்சி. உனக்கு மல்லிகா கிட்ட இருந்து போன் வந்திருக்கு” என்று கோட் வேர்டில் அழைக்கிறார். “யாரு.. மல்லிகா?’ என்று மாதவி குழப்பத்துடன் கேட்க “மல்லிகான்னு சொல்றன்ல” என்று கண்ணை குறும்பாக சிமிட்டிக் கொண்டு சொல்ல மாதவிக்கு உடனே புரிந்து விடுகிறது. அதையே தன் உரையாடலில் பின்பற்றுகிறார்.

ராஜ பார்வை
‘சிறகடித்து வானில் பறந்த..’ அன்பு... உணர்ச்சிகரமாக உயிர்கொடுத்த கலையரசன்!

தந்தை மறுநாள் ஊருக்குச் செல்லவிருப்பதால் அன்று முழுவதும் கமலுடன் கழிக்க மாதவி முடிவு செய்கிறார். மறுநாள். நேரம் நத்தை போல் ஊர்வதாக மாதவிக்குத் தோன்றுகிறது. கடிகாரம் மெதுவாக அசைகிறது. அப்பா கிளம்புவது ஸ்லோ மோஷனில் தெரிகிறது. தாத்தா இதைக் கிண்டலடிக்கிறார். பின்னணி இசையும் மெதுவான தாளத்தில் மாற, இந்தக் காட்சிக் கோர்வை சுவாரசியமாக எடுக்கப்பட்டிருக்கிறது.

‘அந்தக் காலத்துல என்னோட காதல் பார்த்தீங்கன்னா’..

சர்ச் வாசல் “ஏம்ப்பா.. ரகு.. நீ ஏன் நான்சியோட அப்பா கிட்ட வந்து பொண்ணு கேக்கக்கூடாது?” என்று ஐடியா தருகிறார் தாத்தா. ‘ஐயோ.. என்ன தாத்தா..இது.. எப்படி நடக்கும்?’ என்று சிணுங்குகிறார் மாதவி. “ஏன் நடக்காது.. அந்தக் காலத்துல என் மாமன் கிட்ட கேட்டேனே.. அசந்துட்டான் கிழவன்.. பெரிய கலாட்டாவெல்லாம் பண்ணிப் பார்த்தான்.. பாட்டி ரொம்ப ஸ்ட்ராங்கா நின்னதால கல்யாணம் ஓகே ஆச்சு..” என்று தாத்தா பெருமிதமாக சொல்ல, மாதவி வாய் விட்டு சிரிக்க தாத்தாவின் முகம் மாறுகிறது. “ஏன் சிரிக்கற?” என்று அடிபட்ட முகத்துடன் கேட்க “இல்ல.. பாட்டி எப்படி லவ்வெல்லாம் பண்ணாங்க?” என்று மாதவி குறும்பாகக் கேட்க, தாத்தாவின் முகத்தில் வெட்கமும் சிரிப்பும் வருகிறது. “என் காதல் கதை ரொம்ப பெரிசு... ஆயிரத்து தொள்ளாயிரத்து” என்று அவர் இழுக்க மற்றவர்கள் தலையில் கை வைத்துக் கொள்கிறார்கள்.

ராஜ பார்வை
ராஜ பார்வை

கமலும் அவரது நண்பரும் பெண் கேட்டு மாதவியின் வீட்டிற்கு வருகிறார்கள். இதைக் கேட்டு மாதவியின் தந்தை கோபத்தில் வெடிக்க, “இந்த விஷயம் தாத்தாவிற்கு கூட தெரியும். அவர் ஆசிர்வாதம் பண்ணியிருக்கார்” என்று கமலின் நண்பர் கோர்த்து விட, ‘திஸ் ஈஸ் ரிட்டிகுலஸ். டாடி.. டாடி..” என்று அழைக்கப்பட, வியர்த்துப் போன முகத்தை கைக்குட்டையால் ஒற்றிக் கொண்டே பதட்டத்துடன் தடுமாறியபடி வருகிறார் தாத்தா. ”இந்த விஷயம் முன்னமே உங்களுக்குத் தெரியுமா” என்று மகன் கோபத்துடன் கேட்க “அது வந்து இன்னிக்கு.. அதாவது அன்னிக்கு” என்று தாத்தா தடுமாறியபடி சொல்வது சுவாரசியமான காட்சி.

ராஜ பார்வை
கரணின் கேரியரில் மறக்க முடியாத ரோல்... கோழைத்தனமும் கையாலாகததனமும் நிறைந்த ஐ.சி.மோகனை நினைவிருக்கா?

மாதவியின் தந்தையாலும் அண்ணனாலும் தான் அவமானப்படுத்தப்படுவதால் குடித்து விட்டு போதையில் மாதவியின் வீட்டிற்கு மறுபடியும் செல்லும் கமல், அவர்களிடம் வம்பிழுக்க அந்த தள்ளு முள்ளுவில் தாத்தாவையே அடிக்க கை ஓங்கி விடுகிறார் கமல். அதிர்ச்சி, திகைப்பு, வேதனை ஆகியவை கலந்த முகபாவத்துடன் பார்க்கிறார் தாத்தா.

காதலை இணைத்து வைக்கும் தாத்தா

இந்தச் சண்டை காரணமாக கமலுக்கும் மாதவிக்கும் இடையில் கடுமையான பிரிவு ஏற்படுகிறது. தான் கண் பார்வையற்றவன் என்பதால்தான் மாதவி தன்னை வெறுக்கிறாள் என்று தவறாகப் புரிந்து கொள்ளும் கமல், தனக்கு ஏற்பாடு செய்யும் திருமணத்திற்கு மனதில்லாமல் சம்மதிக்கிறார். இன்னொரு பக்கம் மாதவியின் வீட்டிலும் திருமண ஏற்பாடுகள் நடக்கின்றன. “நீயும் ரகுவும் ஒரு முறை நேரா சந்திச்சா எல்லாம் சரியாயிடும்னு எனக்குத் தோணுதும்மா” என்று வருத்தமாக அமர்ந்திருக்கும் பேத்திக்கு ஆலோசனை சொல்கிறார் தாத்தா. “எனக்கு பயமா இருக்கு தாத்தா” என்று மாதவி கலக்கமாகச் சொல்ல அவருடைய தலையை தடவிக் கொண்டே தாத்தா சொல்கிறார். “நீ எழுதற கதை எப்படி முடியும்னு எனக்குத் தெரியாது. ஆனா அது சோகமான முடிவா இருக்கக்கூடாதும்மா” என்று உருக்கமாகச் சொல்கிறார்.

ராஜ பார்வை
ராஜ பார்வை

கமலின் பிரிவு காரணமாக மாதவிக்கு உடல்நலம் குன்றுகிறது. கமலுக்கும் ஏறத்தாழ அதே நிலைமைதான். மாதவியின் திருமணத்தை தள்ளிப் போடும் ஆலோசனையை தாத்தா சொல்ல, அவருடைய மகன் கறாரான குரலில் மறுக்கிறார். மாதவியின் திருமணம் குறித்து சர்ச்சில் மூன்றாவது முறையாக அறிவிக்கப்படுகிறது. அதை ஆட்சேபிக்க முயலும் தாத்தாவை வீட்டார் தடுத்து விடுகிறார்கள். எனவே கமலுக்கு தாத்தா ஒரு கடிதம் எழுதுகிறார். “நீங்கள் இருவரும் நினைத்தால் இதைத் தடுத்திருக்கலாம். ஆண்டவன்தான் எல்லாவற்றையும் முடிவு செய்கிறான் என்றால், இந்த முறை அவன் தவறு செய்து விட்டான்” என்று எழுதி கூடவே திருமண அழைப்பிதழும் வைத்து அனுப்புகிறார்.

ராஜ பார்வை
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 14 | ரகளையான மாடுலேஷன்... மறக்கவே முடியாத ‘விக்டர்’ அருண்விஜய்!

“கிழவனுக்கு திமிரைப் பார்த்தியா?” என்று நண்பன் சலித்துக் கொள்ள “அவரைத் திட்டாத. எனக்கு கண்ணு தெரியாது. அவருக்கு பேச வராது” என்று தாத்தாவிற்கு சப்போர்ட் செய்கிறார் கமல். திருமண நாள். சர்ச். ஏறத்தாழ இறுதிக் கணத்தில் திருமணத்திற்கு செல்ல முடிவெடுக்கிறார் கமல். மணமக்களிடம் திருமண உறுதி சடங்கு கேள்வியை பாதிரியார் கேட்கிறார். மாதவியால் உறுதியாக பதில் சொல்ல முடியவில்லை. மாறாக கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. “டேய் அவ சம்மதிச்சிட்டாளா?” என்று கமல் கேட்க “அவ அழுதுட்டு இருக்காடா. அவளுக்கு இந்தக் கல்யாணத்துல சம்மதம் இல்ல போலிருக்கு” என்று நண்பன் சொல்ல, அப்போதுதான் கமலுக்குள் உறைக்கிறது. ‘நான்சி.. நான்சி. நான்சி..’ என்று கமல் கத்த, மாதவியும் அதைக் கேட்டு ஓடி வருகிறார். இருவரும் வெளியே ஓடுகிறார்கள்.

மறக்க முடியாத பாத்திரத்தைத் தந்த எல்.வி.பிரசாத்

மாதவியின் தந்தை கோபத்துடன் அவர்களைத் தடுக்க முயல, அவரை கன்னத்தில் அறையும் தாத்தா “என் காதல்ல பொறந்தவன்தாண்டா நீ.. ஃபூல். இந்தக் காதலைத் தடுக்காத. இது தெய்வம் நிர்ணயம் பண்ணது” என்று உறுதியான குரலில் சொல்கிறார். “அய்யோ.. என்னங்க. உங்களுக்கு என்ன பைத்தியம் கியித்தியம் பிடிச்சிடுச்சா?” என்று தடுக்க வரும் பாட்டியையும் தாத்தா கன்னத்தில் அறைய, பாட்டி திகைத்துப் போய் பார்க்கிறார். “யப்பா நீங்க போங்க” என்று உத்தரவு போல காதலர்களிடம் தாத்தா சொல்வதே ஆசி போல இருக்கிறது. ‘காட் பிளஸ் யூ’ என்று இரு கைகளையும் உயர்த்தி ஆசிர்வாதம் செய்து தாத்தா அவர்களை வழியனுப்பும் கிளைமாக்ஸ் காட்சி உணர்ச்சிகரமாக இருக்கிறது. வாகனத்தில் விரையும் காதலர்களை தாத்தா பெருமிதப் புன்னகையுடன் பார்க்க “இறைவன் இணைத்ததை மனிதர்கள் பிரிக்காதிருக்கட்டும்” என்கிற தேவ வசனத்துடன் படம் நிறைகிறது.

ராஜ பார்வை
ராஜ பார்வை

நரைத்த தலைமுடி, கெச்சலான உடம்பு, மூக்குக் கண்ணாடி வழியே தெரியும் குறும்பான கண்கள் என்கிற வேடிக்கையான தோற்றத்துடனும் தெலுங்கு வாசனை அகலாத தமிழுடனும் தாத்தா அறிமுகமாகிற போது முதலில் கோணங்கித்தனமாகத்தான் தெரிகிறது. ஆனால் காதலுக்கு உதவுவதற்காக அவர் செய்யும் காரியங்களும் குறும்புகளும் பிடித்துப் போய் அவரை மிகவும் ரசிக்க முடிகிறது.

படத்தின் இறுதியில் நம் மனதில் சிம்மாசனம் இட்டு அமர்கிறார் தாத்தா. எல்.வி. பிரசாத் இந்தப் பாத்திரத்தைக் கையாண்டிருக்கும் விதம் அத்தனை ரகளையாக இருக்கிறது. மறக்கவே முடியாத கேரக்டர் - நான்சி தாத்தா.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com