மனிதனைக் கடித்த கொடிய விஷ பாம்பு 5 நிமிடத்தில் இறப்பு.. ம.பியில் நிகழ்ந்த அதிசயம்! இதுவும் காரணமா!!
கொடிய விஷமிகுந்த உயிரினங்களில் பாம்பும் ஒன்றாக உள்ளது. ஒருசில பாம்பு வகைகளைத் தவிர ராஜநாகம், கோப்ரா, நல்ல பாம்பு உள்ளிட்டவை விஷம் மிகுந்தவையாக இருக்கிறது. அப்படியான, பாம்புகள் கடித்து, அதற்கேற்ப உடனடியாக சிகிச்சை அளிக்காவிட்டால், அது உயிருக்கே ஆபத்தாக முடியும். பெரும்பாலும் பாம்பு கடித்து அதனால் விஷமேறி சாகும் உயிர்களை நாம் பார்க்க முடியும். இதில் கூடுமானவரை மனித உயிர்கள் காப்பாற்றப்பட்டாலும் ஐந்தறிவு விலங்குகள் அதன் தாக்குதலால் உயிர் இழப்பைச் சந்தித்து வருகின்றன. இந்த நிலையில், மனிதனைக் கடித்த பாம்பு ஒன்று அடுத்த 5-6 நிமிடங்களில் இறந்திருப்பது அரிதினும் அரிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.
இந்த சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது. அம்மாநிலத்தின் பாலகாட் மாவட்டத்தைச் சேர்ந்த குட்சோடி கிராமத்தில் சச்சின் நாக்பூரே என்பவர் வசித்து வருகிறார். 25 வயதான அவர், அப்பகுதியில் மெக்கானிக்காகப் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், நேற்று காலை 7 மணியளவில் அவர் தனது பண்ணைக்குச் சென்றுள்ளார். அப்போது அவர் தற்செயலாக பாம்பு ஒன்றை மிதித்துள்ளார். அப்போது, பாம்பு அவரைக் கடித்துள்ளது. இருப்பினும், அந்த நபரைக் கடித்த 5-6 நிமிடங்களுக்குள், அந்த பாம்பு எதிர்பாராத விதமாக இறந்துபோயுள்ளது. இந்தச் சம்பவம் அரிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில், பாம்பு கடித்த அந்த நபர் ஆபத்தில் இருந்து மீண்டு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து நிபுணர்கள், “ஒரு மனிதனைக் கடித்த பிறகு பாம்பு இறப்பது மிகவும் அரிது. இந்த அசாதாரண சூழ்நிலையில், இரண்டு சாத்தியமான காரணங்கள் இருக்கலாம். சிட்சிடியா , பிசுண்டி, பல்சா, ஜாமுன், மாம்பழம், துவார், ஆஜன், கரஞ்சி, வேம்பு உள்ளிட்ட பல்வேறு மரங்களின் கிளைகளைப் பயன்படுத்தி கடந்த 7-8 ஆண்டுகளாக பல் துலக்கி வருவதாக சச்சின் தெரிவித்தார். இந்த மூலிகை மரங்களின் கலவையே பாம்பின் இரத்தத்தை நச்சுத்தன்மையாக்கி, அதன் மரணத்திற்குக் காரணமாக இருந்திருக்கலாம் என்று அவர் நம்புகிறார்.
வனத்துறை ரேஞ்சர் தர்மேந்திர பிசென், ”இதை 'அரிதிலும் அரிதான' நிகழ்வு. மிகவும் அசாதாரண சூழ்நிலைகளில் மட்டுமே ஒரு பாம்பு ஒருவரைக் கடித்த உடனேயே இறக்கக்கூடும். அத்தகைய ஒரு வாய்ப்பு என்னவென்றால், கடித்த பிறகு பாம்பு கூர்மையாகத் திரும்பினால் அதன் விஷப் பை உடைந்து, அது திடீரென இறந்துவிடும்” என விளக்கமளித்துள்ளார்.
சச்சின் நாக்பூரேவைக் கடித்த பாம்பு சாதாரண பாம்பு அல்ல, டோங்கர்பெலியா பாம்பு என்றும், அது மிகவும் விஷமானது என்றும் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.