உ.பி.யின் சிறிய கிராமம் To ஈரான்; இந்தியாவில் பிறந்த அலி கமேனியின் மூதாதையர்! ஆச்சர்யமூட்டும் வரலாறு
அணு ஆயுத விவகாரம் தொடர்பாக, ஈரானைக் குறிவைத்து இஸ்ரேல் கடந்த சில நாட்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. அதாவது, அணு ஆயுதத்தைத் தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறி ஈரான் மீது 'ஆபரேஷன் ரைசிங் லயன்' என்ற பெயரில் கடந்த ஜூன் 13ஆம் தேதி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்குப் பதிலடியாக ஈரானுமும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. தற்போது இருநாடுகளும் மாறிமாறி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.
இஸ்ரேலுக்கு எதிராக அமெரிக்கா களத்தில் குதித்தாலும் அதைப் பற்றி கவலைப்படாது, அந்த இருநாடுகளுக்கே மிரட்டல் விடுத்து வருகிறார் ஈரானின் உச்சபட்ச தலைவர் அலி கமேனி. தற்போது அவரைப் பற்றித்தான் ஊடகங்களும் இணையதளங்களும் செய்திகள் வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் அவருடைய மூதாதையர்கள் இந்தியாவில் வாழ்ந்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன. அதுகுறித்த பதிவை இங்கு பார்க்கலாம்.
உத்தரப்பிரதேச மாநிலம் பராபங்கி மாவட்டத்தின் சிரோலி கௌஸ்பூர் தாலுகாவில் அமைந்துள்ள கிந்தூர் கிராமம்தான் அலி கமேனியின் மூதாதையர் இங்கே பிறந்ததாக வரலாறு குறிப்பிடுகிறது. இந்த கிந்தூர்தான் 1790ஆம் ஆண்டு பிறந்த இஸ்லாமிய ஷியா அறிஞரான சையத் அகமது முசாவியின் பிறப்பிடமாகும், அவரது சந்ததியினர் ஈரானின் அரசியல் மற்றும் மத நிலப்பரப்பை மறுவடிவமைக்கச் சென்றனர். அவரது பரம்பரையில் 1979 இஸ்லாமியப் புரட்சியின் சிற்பியான அயத்துல்லா ருஹோல்லா கமேனி மற்றும் ஈரானின் தற்போதைய உச்ச தலைவரான அலி கமேனி ஆகியோர் அடங்குவர்.
1830ஆம் ஆண்டில், சையத் அகமது முசாவி தனது 40 வயதில் கிந்தூரிலிருந்து புறப்பட்டு, அவத் நவாப்புடன் ஈராக்கிற்கு புனித யாத்திரை மேற்கொண்டார். திரும்புவதற்குப் பதிலாக, அவர் ஈரானுக்குப் பயணம் செய்து இறுதியில் குமெய்ன் கிராமத்தில் குடியேறினார். தனது இந்திய வம்சாவளியைக் குறிக்கும் விதமாக, அவர் ’இந்தி’ என்ற பெயரை ஏற்றுக்கொண்டார். ஷியா அறிஞர் வட்டாரங்களில் சையத் அகமது முசாவி இந்தி (SYED AHMAD MUSAVI HINDI) என்று அறியப்பட்டார். அவரது குடும்பம் மதப் புலமையில் மூழ்கியிருந்தது.
பல தசாப்தங்களுக்குப் பிறகு, அவரது பேரன் ருஹோல்லா கமேனி மேற்கத்திய ஆதரவு பெற்ற பஹ்லவி முடியாட்சிக்கு எதிரான முன்னணி எதிர்ப்புக் குரலாக உருவெடுத்தார். 1978ஆம் ஆண்டில், ஷாவுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்தபோது, ஈரானிய ஆட்சி ஓர் அரசாங்க செய்தித்தாளில் காமெனியை, ‘இந்திய முகவர்’ என்று முத்திரை குத்தி அவமதிக்க முயன்றது. அவதூறு பிரசாரம் பொதுமக்களின் கோபத்தைத் தூண்டியது. இது ஷாவின் வீழ்ச்சிக்கும் 1979இல் இஸ்லாமியக் குடியரசு பிறப்பதற்கும் வழிவகுத்தது. காமெனி ஈரானின் முதல் உச்ச தலைவரானார். அவரது வாரிசான அலி காமெனியும் அதே முசாவி குடும்ப வம்சாவளியைச் சேர்ந்தவர். இன்றும் உத்தரப்பிரதேசத்தின் கிந்தூர் கிராமத்தின் ஒரு பகுதியான மஹால் மொஹல்லாவில், கமேனியின் மரபுவழி வந்தவர்கள் வாழ்கிறார்கள்.
ஓர் அறியப்படாத இந்திய கிராமத்தில் இருந்து ஆரம்பித்த ஓர் அறிஞரின் ஆன்மிகப் பயணம், இன்று உலகின் மிகவும் செல்வாக்குமிக்க இஸ்லாமிய நாடுகளில் ஒன்றின் அரசியல் டிஎன்ஏவின் ஒரு பகுதியாக மாறியிருக்கிறது வியப்பான விஷயமாகப் பார்க்கப்படுகிறது. மேற்கு ஆசியாவில் குண்டுகள் விழும்போது, கிந்தூர் வயல்களும் அமைதியாகவே இருக்கின்றன. ஆனால், வரலாறு அதன் மண்ணில் அமைதியாகவே எதிரொலிக்கிறது. வேகமாக மாறிவரும் தலைப்புச் செய்திகளால் வரையறுக்கப்படும் உலகில், கிந்தூருக்கும் ஈரானுக்கும் இடையிலான நீடித்த தொடர்பு, உலக வரலாறுகள் படைகள் மற்றும் சித்தாந்தங்களால் மட்டுமல்ல, யாத்ரீகர்கள், அறிஞர்கள் மற்றும் நீண்ட காலமாக மறக்கப்பட்ட இடங்களின் மூதாதையர் நினைவுகளாலும் வடிவமைக்கப்படுகின்றன என்பதை நினைவூட்டுகிறது.