மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 19 |கொடுமைக்கார மனைவி ‘பொன்னாத்தா’வாக வடிவுக்கரசி!

19-வது வாரமான இந்த வாரம் ‘மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள்’ தொடரில் முதல் மரியாதை படத்தில் வடிவுக்கரசி ஏற்று நடித்திருந்த பொன்னாத்தா கதாபாத்திரத்தை பார்க்கப்போகிறோம்.
முதல் மரியாதை படத்தில் வடிவுக்கரசி
முதல் மரியாதை படத்தில் வடிவுக்கரசிகோப்புப்படம்

தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த குணச்சித்திர நடிகைகளுள் ஒருவர் வடிவக்கரசி. பாரதிராஜாவால் ‘சிகப்பு ரோஜாக்கள்’ (1978) படத்தில் அறிமுகப்படுத்தப்பட்டார். அதில் நகரத்தைச் சேர்ந்த நவீன நங்கையின் வேடம். விநோதமான ஒப்பனையின் புரிதலின்மையோடு தனது பயணத்தைத் துவங்கினாலும் மெல்ல கவனிக்கத்தகுந்த நடிகையாக வளர்ந்து கொண்டிருந்தார்.

சிகப்பு ரோஜாக்கள் படத்தில் கமல் - வடிவுக்கரசி
சிகப்பு ரோஜாக்கள் படத்தில் கமல் - வடிவுக்கரசி

வடிவக்கரசியின் பெரியப்பா பிரபல இயக்குநர் ஏ.பி.நாகராஜன். புராணத் திரைப்படங்களை இயக்கி புகழ்பெற்றவர். இந்த வகையில் சினிமா பின்னணி இருந்தாலும், வீட்டுக்குத் தெரியாமல் முதல் படத்தில் நடித்து தந்தையின் எதிர்ப்பை சம்பாதித்தவர். பண்ணை வீட்டில் சௌகரியமாக வளர்ந்த வடிவுக்கரசியின் குடும்பம், ஒரு கட்டத்தில் சென்னைக்கு இடம்பெயர வேண்டிய சூழல். துணிக்கடை உள்ளிட்டு கிடைத்த வேலைகளை எல்லாம் செய்தார். தூர்தர்ஷன் நாடகத்தில் நடித்தார். கன்னிமரா ஹோட்டலில் ஹவுஸ்கீப்பிங் பணியாளராக இருந்த போதுதான் ‘சிகப்பு ரோஜாக்கள்’ படவாய்ப்பு தேடி வந்தது.

சராசரியை விடவும் அதிகமான உயரம், மாநிறம் என்று தன் தோற்றம் குறித்த நிராகரிப்பை பல இடங்களில் எதிர்கொண்ட வடிவக்கரசி, மிக இளம் வயதிலேயே தன்னை விடவும் வயதான ஹீரோக்களுக்கு அக்கா, அம்மா போன்ற வேடங்களில் நடிக்க வேண்டியிருந்தது. பலவும் எதிர்மறையான பாத்திரங்கள். 1982-ல் ‘வா கண்ணா வா’ திரைப்படத்தில் சிவாஜிக்கு மகளாக நடித்தார். மூன்று வருடத்திற்குப் பிறகு வெளியான ‘முதல் மரியாதை’ படத்தில் மனைவி பாத்திரம்.

பாரதிராஜா மீது வடிவுக்கரசிக்கு வந்த கோபம்

சிவாஜிக்கு ஜோடி என்றதும் தன்னை கே.ஆர்.விஜயா மாதிரி கற்பனை செய்து கொண்டு சந்தோஷத்தில் மிதந்தார் வடிவக்கரசி. பார்த்தால் வயதான பாத்திரம். காதில் பசை தடவி தண்டட்டிகளை தொங்க விட்டு கிராமத்துப் ‘பொம்பளை’யாக மாற்றினார்கள். என்றாலும் சிவாஜிக்கு இணை என்பதில் சந்தோஷம். ஆனால் வசனத்தை படித்துப் பார்க்கும் போதுதான் வடிவுக்கரசிக்குப் புரிந்தது. சிவாஜியை திட்டித் தீர்ப்பது போன்ற வில்லி பாத்திரம். கோபம் தாங்கவில்லை. இயக்குநர் தன்னை ஏமாற்றி விட்டார் என்கிற கோபத்தில் நடிக்க மறுத்து விட்டார்.

ஆனால் பாரதிராஜா அந்தப் பாத்திரத்தின் முக்கியத்துவத்தை விளக்கி நடிக்க வைக்க, அவர் மீதுள்ள கோபத்தையெல்லாம் நடிப்பில் காண்பித்தார். ‘பொன்னாத்தா’ என்கிற அந்தப் பாத்திரம்தான் வடிவுக்கரசியின் மீது அதிக வெளிச்சத்தைப் பாய்ச்சியது. ‘அதன் முக்கியத்துவம் அப்போது எனக்கு தெரியவில்லை. இயக்குநரின் மீதுள்ள கோபத்தைத்தான் நடிப்பில் காட்டினேன்’ என்று ஒரு நேர்காணலில் சொல்லிச் சிரிக்கிறார் வடிவுக்கரசி.

பிற்பாடு இயக்குநர்களோ, உதவி இயக்குநர்களோ கொடுமைக்கார மனைவியின் பாத்திரத்தை எளிதில் மற்றவர்களுக்கு விளக்குவதற்காக ‘முதல் மரியாதை படத்துல வடிவுக்கரசி நடிச்சாங்கள்ல..’ என்று மேற்கோள் காட்டி புரிய வைக்கும் அளவிற்கு ‘பொன்னாத்தா’ லேண்ட்மார்க் பாத்திரமாக ஆனது.

கிராமத்துப் பெண்ணாகவே மாறிய வடிவுக்கரசி

“ஆனையைப் பாக்கறதுக்கு வெள்ளெழுத்து கண்ணாடி எதுக்குய்யா? ஆச அவ மேல, ஆதரவு பாய் மேலன்ற மாதிரின்ற மாதிரில்ல படுத்திருக்காஹ. முப்பது வருசமா வாழ்க்கப்பட்டு மோட்டு வளையத்தை பார்க்கறதும் மூக்கச் சிந்திப் போடறதுமாவே காலத்தை கழிச்சுப்புட்டேன்.

முதல் மரியாதை படத்தில் வடிவுக்கரசி
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 14 | ரகளையான மாடுலேஷன்... மறக்கவே முடியாத ‘விக்டர்’ அருண்விஜய்!

இந்த மனுசனைக் கட்டிக்கிட்டு நான் என்ன பெரிசா அள்ளிக் கொட்டிக்கிட்டேன்.. கல்லு செவத்துக்கு கூட கண்ணு காது இருந்திருந்தா பொன்னாத்தா பேசறதுக்கு எல்லாம் இந்நேரம் உருகி ஓடியிருக்கும். என் ராசிக்கு ஆயிரம் கால் மண்டபம் கட்டி ஆண்டுக்கடின்னா கூட வெய்யிலுதானே அடிக்கும்.. இல்லைன்னா துருப்பிடிச்ச தொரட்டுக்கும் பத்து வெள்ளாட்டுக்கும் வந்த இந்த மனுசனுக்கு வாழ்க்கப்பட்டிருப்பனா?”

இவ்வளவு நீளமான வசனத்தை பொன்னாத்தா ஒப்பாரிப் பாட்டு போல இழுவையோடு பேசுவதில்தான் ‘முதல் மரியாதை’ திரைப்படம் துவங்குகிறது. படுத்த படுக்கையாக இருக்கும் மலைச்சாமியின் (சிவாஜி) பின்னணி இதே வசனத்தின் மூலம் பிளாஷ்பேக் ஆக மாறுகிறது.

முதல் மரியாதை படத்தில் வடிவுக்கரசி
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 15 | ‘ராஜ பார்வை’யின் ரகளை ‘தாத்தா’ எல்.வி.பிரசாத்

அவசரத்தில் அள்ளி முடிந்த கூந்தல், நெற்றியில் பெரிய பொட்டு, காதில் தண்டட்டி, நூல் சேலை, சிடுசிடு பார்வை, கடுகடு பேச்சு என்று வடிவுக்கரசியின் அவதாரம் ‘பொன்னாத்தா’ என்கிற கேரக்டரின் வழியாக முற்றிலும் வேறு வடிவில் உருக்கொண்டிருக்கிறது. சிகப்பு ரோஜாக்கள் படத்தில் நவீன நங்கையாக வந்தவரையும் இதையும் ஒப்பிட்டு கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. அப்படியொரு உருமாற்றம்.

உக்கிரமான பாத்திரத்தில் பொன்னாத்தா

ஊருக்குள் நெஞ்சை நிமிர்த்தி கலகலப்புடன் உலாவரும் மலைச்சாமிக்கு வீடு என்பது நரகமாக இருக்கிறது. அதற்குக் காரணம் மனைவி பொன்னாத்தா என்பது ஆரம்ப காட்சியிலேயே வலுவாக சித்தரிக்கப்படுகிறது. மூக்கைச் சிந்தி தூணில் தடவி விட்டு அதே கையால் கணவனுக்கு தட்டில் சோற்றை எறியும் பொன்னாத்தாளின் விருந்தோம்பல் காட்சி, பார்க்கும் நமக்கே குமட்டலை ஏற்படுத்துகிறது. சாப்பிடவே பிடிக்காமல் பரிதாபமாக வெளியேறுகிறார் மலைச்சாமி.

மலைச்சாமிக்கும் பரிசல் ஓட்டும் குயிலுக்கும் ‘தொடுப்பு’ இருப்பதாக கயிறு திரிக்கும் ஜனகராஜ், பொன்னாத்தாவிடம் பற்ற வைக்க “என் புருஷன் மலைப்பாம்பு மாதிரி. மகுடிக்கெல்லாம் மயங்க மாட்டாரு. இருபது வருஷமா வாழறனே.. எனக்குத் தெரியாதா..” என்று பொன்னாத்தா முதலில் அதை நம்புவதில்லை. இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தைப் பார்த்தவுடன் பொன்னாத்தாவிற்குள் கோபம் பொங்குகிறது.

முதல் மரியாதை படத்தில் வடிவுக்கரசி
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 16 | சிரிப்பும் சீரியஸூமாக ‘சாமிபிள்ளை’ சுருளிராஜன்!

அடுத்த காட்சி எடுக்கப்பட்டிருக்கும் விதம் சிறப்பானது. வீதியில் மீன் விற்றபடி செல்லும் குயிலுவை நோக்கி கையில் விளக்குமாற்றுடன் ஆங்காரத்துடன் நடந்து வருகிறார் பொன்னாத்தா. கண்களில் குரோதம், வெறி, ஆத்திரம் என்கிற கலவையுடன் உக்கிரமாக நடந்து வருவது குயிலின் ‘பாயிண்ட் ஆஃப் வியூவில்’ காட்டப்படுகிறது. காமிராவை நோக்கி பொன்னாத்தா நடந்து வரும் போது பார்வையாளனுக்கே வயிறு கலங்கும்படி வடிவுக்கரசியின் நடிப்பு இருந்தது. கிராமத்து பழமொழிகளையெல்லாம் அள்ளி விட்டு “கண்டார.. என் வீட்டுப் பாயில பங்கு கேக்குதா.. சொல்லுடி.. நீ என் புருஷனை வெச்சிட்டு இருக்கியா?” விளக்குமாற்றால் அடிக்கும் காட்சியை அந்தத் தெருவின் சனங்கள் திகைத்துப் போய் பார்க்கிறார்கள். நாமும்தான்.

பொன்னாத்தாவின் துரோகம் - மலைச்சாமியின் தியாகம்

“ஆச்சாபுரம் காட்டுல அம்பது புலி அடிச்சவன், அணிப்புள்ள புடிக்கறேன்னு போய் பங்கமழிஞ்சு போனானே.. காலம் போன காலத்துல நரையும் மூப்பும் நட்டுக்கிட்டு நிக்குது.. இந்த மனுசன் என்னடான்னா லவுக்க இல்லாத லம்பாடியை வெச்சிருக்காரே.. இத நான் எங்கேன்னு போய் சொல்லுவேன்...” – பொன்னாத்தா ஒப்பாரி வைக்கும் சத்தம் தெரு முழுக்க கேட்கிறது. நடந்த விஷயமெல்லாம் தெரியாமல் ஊருக்குப் போய் விட்டுத் திரும்பும் மலைச்சாமி, இதைக் கேட்டு வீட்டு வாசலில் திகைத்து நிற்கிறார்.

“பொங்கப்பானையா பொங்கினாத்தான் இந்தச் சிறுக்கி மனசு அடங்கும் போலயே.. எனக்கும் நல்லது கெட்டது கேட்க நாலு சாதி சனம் இருக்குய்யா.. இந்தச் சிறுக்கி மவ ஒரு தப்பு பண்ணிப்புட்டேன்.. இல்லேன்னு சொல்லல. ஒரு நா ஒரு பொழுது.. ஒருத்தனோட படுத்து எழுந்திருச்சு ஒரு புள்ளயோட வந்தேன். அதுக்காக உன் கூட ஆயுசு முழுக்க தண்டனையா.. ஆஸ்தி பாஸ்தியோட அறுபது பவுன் நகையோட இருந்த என்னை, துருப்பிடிச்ச தொரட்டுக்கொம்பும் பத்து வெள்ளாடாடோடும் வந்த உனக்கு கட்டி வெச்சானே.. என் அப்பன், அவனைச் செருப்பால அடிக்கணும்”...

முதல் மரியாதை படத்தில் வடிவுக்கரசி
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 17 | நினைவுகள் உறைந்து போன ஒரு தகப்பனாக எம்.எஸ்.பாஸ்கர்...!

என்று மலைச்சாமியை அபாண்டமாக குற்றம் சாட்டி பொன்னாத்தா நீளமாக பிலாக்கணம் வைக்க, அதுவரை தன் மனைவியைத் தொட்டுக்கூட பேசாத மலைச்சாமி, ஆத்திரத்துடன் ஒரு மிதி மிதிக்கிறார். “ஆத்தி..” என்று அலறியபடி கீழே சாய்கிறார் பொன்னாத்தா. மலைச்சாமியின் தியாகவுணர்வும் பொன்னாத்தாவின் கடந்த கால தவறும் இந்தக் காட்சியில் அம்பலமாகிறது. இந்த மணவுறவு இத்தனை கசப்பாக இத்தனை காலம் நீண்டு கொண்டிருந்த ரகசியமும் தெரிகிறது.

சாதி சனங்களுக்கு ஆட்டுக்கறி விருந்து

பஞ்சாயத்து கேட்பதற்காக தன் ‘தாய்வழிப்பங்காளிகளை’ வீட்டிற்கு வரவழைக்கிறார் பொன்னாத்தா. அவர்களுக்காக ஆட்டுக்கறி விருந்து ஏற்பாடாகியிருக்கிறது. எனவே அந்த ஆசையோடு அவர்கள் பொன்னாத்தாவிடம் மாப்பிள்ளையைப் பற்றி விசாரிக்க “ஆமாம். ஆம்பளை எங்க வேட்டிய அவுத்து வெக்கறான்னு பொம்பள பார்த்துட்டா இருக்க முடியும். அவுக எங்க மேயச்சலுக்கு போறாகன்னு வௌக்கு புடிச்சு பார்க்க முடியுமா?” என்கிறார் பொன்னாத்தா. ஆனால் மலைச்சாமி வீட்டுக்குள் நுழைந்தவுடன் விருந்தினர்கள் அப்படியே பம்மி மாற்றிப் பேசுகிறார்கள்.

ஒருவர் ஆட்டுக்கறி விருந்தைப் பற்றி நாக்கைச் சப்புக் கொட்டிக் கொண்டே கேட்க “வெட்டினது மூணு கடாப்பா.. பாக்கியிருக்கிறது ஒரு மருக்க. அது ஆத்தைத் தாண்டி குடிசையைப் போட்டுக்கிட்டு குடியை கெடுக்கணும்னு பொழப்பு நடத்திட்டு இருக்கு. அம்மாபட்டிக்காரங்களுக்கு வெறும் வெறும் ஆட்டுக்கறியும் கருவாட்டுக்குழம்பும் போறாதுதான். மருக்கையை வில்லங்கமில்லாம வெட்டி வுட்டுட்டா சாராயத்துக்கு சாயங்காலம் சொல்லி விடறேன். அவ உசுரோட இருக்கக்கூடாதப்பு. அவளை தீ வெச்சு கொளுத்திப்புடுங்க. என் வீட்டு வாசலை வெச்சாவது கேஸ நடத்திப்புடுவேன்” என்று கண்களில் வன்மம் பொங்க சொல்கிறார் பொன்னாத்தா.

குயிலு யாரையோ கொலை செய்து விட்டதாக ஊருக்குள் பேச்சு ஓடுகிறது. கொலை செய்யப்பட்ட நபரை யாருக்கும் அடையாளம் தெரியவில்லை. ஊர்த்தலைவரான மலைச்சாமிக்கும் கூட. ஆனால் பொன்னாத்தாவிற்கு அடையாளம் தெரிந்து விடுகிறது. ‘ஒரு நா. ஒரு பொழுது படுத்து எழுந்திருச்சேன்’ என்று யாரைப் பற்றி பொன்னாத்தா சொன்னாரோ, அந்த மயில்வாகனம்தான் பிணமாக கிடக்கிறான். திருடனுக்கு தேள் கொட்டிய கதையாக, கூட்டத்தின் நடுவில் திகைத்துப் போய் நிற்கிறார் பொன்னாத்தா. நீரை உழப்பிக் கொண்டே சிறுவர்கள் ஓட, அதிலிருந்து தெறிக்கும் ஒரு நீர்த்துளி பொன்னாத்தாவின் குங்குமத்தை அழிப்பது மாதிரியான ஷாட்டை வைத்திருந்தார் பாரதிராஜா.

முதல் மரியாதை படத்தில் வடிவுக்கரசி
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 18 |முரட்டுத்தனமான அண்ணனுக்கு பாசமிகு தங்கையாக செவனம்மா!

இளமையில் தான் செய்த தவறை அப்படியே மூடி மறைத்து விட்டு முப்பது ஆண்டுகளாக தன் புருஷனை பேசியே கொல்லும் கொடுமைக்கார மனைவியின் பாத்திரத்திற்கு கச்சிதமான உதாரணம் - பொன்னாத்தா. இந்தப் பாத்திரத்திற்கு தனது நடிப்பால் உயிர் கொடுத்து மறக்கவே முடியாதபடி மாற்றி விட்டார் வடிவுக்கரசி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com