இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு pt web
இந்தியா

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு.. ஏற்றமும் இறக்கமும் ஓர் அலசல்!

இந்தியாவின் முக்கியமான அரசியல் இயக்கங்களுள் ஒன்றான இடதுசாரி இயக்கம் தனது நூற்றாண்டு நிறைவைக் கொண்டாடுகிறது. இத்தருணத்தில் அந்த இயக்கத்தின் தோற்றத்தையும் எழுச்சியையும் வீழ்ச்சியையும் பற்றி பார்க்கலாம்.

PT WEB

இந்தியாவின் முக்கியமான அரசியல் இயக்கங்களுள் ஒன்றான இடதுசாரி இயக்கம் தனது நூற்றாண்டு நிறைவைக் கொண்டாடுகிறது. இத்தருணத்தில் அந்த இயக்கத்தின் தோற்றத்தையும் எழுச்சியையும் வீழ்ச்சியையும் பற்றி பார்க்கலாம்.

இந்தியாவின் முக்கிய எதிர்க்கட்சியாகவும், பல மாநிலங்களில் ஆட்சி அதிகாரத்திலும் இருந்த கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பயணம் 1920இல் தொடங்கியது. அந்த ஆண்டில் சோவியத் ஒன்றியத்தின் தாஷ்கண்ட் நகரில் எம்.என். ராய், அபானி முகர்ஜி ஆகியோரால் விதை போடப்பட்டது.

1925இல் சத்யபக்தா, எஸ்.வி. காட்டே ஆகிய இருவரும் நடத்திய கான்பூர் மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரபூர்வமாகத் தொடங்கப்பட்டது. இக்கட்சியின் முதல் பொதுச் செயலாளராக எஸ்.வி. காட்டே தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதையடுத்து இந்திய விடுதலைக்காக கம்யூனிஸ்ட் கட்சி ஆயுதப் பாதையில் போராடியதால் பிரிட்டிஷாரால் 1934 மற்றும் 1939 என இரு முறை தடைசெய்யப்பட்டது. இரண்டாம் உலகப்போரில் சோவியத் ஒன்றியம் பிரிட்டனுடன் இணைந்ததால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தில் பங்கேற்காமல் ‘மக்கள் போர்’ என்று பிரிட்டனை ஆதரித்தது.

சுதந்திரத்துக்குப் பிந்தைய இந்தியாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு வலுவான சக்தியாக உருவெடுத்தது. 1951-1952ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் மக்களவைத் தேர்தலில் 16 இடங்களை வென்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பெரிய எதிர்க்கட்சியானது.

1957இல் கேரளத்தில் இ.எம்.எஸ். நம்பூதிரிபாடு (E.M.S. Namboodiripad) தலைமையில், உலகில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் கம்யூனிஸ்ட் அரசு அமைந்தது. எனினும், மத்திய அரசால் அரசமைப்புச் சட்டப்பிரிவு 356ஐ பயன்படுத்தி நம்பூதிரிபாடு (E.M.S. Namboodiripad) அரசு 1959ஆம் ஆண்டு ஜூலை 31ஆம் தேதியன்று கலைக்கப்பட்டது.

ஒருங்கிணைந்த கட்சியாக 1962ஆம் ஆண்டு 29 மக்களவைத் தொகுதிகளில் வென்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உச்சத்தை அடைந்தது. சித்தாந்த ரீதியாகவும், சோவியத் ஆதரவு, சீன ஆதரவு என்ற முரணாலும் இந்திய- சீனப் போர் கொடுத்த அழுத்தத்தாலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1964இல் இரண்டாக உடைந்தது.

இதிலிருந்து சீனாவுக்கு ஆதரவான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்றும் சிபிஐ (எம்) என்று அழைக்கப்படும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உருவானது.

சிவப்புக் கோட்டைகளின் காலம் என்று அழைக்கப்பட்ட 1977க்கும் 2009க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் இடதுசாரிகள் மூன்று மாநிலங்களில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கினர். மேற்கு வங்கத்தில் ஜோதி பாசு 1977இல் முதல்வரானது தொடங்கி புத்ததேவ் பட்டாச்சார்யா தலைமையிலான இடதுசாரி அரசு 2011 தேர்தலில் தோல்வியுற்றதுவரை 34 ஆண்டுகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தடையற்ற ஆட்சி நடைபெற்றது.

கேரளத்தில் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் அரசு தொடங்கி தற்போதைய பினராயி விஜயன் அரசு வரை இடதுசாரிக் கட்சிகள் மொத்தம் 38 ஆண்டுகள் ஆண்டிருக்கின்றன. திரிபுராவில் 1978 தொடங்கி 2018 வரை இடையே 5 ஆண்டுகள் தவிர்த்து மொத்தம் 35 ஆண்டுகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி நடைபெற்றது.

2004 பொதுத்தேர்தலில் இடதுசாரி கட்சிகள் 59 மக்களவைத் தொகுதிகளை வென்று புதிய உச்சம் பெற்று தேசிய அரசியலைத் தீர்மானித்தனர்.

2011இல் மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸிடம் ஆட்சியை இழந்தனர். 2019இல் மக்களவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 3 இடங்களையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 இடங்களையும் மட்டுமே வென்றன. 2024 பொதுத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 4 இடங்களையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 இடங்களையும் வென்றன.

2023இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனது தேசிய கட்சி அந்தஸ்தை இழந்தது. தற்போது கேரளத்தில் மட்டுமே இடதுசாரிக் கூட்டணி ஆட்சியில் உள்ளது. தமிழகத்தில் இருந்துதான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இரு மக்களவை உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொழிலாளர்களுக்காகவும் ஏழை எளிய மக்களுக்காகவும் எப்போதும் களத்தில் நிற்கும் இயக்கங்களாக அறியப்பட்டிருக்கும் இடதுசாரி கட்சிகள் கடந்த இரு தசாப்தங்களாகக் கடும் வீழ்ச்சியை சந்தித்துவருகின்றன. இதற்கான காரணங்களை இடதுசாரி கட்சிகள் ஆராய வேண்டியதுடன் பிளவுபட்டுக் கிடக்கும் இடதுசாரி இயக்கங்கள் ஒன்றுசேர வேண்டும் என்பது இடதுசாரிகளின் ஆதரவாளர்கள் கருத்து.