ஹோபார்ட்டில் ஹீரோவான வாசிங்டன்.. ஆஸி மண்ணில் இந்தியா வரலாற்று வெற்றி! ஆட்டநாயகன் அர்ஷ்தீப் சிங்!
ஹோபார்ட் மைதானத்தில் நடந்த 3வது டி20 போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆட்டநாயகன் ஆனார். வாசிங்டன் சுந்தர் 23 பந்தில் 49 ரன்கள் அடித்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றார். இது ஆஸ்திரேலியாவிற்கு ஹோபார்ட் மைதானத்தில் முதல் தோல்வியாகும்.
2026 டி20 உலகக்கோப்பை தொடரானது எதிர்வரும் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கவிருக்கிறது.. மிகப்பெரிய தொடருக்கு இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில், ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா விளையாடிவருகிறது..
முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், இரண்டாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அசத்தலான வெற்றியை பதிவுசெய்தது..இந்தசூழலில் ஹோபார்ட் மைதானத்தில் நடந்துவரும் 3வது டி20 போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா மோதின..
முதல்முறையாக ஹோபார்ட்டில் தோற்ற ஆஸ்திரேலியா..
பரபரப்பாக தொடங்கிய போட்டியில் ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்தது. சிறப்பாக பந்துவீசிய அர்ஷ்தீப் சிங் தொடக்கத்திலேயே டிராவிஸ் ஹெட், ஜோஸ் இங்கிலீஸ் விக்கெட்டை வீழ்த்த 14 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா தடுமாறியது. தொடர்ந்து ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை வருண் சக்கரவர்த்தி வீழ்த்த 73 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்தது ஆஸ்திரேலியா..
ஆனால் மறுமுனையில் 8 பவுண்டரிகள் 5 சிக்சர்கள் என பறக்கவிட்ட டிம் டேவிட் 74 ரன்கள் குவித்து அசத்த, 8 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என விளாசிய ஸ்டொய்னிஸ் 64 ரன்கள் அடிக்க 20 ஓவரில் 186 ரன்கள் குவித்தது.. சிறப்பாக பந்துவீசிய அர்ஷ்தீப் சிங் 4 ஓவரில் 35 ரன்கள் குடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
187 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணிக்கு எதிராக ஆஸ்திரேலியா நெருக்கடி கொடுத்தது. ஆனால் மிடில் ஆர்டர் வீரராக வந்த வாசிங்டன் சுந்தர் 4 சிக்சர்கள் 3 பவுண்டரிகளை பறக்கவிட்டு 213 ஸ்டிரைக் ரேட்டுடன் 23 பந்தில் 49 ரன்கள் அடித்து அசத்தினார். வாசிங்டனின் அதிரடியால் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை 1-1 என சமன்செய்துள்ளது..
போட்டி நடைபெற்ற ஹோபார்ட் மைதானத்தில் முதல்முறையாக டி20 போட்டியில் தோல்வியை தழுவியது ஆஸ்திரேலியா அணி. முதலிரண்டு போட்டிகளில் பெஞ்சில் அமரவைக்கப்பட்ட அர்ஷ்தீப் சிங், 3வது போட்டியில் சிறப்பாக செயல்பட்டு ஆட்டநாயகன் விருதை வென்றதோடு ஒரு வரலாற்று வெற்றிக்கும் இந்தியாவை அழைத்துச்சென்றார்.

