அதிரடி முடிவால் பிரதமருக்கு செக்! அசிம் மூனீர் கைக்கு வந்த புதிய ’பவர்’.. பாகிஸ்தான் ஆட்சி கவிழுமா?
பாகிஸ்தானின் ராணுவத் தளபதி அசிம் முனீரின் பதவி நீட்டிப்புக்கு ஏற்றவாறு அரசியல் சாசனத்தின் 243வது பிரிவில் 27வது திருத்தத்தை மேற்கொள்ளும் மசோதா அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
“பாதுகாப்புப் படைகளின் தலைவர்” – புதிய அதிகார பதவி
அண்டை நாடான பாகிஸ்தானில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்நாட்டின் பிரதமராக ஷபாஸ் ஷெரீப் உள்ளார். இந்த நிலையில், பாகிஸ்தானின் ராணுவத் தளபதி அசிம் முனீரின் பதவி நீட்டிப்புக்கு ஏற்றவாறு அரசியல் சாசனத்தின் 243வது பிரிவில் 27வது திருத்தத்தை மேற்கொள்ளும் மசோதா அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ‘பாதுகாப்புப் படைகளின் தலைவர்’ என்ற புதிய பதவி உருவாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ஆபரேஷன் சிந்தூரால் இந்தியாவிடம் பாகிஸ்தான் கடும் பின்னடைவைச் சந்தித்த நிலையில் அனைத்துப் படைகளையும் வழிநடத்த வலுவான தளபதி தேவை என்ற நோக்கின் அடிப்படையில், இந்த முடிவானது எடுக்கப்பட்டுள்ளது.
முனீரின் கையில் முழு இராணுவ அதிகாரம்
இந்த சக்திவாய்ந்த பொறுப்பு ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை என மூன்றையும் கட்டுப்படுத்த வழிவகுக்கிறது. பிரதமரின் ஆலோசனைக்குப் பிறகு குடியரசுத் தலைவர் முனீரை அதிகாரப்பூர்வமாக நியமிப்பார். இந்த நியமனம், இராணுவ மேலாதிக்கத்தை சட்டப்பூர்வமாக்குகிறது, கட்டளைச் சங்கிலி, அணுசக்தி அதிகாரம் மற்றும் நீதித்துறையைக்கூட அசிம் முனீரின் கட்டுப்பாட்டின்கீழ் வைக்கிறது. இந்தத் திருத்தம் நீதித்துறையையும் இராணுவத்தின் வலையில் சிக்க வைக்கிறது.
“ஆட்சிக் கவிழ்ப்புக்கு சாத்தியம்!”
“இந்தத் திருத்தம் பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்துவதற்குப் பதிலாக ஒரு குறிப்பிட்ட நபருக்கு பயனளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. விமானப்படை மற்றும் கடற்படை மீது அதிகாரம் கொண்ட ஒரு இராணுவ அதிகாரியை பாதுகாப்புப் படைகளின் தலைவராக நியமிப்பதன் மூலம், முன்மொழியப்பட்ட அமைப்பு நிறுவன ஏற்றத்தாழ்வு மற்றும் சாத்தியமான பேரழிவை அழைக்கிறது” எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் இந்த திருத்தத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராட்டமும் நடத்தி வருகின்றன. அதேநேரத்தில், அசிம் முனீருக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்த அதிகாரத்தால், ஆட்சியையே அவர் கவிழ்க்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தான் ஆட்சிக் கவிழ்ப்புகளையும் இராணுவ சர்வாதிகாரிகளையும் கண்டிருந்தாலும், இராணுவத் தலைவர் அசிம் முனீர் நடத்தும் ஆட்சிக் கவிழ்ப்பு முன்னெப்போதும் இல்லாததாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானின் மூன்று வரலாற்று ஆட்சிக் கவிழ்ப்புகள்!
அதற்கு கடந்தகால கதைகளும் உதாரணம் காட்டப்படுகின்றன. பாகிஸ்தான் உருவானதிலிருந்து, ஜெனரல்கள் அயூப் கான் (1958), ஜியா-உல்-ஹக் (1977) மற்றும் பர்வேஸ் முஷாரஃப் (1999) ஆகியோரால் மூன்று இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புகள் நடைபெற்று உள்ளதாகவும், அந்த வகையிலேயே அசிம் முனீர் மூலம் நான்காவது ஆட்சிக் கவிழ்ப்பு நிகழலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், முனீரின் சூழ்ச்சி நுட்பமானதாகவும், மிகவும் ஆபத்தானதாகவும் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. மேலும், இராணுவம் இப்போது சட்டப்பூர்வ கட்டுப்பாட்டைச் செலுத்தும்பட்சத்தில், ஜியா-உல்-ஹக் கற்பனை செய்ததையும், பர்வேஸ் முஷாரஃப் சாதிக்கத் தவறியதையும் முனீர் அடைந்துள்ளார் எனக் கூறப்படுகிறது.
மறுபுறம், பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் அவரது கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி ஆகிய இருவரும் பெரும்பாலும் இராணுவத்துடன் பதற்றமான உறவைக் கொண்டிருக்க வேண்டும் அல்லது இறுதிவரை கூட்டாளியாகத் தொடர வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட வேண்டும் எனச் சொல்லப்படுகிறது.
முனீரின் திட்டம் நுட்பமானதும் ஆபத்தானதும்..
முன்னதாக, அசிம் முனீருக்கு மரியாதை நிமித்தமாக வழங்கப்பட்ட ஃபீல்ட் மார்ஷல் பட்டமும், அரசியலமைப்பின் 243வது பிரிவின் திருத்தத்தின் மூலம் அங்கீகரிக்கப்பட்ட அரசியலமைப்பு பதவியைப் பெறுகிறது. முன்மொழியப்பட்ட திருத்தத்தில் இது மிகவும் பயங்கரமானது எனக் கூறப்படுகிறது. ஐந்து நட்சத்திர பதவிகளுக்கு உரியதான இந்த ஃபீல்ட் மார்ஷல் பட்டம், விமானப்படையின் மார்ஷல் அல்லது கடற்படையின் அட்மிரல் ஆகியோருக்கு வாழ்நாள் முழுவதும் அரசியலமைப்பு பாதுகாப்பை வழங்கும் பிரிவுகள் ஆகும். அதாவது, இந்த அதிகாரிகள் பதவி, சலுகைகளைத் தக்கவைத்துக்கொள்வார்கள் மற்றும் வாழ்நாள் முழுவதும் சீருடையில் இருப்பார்கள்.
மேலும், பிரிவு 248இன்கீழ் குடியரசுத் தலைவரின் விலக்குகளைப் பிரதிபலிக்கும் விதிவிலக்குகள் இருக்கும். அதாவது, முனீரின் வாழ்நாள் முழுவதும், அவர் மீது எந்த சட்ட வழக்கும் பதிவு செய்ய முடியாது; நீங்கள் எந்த புகாரும் பதிவு செய்ய முடியாது. அதாவது, ”அசிம் முனீர் தனது வாழ்நாளில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், அவர் ஒருவரைக் கொன்றாலும், பாலியல் பலாத்காரம் செய்தாலும், அடக்குமுறையில் ஈடுபட்டாலும் அல்லது வேறு எந்த குற்றத்தையும் செய்தாலும், அவருக்கு வாழ்நாள் முழுவதும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால், பாகிஸ்தானின் சட்டங்கள் அவருக்கு எதிராக ஒருபோதும் நடவடிக்கை எடுக்க முடியாது" என்று டோலோ நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

