சர்தாரிக்குப் பதிலாக அதிபராகிறாரா ராணுவத் தளபதி அசிம் முனீர்? வெளியான தகவலுக்கு அரசு பதில்!
அண்டை நாடான பாகிஸ்தானில் கடந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற தேர்தலின்போது எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து, 3 முறை பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியும், பிலாவல் பூட்டோ சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சியும் இணைந்து கூட்டணி அரசை அமைத்தன. கூட்டணி ஒப்பந்தப்படி, ஷெபாஸ் ஷெரீப் பிரதமராகவும், ஆசிஃப் அலி சர்தாரி அதிபராகவும் பொறுப்பேற்றனர். இந்த நிலையில், ராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் அசிம் முனீர் பற்றிய செய்திகள் சமீபகாலமாக வைரலாகி வருகின்றன. பாகிஸ்தான் அரசே, இவருடைய ஆலோசனையால்தான் இயங்குவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், பாகிஸ்தான் அதிபராக சர்தாரிக்குப் பதிலாக ராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் அசிம் முனீர் நியமிக்கப்படுவார் எனத் தகவல்கள் ஊடகங்களில் பரவி வருகின்றன. ஆனால், இதை பாகிஸ்தான் அரசு மறுத்துள்ளது. இதுதொடர்பாக பதிலளித்துள்ள அந்நாட்டின் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி. ”இந்தச் செய்திகள் அனைத்தும் வதந்தி. பிரதமர் மற்றும் அதிபர் சர்தாரி ஆகியோரைக் குறிவைத்து இத்தகைய பிரசாரத்தை யார் செய்கின்றார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். அதிபரை பதவி விலகக் கேட்பது குறித்து, எந்தவொரு உரையாடலோ அல்லது சிந்தனையோ இல்லை. அவர், ராணுவத் தலைவர்களுடன் வலுவான மற்றும் மரியாதைக்குரிய உறவுகளையே கொண்டுள்ளார். இந்தப் பொய்யான தகவல்களை பரப்பும் அனைவரும், வெளிநாட்டு அமைப்புகளுடன் இணைந்து உங்கள் விருப்பம்போல் செயல்படுங்கள். எங்களைப் பொறுத்தவரை, பாகிஸ்தானை மீண்டும் வலுவாக்க என்ன தேவையோ அதை நாங்கள் செய்கின்றோம்” எனத் தெரிவித்துள்ளார்.