அசிம் முனீருக்கு விருந்து.. ராஜமரியாதை; ட்ரம்ப் போடும் பக்கா பிளான்! பாக். கொடுக்கும் விலை இதுதானா!
அமெரிக்கா அதிபர் - பாகிஸ்தான் ராணுவத் தளபதி சந்திப்பு
அமெரிக்காவுடனான ராணுவ மற்றும் தூதரக உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் சையத் அசிம் முனீர், ஐந்து நாள் பயணமாகச் சென்றுள்ளார். அவர், அங்கு அமெரிக்காவின் பல்வேறு மூத்த அதிகாரிகளையும் தலைவர்களையும் சந்திப்பார் என தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில், தலைநகர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில், பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசீம் முனீருக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் விருந்தளித்தார். பின்னர், இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், ”அவரைச் சந்தித்ததில் நான் பெருமைப்படுகிறேன். எல்லாவற்றிற்கும் என்னிடம் ஒரு திட்டம் உள்ளது. ஆனால் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்” எனத் தெரிவித்தார்.
இதற்கிடையே, அமெரிக்காவில் விருந்தினருக்கு மதிய உணவு வழங்கப்படுவதில்லை. ஆனால் அதையும் மீறி, பாகிஸ்தான் போன்ற ஒரு நாட்டின் ராணுவத் தலைவருக்கு மதிய உணவு விருந்து அளித்திருப்பதும், அதிபர் ட்ரம்புவிற்கு இது மிகவும் அரிதானது என்பதும் பேசுபொருளாகி உள்ளது. அதிலும், இதர நாட்டு அதிபர்கள், பிரதமர்களுக்கு தரும் மரியாதையை, ட்ரம்ப் முனீருக்குத் தந்தது ஏன் என்பது குறித்து இங்கு அறிவோம்.
அமெரிக்காவில் கொண்டாடப்படும் பாக். ராணுவத் தளபதி
பாகிஸ்தானின் ராணுவத் தளபதியான அசிம் முனீர், உண்மையில் அந்தப் பொறுப்பில் மட்டும் இருக்கவில்லை. ஆம், அவர் பாகிஸ்தானின் உண்மையான ஆட்சியாளர் மற்றும் அறிவிக்கப்படாத இராணுவ சர்வாதிகாரி என்று சொல்லப்படுகிறது. பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் இருந்தாலும், அவர் வெறும் பொம்மை பிரதமர் மட்டுமே என்றும், அவருடைய ஆட்சியில் அனைத்தும் ராணுவத்தால் மட்டுமே முடிவெடுக்கப்படுகிறது எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே அமெரிக்கர்கள், முனீரை ’அவர் எங்கள் பி.சி. ஹெச் மகன்’ என்றும், ’அமெரிக்காவின் கட்டளைப்படி நடக்கத் தயாராக இருப்பவர்’ என்றும் குறிப்பிடுகின்றனர்.
தவிர, மோசமான இராணுவ சர்வாதிகாரிகளையும் படுகொலை செய்பவர்களையும் மகிழ்விப்பதிலும், பாராட்டுவதிலும் அமெரிக்கா பாரபட்சம் பார்ப்பதில்லை. அந்த வகையிலேயே அசிம் முனீர் - அதிபர் ட்ரம்ப் சந்திப்பு நிகழ்ந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், முனீரைப் போன்ற ஒரு இஸ்லாமிய நபருக்காக, அவர் நேரம் ஒதுக்கியது ஏன்? அப்படியெனில், அவரிடமிருந்து குறிப்பிடத்தக்க ஒன்றை ட்ரம்ப் விரும்பியிருக்கிறாரோ? அதற்காக விலை எதுவும் கொடுக்கப்பட்டுள்ளதா என்கிற தோணியில் சர்வதேச ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு உள்ளன.
ட்ரம்ப் - அசிம் முனீர் சந்திப்பில் நடந்தது என்ன?
எனினும், அவர்களுடைய இந்த சந்திப்பின்போது, உண்மையில் என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் அதிபர் ட்ரம்ப் அமைப்பும், அதன் கூட்டாளிகளும் பாகிஸ்தான் இராணுவத்தின் ஆதரவின்கீழ் அந்நாட்டு கிரிப்டோகரன்சி ஒப்பந்தங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அமெரிக்க நிறுவனங்களுக்கு அரிதான மண் கனிம உரிமைகள் மற்றும் பிற இலாபகரமான திட்டங்களை (குறைந்தபட்சம் காகிதத்தில்) பாகிஸ்தானியர்கள் வழங்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவற்றில் சில ட்ரம்ப் குடும்பத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மேலும், முனீரைக் கவர்ந்திழுப்பதன் மூலம் சீனாவின் அரவணைப்பிலிருந்து பாகிஸ்தானை மீட்டெடுக்க ட்ரம்ப் முயற்சிக்கிறாரா அல்லது அது ஈரானைப் பற்றியதா என்கிற கேள்விகளும் எழுகின்றன. அதற்கு உதாரணமாய் அமெரிக்கா ஈரானுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தவிர, பலுசிஸ்தானுக்குள் தளவாட தளங்களை அமெரிக்கா தேடுவது குறித்து நிறைய ஊகங்கள் எழுந்துள்ளன. இன்னும் சொல்லப்போனால், அமெரிக்கா தனது ஈரான் தாக்குதலுக்கு பாகிஸ்தான் வான்வெளியை சுதந்திரமாகவும் தடையின்றியும் பயன்படுத்த முயற்சிக்கும் என்றும் கூறப்படுகிறது. இஸ்லாமிய குடியரசு மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் ஈரானுக்குள் மீட்பு நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தானின் உதவியை நாடுவது குறித்தும் சில பேச்சுக்கள் உள்ளன. இறுதியாக, ஈரானிய ஆட்சியைச் சீர்குலைக்கவும் மாற்றவும் அமெரிக்கர்கள் பாகிஸ்தானிடமிருந்து உளவுத்துறை ஒத்துழைப்பை நாடலாம் என்றுக் கூறப்படுகிறது. இன்னொரு புறம், முனீரிடம் இருந்து தனிப்பட்ட ஒப்பந்தங்களைத் தவிர, இஸ்லாமிய அரசு கோரசான் (ISK) அச்சுறுத்தலுக்கு எதிராக பயங்கரவாத ஒத்துழைப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
”இந்தியா குறித்தும் பேசியிருக்காலாம்!”
சரி, முனீரிடம் அமெரிக்காவின் தேவைகள் இத்தகையதாக இருக்கும் பொருட்டு, அதற்கு அவர் என்ன ஆதாயத்தைப் பெற்றிருப்பார் என்ற கேள்வியும் இங்கு எழுந்துள்ளது. குறிப்பாக, அவர் அமெரிக்காவிடமிருந்து பொருளாதார உதவி மற்றும் முதலீடுகளைப் பெறலாம். மிக முக்கியமாக, காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்யச் சொல்லி கட்டாயப்படுத்திருக்கலாம். காஷ்மீர் பிரச்சினையில் அமெரிக்காவின் தலையீட்டைத் தவிர, சிந்து நீர் ஒப்பந்தத்தை இந்தியா பின்வாங்கவும், மதிக்கவும் முனீர் அமெரிக்காவின் அழுத்தத்தை நாடலாம். கூடுதலாக, பலூச் சுதந்திரப் போராளிகள் மற்றும் தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) கிளர்ச்சியாளர்களுக்கு இந்தியா அளித்ததாகக் கூறப்படும் ஆதரவிலிருந்து பின்வாங்குமாறு அமெரிக்கா இந்தியாவை அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று அவர் கோரலாம் எனக் கூறப்படுகிறது.
மொத்தத்தில், அமெரிக்கா தனது சொந்த நோக்கங்களுக்காக பாகிஸ்தானை கவர்ந்திழுத்தால் அது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது. அமெரிக்கா, பாகிஸ்தானுக்கு ஆதரவு காட்டும் பட்சத்தில், நிச்சயமாக இந்தியாவிலிருந்து ஓர் எதிர்ப்பு இருக்கும். மேலும், சமீபத்திய இந்தியா-பாகிஸ்தான் மோதலுக்குப் பிறகு ட்ரம்ப் நிர்வாகத்தின் சந்தேகத்திற்குரிய பங்கு இந்தியர்களின் கோபத்தைத் தூண்டியுள்ளது. தவிர, இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே நட்பிலும் விரிசல் விழும் எனக் கூறப்படுகிறது. இன்னொரு புறம், ஈரான் தொடர்பாக பாகிஸ்தான் அமெரிக்காவிற்கு வழங்கும் எந்தவொரு ஒத்துழைப்பும் அதன் அரசியலில் விளைவுகளை ஏற்படுத்தும். உண்மையில், இந்தியாவுடனான போரை நிறுத்துவதற்கு உடன்பட்டதாக நன்றி தெரிவிக்கும் விதமாக ட்ரம்ப், முனீருக்கு மதிய உணவு விருந்து அளித்தாகக் கூறப்படுகிறது. ஆனால் இருவரும் ஈரான் பற்றியும் பேசியதற்கான சில குறிப்புகள் உள்ளன. ஆகையால், தற்போது முனீர் மற்றும் ட்ரம்பிற்கு இடையே நடந்தது குறித்து தற்போது சொல்ல முடியாத நிலையில், அது இன்னும் கொஞ்ச நாட்களில் வெளியுலகிற்கு தெரியவரும் என்கின்றனர், ஆய்வாளர்கள்.