கேரளா | 40 ஆண்டுகளான இடதுசாரிகளின் ஆதிக்கத்தை வீழ்த்தி., பாஜகவை சார்ந்தவர் மேயராக பதவியேற்பு.!
திருவனந்தபுரம் மாநகராட்சியில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், பாஜகவின் மாநில செயலாளரான விவி ராஜேஷ் மேயராகத் தேர்வாகியுள்ளார். இதன் மூலம், திருவனந்தபுரம் மாநகராட்சியில் நாற்பது ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்திய இடதுசாரிகளை பாஜக வீழ்த்தியுள்ளது.
திருவனந்தபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மேயர் தேர்தலில், பாஜகவைச் சேர்ந்த ராஜேஷ் 51 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். மேயராகத் தேர்வானப் பின் பேசிய ராஜேஷ், நாங்கள் இன்னும் முன்னோக்கிச் செல்வோம் எனத் தெரிவித்தார். மேலும், மாநகராட்சியின் 101 வார்டுகளிலும் வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படும் எனத் தெரிவித்த அவர், திருவனந்தபுரத்தை வளர்ந்த நகரமாக மாற்றுவோம் என்றும் தெரிவித்திருக்கிறார். ராஜேஷ் தான் மேயர் வேட்பாளர் என்று பாஜக கிட்டத்தட்ட ஆறுமாதங்களுக்கு முன்பாகவே அறிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
திருவனந்தபுரம் மாநகராட்சி மொத்தம் 101 உறுப்பினர்களைக் கொண்ட நிலையில் சுயேட்சை கவுன்சிலர் ஒருவரின் ஆதரவுடன் பாதிக்கும் மேற்பட்ட வாக்குகளை ராஜேஷ் பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், திருவனந்தபுரம் மாநகராட்சியில் தனிப்பெரும் கட்சியாகவும் பாஜக உருவெடுத்திருக்கிறது. இந்தத் தோல்வி இடது ஜனநாயக முன்னணிக்குப் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. ஆனாலும், கோழிக்கோடு மாநகராட்சியில் பெரும்பாலான வார்டுகளில் இடதுசாரிகள் வெற்றி பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த மேயர் தேர்தலின்போது, பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர், முன்னாள் மத்திய அமைச்சர் வி. முரளிதரன் மற்றும் முன்னாள் மாநில தலைவர் கே. சுரேந்திரன் போன்ற தலைவர்கள் மாநகராட்சி அலுவலகத்தில் இருந்தனர். கேரளாவில் மொத்தம் 6 மாநகராட்சிகள் இருக்கும் நிலையில், 4ல் வெற்றி பெற்று ஐக்கிய ஜனநாயக முன்னணி முன்னிலையில் இருக்கிறது. பாஜகவும் இடதுசாரி ஜனநாயக முன்னணியும் தலா ஒரு மாநகராட்சியில் வெற்றி பெற்றிருக்கிறது. ராஜேஷ் மேயராகத் தேர்வானது, கேரளாவின் நகர்ப்புற அரசியலில் பாஜகவுக்கான புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

