உதாசீனப்படுத்திய பாஜக.. அழுத்தப்படும் பொறுமை எரிமலையாக வெடிக்குமா? ஒபிஎஸ்ஸின் அடுத்த மூவ் என்ன?
“2021 தேர்தலில் டிடிவி தினகரனை தனியாகவும், சசிகலாவை தனியாகவும் நிற்கவைத்தனர். 2024ல் ஒரு அதிமுகவை நான்கு அதிமுகவாக ஆக்கினார்கள். முதலில் ஓபிஎஸ்ஸை அந்த அமைச்சரவையில் சேர்த்தது யார்? தர்மயுத்தம் நடத்தி அதைக் கலைத்தது யார்? மீண்டும் அதிமுகவில் அவரை சேர்க்க முயற்சி செய்தது யார்? அது முடியவில்லை என்று தெரிந்ததும் அவரைக் கைவிட்டது யார்? இதுதான் பாஜகவின் சித்தாந்தம். பிரித்தாளும் கொள்கையில் பாஜகவிற்கு நிகரான கட்சி இந்த தேசத்தில் எங்கும் இல்லை. ஓபிஎஸ்ஸை அரசியல் ரீதியாக க்ளோஸ் செய்துவிட்டார்கள்” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்திருந்தார்.
சமீபத்தில் பிரதமரைச் சந்திக்க நேரம் கேட்டு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியிருந்தார். அதில், 'தமிழக பயணத்தில் வரவேற்கவும், வழியனுப்பவும் அனுமதி கொடுக்க வேண்டும்.. அது மிகப்பெரிய பாக்கியமாக இருக்கும்' என்று குறிப்பிட்டிருந்தார். ஆனாலும், ஓபிஎஸ்ஸைச் சந்திக்க பிரதமர் நேரம் ஒதுக்கவில்லை. இதுதொடர்பாகப் பேசியிருந்த பாஜக எம்.எல்.ஏ காந்தி, “பிரதமருக்கு வேலை நெருக்கடி அதிகம் இருப்பதால், அவரால் சிலரை சந்திக்க நேரம் ஒதுக்கமுடியவில்லை என நினைக்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.
திமுக அரசுக்கு கடும் கண்டனம் to மத்திய அரசுக்கு கண்டனம்
இத்தகைய சூழலில்தான் ஓபிஎஸ் விஜயின் தவெக உடன் இணையப்போவதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், மத்திய பாஜக அரசைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார் பன்னீர்செல்வம். உதாரணத்திற்கு, கடந்த ஜூலை 1 ஆம் தேதி முதல் முன்னாள் முதலமைச்சர் வெளியிட்ட அறிக்கைகள் எல்லாம் ‘திமுக அரசுக்கு கடும் கண்டனம்’ எனும் ரீதியிலேயே வெளியாகியிருந்தது.
சமீப காலங்களில் முதல்முறையாக மத்திய அரசுக்கு வலியுறுத்தலோடும் மத்திய அரசின் செயலைக் கண்டித்தும் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில், “தமிழ்நாடு அரசு மும்மொழிக் கொள்கையை பின்பற்றாததன் காரணமாக 2024-2025 ஆம் ஆண்டு சம்கரா சிக்ஷா திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு அளிக்க வேண்டிய ரூ. 2,151 கோடி ரூபாய் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய இணை அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி கூறியுள்ளார்.
திட்டத்தின்கீழான மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதன் காரணமாக தனியார் பள்ளிகள் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பதோடு மட்டுமல்லாமல், அரசு சார்பில் ஆசிரியர்களுக்கான பயிற்சி பள்ளிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய தூய்மைப் பணி உள்ளிட்ட பல பணிகள் முடங்கிப் போயுள்ளன.
பாஜகவை நம்பியவர்களுக்கு இதுதான் நிலை
மத்திய அரசின் நிபந்தனைகளை மாநில அரசு ஏற்காதது என்பது மத்திய மாநில அரசுகளுக்கிடையேயான பிரச்னை. இந்தக் காரணத்தைச் சுட்டிக்காட்டி நிதியை விடுவிக்காமல் இருப்பது அப்பாவி ஏழை எளிய மாணவ, மாணவியரின் கல்வியையும், ஆசிரியர்களையும் பாதிக்கும் செயல். இது கடும் கண்டனத்திற்குரியது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை கல்வி உரிமைச் சட்டத்திற்கும், கூட்டாட்சித் தத்துவத்திற்கும் எதிரானது” எனத் தெரிவித்திருக்கிறார். எனவே, நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டுமென்று அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பாக வலியுறுத்தியிருக்கிறார்.
இத்தகைய சூழலில் ஓபிஎஸ்ஸின் சமீபத்திய அறிக்கை மற்றும் செல்வப்பெருந்தகை கருத்து தொடர்பாக ஓபிஎஸ் உடன் பயணித்தவர்களிடம் பேசினோம். இது தொடர்பாகப் பேசிய மருது அழகுராஜ், “நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரதான அங்கத்தினராகப் பங்குவகித்து, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு மூன்று லட்சம் வாக்குகளையும் வாங்கினார். அதுமட்டுமின்றி, தன்னுடைய ஆதரவாளர்களையும் தொண்டர்களையும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு உழைக்க வேண்டுமென்றும் உத்தரவிட்டார். அந்த வகையில், NDA எனும் பெயரில் பாஜக தமிழ்நாட்டில் துளிர்க்கவும் அவர் உறுதுணையாக இருந்தார்.
அந்தக் காலக்கட்டங்களில் மோடிக்கும் பாஜகவிற்கும் எதிராகப் பரப்புரையில் ஈடுபட்டவர் எடப்பாடி பழனிசாமி. சித்தாந்த எதிரி என சொல்லக்கூடிய SDPI மாநாட்டில் கலந்துகொண்டு 2026 மட்டுமல்ல 2031லும் பாஜகவுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்று சொன்னவர். ஆனால், தங்களுக்கு உறுதுணையாக நின்றவர்களைக் கைவிட்டுவிட்டு தனக்கு எதிராக நின்ற எடப்பாடியை பாஜக தொடர்ந்து ஆதரித்து வருகிறது. பாஜகவை நம்பியவர்களுக்கு இதுதான் நிலை என்பது தமிழகத்திலும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
வன்னியர் - கவுண்டர் கூட்டமைப்பு போல...
‘அரசியல் காலண்டரில் கடைசிப்பக்கம் என்பது இல்லை’ என ஒரு பழமொழி இருக்கிறது. எனவே அரசியல் சந்நியாசம் போக வேண்டிய அவசியமும் ஓபிஎஸ்க்கு இல்லை. மூன்றாம் சக்திகள் இன்று முன்னுக்கு வந்துகொண்டிருக்கிறார்கள். தமிழக வெற்றிக் கழகமும் முன்னுக்கு வந்துகொண்டிருக்கிறது. எனவே திராவிட இயக்கத்திலிருந்து வந்தவர் என்ற அடிப்படையிலும், மூன்று முறை முதலமைச்சராக இருந்தவர் என்பதன் அடிப்படையிலும் ஓபிஎஸ்ஸின் அனுபவம் விஜய்க்கு கிடைத்தால் அது விஜய்க்கு மிகப்பெரும் ஆதரவாகவும், மிகப்பெரிய வாய்ப்பாகவும் மாறும். இனி ஓபிஎஸ்ஸின் அரசியல் மிகச்சரியாக செல்லும் என நம்புகிறேன். ஆனால், ஓபிஎஸ் பாஜகவை முழுமூச்சில் எதிர்த்து களமாடுவாரா என்ற சந்தேகமும் இருக்கிறது. ஒருவேளை அவரை அழைத்து சமாதானம் செய்யலாம் அல்லது எடப்பாடியின் விருப்பத்திற்காக முழுமையாக ஓபிஎஸ் கைவிடப்பட்டால் முக்கிய முடிவை எடுக்கவேண்டிய நிலைக்கு அவர் வரலாம். ஆனால், இரண்டாவது முடிவு எடுக்கப்பட்டால் அது தென்மாவட்டங்களில் அதிமுகவின் சரிவுக்கு காரணமாக அமையும்.
ஏற்கனவே, சசிகலா, தினகரன், ஓபிஎஸ் என்று ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்களை எடப்பாடி பின்னுக்குத் தள்ளியது மட்டுமல்லாமல் அனைவருக்கும் பொதுவாக இருக்கும் அதிமுகவை ஒரு வன்னியர் - கவுண்டர் கூட்டமைப்பு போல மாற்றிவிட்டார். சாதி இயக்கம் போலத்தான் அதிமுக இருக்கிறது. இது தென் மாவட்டங்களில் அதிமுகவின் சரிவிக்குக் காரணமாக அமையும். ஆக, அதளபாதாளத்திற்குச் சென்றுகொண்டிருக்கும் அதிமுக 2026ல் மிகப்பெரிய பேரழிவைச் சந்திக்கும்.
விஜயை மூன்றாம் அணி என சொல்கிறார்கள். ஆனால், என்னைப் பொறுத்தவரை ஓபிஎஸ் போன்றவர்கள் எல்லாம் விஜயுடன் இணைந்தால் அது இரண்டாம் அணியாக மாறக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. அதிமுக மூன்றாம் அணியாக மாறி சீமானுடன் மல்லுக்கட்டக்கூடிய சூழல் உருவாகலாம். அனைத்து அரசியல் சூழலும் திமுகவிற்கு வலுசேர்க்கிறது; அவர்கள் உறுதியாக இருக்கிறார்கள். அவரை ஆதரிப்பவர்கள் எல்லாம் ஒருபக்கமாகவும், திமுகவை எதிர்ப்பவர்கள் எல்லாம் பல அணிகளில் இருக்கிறார்கள். தொடர்ந்து இரண்டாவது முறையும் தமிழகத்தை ஆட்சி செய்யும் வாய்ப்பு திமுகவிற்கு இருப்பதாகத்தான் தற்போதைய சூழல் சொல்கிறது.
ஓபிஸ்ஸின் பாஜகவிற்கு எதிரான நிலைப்பாடு என்பதுகூட மிக மிக தாமதமான முடிவு என்றுதான் நான் சொல்லுவேன். 2019க்குப் பிறகு ஓபிஎஸ்ஸை பாஜக தொடர்ந்து உதாசீனப்படுத்திக் கொண்டுதானே இருந்தது. அவரை எங்கேயும் அழைத்துப் பேசியதாக வரலாறு கிடையாது. அதுமட்டுமல்லாமல் அதிமுகவை அபகரிக்கும் இபிஎஸ்ஸின் திட்டத்திற்கு பக்கத்துணையாக இருந்தது பாஜகதான். இவற்றையெல்லாம் ஓபிஎஸ் பொறுத்துக்கொண்டு இவ்வளவு காலம் இருந்ததே ஆச்சரியம்தான். உட்கட்சி விவகாரங்களில் தலையிடமாட்டோம் என இன்றைக்குச் சொல்லும் அமித்ஷா அன்று ஈரோடு கிழக்கில் ஓபிஎஸ் போட்ட வேட்பாளரை திரும்பப் பெறச்சொல்லவில்லையா. என்னைப் பொறுத்தவரை பாஜக தலையிடாத உட்கட்சி விவகாரங்களே கிடையாது.
இவ்வளவு காலம் அவர் அதிகமாகவே பொறுமை காத்துவிட்டார். ஆனால், அதிகமாக அழுத்தப்படும் பொறுமை எரிமலையாக வெடிக்கக்கூடும். எரிமலையாக அவர் வெடிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எனக்கு இருக்கிறது” எனத் தெரிவித்தார்.
அரசியல் களமே மாறிவிடும்
இதுதொடர்பாகப் பேசிய பெங்களூரு புகழேந்தி, “ஓபிஎஸ் பாஜகவை எதிர்க்க வேண்டுமென நினைத்தது காலதாமதமான முடிவு அல்ல. ஓபிஎஸ் வெளியில் செல்வதற்கு அவரும் காரணமல்ல. பாஜக அவரை மதிக்கவில்லை. பாஜகவிற்கு மரியாதை என்பதே தெரியாது. எனவே, பிரதமர் மோடியைப் பார்த்தவரும் அசிங்கப்பட்டார், பார்க்க வேண்டுமென கேட்டவரும் அசிங்கப்பட்டார். அகங்காரம் என்பது தலைவிரித்தாடுகிறது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஓபிஎஸ்ஸை ஒதுக்கிவிட்டார்கள். இனி அவர் அங்கிருந்து பயனில்லை. எனவே வெளியில் வருவதுதான் நல்லது. இனியும் அந்த முடிவில் குழம்பிப்போய் இருந்தார் என்றால் அவரது அரசியல் வாழ்வே கேள்விக்குறியாகிவிடும். அந்த கூட்டணியில் இருந்து வெளியில் வர வேண்டுமென்றுதான் அவரது நிர்வாகிகள், தொண்டர்கள் எல்லாம் நினைக்கிறார்கள். அது நடக்குமென்றுதான் நாங்களும் நினைக்கிறோம்.
அவர் அங்கிருந்து வெளியில் வந்துவிட்டால் அரசியல் களமே முழுவதுமாக மாறிவிடும். ஏனெனில் அதிமுக தொண்டர்கள் பாஜகவை விரும்பவில்லை. எனவே, ஓபிஎஸ் நல்லதொரு முடிவை நாளை எட்டுவார் என்றால் பழனிசாமி அரசியலில் இருந்து மொத்தமாக தூக்கி எறியப்படுவார்” எனத் தெரிவித்தார்.