ஹர்மன்ப்ரீத் கவுர்
ஹர்மன்ப்ரீத் கவுர்pt

”முதலில் அழுவது நான் தான்; தோல்வி எப்படி இருக்கும் என எங்களுக்கு தெரியும்” - ஹர்மன்ப்ரீத் ஓபன்

தோல்வி எப்படி இருக்குன் என்பது எங்களுக்கு தெரியும், ஒவ்வொரு தோல்வியின்போதும் முதலில் அழுவது நான் தான் என்று இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் பேசியுள்ளார்..
Published on
Summary

2025 மகளிர் உலகக்கோப்பை அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்திய அணி, முதல் உலகக்கோப்பையை வெல்லும் முயற்சியில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், தோல்வி எப்படியிருக்கும் என எங்களுக்கு தெரியும், வெற்றி எப்படியிருக்கும் என்பதை தெரிந்துகொள்ள விரும்புகிறோம் என கூறினார்.

2025 மகளிர் உலகக்கோப்பையானது பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.. இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா முதலிய 4 அணிகள் அரையிறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற நிலையில், முன்னாள் சாம்பியன்களான ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து இரண்டு அணிகளும் அரையிறுதியில் தோற்று வெளியேறியுள்ளன..

ஜெமிமா ரோட்ரிக்ஸ்
ஜெமிமா ரோட்ரிக்ஸ்

இதுவரை கோப்பையே வெல்லாத இந்திய அணி 7 முறை உலக சாம்பியனான ஆஸ்திரேலியாவை அரையிறுதியில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது. 339 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கை விரட்டி இந்திய அணி வரலாற்று வெற்றியை பதிவுசெய்தபோது, இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் பயிற்சியாளர்களை கட்டிப்பிடித்து கண்ணீர்விட்டார்.

ஹர்மன்ப்ரீத் கவுர்
ஹர்மன்ப்ரீத் கவுர்

இந்நிலையில் வெற்றிக்கு பிறகு உணர்ச்சிவசப்பட்டது குறித்து பேசியிருக்கும் ஹர்மன்ப்ரீத், அணியில் முதலில் அழுவும் ஆள் நான் தான், தோல்வியில்லாமல், வெற்றியிலும் அதிக உணர்ச்சிவசப்படும் நபராகவே இருந்துள்ளேன் என்று கூறியுள்ளார்..

தோல்வி எப்படியிருக்கும் என தெரியும்...

நாளை நடக்கவிருக்கும் உலகக்கோப்பைக்கான இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை எதிர்கொண்டு விளையாடவிருக்கிறது இந்திய மகளிர் அணி. கிட்டத்தட்ட 50 வருடங்களாக கோப்பை வெல்லாமல் இருந்துவரும் இந்திய மகளிர் அணி, முதல் உலகக்கோப்பையை வெல்லும் முயற்சியில் களம்காண உள்ளது..

இந்தசூழலில் போட்டிக்கு முன்னதாக பேசியிருக்கும் ஹர்மன்ப்ரீத், தன்னுடைய எமோசன் குறித்தும், உலகக்கோப்பை வெல்வது குறித்தும் பேசியுள்ளார்..

இதுகுறித்து பேசியிருக்கும் அவர், “நான் மிகவும் உணர்ச்சிவசப்படக்கூடிய நபர் என்று நினைக்கிறேன், நான் நிறைய அழுகிறேன்" என்று புன்னகையுடன் ஒப்புக்கொண்டார். "தோல்வியடைந்த பிறகு மட்டும் அழுவது இல்லை - வெற்றி பெற்ற பிறகும் பல முறை அழுதிருக்கிறேன். நாங்கள் சிறப்பாகச் செயல்பட்ட போதெல்லாம், சின்னசின்ன சந்தர்ப்பங்களில் டிரஸ்ஸிங் அறையில் நான் உணர்ச்சிவசப்படுவதை என் அணி வீரர்கள் பார்த்திருக்கிறார்கள். பொதுவாக நான்தான் முதலில் அழுவேன்" என்று ஹர்மன்ப்ரீத் கூறினார்.

மேலும், "ஒரு வீராங்கனையாக, இந்த தருணங்கள் மிகவும் முக்கியமானவை. மனரீதியாக மிகவும் வலிமையான மற்றும் உலக அரங்கில் எப்போதும் சிறப்பாகச் செயல்படும் ஆஸ்திரேலியா போன்ற ஒரு அணியை வீழ்த்துவது எளிதானது அல்ல. அந்தத் தடையைத் தாண்டியது அனைவருக்கும் மிகவும் சிறப்பு வாய்ந்தது. உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தத் தேவையில்லை என்று நான் எப்போதும் என் அணிவீரர்களிடம் கூறுவேன். நீங்கள் அழ விரும்பினால், அழுங்கள். உங்களை நீங்களே நிறுத்த வேண்டிய அவசியமில்லை - விளையாட்டை தொடர்ந்து அனுபவித்துக்கொண்டே இருங்கள்” என பேசினார்..

இந்தியா தனது முதல் மகளிர் உலகக் கோப்பை பட்டத்தை வெல்ல ஒரு வெற்றி மட்டுமே உள்ள நிலையில், இதற்கு முன்பு அடைந்த மனவேதனைகள் மற்றும் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஏற்பட்ட தோல்விகள் குறித்து ஹர்மன்ப்ரீத் நினைவு கூர்ந்தார். அப்போது, "தோல்வி எப்படி இருக்கும் என்பதை நாங்கள் அறிவோம். ஆனால் வெற்றி எப்படி இருக்கும் என்பதை அறிய நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம். நாளை எங்களுக்கு ஒரு சிறப்பு நாளாக இருக்கும் என்று நம்புகிறேன். நாங்கள் மிகவும் கடினமாக உழைத்துள்ளோம், இப்போது அணிக்காக எல்லாவற்றையும் ஒன்றிணைத்து செயல்படுவது முக்கியமானது என்று பேசியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com