மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 21 | குருமார்களின் ரகசிய வன்மத்தின் விதை, ஆடுகளம் பேட்டைக்காரன்

21-வது வாரமான இந்த வாரம் ‘மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள்’ தொடரில் ஆடுகளம் படத்தில் வி.ஐ.எஸ்.ஜெயபாலன் ஏற்று நடித்திருந்த பேட்டைக்காரன் கதாபாத்திரத்தை பார்க்கப்போகிறோம்.
ஆடுகளம் திரைப்படத்தில் வி.ஐ.எஸ்.ஜெயபாலன்
ஆடுகளம் திரைப்படத்தில் வி.ஐ.எஸ்.ஜெயபாலன் ட்விட்டர்

இந்தக் கட்டுரைத் தொடரில் மிகச்சிறந்த குணச்சித்திர நடிகர்களைப் பற்றி பார்த்து வருகிறோம். ஆனால் நடிப்பனுபவமே இல்லாத ஒருவர், இயக்குநரால் மிகச்சிறந்த நடிகராக உருமாற்றம் ஆனதைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். ஆம், ‘ஆடுகளம்’ திரைப்படத்தில் ‘பேட்டைக்காரனாக’ நடித்து, முதல் படத்திலேயே (சிறப்பு நடுவர் மன்ற விருது பிரிவில்) தேசிய விருது பெற்ற வி.ஐ.எஸ்.ஜெயபாலன்தான் அவர்.

ஆடுகளம் படத்தின் போஸ்டர்
ஆடுகளம் படத்தின் போஸ்டர்

ஆடுகளம் திரைப்படத்திற்கான முன்னேற்பாடுகளை இயக்குநர் வெற்றிமாறன் செய்து கொண்டிருந்த போது ‘பேட்டைக்காரன்’ பாத்திரத்திற்கு பொருத்தமான தோற்றமுள்ளவரைத் தேடிக் கொண்டிருந்தார். இந்தத் திரைப்படத்தின் ஹீரோ தனுஷ் (கருப்பு) அல்ல. ‘பேட்டைக்காரன்’தான். அவர்தான் இந்தப் படத்தின் மையப் பாத்திரம். எனவே அதற்கேற்ற ஆகிருதியுள்ள ஆசாமியை தேடிக் கொண்டிருந்த வெற்றிமாறன், நடிகர் பார்த்திபனை அணுகினார். ஆனால் அந்தச் சமயத்தில் பார்த்திபன் ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படத்தில் பிஸியாக இருந்ததால் நடிக்க முடியாத சூழல். இதற்கிடையில் கிஷோரையும் ஆடிஷன் செய்து வைத்திருந்தார்கள்.

ஆடுகளம் திரைப்படத்தில் வி.ஐ.எஸ்.ஜெயபாலன்
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 20 |நடிப்பின் இலக்கணம் - காளையனாக வாழ்ந்த குரு சோமசுந்தரம்!

அறிமுகப் படத்திலேயே தேசிய விருது

வெற்றிமாறனின் உதவி இயக்குநர்களில் ஒருவர் ஈழத்தைச் சேர்ந்தவர் என்பதால், கவிஞரும் அரசியல் விமர்சகருமான வ.ஐ.ச.ஜெயபாலனின் புகைப்படத்தைக் காட்டி பரிந்துரை செய்தார். புலம் பெயர்ந்து வெளிநாட்டில் வாழும் ஜெயபாலனிடம் ஜீன்ஸ், பிரெஞ்ச் பியர்ட் என்று மேற்கத்திய தோரணைகள் மேற்பார்வைக்கு தெரிந்தாலும் அவரிடம் அடிப்படையாகத் தெரியும் பழங்குடித்தன்மை வெற்றிமாறனைக் கவர்ந்தது.

வி.ஐ.எஸ்.ஜெயபாலன்
வி.ஐ.எஸ்.ஜெயபாலன்

எனவே ‘நடிக்கிறீர்களா?” என்கிற கேள்வியுடன் ஜெயபாலனை அணுகினார்.  ‘என் மனைவி முன்னால் நடித்ததைத் தவிர வேறு அனுபவமில்லை” என்று சிரித்த ஜெயபாலன், “ஆனால் கடுமையான போர்ச்சூழலில் வாழ்ந்த எனக்கு மனித உணர்வுகளைப் புரிந்து கொள்ளத் தெரியும்” என்று சொல்லவே அவரையே ஒப்பந்தம் செய்தார் வெற்றிமாறன்.

ஆனால் படப்பிடிப்பு ஆரம்பித்த இரண்டே நாட்களில் இயக்குநருக்கும் பேட்டைக்காரனுக்கும் உரசல். “ஒரே காட்சியை ஏன் இரண்டு இடங்களில் எடுக்கிறீர்கள், எனக்கு இது புரியவில்லை. அது புரியாமல் என்னால் நடிக்க முடியாது” என்று ஜெயபாலன் முரண்டு பிடித்தார். சினிமாவின் நடைமுறை நுட்பங்கள் அவருக்குப் புரியவில்லை. இன்னொரு பக்கம், ஜெயபாலனின் நடிப்பிலும் இயக்குநருக்கு திருப்தியில்லை. இந்தச் சமயத்தில் கை கொடுத்தவர் நாராயணன்.

ஆடுகளம் படத்தில் நடிகர்கள் தனுஷ் மற்றும் கிஷோருடன் வி.ஐ.எஸ்.ஜெயபாலன்
ஆடுகளம் படத்தில் நடிகர்கள் தனுஷ் மற்றும் கிஷோருடன் வி.ஐ.எஸ்.ஜெயபாலன்

பாலுமகேந்திராவின் ‘கதை நேரம்’ உள்ளிட்டு பலவற்றிலும் நடித்திருந்தாலும் இந்தத் திரைப்படத்திற்குப் பின்புதான் ‘ஆடுகளம்’ நரேன் என்கிற மொழியுடன் அவர் பிரபலமானார். நாராயணன் ஒரு நடிப்புப் பயிற்சியாளரும் கூட. எனவே அவரை வைத்து சினிமாவிற்கான நடிப்பு, இமாஜினரி எல்லை போன்றவற்றில் ஜெயபாலனுக்கு பயிற்சி அளிக்க வைத்தார். அதற்குப் பிறகு நடிக்க வந்த ஜெயபாலனிடம் இயக்குநர் எதிர்பார்த்த மாற்றம் சரியாக வந்திருந்தது.

ஆடுகளம் திரைப்படத்தில் வி.ஐ.எஸ்.ஜெயபாலன்
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 18 |முரட்டுத்தனமான அண்ணனுக்கு பாசமிகு தங்கையாக செவனம்மா!

பேட்டைக்காரனுக்கு கச்சிதமாகப் பொருந்திய தோற்றம்

‘பேட்டைக்காரன்’ பாத்திரத்திற்காக நீளமான தலைமுடியையும் மீசையையும் வளர்க்கச் சொன்னார் இயக்குநர். இது தவிர ஜெயபாலனின் தீர்க்கமான கண்களும் உக்கிரமான முகமும் இந்தப் பாத்திரத்தின் தன்மைக்குப் பொருத்தமாக இருந்தது. ஜெயபாலன் சிறப்பாக நடித்தார் என்று சொல்வதை விடவும் அவரது தோற்றம், உடல்மொழி போன்றவற்றின் வழியாக ‘பேட்டக்காரனை’ இயக்குநர் கொண்டு வந்தார் என்பதுதான் சரியாக இருக்கும். ஏனெனில் இந்தப் படம் முழுவதும் ஜெயபாலனின் முகபாவங்கள் ஒரே மாதிரியாக இருந்தாலும் அதைக் காட்சிக்கு ஏற்ற வகையில் பயன்படுத்திக் கொண்டது வெற்றிமாறனின் திறமை. 

இயக்குநர் வெற்றிமாறனுடன் வி.ஐ.எஸ்.ஜெயபாலன்
இயக்குநர் வெற்றிமாறனுடன் வி.ஐ.எஸ்.ஜெயபாலன்

‘பேட்டக்காரன்’ என்னும் பாத்திரம் திரையில் சிறப்பாக வெளிப்பட்டதற்கு பின்னணிக்குரல் தந்த ராதாரவியின் பங்களிப்பையும் இங்கு பிரத்யேகமாக சொல்லியாக வேண்டும். பொதுவாக, விதம் விதமான மாடுலேஷன்களில் வெளிப்படும் ராதாரவியின் குரலின் தொனிகளை நாம் அறிவோம். ஆனால் இந்தப் பாத்திரத்திற்காக அடிக்குரலில் ஒரே மாதிரியான தொனியை படம் முழுவதும் அவர் பயன்படுத்தியிருந்தது சிறப்பு. பேட்டக்காரனின் சிறப்பு அம்சம் என்பது இந்தக் குரலோடு இணைந்ததுதான்.

பேட்டைக்காரர் பெரியசாமியின் பாத்திர வடிவமைப்பை மிக கச்சிதமாக உருவாக்கியிருந்தார் வெற்றிமாறன். சேவல்களை சண்டைக்கு பழக்குவதில் பிரத்யேகமான திறமை உள்ளவர். அவருடைய சேவல்கள் தோற்பதில்லை. இதனால் அவருக்கு தனித்த பெருமையும் அடையாளமும் கிடைக்கிறது. பேட்டைக்காரனுக்கே இதில் மிகையான பெருமிதம் உண்டு. தான் பழக்கும் சேவல்களை யாருக்கும் தர மாட்டார்.

ஆடுகளம் படத்தில் வி.ஐ.எஸ்.ஜெயபாலன் - தனுஷ்
ஆடுகளம் படத்தில் வி.ஐ.எஸ்.ஜெயபாலன் - தனுஷ்

தன்னுடைய சிஷ்யப் பிள்ளைகளுக்கு மட்டும்தான் தருவார். பயிற்சியின் போது சேவல் களத்தில் இருந்து பின்வாங்கினால் போதும், அதன் கழுத்தை அறுத்து போட்டு விடச் சொல்வார். தோல்வி என்கிற ஒன்றை கற்பனையில் கூட சந்திக்க நினைக்காதவர் பேட்டைக்காரர். தன்னுடைய அசாதாரண திறமை மீதான பெருமிதத்தோடு அகங்காரமும் அவருக்கு உண்டு. 

ஆடுகளம் திரைப்படத்தில் வி.ஐ.எஸ்.ஜெயபாலன்
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 16 | சிரிப்பும் சீரியஸூமாக ‘சாமிபிள்ளை’ சுருளிராஜன்!

இரண்டு சேவற்சண்டை குழுக்களின் தீராத பகை

ஊருக்குள் செல்வாக்குள்ள குடும்பம் ரத்னசாமியுடையது. பரம்பரை பரம்பரையாக சேவல் சண்டை விட்டு வெற்றி பெற்ற பெருமையைக் கொண்டதும் கூட. ஆனால் ரத்னசாமியால் ஒருமுறை கூட பேட்டைக்காரனின் சேவலை சண்டையில் ஜெயிக்க முடிந்ததில்லை. இது அவருக்கு தீராத அவமானமாக மட்டுமல்லாம், வாழ்நாள் சவாலாகவும் மாறுகிறது. ரத்னசாமியோடு ஒப்பிடும் போது பேட்டைக்காரர் எளியவர்தான். ஆனால் ‘எவராலும் வெல்ல முடியாதவர்’ என்னும் பெருமிதமே பேட்டைக்காரரை தலைநிமிர்ந்து நடக்க வைக்கிறது. தன்னுடைய வலது கரங்களான துரை, கருப்பு, அயூப் உள்ளிட்டவர்களின் துணையோடு இந்த உயரத்தில் நிற்கிறார்.

ஆடுகளம் படத்தில் வி.ஐ.எஸ்.ஜெயபாலன்
ஆடுகளம் படத்தில் வி.ஐ.எஸ்.ஜெயபாலன்

பேட்டைக்காரரின் சேவல்களை களத்தில் விடுகிறவன்தான் கருப்பு. குதிரையின் ஜாக்கி மாதிரியான பணி. ஏறத்தாழ பேட்டைக்காரருக்கு நிகராக, சேவல் சண்டையின் அத்தனை நுட்பங்களையும் கற்றிருக்கிறான். பயிற்சியில் சரியாக செயல்படாத ஒரு சேவலை கழுத்தை அறுத்துப் போடும்படி பேட்டைக்காரர் சொல்கிறார். ஆனால் அது கருப்பு வளர்த்த பிரியமான சேவல். அதனால் திறமையாக சண்டையிட முடியும் என்று அவன் உறுதியாக  நம்புகிறான். எனவே ரகசியமாக வீட்டில் வைத்து வளர்க்கிறான். ரத்னசாமியுடன் நிகழும் இன்னொரு போட்டியில் சரியான சேவல் இல்லாத சூழலில், தான் வளர்த்து வரும் சேவலை எடுத்து வரட்டுமா என்று கருப்பு கேட்கிறான். “அதத்தான் அன்னிக்கே கழுத்தறுத்துப் போடச் சொன்னேல்ல. அது சரிப்பட்டு வராது” என்று சீறுகிறார் பேட்டைக்காரர். 

தான் வளர்க்கும் சேவலின் மீதுள்ள நம்பிக்கையால் தனியாக களத்தில் இறங்குகிறான் கருப்பு. ஆனால் அவனுக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்றும், அவன் அடையும் தோல்வி தன்னைக் கட்டுப்படுத்தாது என்றும் பொதுவில் அறிவிக்கிறார் பேட்டைக்காரர். அவரை தன்னுடைய குருவாகவும் தந்தைக்கு நிகராகவும் கருதிக் கொண்டிருக்கும் கருப்பு மனம் உடைந்து போகிறான். 

ஆடுகளம் படத்தில் வி.ஐ.எஸ்.ஜெயபாலன்
ஆடுகளம் படத்தில் வி.ஐ.எஸ்.ஜெயபாலன்

வெற்றியடையும் சிஷ்யனின் மீது குரு கொள்ளும் வன்மம்

உண்மையில் ‘ஆடுகளம்’ திரைப்படம் இங்குதான் ஆரம்பிக்கிறது. ஆம், தன்னை மிஞ்சிச் செல்லும் சிஷ்யன் மீது குரு கொள்ளும் ரகசியமான வன்மமும் குரோதமும்தான் இந்தப் படத்தின் மையம். ‘அதெல்லாம் ஜெயிக்க மாட்டான்’ என்று அலட்சியமாக சொல்கிறார் பேட்டைக்காரர். ஆனால் கருப்பு ஜெயிக்கிறான். ‘ஏதோ ஒரு முறை அதிர்ஷ்டத்தில் ஜெயிச்சிட்டான்’ என்று பேட்டைக்காரர் சொல்கிறார். சிஷ்யனின் வெற்றியை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

தொடர்ந்து வெற்றிகளைக் குவிக்கும் கருப்பு, பேட்டைக்காரருக்கு நிகரான புகழை அடைகிறான். அவனுடன் நேரடியாக மோதாமல் தனிப்பட்ட வகையில் காய்களை நகர்த்தி கருப்புவை ஒரேயடியாக ஒழித்துக் கட்டுவதற்காக முயல்கிறார் பேட்டைக்காரர். சேவல் சண்டையில்லை. மனிதர்களின் சூழ்ச்சிகள் நடக்கும் இதுதான் உண்மையான ‘ஆடுகளம்’.

ஆடுகளம் திரைப்படத்தில் வி.ஐ.எஸ்.ஜெயபாலன்
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 14 | ரகளையான மாடுலேஷன்... மறக்கவே முடியாத ‘விக்டர்’ அருண்விஜய்!

ரகசியமாக நடக்கும் ஒரு சேவற்சண்டையில் போலீஸ் ரெய்டு நடத்துகிறது. பேட்டைக்காரரையும் அவரது குழுவையும் கைது செய்து அழைத்துச் செல்கிறார்கள். ரத்னசாமிக்கும் பேட்டைக்காரருக்கும் இடையில் இது தொடர்பாக நிகழும் பஞ்சாயத்துக் காட்சியில்தான் பேட்டைக்காரரின் அறிமுகம் நமக்கு கிடைக்கிறது.

ஆடுகளம் படத்தில் வி.ஐ.எஸ்.ஜெயபாலன்
ஆடுகளம் படத்தில் வி.ஐ.எஸ்.ஜெயபாலன்

ஒருமுறையாவது பேட்டைக்காரரின் சேவலை வெல்ல வேண்டும் என்கிற ஆற்றாமையில் இருக்கிறார் ரத்னசாமி. ஆனால் பேட்டைக்காரரோ, “சரி. நாங்க தோல்வியை ஒத்துக்கறோம். இனிமே சண்டைக்கு வரலை” என்று பின்வாங்குகிறார். ‘எதுக்குப்பா பிரச்சினை?’ என்று அவர் சொன்னாலும் அது ஒருவகையான ராஜதந்திரம் என்று தோன்றுகிறது. தோற்ற அவமானத்தோடு ரத்னசாமி நிரந்தரமான மனஉளைச்சலில் இருக்கட்டும் என்பது பேட்டைக்காரரின் திட்டமாக இருக்கலாம். 

ஆடுகளம் படத்தில் வி.ஐ.எஸ்.ஜெயபாலன்
ஆடுகளம் படத்தில் வி.ஐ.எஸ்.ஜெயபாலன்

பேட்டைக்காரரின் சேவலுடன் சண்டை செய்து எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்கிற வெறி ரத்னசாமிக்குள் வளர்கிறது. எனவே இதற்காக பல்வேறு கண்ணிகளை விரிக்கிறார். சிறைக்குச் செல்ல வேண்டிய துரையைக் காப்பாற்றி அவனை இழுத்துக் கொள்கிறார். பேட்டைக்காரருக்கு விசுவாசமாக இருக்கும் அயூப், தனது திட்டத்திற்கு ஒப்புக் கொள்ளாததால் விபத்து போன்ற செட்டப்பில் அவரைக் கொல்கிறார். ஆக மிஞ்சியிருப்பது கருப்பு மட்டுமே. அவனால் ஒருநாளும் பேட்டைக்காரருக்கு துரோகம் செய்ய முடியாது. 

பேட்டைக்காரன் தாக்கப்படும் சிறப்பான காட்சி

இறந்து போன அயூப்பின் குடும்ப நிதிக்காக மீண்டும் களத்தில் இறங்குவது என்று முடிவு செய்கிறார் பேட்டைக்காரர். இன்ஸ்பெக்டர் ரத்னசாமி அனுமதி கொடுத்தால்தான் இது நடக்கும். காவல்நிலையத்தில் பேட்டைக்காரரருக்கும் ரத்னசாமிக்கும் சூடான விவாதம் நடைபெறுகிறது. கோபத்தில் மேஜையை தட்டி சவால் விடுகிறார் பேட்டைக்காரர். காமிரா அங்கிருந்து வெளியேறி சில விநாடிகள் கழித்து மீண்டும் உள்ளே செல்கிறது. உடல் மடங்கி கீழே சரிந்து கிடக்கும் பேட்டைக்காரர், அவமானமும் திகைப்புமாக கசங்கிய ஜிப்பாவை சரி செய்து கொண்டே ரத்னசாமியை வெறித்துப் பார்க்கிறார்.

ஆடுகளம் படத்தில் வி.ஐ.எஸ்.ஜெயபாலன் - நரேன்
ஆடுகளம் படத்தில் வி.ஐ.எஸ்.ஜெயபாலன் - நரேன்

ஏட்டுவால் அவர் தாக்கப்பட்டிருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. உதிரிப்பூக்கள் திரைப்படத்தில் விஜயனுக்கும் சரத்பாபுவிற்கும் இடையில் நிகழும் சண்டையை நேரடியாக காட்டாமலேயே அதன் உக்கிரத்தை பார்வையாளர்களுக்கு கடத்தியிருப்பார் மகேந்திரன். அப்படியொரு சிறந்த காட்சி இது. அடிபட்ட அவமானத்துடன் “இதுல ஒரு சாவ தோத்துதுன்னா கூட மொட்டையடிச்சு சாவச்சண்டையில் இருந்து நான் விலகிக்கிறேன்” என்று சவால் விடும் காட்சியில் ஜெயபாலனின் நடிப்பு உணர்ச்சிகரமாக இருக்கும். 

பேட்டைக்காரருக்கு இது சுயமரியாதைப் பிரச்சினை. தான் தோல்வியடையவே கூடாது என்று நினைக்கிறார். இந்தச் சமயத்தில்தான் கருப்பு தனக்குப் பிரியமான சேவலை தனியாக களத்தில் இறக்குகிறான். இங்குதான் பேட்டைக்காரரின் பகையும் வன்மமும் துவங்குகிறது. அவனுடைய வளர்ச்சியையும் வெற்றியையும் கண்டு பொறுக்க முடியாமல் பிறகு ஆடும் சதுரங்க ஆட்டத்தின் ஒவ்வொரு கணத்திலும் ஜெயபாலனன் நடிப்பு அற்புதமாக இருக்கிறது.

பந்தயத்தில் கருப்புவை தடுப்பது, தன்னையும் மீறி அவன் செல்வதைக் கண்டு மைதானத்தில் திகைத்து நிற்பது, கருப்புவின் வெற்றியை சற்று பெருமிதத்துடனும் எரிச்சலுடனும் கேட்டுக் கொள்வது, கருப்பு ஜெயித்து கொண்டு வரும் பணத்தை வாங்க மறுப்பது என்று பேட்டைக்காரரின் ராஜாங்கம்தான்.

கருப்பு மீதான கோபத்தில், வழக்கத்திற்கு மாறாக வெளியாட்களுக்கு சேவலை விற்க பேட்டைக்காரர் முடிவு செய்ய, அதை ரகசியமாக வாங்க விரும்புகிறான் கருப்பு. இதை அறிந்து கொள்ளும் பேட்டைக்காரர் வெறியுடன் சேவலை அடித்துக் கொள்ளும் காட்சி உக்கிரமானது. இப்படி தொடர்ச்சியாக நீளும் பேட்டைக்காரரின் வன்மம், “என் மேல அவ்ள வெறுப்பாண்ணே.. உன்னை என் அப்பன் மாதிரில்ல நினைச்சேன். என்னை குத்திப் போட்ருண்ணே” என்று கருப்பு அழுகையுடன் வெடிக்கும் போது தன் கழுத்தை தானே அறுத்துக் கொள்வதில் முடிகிறது.

ஆடுகளம் படத்தில் தனுஷ் -  வி.ஐ.எஸ்.ஜெயபாலன்
ஆடுகளம் படத்தில் தனுஷ் - வி.ஐ.எஸ்.ஜெயபாலன்

களத்தில் நிற்காமல் பின்வாங்கும் சேவலை அறுத்துப் போடச் சொல்லும் பேட்டைக்காரரின் முடிவும் அதே போல் அமைவது துரதிர்ஷ்டமானது.

குருமார்களின் ரகசிய வன்மத்தின் விதை

வெள்ளை வேட்டி, ஜிப்பா, சாயம் போன சிவப்புத்துண்டு, நீளமான  கிருதா, பின்மண்டையில் பிரிந்து அலையும் நரைமுடி, அய்யனார் மீசை, உக்கிரமான கண்கள் என்று தன் முகபாவத்தினாலேயே அனைத்துக் காட்சிகளிலும் சிறப்பாக நடித்திருக்கிறார் ஜெயபாலன். ‘ஆடுகளம்’ தந்த புகழ் வெளிச்சம் காரணமாக, இதற்குப் பிறகு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இந்தப் படம் அளவிற்கு வேறு எதிலுமே ஜெயபாலனின் நடிப்பு பேசப்படாததற்கு காரணம் அவரின் பிழையல்ல. அவரைக் கையாண்ட இயக்குநர்கள் இன்னமும் சிறப்பாக பயன்படுத்தியிருக்க வேண்டும்.

ஆடுகளம் படத்தில் வி.ஐ.எஸ்.ஜெயபாலன்
ஆடுகளம் படத்தில் வி.ஐ.எஸ்.ஜெயபாலன்

தன்னைத் தாண்டிச் செல்லும் சிஷ்யர்களின் மீது குருமார்கள் எப்போதுமே பெருமிதமும் சந்தோஷமும்தான் அடைவார்கள். ஆனால் ஓரத்தில் ஒரு நெருடல் இருந்து கொண்டேதான் இருக்கும். போர்ப்பயிற்சி அளிக்கும் வாத்தியார்கள் எல்லாவற்றையும் சொல்லித் தந்து விடமாட்டார்கள் என்றொரு பொதுக்கருத்து உண்டு.

சிலவற்றை தன்னுடன் வைத்துக் கொள்வார்கள். நாளை சிஷ்யனிடமே போர் செய்ய நேர்ந்தால்?... மிஞ்சிச் செல்லும் சிஷ்யனின் மீது சிறிய நெருடல் இருப்பது இயல்புதான். ஆனால் அதுவே வன்மமாகவும் குரோதமாகவும் பெருகியோடினால்?.. பேட்டைக்காரனின் மூலம் மறக்க முடியாத ஒரு சித்திரத்தை அளித்திருக்கிறார் ஜெயபாலன்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com