எங்கும் போர் | அதிகார பசிக்கு குழந்தைகள் ஏன் சாக வேண்டும்? அவர்களின் அழுகுரல் கேட்கவில்லையா?
போர்களுக்குப் பஞ்சமில்லை
பலவீனமான மணம் கொண்டவர்கள் இதைப் படிக்க வேண்டாம் என்றுதான் சொல்லத்தோன்றுகிறது... போர், அணு குண்டுகள், பீரங்கி, உயிரிழப்பு என ஒவ்வொரு நாளும் மனிதர்களைப் பதற்றமடைய வைக்கும் சம்பவங்கள் உலகில் நிகழ்வது அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. உக்ரைன் - ரஷ்யா, இஸ்ரேல் - காஸா, இஸ்ரேல் - ஈரான் என இடைவிடாது நடக்கும் போர்களில் எஞ்சுவது என்னவோ இடிந்த கட்டடங்களும், உயிரிழந்த மனித உடல்களும்தான்.
‘போர் என்பது மனித இனத்தையே அழிக்கக்கூடிய கொடூரமான செயல்’ என்றார் மகாத்மா காந்தி.. ‘தயாரிக்கப்படும் ஒவ்வொரு துப்பாக்கியும், ஏவப்படும் ஒவ்வொரு போர்க்கப்பலும், ஏவப்படும் ஒவ்வொரு ராக்கெட்டும் பசியால் வாடும் உணவில்லாதவர்களிடமிருந்து திருடுவதைக் குறிக்கிறது’ என்கிறார் அமெரிக்க அதிபர் டுவைட் டேவிட் ஐசனாவர்.. வரலாறு நெடுகிலும் போர் என்பது எத்தகைய இன்னல்களுக்கு வழிவகுக்கும் என்பதை மனிதகுலம் பார்த்தே கடந்து வந்திருக்கிறது. ஆனாலும், புதிய போர்களுக்கு எப்போதும் பஞ்சமே இருப்பதில்லை.
பாதிக்கப்படும் குழந்தைகள்
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் கடந்த ஒருவாரமாக கடுமையான சண்டைகள் நடந்துவரும் நிலையில், காஸாவில் மக்கள் படும் அவதிகள் அத்தனைக் கவனம் பெறுவதில்லை. “இந்த மோதல் காஸாவின் நீர் சுகாதாரம் மற்றும் சுகாதார அமைப்புகளை கடுமையாக சேதப்படுத்தியுள்ளது அல்லது அழித்துள்ளது. இடைவிடாத குண்டுவெடிப்புகளின் காரணமாக 236 சிகிச்சை மையங்களில் 127 மட்டுமே செயல்பாட்டில் உள்ளன” என ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் நிதியம் (UNICEF) தெரிவித்துள்ளது.
“காஸாவில் மே மாதத்தில் மட்டும் ஊட்டச்சத்து குறைபாட்டின் காரணமாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை ஆபத்தான முறையில் அதிகரித்து வருகிறது. பிறந்து 6 மாதங்கள் முதல் 5 வயது வரையிலான 5119 குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைப்பாட்டின் காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது கடந்த ஏப்ரல் மாதத்தை ஒப்பிடும்போது 50% மற்றும் பிப்ரவரி மாதத்தினை ஒப்பிடும்போது 150% அதிகரித்துள்ளது” என UNICEF தெரிவித்துள்ளது.
இவையெல்லாம் தடுக்கக்கூடியவை எனத் தெரிவிக்கும் மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காவிற்கான யுனிசெஃப் பிராந்திய இயக்குனர் எட்வார்ட் பெய்க்பெடர், உணவு, தண்ணீர் மற்றும் அவர்களுக்கு மிகவும் தேவையான ஊட்டச்சத்து சிகிச்சைகள் போன்றவை அவர்களை சென்றடைவதிலிருந்து தடுக்கப்படுகின்றன என்றும் குற்றம்சாட்டுகிறார்.
எச்சரிக்கும் ஐநா
காஸாவில் இஸ்ரேலின் துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 25 முதல் 50 பொதுமக்களாவது கொல்லப்பட்டுக் கொண்டு இருக்கின்றனர். இதில் உதவி லாரிகளுக்காகவும், உணவுகளுக்காகவும் காத்திருக்கும் பொதுமக்களும் குழந்தைகளும் அடக்கம். ஓரிரு தினங்களுக்கு முன்கூட சிறுவன் ஒருவன் உணவின்றி மண்ணை வாயில் போட்டு தனது எதிர்ப்பினைக் காட்டிய வீடியோ இணையதளங்களில் வைரலானது..
கடந்த மாதம் காசாவிற்குள் உதவி வருவதை இஸ்ரேல் தொடர்ந்து தடுத்தால் 11 மாதங்களுக்குள் 14,000 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் உயிரிழக்க நேரிடும் என ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமானத் தலைவர் டாம் பிளெட்சர் எச்சரித்திருந்தார். இதில் தாய்ப்பால் கொடுக்கும் கர்ப்பிணிப் பெண்கள் 17 ஆயிரம் பேருக்கும் ஊட்டச்சத்து குறைப்பாட்டிற்காக சிகிச்சை தேவைப்படுகிறது எனவும் ஐநா எச்சரித்திருந்தது. ஆனால், தற்போதும் உதவிகள் தடுக்கப்படுவதாக புகார்கள் இருக்கின்றன.
இது இனப்படுகொலை
இதேபோல், மனதைக் கிழிக்கும் ஏகப்பட்ட சம்பவங்கள் ஒவ்வொரு நாளும் காஸாவில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. காஸாவில் இஸ்ரேல் மேற்கொள்ளும் ராணுவ நடவடிக்கைகளை இனப்படுகொலை என இங்கிலாந்து மக்கள் பலர் தெரிவிப்பதாக YouGov கருத்துக்கணிப்பு தெரிவித்திருத்திருக்கிறது. 30% பிரிட்டன் மக்கள் பாலஸ்தீனத்தை ஒரு சுதந்திர நாடாக உடனடியாக அங்கீகரிக்க வேண்டுமென தெரிவிக்கின்றனர்.
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இங்கிலாந்துக்கு வருகை தந்தால், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) கைது வாரண்டை இங்கிலாந்து அமல்படுத்த வேண்டும் என்று கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு பிரிட்டன் மக்கள் (65%) கூறுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
எல்லாம் வன்முறை
கடந்த ஆண்டு மட்டும் உலகளவில் அதிகரித்து வரும் மோதல்களில் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு சென்றுள்ளதாக ஐநா சபையின் அறிக்கை தெரிவித்துள்ளது. காசா, காங்கோ, சோமாலியா, நைஜீரியா மற்றும் ஹைட்டி போன்ற பகுதிகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வன்முறையில், கொலைகள், ஊனப்படுத்துதல், கடத்தல், பாலியல் வன்முறை, பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் மீதான தாக்குகள் மற்றும் தேவைப்படும் நிலையில் உதவி செய்ய மறுப்பதும் அடங்கும்... அப்படிப்பார்த்தால் காசாவிற்குள் செல்லும் உதவிகளை தடுப்பதும் வன்முறைதான் என்கின்றனர் சமூக செயற்பாட்டாளர்கள்.
கடந்த 2023 ஆம் ஆண்டு உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் காசா பகுதியில் சராசரியாக ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் ஒரு குழந்தை கொல்லப்படுவதாக தெரிவித்திருந்தார். கடந்த ஆண்டு Save the Children நிறுவனத்தின் பகுப்பாய்வின்படி, உலகளவில் இடம்பெயர்ந்த குழந்தைகளின் எண்ணிக்கை 50 மில்லியனுக்கும் அதிகமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை தற்போது அதிகரித்திருக்கும்.
2023 ஆம் ஆண்டில் மட்டும் உலகளவில் 1 கோடிக்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி வேறு இடங்களுக்கு இடம்பெயர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்றும் அந்தப் பகுப்பாய்வு தெரிவித்துள்ளது. இதில் பெரும்பாலானோர் போரால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பெற்றோரை இழந்தவர்கள். 2017 ஆம் ஆண்டு யுனிசெஃப் வெளியிட்ட அறிக்கை போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பள்ளிக்கூடம் செல்ல முடியாத குழந்தைகளின் எண்ணிக்கை மட்டும் 2.5 கோடி என தெரிவித்தது.
இரண்டாம் உலகப்போரில் ஹிட்லரால் 6 மில்லியன் யூதர்கள் கொல்லப்பட்டார்கள் என்றால் அதில் 1.5 மில்லியன் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். UNICEF கணிப்புகளின்படி, இரண்டாம் உலகப்போரில் மட்டும் 5 மில்லியன் குழந்தைகள் உயிரிழந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. இப்படி சமீப ஆண்டுகளானாலும் சரி, வரலாற்றிலும் சரி ஒரு போர் என்னவெல்லாம் செய்யும் என்பதை நம் சுட்டிக்காட்டிக் கொண்டே இருக்கிறது. இவ்வளவு ஏன்... இலங்கையிலுள்ள தமிழர்களுக்கும் அவர்களது குழந்தைகளுக்கும் என்ன நடந்தது என்பதையும் கண் முன் பார்த்துள்ளோம்.. உணர்வால் உணர்ந்துள்ளோம்..
சமீப ஆண்டுகளில், சிரிய உள்நாட்டுப் போரில் 30 ஆயிரம் குழந்தைகள், யேமனில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள், காஸாவில் 2023 ஆம் ஆண்டு முதல் மட்டும் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் என உலகெங்கும் நடந்த போர்களில் குழந்தைகளின் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
போரில் குழந்தைகள் படும் அவதிகளைப் படிக்கப் படிக்க ஏகலைவன் எழுதிய கவிதை நினைவுக்கு வந்தது...
எப்போது குண்டு விழுமோ என்று அஞ்சியபடியே
எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கிறேன்
கால்கள் களைத்து
இரைந்து கேட்கிறது ஓய்வை..
உழைக்க ஓடிய கால்களும்
ஓடியாடி விளையாடிய கால்களும்
உயிர் பிழைக்க ஓடியபடியே இருக்கின்றன.. என தொடரும் அக்கவிதை போரினால் உயிரிழந்த அப்பாவின் சடலத்தை காண்பதுபோல் முடிவடையும்...
ஏவுகணைகளும் துப்பாக்கிகளும் சத்தமானதுதான். ஆனால், அதைவிட சத்தமானது உணவுக்காக அழும் குழந்தைகளின் அழுகை.. பீரங்கிகளின் வெடிப்பை விட வலுவானது. கேட்க மனமிருந்தால் தடுக்க வழி பிறக்கும்.. தடுக்க முயற்சியாவது செய்வோம்.