பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீருடனான டிரம்ப் சந்திப்பு.. பேசியது என்ன?
தலைநகர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில், பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் அசீம் முனீருக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விருந்தளித்தார். இருவரின் சந்திப்பின்போது பத்திரிகையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படாத நிலையில், தனது ஓவல் அலுவலகத்தில் அதிபர் ட்ரம்ப் செய்தியாளர்களை சந்தித்து இதுகுறித்து பேசினார்.
அப்போது பேசிய டிரம்ப், “ இந்தியா உடன் தொடர்ந்து போரை முன்னெடுக்காமல், அதை முடித்துக்கொண்டதற்கு நன்றி தெரிவிக்கவே, பாகிஸ்தான் ராணுவ தளபதி முனீரை சந்தித்தேன். பிரதமர் மோடி சற்று முன்புதான் வெளியேறினார், நாங்கள் இந்தியாவுடனும் பாகிஸ்தானுடனும் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளோம்...
நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இருவரும் போரைத் தொடர வேண்டாம் என்று முடிவு செய்தனர். அவர்கள் இரண்டு பெரிய அணுசக்தி நாடுகள். இன்று அவரைச் சந்தித்ததில் நான் பெருமைப்படுகிறேன். “ என்று தெரிவித்தார்.
புதன்கிழமை வெள்ளை மாளிகையில் ஒரு அமெரிக்க அதிபருக்கும் பாகிஸ்தான் இராணுவத்தலைவருக்கும் இடையிலான நடந்த இந்த சந்திப்பு, மூதல் சந்திப்பு மட்டுமின்றி, மூத்த சிவில் அதிகாரிகள் இல்லாமல் நடந்த சந்திப்பும் ஆகும்.
இதனைத்தொடர்ந்து ஈரான் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த டிரம்ப், "எல்லாவற்றிற்கும் எனக்கு ஒரு திட்டம் உள்ளது, ஆனால் என்ன நடக்கிறது என்று பார்ப்போம். அவர்கள் எங்களுடன் ஒப்பந்தம் செய்திருக்க வேண்டும். அவர்களுக்காக எனக்கு நிறைய விஷயங்கள் இருந்தன. நாங்கள் 60 நாட்கள் அதைப் பற்றிப் பேசினோம், இறுதியில், அவர்கள் அதைச் செய்ய வேண்டாம் என்று முடிவு செய்தனர்.
இப்போது அவர்கள் அவ்வாறு செய்ய வேண்டும் என்று விரும்புகிறார்கள். சந்திப்பது தாமதமாகிவிட்டது, ஆனால் அவர்கள் அதைச் செய்ய விரும்புகிறார்கள், அவர்கள் வெள்ளை மாளிகைக்கு வர விரும்புகிறார்கள். நான் அதைச் செய்யலாம்... எதுவும் நடக்கலாம்... சிறிது நேரத்தில் போர் அறையில் எனக்கு ஒரு சந்திப்பு உள்ளது. நாங்கள் ஏதோ ஒரு பயங்கரமான சூழ்நிலையில் இருக்கிறோம். இவ்வளவு மரணத்தையும் அழிவையும் பார்ப்பது எனக்கு வெறுப்பை அளிக்கிறது. நான் என்ன செய்ய முடியும் என்பது குறித்து எனக்கு யோசனைகள் உள்ளன, ஆனால் அவை இறுதியானவை அல்ல. அது நடக்க வேண்டிய நேரத்திற்கு ஒரு நொடி முன்பு நான் இறுதி செய்ய விரும்புகிறேன். விஷயங்கள் மாறுகின்றன. குறிப்பாக போருடன்..." என்று அவர் கூறினார்.
இதற்கிடையே, ஈரான் உடனான போரில் பாகிஸ்தானின் ஒத்துழைப்பை அமெரிக்கா பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதன் தொடர்ச்சியாக இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.