மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 26 | நாயகன் பட ‘ஜனகராஜ்’!

26-வது வாரமான இந்த வாரம் ‘மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள்’ தொடரில் நாயகன் திரைப்படத்தில் ஜனகராஜ் ஏற்று நடித்திருந்த செல்வம் கதாபாத்திரத்தை பார்க்கப்போகிறோம்.
நாயகன்
நாயகன் முகநூல்

(தொடரின் முந்தைய அத்தியாயங்களை, இங்கே க்ளிக் செய்து வாசிக்கலாம்...)

தமிழ் திரைப்படங்களில் ஹீரோவிற்கு நண்பன் பாத்திரங்களில் வருபவர்கள், பள்ளி அல்லது கல்லூரி வயதில் வந்து இணைவார்கள். காதலுக்கு தூது போவார்கள். இணைந்து பியர் அருந்துவார்கள். ஹீரோவைக் கலாய்ப்பார்கள் அல்லது அவனுக்காக உணர்ச்சிவசப்படுவார்கள் அல்லது உயிர் துறப்பார்கள். பிறகு காணாமல் போய் விடுவார்கள்.

ஆனால் ஹீரோ சிறு பையனாக இருப்பது முதல் முதியவனாகி இறப்பது வரை நண்பன் பாத்திரம் ஹீரோவோடு கடைசி வரை பயணிப்பதென்பது அபூர்வமானது. ‘நாயகன்’ திரைப்படத்தில் ‘செல்வா’ என்கிற பாத்திரத்தில் ஜனகராஜ் அதைச் சாத்தியப்படுத்தியிருந்தார்.

ஒரு முதியவர் நீதிமன்றத்தின் உள் அறையிலிருந்து ‘ஹா’வென்று கத்திக் கொண்டே குழந்தை போல பரவசத்துடன் ஓடி வருகிறார். ‘கண்டேன் சீதையை’ என்கிற தகவல் போல ‘வேலு நாயக்கருக்கு எதிரா ஆதாரம் போதலையாம். சாட்சி பத்தலையாம்… நம்ம நாயக்கர இவங்களால எதுவும் பண்ண முடியல’ என்று வெளியே திரளாக கூடியிருக்கும் மக்களிடம் உற்சாகத்துடன் கத்துகிறார். அதைக் கேட்டு கூட்டம் மகிழ்ச்சியில் ஆர்ப்பரிக்கிறது.

நாயகன் திரைப்படத்தின் ‘கிளைமாக்ஸில்’ ஒரு பகுதியாக வரும் இந்தக் காட்சியை எவராலும் எளிதில் மறந்து விட முடியாது.

ஜனகராஜ் - குணச்சித்திரம் + நகைச்சுவையின் கலவை

நடிப்பார்வம் உள்ள ஜனகராஜ், மேடை நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த போது பாரதிராஜாவின் கண்ணில் பட்டு ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தில் ஒரு சிறிய வேடத்தில் அறிமுகமானார். வித்தியாசமான நகைச்சுவை நடிப்பு காரணமாக வளர்ந்து முன்னணி நடிகராக மாறினார். எண்பது மற்றும் தொன்னுறுகளின் திரைப்படங்களில் குறிப்பாக ரஜினி மற்றும் கமலுடன் இணைந்து ஜனகராஜ் நடித்த படங்கள் அதிகம்.

‘நாயகன்’ திரைப்படத்தில் ஜனகராஜின் பாத்திரம் வித்தியாசமாக இருந்தது. ஆரம்பம் முதல் கடைசி வரை ‘வேலு நாயக்கரின்’ வலதுகரமாகவும் தோழனாகவும் பயணிக்கும் பாத்திரம். மிதமான நகைச்சுவையும் உணர்ச்சிகரமான குணச்சித்திரமும் கலந்த சிறப்பான நடிப்பைத் தந்திருந்தார்.

தனது தந்தையைக் கொன்ற போலீஸ்காரனைக் கொன்று பழிவாங்கி விட்டு பம்பாய்க்குத் தப்பியோடி வந்து விடுகிறான், சிறுவனான வேலு. அத்தனை பெரிய நகரில் எவருடைய அறிமுகமும் இல்லாமல், தெருக்களில் சுற்றித் திரிந்து விட்டு கடற்கரையில் தனியாக நிற்கும் அவனிடமிருந்து போர்வையை இந்தி மொழிக்கூச்சலுடன் சில சிறுவர்கள் பறித்துச் செல்ல முயல்கிறார்கள்.. ‘திருட்டுக் கம்னாட்டிகளா’ என்று வேலு திட்டுவதைக் கேட்டு ‘அடப்பாவி.. தமிழா?’ என்று அவர்களில் ஒருவன் ஆச்சரியமாகக் கேட்டு தன்னுடன் அழைத்துச் செல்கிறான்.

நாயகன்
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 25 | காமெடியும் செண்டிமண்ட்டுமாய்... ‘அய்யாக்கண்ணு’ வடிவேலு!

‘செல்வம்’ என்கிற பெயருடைய அந்தச் சிறுவன்தான் பின்னர் வேலுவின் உற்ற தோழனாகிறான். ‘நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்லே’ என்று மற்றவர்களுக்கு உதவி செய்வதையே கொள்கையாக வைத்திருக்கும் ஹூசைன் பாய் வீட்டில் அடைக்கலமாகிறான் வேலு. “வாக்கு கொடுத்துட்டேன்ப்பா” என்று உடல்நிலை குன்றிய நிலையிலும் கடலுக்குச் செல்லும் ஹூசைன் பாயின் சுமையை தான் வாங்கிக் கொள்ளும் வேலு, கடத்தல் தொழிலுக்குச் செல்கிறான். கூடவே செல்வம். இருவரும் இப்போது இளைஞர்களாக வளர்ந்து விட்டார்கள்.

செல்வா - வேலு நாயக்கரின் உற்ற தோழன்

கடத்தல் பொருட்களையெல்லாம் உப்பு மூட்டையுடன் சேர்த்து கட்டச் சொல்கிறான் வேலு. ‘எதுக்கு?” என்று செல்வம் கேட்க, “சொல்றத செய்” என்று வேலு அதட்டுகிறான். “தூத்துக்குடி ஆளுங்களை எல்லாம் இந்த தொழிலுக்கு கூட்டிட்டு வந்தா இப்படித்தான்” என்று வேலுவின் சொந்த ஊரை இணைத்து, செல்வம் வாய்க்குள் முனகும் டைமிங்கான கமெண்ட் சுவாரசியமானது.

இப்படி படம் பூராவும் உணர்ச்சிகரமான காட்சிகளின் இடையே சிறிய நகைச்சுவை வசனங்களை, உடல்மொழியை தந்து அசத்தியிருப்பார் ஜனகராஜ். உப்பு கரைந்தவுடன் சரக்கு மேலே வரும் ஐடியாவை வேலு சொன்னவுடன் “ஆமால்ல.. வேலு நீ பெரிய ஆளு” என்று பாராட்டி விட்டு சோதனைக்கு வரும் கஸ்டம்ஸ் கப்பலை நோக்கி ‘சலாம் பாய் சாப்” என்று செல்வம் உற்சாகமாக கத்தும் காட்சி சுவாரசியமானது.

வேலுவை பாலியல் விடுதிக்கு அழைத்துச் செல்வான் செல்வம். அது அவன் அடிக்கடி வந்து செல்லும் இடம் என்பது சகஜமாக புழங்கும் அவனுடைய உடல்மொழியில் இருந்து தெரியும். படிக்கட்டில் இறங்கும் வேலுவை, ஒரு பெண் காலை நீட்டி குறும்பாக மறிக்க, அதை மடக்கி விட்டு வேலுவை அழைத்துச் செல்வான். இவர்கள் திரும்பி வரும் போது ஹூசைன் பாய் போலீஸ்காரரால் கொல்லப்பட்டிருப்பார். அவர் மிகக்குறைந்த கூலிக்கு வேலை செய்து கொண்டிருந்த வழக்கத்தை வேலு மாற்றியிருப்பதுதான் காரணம்.

“இப்ப உனக்கு சந்தோஷம்தானே.. அந்தக் கௌவன் பாட்டுக்கு அஞ்சோ பத்தோ சம்பாதிச்சிட்டு இருந்தான். நீ உள்ளே புகுந்து பேரம் பேசினியே.. இப்ப அவனுக்கு நடந்த கதியைப் பாத்தியா.. தொங்கறான்” என்று வேலுவிடம் செல்வா குற்றம் சாட்டும் தொனியில் பேச, “எங்க அந்த போலீஸ்காரன். நீ ஷகிலாவ பார்த்துக்க” என்று வேலு ஆத்திரத்துடன் சொல்ல “அடப்போய்யா..” என்று குழந்தை மாதிரி திரும்பி நின்று சொல்லும் காட்சியில் ஜனகராஜின் கோபமான நடிப்பு அத்தனை இயல்பாக இருக்கும்.

“நாயக்கரே.. இனிமே அப்படித்தான்”...

இன்ஸ்பெக்டர் கேல்கரை வேலு அடித்துக் கொன்று விட, அந்த ஊர் மக்களில் ஒருவர் கூட சாட்சி சொல்ல முன் வர மாட்டார்கள். உயர் அதிகாரி கோபத்துடன் திரும்பிச் சென்று விடுவார். டீக்கடைக்காரர் வேலுவிடம் காசு வாங்க மறுத்து விடுவார். வேலு தொடர்ந்து வற்புறுத்த “வேலு.. விட்டுரு.. இனிமே அப்படித்தான்.. நீ வா” என்று செல்வம் பேசும் வசனம் புகழ் பெற்றது. “நீயெல்லாம் பொிய ஆளுப்பா” என்று நண்பர்கள் வட்டத்தில் யாரையாவது கலாய்க்க வேண்டுமென்றால் “நாயக்கரே… இனிமே அப்படித்தான்” என்று சொல்வது அப்போதைய ட்ரெண்டில் இருந்தது.

நாயகன்
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 24 | கொலைக்கருவிகளை உற்பத்தி செய்யும் அரசியல்வாதி சமுத்திரக்கனி

வசனம் இல்லாமல் வெறும் உடல்மொழியில் ஜனகராஜ் நிகழ்த்தும் சுவாரசியம் ஒரு காட்சியில் இருக்கிறது. திடீரென தீர்மானித்து நீலாவை கோயிலில் வைத்து திருமணம் செய்து கொள்ள முடிவு செய்வான் வேலு. ‘என்ன வேலு.. திடீர்னு’ என்று செல்வம் ஆச்சரியப்பட்டாலும் திருமணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்வான். பாலியல் தொழிலாளியாக இருக்கும் தன்னை வேலு திருமணம் செய்து கொண்டதை எண்ணி உணர்ச்சிப் பெருக்குடன் காலில் விழுந்து கண்ணீர் மல்க நிற்பாள் நீலா. அவளை வேலு ஆதரவாக அணைத்துக் கொள்வான்.

அப்போது செல்வமும் அவர்களுடன் இணைந்து கட்டியணைத்து வெட்கத்துடன் உணர்ச்சிவசப்பட, ‘ஏண்டா?’ என்கிற மாதிரி கமல் பார்ப்பது வேடிக்கையான தோரணையில் இருக்கும். தியேட்டர்களில் அப்போதே கைத்தட்டலும் சிரிப்பும் கிடைத்த காட்சியிது. கமல்ஹாசனும் ஜனகராஜூம் தங்களுக்கு இடையே இருந்த ஒத்திசைவு காரணமாக முன்பே இந்தக் காட்சியை பேசி வைத்துக் கொண்டு நிகழ்த்தியதாக ஒரு நேர்காணலில் மணிரத்னம் சொல்கிறார்.

நாயகன்
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 23 | உடலசைவிலேயே அசாத்திய நடிப்பை கொடுத்த ‘முதல்வன்’ பட ரகுவரன்

“நாம லோக்கலு.. அவங்க இண்டர்நேஷனலு”

பம்பாயில் உள்ள பெரிய சர்வதேச கடத்தல் முதலாளிகளைச் சந்திக்கும் வாய்ப்பு வேலுவிற்கு கிடைக்கும். அவர்களுடைய ஒவ்வொருவரின் பின்னணி பற்றியும் விவரிப்பான் செல்வம். “பார்த்தா.. அப்படியா இருக்காங்க.. ஒவ்வொருத்தனும் எமகாதகனுங்க” என்று நால்வரையும் பற்றி சொல்லி விட்டு, சட்டென்று தொனியை மாற்றி ‘நாம அஞ்சாவது’ என்று கிளுகிளுப்பான சிரிப்புடன் செல்வம் சொல்லும் காட்சியில் ஜனகராஜின் நடிப்பை ரசிக்காமல் இருக்கவே முடியாது.

இதைப் போலவே அங்கு நடக்கும் ஓர் உரையாடலில் சிறிய உரசல் வந்து ரெட்டி குடும்பத்தில் ஒருவர் கோபமாக எழுந்திருக்க ‘அடிங்…’ என்று செல்வம் பதிலுக்கு குரல் தரும் போது தியேட்டர்களில் விசில் பறக்கும். வேலுவின் சாமர்த்தியம் காரணமாக பேச்சு வார்த்தை வெற்றிகரமாக முடிந்தவுடன் ‘கொன்னுட்ட நாயக்கரே’ என்று பெருமிதத்துடன் சிரிப்பான் செல்வம்.

அடுத்த காட்சியில் “இவ்வளவு நாள் கழிச்சு கடலுக்கு வந்திருக்கிறோம். ஒரு புட்டி கொண்டாந்திருக்கணும் நாயக்கரே” என்று செல்வம் சொன்னதிற்குப் பின்னால் “நெலா அது வானத்து மேலே” என்கிற அட்டகாசமான துள்ளிசைப் பாடல் ஒலிக்கும். இந்தப் பாடல் ஹிட் ஆனதன் காரணமாக, ஜனகராஜிற்காக இளையராஜா பல பாடல்களைப் பாடினார்.

சென்னையில் படிப்பை முடித்த, வேலு நாயக்கரின் மகள் நீண்ட காலத்திற்குப் பிறகு தந்தையைப் பார்த்த சந்தோஷத்தில் கடற்கரை மணலில் வேகமாக கார் ஓட்ட வேலு பதறிப் போய் விடுவார். “நாயக்கருக்கு வயசாயிடுச்சு. நீ ஓட்டும்மா” என்று செல்வம் உற்சாகப்படுத்துவதும், பிறகு செல்வத்தின் மீது வேலு பாய்ந்து விளையாட்டாக கீழே தள்ளுவதும் சுவாரசியமான காட்சிகள்.

வேலு இல்லாத நிலையில், ஒரு பிரச்னையை அவரது மகன் சூர்யா தீர்த்து வைக்க முயல, “நாயக்கரே.. இவங்க என்ன பண்ணாங்கன்னு கேட்டியா.. நம்மள விட ரெண்டு மடங்கு இருப்பானுங்க போலிருக்கு. நீ பார்க்காத வுட்டுட்டியே நாயக்கரே” என்று செல்வம் உற்சாகமாக பேசும் காட்சியில் ஜனகராஜின் நடிப்பு ரசிக்கத்தக்க வகையில் இருக்கும்.

நாயகன்
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் | கோபத்தின் வெப்பமும் அன்பின் குளிர்ச்சியும் ஆய்த எழுத்து இன்பா

“கை நீட்டற பழக்கம் எங்க இருந்து வந்துது?”

நாயகன் திரைப்படத்தின் மிக முக்கியமான, உணர்ச்சிகரமான காட்சி ஒன்றிருக்கிறது. செல்வா தலைமையில் நடந்த ஒரு வன்முறைச் செயலை. வேலு நாயக்கரின் மகள் சாருமதி பார்த்து விடுவார். இது பற்றி தந்தையுடன் பெரிய வாக்குவாதம் செய்வாள். “நீங்க யாரு இதெல்லாம் தப்புன்னு தீர்மானிக்கறதுக்கு. அதுக்குத்தான் கோர்ட், போலீஸ்லாம் இருக்கு” என்பது அவளது வாதம். இந்த சூடான வாக்குவாதத்தின் உச்சக்கட்டமாக “தப்பு செஞ்சா அடிக்கலாமா.. இப்ப செல்வா செஞ்சது எனக்கு தப்புன்னு படுது” என்று சொல்லும் சாருமதி, செல்வாவின் கன்னத்தில் அறைந்து விட, தன் மகளை இழுத்து வைத்து அடிப்பார் வேலு.

“யாரு கிட்ட இருந்து வந்தது இந்த கை நீட்டற பழக்கம்?” என்று வேலு கோபத்தில் கேட்க, மகளை அடிக்காதவாறு அவரைத் தடுத்து நிறுத்த முயலும் செல்வா “நம்ம கிட்ட இருந்துதான்” என்று சட்டென்று டைமிங்காக சொல்லும் வசனத்தில் திரையரங்கமே அதிரும். சிரிப்பொலியும் கேட்கும். ஓர் உணர்ச்சிகரமான காட்சியின் இடையில், அந்தத் தொனி பாழாகாதவாறு ஒரு நகைச்சுவையான வசனத்தை செருகுவதற்கு தனியான திறமை வேண்டும். அது ஜனகராஜிடம் இருந்தது.

கமல்ஹாசனின் நடிப்புப் பயணத்தில் ‘வேலு நாயக்கர்’ என்பது ஒரு மிக முக்கியமான பாத்திரம். அதைப் போலவே, அதற்கு இணைக்கோடாக பயணிக்கும் ஜனகராஜ் ஏற்று நடித்த ‘செல்வா’ பாத்திரமும் நம்மால் எப்போதும் மறக்க முடியாத கேரக்டர்.

நாயகன்
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் | கோபத்தின் வெப்பமும் அன்பின் குளிர்ச்சியும் ஆய்த எழுத்து இன்பா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com