47 ஆண்டுகளாக காயங்களும் கண்ணீரும் நிறைந்த போராட்டத்தை கடந்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, 2025 உலகக்கோப்பையை வென்று வரலாற்றில் புதிய அத்தியாயத்தை எழுதியுள்ளது. பல தோல்விகளையும் அவமானங்களையும் தாண்டி, ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையில் இந்தியா, தென்னாப்பிரிக்காவை எதிர்த்து இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றியது.
காயத்தாலும், கண்ணீராலும் எழுதப்பட்ட கதை இது.. 47 வருடங்களாக திறமைக்கான அங்கீகாரத்திற்காக நடத்தப்பட்ட போராட்ட களம் இது.. எத்தனை அவமானங்கள், எத்தனை ஏளனங்கள், எத்தனை எத்தனை தோல்விகள், அனைத்தையும் கடந்துவந்திருக்கும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, ஒருவழியாக 2025 உலகக்கோப்பையை வென்று வரலாற்றில் கிரீடத்தை சுமந்துள்ளது..
1973-ம் ஆண்டு முதன்முதலாக மகளிர் உலகக்கோப்பை தொடங்கப்பட்டபோது இந்திய பெண்களுக்கு என்று ஒரு அணியே இல்லை.. இரண்டு உலகக்கோப்பைகளில் வீராங்கனைகளை விளையாட அனுப்பவும், செலவிடவும் பணமில்லை என விளையாட அனுப்பாமல் பின்வாங்கிய கதைகளும் இங்கு உண்டு.. கிரிக்கெட் கிட்களும், போதுமான வசதிகளும் இல்லாத இடத்திலிருந்து எங்களுக்கு ஒரு அங்கீகாரம் வேண்டுமென போராடிய வீராங்கனைகளின் தோல்வி முகங்களும் இங்கு ஏராளம் உண்டு..
அத்தனை சவால்களையும் கடந்துவந்து மிதாலி ராஜ், அஞ்சும் சோப்ரா, நீது டேவிட், ஜுலன் கோஸ்வாமி, ஹர்மன்ப்ரீத் கவுர் மற்றும் ஸ்மிரிதி மந்தனா போன்ற பல தலைசிறந்த கிரிக்கெட் வீராங்கனைகளை கண்டது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி. ஆனால் தனிப்பட்ட சாதனைகளால் சிகரம் தொட்ட இந்திய வீராங்கனைகளால் ஒருமுறை கூட உலகக்கோப்பையை கையில் ஏந்த முடியவில்லை. ஒவ்வொருமுறையும் ஏமாற்றமும், ஆராத காயமும் மட்டுமே மிஞ்சியது.
இந்திய மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் 2005 மற்றும் 2017 ஒருநாள் உலகக்கோப்பை, 2020 டி20 உலகக்கோப்பை என 3 முறை உலகக்கோப்பையின் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற இந்திய அணிக்கு மூன்றுமுறையும் தோல்வியே மிஞ்சியது.. இரண்டு முறை ஆஸ்திரேலியாவிற்கு எதிராகவும், ஒருமுறை இங்கிலாந்துக்கு எதிராகவும் கோப்பையை கோட்டைவிட்டது இந்திய அணி..
3 உலகக்கோப்பைகளை இழந்தபிறகு வேதனையுடன் பேசிய இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத், எத்தனை முறைதான் தோற்பது, அனைத்து தோல்வியிலும் முதலில் அழும்ஆள் நான்தான், தோல்வியின் வலி எப்படி இருக்கும் என்று எங்களுக்கு தெரியும், வெற்றியை ஒருமுறையேனும் ருசிக்க ஆசைப்படுகிறோம் என வேதனையுடன் தெரிவித்தார்..
இந்நிலையில் பல வருட கனவை நினைவாக்கும் விதமாக, 2025 மகளிர் உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொண்டு விளையாடியது இந்திய அணி.. நவி மும்பை மைதானத்தில் பரபரப்பாக தொடங்கப்பட்ட போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவரில் 298 ரன்களை குவித்தது. தொடக்க வீரராக களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை ஆடிய ஷஃபாலி வெர்மா 87 ரன்களும், மிடில் ஆர்டரில் நிலைத்து நின்று இறுதிவரை விளையாடிய தீப்தி சர்மா 58 ரன்களும் அடிக்க இந்தியா நல்ல டோட்டலை பதிவுசெய்தது..
299 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய தென்னாப்பிரிக்கா அணியில், தொடக்க ஜோடியாக களமிறங்கிய கேப்டன் லாரா வோல்வார்ட் மற்றும் பிரிட்ஸ் இருவரும் நிதானமான தொடக்கத்தை கொடுத்தனர்.. 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு மிரட்டிய இந்த ஜோடியை ரன் அவுட் மூலம் பிரித்துவைத்தார் அமன்ஜோத் கவுர். அடுத்த வந்த போஷை 0 ரன்னில் ஸ்ரீ சரணி வெளியேற்ற தென்னாப்பிரிக்காவிற்கு பெரிய அடியாக விழுந்தது..
ஆனால் பிரைம் ஃபார்மில் இருந்துவரும் தென்னாப்பிரிக்கா கேப்டன் லாரா, தொடர்ந்து அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி அரைசதமடித்து அசத்தினார்.. சூன் லஸ் உடன் சேர்ந்து மீண்டும் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை லாரா எடுத்துவர, விக்கெட்டை தேடிய இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் சரியான நேரத்தில் ஷஃபாலி வெர்மா கைகளில் பந்தை கொடுத்தார்.. பேட்டிங்கில் தரமான ஆட்டத்தை வெளிக்காட்டிய ஷஃபாலி, பந்துவீச்சிலும் அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றி தென்னாப்பிரிக்காவுக்கு அடிக்குமேல் அடி கொடுத்தார்..
அவ்வளவுதான் தென்னாப்பிரிக்கா இனி தேராது என நினைத்தபோது, ‘நான் களத்துல நிக்குறவரைக்கும் ஆட்டம் முடியாது’ என 11 பவுண்டரிகள் 1 சிக்சர் என பறக்கவிட்டு பயமுறுத்திய லாரா வோல்வார்ட் சதமடித்து மிரட்டினார்.. ’அந்த லாராவ யாராவது அவுட்டாக்குங்களேன் பா’ என ரசிகர்கள் புலம்பித்தள்ள, மறுமுனையில் 2 சிக்சர்களை பறக்கவிட்டு டென்சனை அதிகமாக்கிய டெர்க்ஸனை போல்டாக்கி அனுப்பினார் தீப்தி சர்மா.. மீண்டும் இந்தியாவின் பக்கம் ஆட்டம் திரும்ப அதிரடியில் மிரட்ட ஆயத்தமானார் லாரா வோல்வார்ட்..
தீப்தி சர்மா வீசிய பந்தை லாரா சிக்சருக்கு தூக்கி அடிக்க, பவுண்டரி லைனில் கேட்ச்சிற்கு வந்த அமன்ஜோத் கவுர் கைகளில் இருந்து 2 முறை பந்து எகிறிகுதித்தது.. ’எப்படியாவது கேட்ச்சை பிடிச்சிடுங்க’ என்ற ரசிகர்களின் இதயத்துடிப்பு படபடவென அடிக்க, 2 முறை எகிறி குதித்த பந்தை நழுவவிடாமல் கேட்ச்சாக மாற்றினார் அமன்ஜோத் கவுர்.. கடைசிவரை விட்டுக்கொடுக்காமல் போராடிய லாராவின் போராட்டம் ஒருவழியாக முடிவுக்கு வர இந்திய அணிவீரர்கள் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும் ’அப்பாடா’ என பெருமூச்சு விட்டனர்..
தொடர்ந்து சிறப்பாக பந்துவீசிய தீப்தி சர்மா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்த, தென்னாப்பிரிக்காவின் 10வது விக்கெட்டிற்கான கேட்ச் இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத்தின் கைகளில் சென்று உட்கார்ந்தது.. 2011 உலகக்கோப்பையின் வெற்றியானது கேப்டன் எம்எஸ் தோனியின் கைகளால் வந்துசேர்ந்தது போல, 2025 உலகக்கோப்பையின் வெற்றி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கைகளால் வந்துசேர்ந்தது.. 47 வருடங்களாக ஏங்கிக்கொண்டிருந்த அந்த மேஜிக் மொமண்ட் நடந்துவிட்டது, கேட்ச்சை பிடித்து வெற்றியை உறுதிசெய்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் உற்சாகத்தில் கிரவுண்ட்டை வட்டமடிக்க தொடங்கினார்.. ஒவ்வொரு இந்திய வீராங்கனைகளின் கண்களிலும் கண்ணீர் ததும்பியது..
’நாங்களும் ஜெயிச்சிட்டோம்’ என இந்திய மகளிர் அணி கொண்ட்டாட்டத்தை வெளிப்படுத்த, ஒட்டுமொத்த இந்தியாவும் அவர்களுடைய வெற்றியை தங்களுடைய வெற்றியாக கொண்டாடி தீர்த்தனர்.. வெற்றிக்கு பிறகு பேசிய நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, உலகக்கோப்பை வெல்லும் இந்த தருணத்தை அடைய 45 தூக்கமில்லா இரவுகளை கடந்தேன் என உருக்கமாக தெரிவித்தார்..
’தூதுவன் வருவான் கோப்பை வந்துசேரும்’ என்ற வசனத்திற்கேற்ப பல மாதங்களாக ஒருநாள் போட்டியே விளையாடாத ஷஃபாலி வர்மா, பிரதிகா ராவலுக்கு பதிலாக இந்திய அணிக்குள் வந்து இந்தியாவை கோப்பைக்கு அழைத்துச்சென்றார்.. பேட்டிங்கில் 215 ரன்கள் மற்றும் பவுலிங்கில் 22 விக்கெட்டுகளை வீழ்த்திய தீப்தி சர்மா தொடர் நாயகி விருதை வென்றார்.. 87 ரன்கள் மற்றும் 2 விக்கெட்டுகள் கைப்பற்றிய ஷஃபாலி வெர்மா ஆட்டநாயகி விருதை தட்டிச்சென்றார்..
இந்திய மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் மிதாலி ராஜுக்கு கூட கிடைக்காத, உலகக்கோப்பை வென்ற இந்திய கேப்டன் என்ற பெருமையை மகுடமாக சூடிக்கொண்டார் ஹர்மன்ப்ரீத் கவுர்.. 3 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பிறகு இந்திய மகளிர் அணி முதல் உலகக்கோப்பையை முத்தமிட்டது.. வாழ்த்துக்கள் சிங்கப்பெண்களே.. மகளிர் கிரிக்கெட் தொடர்ந்து மிளிர்ந்து ஒளிர பெரிய பாதையை அமைத்து கொடுத்துவிட்டீர்கள்.. வாழ்த்துக்கள் சாம்பியன்ஸ்!